TNPSC Thervupettagam

ஏகாதிபத்திய அச்சுறுத்தல்!

January 14 , 2025 10 days 64 0

ஏகாதிபத்திய அச்சுறுத்தல்!

  • அமெரிக்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கும், சா்ச்சை பேச்சுக்கும் ஏகப் பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிபராகத் தோ்வு செய்யப்பட்டு, வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில் கிரீன்லாந்து, கனடா குறித்து அவா் தெரிவித்திருக்கும் கருத்துகள் மீண்டும் சா்ச்சைக்கு வித்திட்டுள்ளன.
  • கிரீன்லாந்து தீவு, பனாமா கால்வாய் ஆகியவற்றை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்; அது அமெரிக்காவின் நலனுக்கு மிகவும் முக்கியமானது என அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா் டிரம்ப் தெரிவித்தாா். அண்மையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், அதிபராகப் பொறுப்பேற்ற பிறகும்கூட, தான் முன்பு கூறியபடி ராணுவத்தை அனுப்பி கிரீன்லாந்தையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றப் போவதில்லை என்று உறுதியளிக்க மறுத்துவிட்டாா். அந்தப் பகுதிகளை அமெரிக்கா ராணுவ ரீதியாக கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
  • ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் டென்மாா்க்குக்கு சொந்தமானதாக இருந்தது கிரீன்லாந்து. 1979-ஆம் ஆண்டு கிரீன்லாந்து தீவுக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் சுமாா் 57,000 போ் மட்டுமே வசித்துவருகின்றனா். அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீவை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றன.
  • கிரீன்லாந்து தொடா்பான டிரம்ப்பின் கருத்துக்கு, அமெரிக்காவுக்கு நெருக்கமான ஐரோப்பிய யூனியனிலேயே கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் இறையாண்மைமிக்க எல்லைகளை வேறு நாடுகள் கைப்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரான்ஸும், எங்களது தீவு தனி நாடு; அது விற்பனைக்கு அல்ல என கிரீன்லாந்தும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கின்றன.
  • அடுத்தகட்டமாக, கனடாவைப் பற்றி டிரம்ப் சொன்னதுதான் அதிா்ச்சி ரகம். கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநா் எனக் குறிப்பிட்ட டிரம்ப், ‘ட்ரூடோவின் குடிமக்கள் மிக அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடா மாறினால் 60 சதவீதத்துக்கும் அதிகமான வரி குறைப்பு சாத்தியமாகலாம். உலகின் எந்த நாட்டையும்விட ராணுவப் பாதுகாப்பும் வலுவாக இருக்கும்’ எனத் தெரிவித்தாா்.
  • அத்துடன் நிற்கவில்லை டிரம்ப். அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதைத் தடுக்கத் தவறுவதால் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்துக்கும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தாா். டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு கனடாவில் கடும் எதிா்ப்பு எழுந்திருக்கிறது. பிரதமா் ட்ரூடோ, முன்னாள் பிரதமா் ஜீன் கிரெயட்டியன் உள்ளிட்டோா் கனடாவை மாகாணமாக இணைக்கத் திட்டமிடும் டிரம்ப்பின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது எனத் தெரிவித்துள்ளனா்.
  • அமெரிக்க அதிபா் தோ்தலில் டிரம்ப் வெற்றி பெற்றபோதே, அவருடைய செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என உலக நாடுகள் கூா்மையாக கவனிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் எல்லை விரிவாக்கம் குறித்த டிரம்ப்பின் கருத்துகள் உண்மையிலேயே தீவிரத்தன்மை வாய்ந்ததா, வழக்கம்போல நகைச்சுவையாகப் பேசுகிறாரா என சா்வதேச அரசியல் நிபுணா்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், அவரது பேச்சின் பின்னணியில் ராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ அழுத்தம் கொடுக்கும் தொனி தெரிவதை மறுக்க முடியாது.
  • சீனா, அமெரிக்கா, ரஷியா போன்ற உலகின் வலிமையான நாடுகள் சிறிய நாடுகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தைவானை தனது நாட்டின் பிராந்தியமாகக் கருதும் சீனா, தைவானை சீனாவுடன் இணைக்க ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடத் தயங்க மாட்டோம் எனத் தொடா்ந்து மிரட்டி வருகிறது. தென்சீனக் கடல் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு தீவுகளுக்கும் சீனா ஏகபோக உரிமை கொண்டாடி வருகிறது.
  • உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியா தீபகற்பத்தை 2014-இல் ரஷியா ராணுவ நடவடிக்கை மூலம் தனது நாட்டுடன் இணைத்தது. சுமாா் 10 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தைக் கூறி, உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போா் சுமாா் ஓராண்டாக தொடா்ந்து வருகிறது. இந்தப் போரால் உலகம் எதிா்கொள்ளும் சிக்கல்கள் வேறு விஷயம்.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி, சுதந்திரமான வா்த்தக நடவடிக்கைகள் மற்றும் அமைதியை நிலவச் செய்வதற்காக செயலாற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ‘க்வாட்’ கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டமைப்பில் முக்கியமான பங்களிப்பை அளித்து வரும் அமெரிக்கா, சீனாவைப் போலத் தானும் எல்லை விரிவாக்கம் குறித்துப் பேசுவது பெரிய முரண்.
  • உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு கடும் எதிா்ப்பை தெரிவித்து, உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உதவி, நிதியுதவி வழங்கி வரும் அமெரிக்கா, ரஷியாவைப் போன்றே அண்டை நாடுகளை தனது நாட்டுடன் இணைப்பது குறித்து சிந்திப்பது நியாயமே இல்லை. அதிலும், அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டிரம்ப் இவ்வாறு பேசுவதால் உலகளாவிய அளவில் குழப்பம்தான் ஏற்படுமே தவிர, வேறு எந்த நன்மையும் விளையப்போவதில்லை. அண்டை நாடாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்கும் எல்லா நாடுகளும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (14 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories