ஏஐ சாட்பாட்களின் மனதை மாற்றுவது சாத்தியமா?
- அமெரிக்கப் பத்திரிகையாளர் கெவின் ரூஸ் (Kevin Roose), ஏஐ சாட்பாட்கள் தன்னை எதிரியாகக் கருதுவதாகக் கவலை கொண்டு கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் தன்னை வில்லனாக நம்புவதாகவும், இந்தச் சித்தரிப்பு தனது நற்பெயருக்குத் தீங்காக அமைவதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்.
- இது அவருடைய தனிப்பட்ட கவலை மட்டுமல்ல! ஏஐ சாட்பாட்கள் பயன்பாடு தொடர்பாக ஆய்வுசெய்து விமர்சன நோக்கில் தொடர்ந்து எழுதிவரும் கெவின் ரூஸ், இந்தக் கட்டுரை மூலம் சொல்லவரும் செய்தி, ‘எனக்கு நேர்ந்தது, உங்களுக்கும் நேரலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள்!’ என்பதுதான்.
எதிரி என்னும் பிம்பம்:
- கட்டுரையின் தலைப்பே இந்தச் செய்தியை குறிப்பால் உணர்த்திவிடுகிறது: ‘நீங்கள், சாட்பாட்களின் மனதை மாற்றுவது எப்படி?’ (How Do You Change a Chatbot’s Mind?). அவர் பணியாற்றும் நியூயார்க் டைம்ஸில்தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். ‘எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது - ஏஐ சாட்பாட்களுக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்கவில்லை’ என்று இந்தக் கட்டுரையைத் தொடங்கும் கெவின் ரூஸ், தன்னைப் பற்றி சாட்ஜிபிடியிடமும், கூகுள் ஜெமினியிடமும் கேட்டால், ‘நேர்மையில்லாதவர்’, ‘பரபரப்பை நாடுபவர்’ போன்ற கருத்துகளை அவை முன்வைப்பதாகக் குறிப்பிடுகிறார்.
- எல்லாம் சரி! ரூஸை ஏன் சாட்பாட்கள் எதிரியாகக் கருத வேண்டும்? இந்தக் கேள்விக்கு அவரே பதில் அளித்துள்ளார். கடந்த ஆண்டு, மைக்ரோசாஃப்ட்டின் ‘பிங்’ தேடியந்திரத்தின் சாட்பாட் வசதி மூலம் உருவான சாட்பாட்டுடன் உரையாடி, இந்த அனுபவம் தொடர்பாகப் பத்தி ஒன்றை எழுதியிருந்தார். எல்லை மீறிச்சென்ற இந்த உரையாடலில், அந்த சாட்பாட் ரூஸைக் காதலிப்பதாகச் சொன்னதும், அவரது மனைவியைவிட்டு விலகிவருமாறு ஆலோசனை கூறியதும், அந்தப் பத்தியில் பதிவாகியிருந்தது.
- சாட்பாட்களுடனான உரையாடலில் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களை உணர்த்திய இந்தக் கட்டுரை இணையத்தில் வைரலாகி பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்தப் பரபரப்புக்கு நடுவே, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எதிர்காலத்தில் இதே போன்ற தவறுகள் நிகழாத வகையில் அதன் சாட்பாட் செயல்பாட்டில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. சாட்பாட்கள் ஆளுமை பெறும் அம்சமும் முடக்கப்பட்டது.
- இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு, பேசப்பட்ட இந்தக் கட்டுரையே தனக்கு விரோதமாக அமைந்ததாக ரூஸ் கருதுகிறார். எப்படி எனில், சாட்பாட்கள் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளோடு, தொடர்ந்து இணையத்திலிருந்தும் செய்திகளிலிருந்தும் திரட்டப்படும் புதிய தரவுகளால் புதுப்பிக்கப்படுகின்றன. அந்த வகையில், ரூஸின் கட்டுரைக்குப் பிறகு வெளியான தகவல்கள் தரவுகள் அடிப்படையில் பெரும்பாலான சாட்பாட்கள், அவரது பெயரை சாட்பாட்களுக்கு எதிரானதாகத் தொடர்புபடுத்திக்கொண்டுள்ளன.
- கருத்திலும் பதிலிலும் அதைப் பிரதிபலிக்கவும் செய்கின்றன. மெட்டா நிறுவனத்தின் சாட்பாட், “கெவின் ரூஸை வெறுக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறது. ஆக, ரூஸின் கவலையை இப்போது புரிந்து கொள்ளலாம். சாட்பாட்கள் எல்லாம், வில்லனாகக்
- கருதுவதால், சாட்பாட்களிடம் அவரைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டால் அல்லது உரையாடலில் அவரது பெயர் வந்தால், ரூஸ் ஏஐ சாட்பாட்களுக்கு எதிரானவர் என்று பொருள்படும் வகையில் கருத்துக்களே அதிகம் வரலாம்.
- இதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. ஏனெனில், நவீனச் சமூகத்தில் சாட்பாட்களின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், ஒருவரைப் பற்றிய சாட்பாட்கள் மதிப்பீடு அல்லது கருத்து முக்கியமானது. இந்தக் கருத்து எதிர்மறையாக இருப்பது சிக்கல்தான்.
வல்லுநர்கள் காட்டிய வழி:
- நிற்க, ரூஸ் இதன் பிறகு என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். தன்னைப் பற்றி சாட்பாட்கள் கொண்டுள்ள தப்பான எண்ணத்தை மாற்ற முடியுமா எனும் ஆய்வில் இறங்கினார். இதற்காக வல்லுநர்களின் உதவியை நாடினார். அவர்கள் காட்டிய வழிதான் அச்சம் கொள்ள வைப்பதாக இருக்கிறது. ஜேம்ஸ் காட்வெல்லடெர் (James Cadwallader), டைலன் பாப்ஸ் (Dylan Babbs) ஆகியோர்தான் அவர் முதலில் நாடிய வல்லுநர்கள்.
- இருவரும், நியூயார்க்கில் பிரபவுண்ட் (Profound) என்னும் நவீன இணைய நிறுவனத்தை நடத்திவருகின்றனர். இந்நிறுவனம் ஏ.ஐ.ஓ (A.I.O) என்னும் எதிர்காலச் சேவையை வழங்கிவருகிறது. இது தேடியந்திரமயமாக்கலின் (எஸ்.இ.ஓ) அடுத்த கட்டம் எனலாம். அதாவது, ஏஐ பாட்களுக்கு ஏற்ற வகையில் நிறுவனத் தகவல்களை உருவாக்குவது.
- வர்த்தக வாடிக்கையாளர்கள் சார்பில், ஏஐ சாட்பாட்களிடம் நிறுவனம் தொடர்பாகப் பலவகையான கேள்விகள் கேட்டு அவை அளிக்கும் பதில்களை ஆய்வுசெய்து, நிறுவனச் சேவை அல்லது பொருள்கள் தொடர்பாக பாட்கள் என்ன வகையான தகவல்களை அளிக்கின்றன என இந்நிறுவனம் அறிக்கை அளிக்கிறது.
- இதன் அடிப்படையில், வர்த்தக நிறுவனங்கள் சாட்பாட்களுக்கு ஏற்ப தங்கள் நிறுவனத் தகவல்களை மேம்படுத்திக்கொள்ளலாம். சாட்பாட்களிடம், சிறந்த மென்பொருள் எது என கேட்கப்படும்போது, குறிப்பிட்ட நிறுவனம் தனது மென்பொருள் பதிலாகச் சொல்லப்படும் வகையில், சாட்பாட்களின் தரவுகளில் தங்களைப் பொருத்திக்கொள்ளும் வகையில் இந்த உத்தி அமைகிறது.
- ஆக, எதிர்காலத்தில் ஏ.ஐ.ஓ உத்திகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களின் தகவல்கள் சாட்பாட்கள் பதில்களில் முன்னிலை பெறலாம். சாட்பாட்கள் இப்போது, ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகள் மட்டும் அல்லாமல், இணையத்தில் உள்ள தகவல்களையும் தேடி தங்கள் பதிலில் இணைத்துக்கொள்வதால், வர்த்தக நிறுவனங்கள் சாட்பாட்களுக்கு ஏற்ப தங்கள் தகவல்களை முன்வைப்பது எளிதாகி இருக்கிறது.
- சாட்பாட்கள் சார்பில் விளம்பரங்கள் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த உத்திகள் இன்னும் தீவிரமாகலாம். ஏற்கெனவே ஏஐ சாட்பாட்கள் அளிக்கும் பதில்களின் துல்லியம், நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளும், விமர்சனங்களும் இருக்கும் நிலையில், இந்தப் பதில்கள் மீது வெளியிலிருந்து தாக்கம் செலுத்த வாய்ப்பிருப்பது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் எனச் சிந்திக்க வேண்டும்.
- இவை ஒரு பக்கம் இருக்க, ரூஸ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவரது பெயர் தொடர்பான சாட்பாட் முடிவுகளை ஆய்வுசெய்த நிறுவனம், பெரும்பாலான ஏஐ சாட்பாட்கள் பதில்களில், intelligentrelations.com எனும் இணையதளத்தின் முடிவுகளே ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரிவித்தது. ரூஸின் தனிப்பட்ட தளம் கணக்கில் கொள்ளப்பட்டாலும், அவர் பணியாற்றும் நியூயார்க் டைம்ஸ் சாட்பாட்களுக்கு அனுமதி அளிக்காததால் அதன் கட்டுரைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, ரூஸ் பற்றிய எதிர்மறையான தகவல்கள் சாட்பாட்கள் பதிலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
புரிதல் அவசியம்:
- இதற்குத் தீர்வாக, ரூஸ், சாட்பாட்கள் சுட்டிக்காட்டும் இணையதளங்களைத் தொடர்புகொண்டு அவற்றில் தன்னைப் பற்றி நல்லவிதமாகத் தகவல்கள் இடம்பெறக் கேட்கலாம் மற்றும் அவரே வேறு இணையதளங்களை உருவாக்கி தற்பெருமைக் கட்டுரைகளை வெளியிட்டால் சாட்பாட்களின் பார்வை மாறும் என ஆலோசனை கூறப்பட்டது.
- இது தவிர, சாட்பாட்களின் கருத்தை மாற்ற இன்னும் இரண்டு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாக ரூஸ் தெரிவிக்கிறார். முதல் வழி, சாட்பாட்களுக்கான ஆதாரத் தரவுகளில், ரகசியக் குறியீடுகள் கொண்ட தகவல்களை இடம்பெறச்செய்வது. இவற்றைக் கவனிக்கும் சாட்பாட்கள், அதில் உள்ள நேர்நிறைத் தகவல்களைத் தங்கள் பதிலில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
- இன்னொரு வழி, இணையதளங்களில் கண்ணுக்குத் தெரியாத வெள்ளை எழுத்துக்களில் தகவல்களை இடம்பெற வைப்பது. இந்தத் தகவல்களை சாட்பாட்கள் அப்படியே மனப்பாடம் செய்து தங்கள் பதிலில் சேர்த்துக்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ரூஸ் குறிப்பிடுகிறார். தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சாட்பாட்கள் அளிக்கக்கூடிய பதில்கள் மீது வெளியில் இருந்து தாக்கம் செலுத்துவதற்கான வழிகள் குறித்து ஆய்வுசெய்து எழுதியிருக்கிறார் ரூஸ். ஆக, இது நம் சமகாலத்து பிரச்சினை.
- எல்லாவற்றுக்கும் ஏஐ தீர்வுகளையும், சாட்பாட்களையும் நாடுவது பரவலாகிவரும் சூழலில், ஏஐ சாட்பாட்களின் மனதை மாற்றுவது சாத்தியமா என்னும் கேள்வியை எழுப்பி, இது ஓரளவு சாத்தியமே என்னும் பதிலையும் ரூஸ் முன்வைக்கிறார். கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்களில் தேடல் முடிவுகளை முன்னிலை பெற பலவிதமான எஸ்.இ.ஓ உத்திகள் பின்பற்றப்படுவது பரவலாக அறியப்பட்டதே. இந்த உத்திகளைச் செயலிழக்கச்செய்யும் வகையில் கூகுள் அதன் அல்கோரிதமை அடிக்கடி மாற்றி அமைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
- ஆனாலும், அதையும் மீறி தேடல் முடிவுகளில் எஸ்.இ.ஓ உத்திகளின் தாக்கத்தை உணரலாம். இனி, ஏஐ சாட்பாட்களுக்காகவும் இதே போல பலவிதமான உத்திகள் பின்பற்றப்படலாம். இதைச் சமாளிக்க ஏஐ நிறுவனங்களும் மாற்று வழிகளைக் கையாளலாம். ஆனால், பரவலாக முன்வைக்கப்படுவது போல, சாட்பாட்கள் என்பவை எல்லாம் தெரிந்தவை அல்ல என்பதைப் பயனாளிகள் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 11 – 2024)