TNPSC Thervupettagam

ஏ.ஐ. உங்களை எப்படி ஏமாற்றுகிறது?

January 10 , 2025 6 days 49 0

ஏ.ஐ. உங்களை எப்படி ஏமாற்றுகிறது?

  • இன்றைக்கு நாம் பயன்படுத்தும் செயலிகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் செயற்கை நுண்ணறிவு (AI). பெருநிறுவனங்கள் நினைக்கும் முடிவை நம் மீதே திணித்து, அது சார்ந்த முடிவை நம்மையே எடுக்கவைக்கும் அளவுக்குச் செயற்கை நுண்ணறிவு பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பல செயலிகள் குறிப்பாக - சமூக வலைதளச் செயலிகள் இலவசமாகவே கிடைக்கின்றன.
  • ஆனால், நீங்கள் தினமும் உருவாக்கும் தகவல்கள், ஒளிப்படங்கள், காணொளிகளைச் சேமிக்கப் பெரும் தொகையைச் செலவு செய்யும் சமூக வலைதள நிறுவனங்கள் உங்களுக்கு எப்படி இலவசமாகச் செயலிகளைக் கொடுக்கின்றன? உங்​களைப் பற்றிய தகவல்​களைச் சேகரித்து, சந்தை நிறுவனங்​களுக்கும் பெருநிறு​வனங்​களுக்கும் விற்பனை செய்வதால் அவற்றுக்கு நிறைய பணம் கிடைக்​கிறது. ஆம்! உங்களுக்கு ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கிறது என்றால், உண்மையில் விற்பனை செய்யப்​படுவது பொருள் அல்ல... நீங்கள்​தான்.

நோக்கப் பொருளா​தாரம்:

  • இங்குதான் ஆய்வாளர்கள் ‘நோக்கப் பொருளா​தாரம்’ (Intention Economy) என்னும் கோட்பாட்டை முன்வைக்​கிறார்கள். அதாவது, இந்தச் சமூக வலைதள நிறுவனங்​களும் இணையச் சேவைச் செயலிகளும் உங்களின் இணைய நடவடிக்கைகள் (Digital Behaviour) அனைத்​தையுமே சேகரிக்​கின்றன. சேகரித்த தகவலைச் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்குக் கொடுத்துப் பகுப்​பாய்வு செய்கின்றன. அதன் மூலம் உங்கள் நோக்கங்​களைக் கண்காணித்து, பின்பு நிறுவனங்களுக்கு நல்ல லாபத்​துக்கு விற்கின்றன.
  • முதலில் உங்களைப் பற்றிச் சேகரித்த தகவலைத்தான் விற்றுக்​கொண்​டிருந்​தார்கள். ஆனால், இப்போது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உங்களின் தகவல்களை, நடவடிக்கைகளைப் பகுப்​பாய்வு செய்து, அதிலிருந்து உங்கள் நோக்கம் என்ன, நீங்கள் என்ன வாங்க நினைக்​கிறீர்கள், என்ன விரும்​பு​கிறீர்கள் என விரிவாகப் பட்டியலிட்டு, அந்தத் தகவலை விற்பனை செய்கிறார்கள். கோடிக்​கணக்கில் பணம் கொடுத்து இந்தத் தகவலை வாங்கப் பல நிறுவனங்​களும், அரசியல் கட்சிகளும் தயாராக இருக்​கின்றன. இதை ‘நோக்​கத்தைத் தெரிவிக்கும் டிஜிட்டல் சமிக்ஞை’ என அழைக்​கிறார்கள் (Digital signal of intent).
  • இது, ஒரு நபர் இணையத்தைப் பயன்படுத்​தும்போது அவர் என்ன செய்யத் திட்ட​மிடு​கிறார் அல்லது விரும்​பு​கிறார் என்பதைக் காட்டும் அடையாளங்கள் - தகவல்​களைக் குறிக்​கிறது. இதைச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் / மென்பொருள்கள் கணித்து உள்நோக்​கங்​களைப் புரிந்​து​கொள்​வதற்குப் பயன்படுத்​து​கின்றன.
  • நீங்கள் இணையத்தில் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் உங்கள் விருப்​பங்​களின் குரலாக இருக்​கிறது; செயற்கை நுண்ணறிவு அவற்றைக் கேட்டு உங்கள் எதிர்கால உள்நோக்​கங்​களைக் கணிக்​கிறது. இந்தக் கணிப்புகள் பெரும் லாபம் ஈட்டித் தருகின்றன. இதைத்தான் ‘நோக்கப் பொருளா​தாரம்’ என அழைக்​கிறோம்.
  • வருங்​காலத்தில் ஒருவரின் இணையப் பயன்பாட்டை வைத்து, அவரின் நோக்கத்தைக் கணிப்​பதும், அதைச் சந்தையில் லாபத்​துக்கு விற்பதும் மிகப் பெரிய பொருளா​தாரமாக மாறும். இதற்கான நிபுணர்கள், மென்பொருள்கள், வன்பொருள்கள், தொழில்​நுட்​பத்​துக்கு மிகப் பெரிய தேவை உருவாகும். ஆனால், நோக்கப் பொருளா​தாரம் என்பதே ஆபத்து; பெருநிறு​வனங்​களும் அரசியல் கட்சிகளும் இதைத் தவறாகப் பயன்படுத்து​கின்றன என்ற குரல்கள் எழத் தொடங்கியிருக்​கின்றன.
  • “நோக்கப் பொருளா​தா​ரத்தை அரசு உடனே கட்டுப்​படுத்தி நெறிப்​படுத்த வேண்டும். இல்லை என்றால் மக்களின் ஆசை, நோக்கம், விருப்பம் எல்லாம் பெருநிறு​வனங்​களின் லாப வேட்டைக்குப் பலியாகும் வாய்ப்புள்ளது” என்று எச்சரிக்​கிறார், இது சார்ந்து ஆராய்ந்து வரும் ஜான்னி பென் (Jonnie Penn).
  • மேலும் சுதந்​திரச் சந்தை, சுதந்திர விருப்பம், நியாயமான தேர்தல், சுதந்திர ஊடகம், குழப்ப​மில்லாத நல்ல தகவல் பரிமாற்​றத்​துக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்​காட்டு​கிறார். செயற்கை நுண்ணறிவு இயங்க மிகப் பெரிய மின்சார, மின்னணுக் கட்டு​மானம் தேவை. பல மில்லியன் டாலர் முதலீடு இருந்தால் மட்டும்தான் இவையெல்லாம் சாத்தியம்.

அப்படிப் பெரும் தொகையைக் கொட்டி இந்த மென்பொருளை உருவாக்க ஒரே காரணம்:

  • இனி வெறும் தகவல் மட்டும் போதாது, தகவலைப் பகுத்​தாய்ந்து சரியான நோக்கத்தைக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்​குத்தான் சந்தை, லாபம் எல்லாம்!

தந்திரமான வழிமுறை:

  • அடுத்​ததாக, உரையாடல் மென்பொருள்கள் உங்களின் அந்தரங்கத் தகவலைப் பெறப் பயிற்று​விக்​கப்​படலாம். ஏற்கெனவே உங்களின் தகவலைச் சேகரிக்கும் நிறுவனங்கள் உங்களின் அந்தரங்கத் தகவலைச் சேகரிக்கப் படாதபாடு படுகின்றன. ஆனால், உரையாடல் ஏ.ஐ. அந்த வேலையை மிக எளிதாகச் செய்து​விடும்.
  • உங்களின் கேள்வி​களுக்குப் பதில் அளிக்கும் உரையாடலில் மிக எளிதாக உங்களின் சிந்தனை, அந்தரங்கத் தகவல், விருப்பம் போன்ற​ வற்றைத் தந்திரமாக உரையாடல் மென்பொருள் பெற்று​விடும். பின்னர், உங்கள் நோக்கத்தை எளிதாகக் கணித்து​விடலாம். இங்கு எளிதாகக் கணிப்பது என்பதைவிட, எவ்வளவு சரியாகக் கணிக்​கிறது என்பதே லாபத்தைத் தரும்.
  • ஒரு பொருளை விற்கும் நிறுவனத்​துக்கு எந்த ஏ.ஐ. நிறுவனம் சரியான நோக்கக் கணிப்பைத் தருகிறது என்பதை வைத்துத்தான் ஏலம் நடக்கும். கூகுளின் நோக்கக் கணிப்பு​களைப் பயன்படுத்​தினால் தங்கள் தயாரிப்புகள் 10 விற்கின்றன; ஆனால், ஃபேஸ்புக் தரும் நோக்கக் கணிப்பு​களைப் பயன்படுத்​தினால் தங்களின் தயாரிப்பு​களில் 100 விற்பனை​யாகின்றன என்றால், ஃபேஸ்​புக்கின் தகவலுக்​குத்தான் மரியாதை, அதிகப் பணம், அதிக லாபம் எல்லாமே.
  • சில ஆண்டு​களுக்கு முன் அரசியல் வியூகங்கள் வகுத்துத் தரும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், ஃபேஸ்புக் பயனாளர் தகவல் - அவர்களின் உளவியல் தகவலை அறுவடை செய்து, பகுப்​பாய்வு செய்து, அதன் அடிப்​படையில் போலிச் செய்திகள், வெறுப்பை உமிழும் செய்தி​களைக் காட்டி ஒரு குறிப்​பிட்ட கட்சிக்கு ஆதரவாக அவர்களை ஓட்டுப் போட வைத்ததாகக் குற்றம்​சாட்​டப்​பட்டது.
  • இதை சைபர் சைகலாஜிக்கல் ஆபரேஷன் (Cyber psychological operation) என அந்நிறுவனம் அறிவித்தது. சர்ச்​சைகளுக்குப் பின் அந்த நிறுவனம் மூடப்​பட்​டதாக் காட்டிக்​கொள்​ளப்​பட்டது. ஆனால், உண்மையில் வேறு பெயரில் அந்நிறுவனம் இயங்கு​வ​தாகச் செய்திகள் கூறுகின்றன.

செய்ய வேண்டியது என்ன?

  • இந்த டிஜிட்டல் யுகத்தில் அரசியல் கட்சிகள் நவீன இணையத் தொழில்​நுட்​பங்கள், சமூக வலைதளங்​களைப் பரப்பு​ரைக்​காகப் பயன்படுத்து​கின்றன. அதேநேரம், தேர்தல் வியூகம் என்னும் பெயரில் பொய்ச் செய்திகள், வெறுப்பை உமிழும் செய்திகள், அவதூறுப் பிரச்​சாரம் செய்வதை ஓர் அரசியல் உத்தி​யாகவே சில கட்சிகள் வைத்திருக்​கின்றன.
  • அவர்களிடம் இந்த நோக்கக் கணிப்பு பற்றிய தகவல்கள் கிடைத்​தால், போலிச் செய்திகள், வெறுப்புப் படங்கள், அவதூறுக் காணொளி​களைக் கச்சிதமாக உருவாக்கி மக்களைக் குழப்ப நிறைய சாத்தியம் உள்ளது. ஏ.ஐ. தொழில்​நுட்பம் நாள்தோறும் வளர்ந்து, மனிதர்​களின் எண்ணங்கள் - உள்நோக்​கங்களை முன்னறி​வித்து, அவற்றைச் செயல்​படுத்தும் திறனைப் பெறுகிறது.
  • ஒருகட்​டத்​தில், மக்களின் தனியுரிமைக்கும் சுயமுயற்சிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கருவியாகவும் இது மாறக்​கூடும். ஆகவே, நம்முடைய இணையச் செயல்​பாடுகளை உரிய விழிப்பு​ணர்​வுடன் அணுகு​வதும், ஏ.ஐ. தொழில்​நுட்பம் எவ்வாறு செயல்​படு​கிறது என்பதைப் பற்றிய அறிவையும் சிந்தனையையும் வளர்த்​துக்​கொள்ள வேண்டியதும் அவசியம்.
  • நோக்கப் பொருளா​தாரம் என்னும் புதிய ஆபத்தைப் பற்றி இந்திய அரசு ஒரு கொள்கை முடிவெடுக்க வேண்டும். இது தொடர்​பாகத் தேர்தல் ஆணையமும் உரிய விவாதங்களை மேற்கொண்டு, ஒரு மகத்தான நவீனத் தொழில்​நுட்​பத்தை அரசியல் கட்​சிகள் தவறாகப் பயன்​படுத்​தாதவாறு கட்டுப்​பாடுகளை விதிக்க வேண்​டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories