TNPSC Thervupettagam

எழுத்து வீரர் கல்கி!

September 10 , 2024 5 hrs 0 min 15 0

எழுத்து வீரர் கல்கி!

  • ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரபலமான நாவலுக்காக இன்றைய இளைய தலைமுறைவரை பரவலாக அறியப்​பட்​டிருப்பவர் கல்கி என்று அறியப்​படுகிற ‘கல்கி’ கிருஷ்ண​மூர்த்தி. அவரது ஆளுமை​யையும் பங்களிப்​பையும் இந்த ஒற்றைப் படைப்பில் ஒருபோதும் அடக்கிவிட முடியாது.
  • எண்​பதுகளில் என்னுடைய ஆய்வுக்காக ‘ஆனந்த விகட’னின் பழைய இதழ்களில் கல்கியின் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. வாசிக்க வாசிக்க என்னுள் எழுந்த உணர்வுகளை என்னாலேயே விவரிக்க முடியாது. அவருடைய எழுத்தின் வீச்சு எனக்கு முற்றிலும் புரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனால், அதிலிருந்த நேர்மை ஒரு தீக்கங்​குபோல் என் சிந்தனையை உரசிக்​கொண்டு போனது.
  • ‘ஆனந்த விகட’னைத் தொடர்ந்து பழைய ‘கல்கி’ இதழ்களையும் வாசிக்க​ வேண்​டி​யிருந்தது. நுங்கம்​பாக்​கத்தில் ‘கல்கி’ ராஜேந்​திரன் வீட்டில் பழைய ‘கல்கி’ இதழ்களைப் பாதுகாத்து​ வைத்​திருந்​தார்கள்.

குடும்​பஸ்​த​ராக...

  • ‘கல்கி’ ராஜேந்​திரன் வீட்டுக்குப் போனபோது என் பாட்டியின் வயதை ஒத்த ருக்மிணி கிருஷ்ண​மூர்த்தியைச் சந்தித்​தேன். அப்போது கல்கி இறந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்​டிருந்தன. கணவர் கல்கி கிருஷ்ண​மூர்த்தி தன் அருகி​லிருந்து, தன் செயல்​களைப் பார்த்​துக்​கொண்​டிருப்​பது​போல், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அவருக்குப் பிடித்​த​மானதைச் செய்து​கொண்​டிருந்தார் ருக்மிணி கிருஷ்ண​மூர்த்தி.
  • அவரது பொழுது கணவருடன்தான் தினமும் விடிந்தது. அந்த முதிர்ந்த வயதிலும் தானே வீட்டு​வாசலில் கோலம் போடுவார். “கோலம் அவருக்கு மிகவும் பிடிக்​கும். நான் கோலம் போட்டால் ஒரு கணம் நின்று ரசித்து​விட்டுப் போவார்” என்றார். தோட்டத்துப் பூக்களைத் தானே பறித்துச் சரம் தொடுத்து ஒளிப்​படத்தில் இருக்கும் கணவருக்கு அணிவிப்​பார்.
  • “உங்களிடம் அவர் மிகவும் அன்பாக இருந்​திருக்க வேண்டும், இல்லையா?” என்று கேட்டேன். “அன்பு மட்டுமில்​லை... மிகுந்த மரியாதை கொடுத்​தார். அவருடன் வாழ்ந்த காலம் என் வாழ்வின் பொற்காலம்” என்றார் ருக்மிணி. எங்கே, எந்த ஊரில் இருந்​தா​லும், எவ்வளவு வேலை இருந்​தாலும் குடும்பத்​தா​ருடன் ஏதோ ஓர் உரையாடலில் இருந்​திருக்​கிறார் கல்கி என்பது, மனைவிக்கும் மகளுக்கும் அவர் எழுதிக் குவித்த கடிதங்​களி​லிருந்து புரிகிறது. நமது சமுதா​யத்தில் பெண்களின் நிலை குறித்து ஆழ்ந்து சிந்தித்து, அவர்களின் மேம்பாட்டை ஒரு லட்சி​ய​மாகவே கொண்டிருந்த ஒரு மனிதர் வேறு எப்படி இருந்​திருக்க முடியும்?

பத்திரி​கை​யாளராக...

  • அந்தக் காலத்தில் பத்திரி​கை​யாளராகப் பணியாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. நேரடி அனுபவத்​துக்​காகப் பல இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டி​யிருந்தது. ரயில்​களின் எண்ணிக்கை குறைவு. மேலும், அவை நத்தைபோல் ஊர்ந்து போகும். தங்குமிடத்​திலும் வசதிகளை எதிர்​பார்க்க முடியாது.
  • ஆயிரக்​கணக்கான தொண்டர்கள் கூடும் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று நிகழ்வுகளை அப்படியே விவரிப்பார் கல்கி. ஒளிப்​படங்​கள்கூட அரிதாக இருந்த காலத்​தில், அவருடைய எழுத்தின் வலிமை மாநாட்டுக்கு நேரில் போன அனுபவத்தை வாசிப்​பவர்​களுக்குக் கொடுத்து​விடும்.

தேச நலன்:

  • இந்திய விடுதலைப் போராட்​டத்தில் நேரடியாக ஈடுபட்டு மூன்று முறை சிறை சென்றவர் கல்கி. உயர்ந்த கல்வியைப் பெற்றுப் பணிவாழ்வில் சிறப்புற விளங்​கிவந்த நிலையில், அவர் சிறை சென்றார். சிறை அனுபவத்தால் அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. சிறு வயதிலிருந்தே நெற்றியில் திருநீறு அணியும் வழக்கம் உடையவர் கல்கி. தன்னையும் பிறரையும் வேறுபடுத்திக் காட்டும் இந்தப் புற அடையாளங்களைச் சிறைவாசத்​துக்குப் பிறகு தவிர்த்து​விட்​டார்.
  • ‘பொன்னியின் செல்வன்’ திரைப்​படத்தைப் பார்த்தபோது அதிலும்கூட அவருடைய காந்திய சிந்தனைகள் பளிச்​சிட்டதாக உணர்ந்​தேன். புத்த விஹாரத்தை மதித்துக் காக்கும்படி கைகூப்பி வேண்டிக்​கொள்ளும் அருள்​மொழி​வர்​மனும், நாட்டைத் துண்டாடக் கூடாது என்று ஆவேசமாகப் பேசிய ஆதித்​த கரி​காலனும் வெறும் சோழர் கால அரசியலை மட்டும் பேசவில்லை.

திராவிடம் குறித்த புரிதல்:

  • தேச நலனையும், காந்திய விழுமி​யங்​களையும் வலிமையாக முன்வைத்த கல்கி, தமிழ்​நாட்டில் அப்போது செழித்து வளர்ந்​து​கொண்​டிருந்த திராவிட இயக்கத்​தையும் கூர்ந்து கவனித்​தார். தன்னுடைய சித்தாந்​தத்​திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றாலும் கல்கியின் அறிவாற்​றலும் பரந்த சிந்தனையும் திராவிட சித்தாந்​தத்தைச் சரியான கோணத்தில் புரிந்​து​கொண்டு, பிறருக்கும் புரிய​வைத்தன. இதன் மூலம், அவருடைய எழுத்தின் ஆற்றலுக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்ந்​து​கொண்டது.

தீண்டா​மைக்கு எதிரான யுத்தம்:

  • ஆரம்ப காலத்​திலிருந்தே சாதி வேற்றுமைகள் குறித்துத் தனது கருத்துகளை வலிமை​யாகப் பதிவுசெய்திருக்​கிறார் கல்கி. முக்கியமாக, தீண்டா​மைக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்தி​யிருக்​கிறார். அதற்கான கடும் எதிர்ப்​பையும் சந்தித்​திருக்​கிறார்.
  • “உயர் ஜாதிக்​காரர்கள் தங்கள் பழைய பெருமையைக் கெட்டி​யாகப் பிடித்​துக்​கொண்டு, இனிமேலும் பிடிவாதமாக இருப்​பதில் அர்த்​தமில்லை. விரைவில் ஜனநாயகம் மலரத்தான் போகிறது. தலைமைப் பொறுப்பில் ஜாதி வித்தி​யாசமின்றி எவர் வேண்டு​மானாலும் ஆட்சிப் பொறுப்​புக்கும் அதிகாரப் பதவிகளுக்கும் வரத்தான் போகிறார்கள். ஆகவே, ஜாதி இந்துக்கள் தாங்கள்தான் உயர்வானவர்கள் என்ற எண்ணத்தை இப்போதே கைவிடுவது நல்லது” என்று நயமாக எடுத்​துரைக்​கிறார்.
  • பிறர் உணர்வு​களைப் புண்படுத்​தாமலேயே கூர்மையான கருத்துகளை முன்வைக்க, அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வு அவருக்குக் கைகொடுத்தது. கசப்பும் துவேஷமும் தவிர்த்த ஒரு நடுநிலை​வா​தி​யாகவே அவர் தொடர்ந்து இ​யங்​கினார். அவர் நடத்தி​ய சமூக அறப்​போருக்கு இப்​போதும் தேவை இருக்​கிறது. சித்தாந்த வேறு​பாடு​களைக் கடந்து அனை​வரும் ​கொண்டாட வேண்டிய ஒரு ​மாமனிதர் கல்கி.
  • செப்​டம்பர்​ 9 - எழுத்​தாளர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்​த்​தி​யின் 125ஆவது பிறந்​தநாள்​

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories