- தருமபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஒரு கிராமம், வாச்சாத்தி. பழங்குடியினர் வசிக்கும் அந்தக் கிராமத்தின் பெயர், 1992 ஜூலை மாதம் நடைபெற்ற கொடூர நிகழ்வுக்குப் பின்னர் தேசம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயராக மாறிப்போனது. அந்தக் கிராமத்து மக்கள்மீது வனத் துறையினரும் காவல் துறையினரும் நிகழ்த்திய பாலியல் வன்முறைகளை வெளிக்கொண்டு வந்தவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், அதை முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டுசென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் ஏ.நல்லசிவன் ஆகியோர்.
- தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாச்சாத்தி கொடுமை பற்றி விவாதம் நடைபெற்றபோது, அப்போதைய வனத் துறை அமைச்சர், “வாச்சாத்தி கிராமம் மலைமீது இருக்கிறது. 70 வயதான நல்லசிவன் அந்தக் கிராமத்துக்கு எப்படிச் சென்றிருக்க முடியும்? பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்” என்று கிண்டலுடன் மறுப்புத் தெரிவித்தார். 19 ஆண்டுகள் கழித்து 2011இல் வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்தபோது, நல்லசிவன் உயிரோடு இல்லை.
பெருமைமிகு கம்யூனிஸ்ட்:
- திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் என்ற கிராமத்தில் பிறந்தவர் நல்லசிவன். அவரது பள்ளித் தலைமையாசிரியர் காந்திமதிநாதன், “நல்லசிவன் மிகச் சிறப்பாகப் படிக்கக்கூடிய மாணவன். அவன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபடாமல், மேலே படித்திருந்தால், மாவட்ட ஆட்சித் தலைவராக ஆகியிருப்பான்’’ என்று அடிக்கடி சொல்லுவார்.
- பிற்காலத்தில் நல்லசிவனிடம் இது பற்றிக் கேட்டபோது, “நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தால் எனக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியைவிடப் பல நூறு மடங்கு ஆத்ம திருப்தியை ஒரு கம்யூனிஸ்ட் தொண்டனாக இருப்பதன் மூலம் அடைகிறேன்” என்றார் புன்னகையுடன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூளை:
- தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு காந்தியச் சிந்தனையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த நல்லசிவனுக்கு, செல்வராஜ் என்ற தோழரின் அறிமுகம் ஏற்பட்டது. செல்வராஜ்தான் அவரை மார்க்சிய சித்தாந்தத்தின்பால் ஈர்ப்புக்கொண்டு செயல்பட வைத்தவர். ஜெயபிரகாஷ் நாராயண் எழுதிய, ‘சோசலிசம் எதற்காக?’ என்கிற புத்த கத்தை நல்லசிவனுக்கு அவர் கொடுத்தார்.
- 1940இல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார் நல்லசிவன். அப்போதிருந்தே, விக்கிரமசிங்கபுரம் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பிற்காலத்தில் இந்தப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பி.ராமமூர்த்தியும் உதவிச் செயலாளராக நல்லசிவனும் செயல்பட்டனர். அப்போது இங்கிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்துக்கும் மேல்.
- 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது, நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் தலைவர் கள் மீது நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது. தோழர்கள் கே.பாலதண்டாயுதம், ஆர்.நல்லகண்ணு, ப.மாணிக்கம், ஐ.மாயாண்டி பாரதி, ஏ.நல்லசிவன், எழுத்தாளர்கள் கி.ராஜ நாராயணன், வாத்தியார் ஜேக்கப் உள்ளிட்ட பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
- ரசிகமணி டி.கே.சி.யின் தலையீட்டின் பேரில், எழுத்தாளர் கி.ரா. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் 17ஆவது குற்றவாளியான நல்லசிவனைப் பற்றி கிருஷ்ண சாமி என்ற காவல் துறை ஆய்வாளர், “நல்லசிவன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூளை. அவருடைய மண்டை ஓடு உடைக்கப்பட வேண்டும்” என்று ஆவேசத்துடன் கூறினார்.
- நல்லசிவன் தலைமறைவாக இருந்தபோது, அவரது தம்பி குமரப்பனைக் காவல் நிலையத் துக்கு அழைத்துவந்து, நல்லசிவன் குறித்துக் கேட்டு அடித்துச் சித்ரவதை செய்தது காவல் துறை; குமரப்பன் பின்னாளில் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார்.
- நல்லசிவன், நல்லகண்ணு போன்ற தோழர்கள் தலைமறைவாகி இருந்தபோது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் வேலாயுதம் என்ற சலவைத் தொழிலாளி. வேலாயுதமும் அவரது மனைவியும் தாங்கள் சலவை செய்யும் வீடுகளில் இரவு நேரத்தில் தூக்கு வாளிகளில் சோறு வாங்கி வருவார்களாம். அதைத்தான் தோழர்கள் சாப்பிட்டுப் பசியாறினர். “வேலாயுதம் போட்ட சோற்றில்தான் நான் இவ்வளவு காலம் உயிர் வாழ்கிறேன்” என்று நெகிழ்வுடன் இப்போதும் கூறுகிறார் நல்லகண்ணு.
- எளிமையின் சிகரம்: 1981இல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் நல்லசிவன். 1992இல் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆனார். 1989இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், திருநெல்வேலிக்குப் பேருந்தில் வந்து இறங்கி, கட்சி அலுவலகத்துக்கு வேகாத வெயிலில் நடந்தேபோவார். “வண்டியில் ஏறுங்கள்... கட்சி அலுவலகத்தில் விடுகிறேன்” என்று யார் அழைத்தாலும், “நன்றி... நான் நடந்தே போய்விடுவேன். பிறகு, ஒவ்வொரு முறையும் இப்படி யாராவது வருவார்களா என்று நினைக்கத் தோன்றும். வேண்டாம்” என்று மறுத்துவிடுவார்.
- வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காக உழைத்த தலைவர் நல்லசிவன், இறுதி நாட்களில் பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டார். கேரள மாநிலம் புனலூரில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நல்லசிவன், 1997 ஜூலை 20 அன்று நெல்லையில் காலமானார்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2023)