- கோதுமையின் கையிருப்புக்கான கட்டுப்பாட்டு விதிகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும், ஊக வணிகம் நடைபெறாமல் இருக்கவும் கோதுமையின் கையிருப்பு அளவுக்கான கட்டுப்பாடு ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 மாா்ச் 31-ஆம் தேதி வரையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
- மொத்த வியாபாரிகள், பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்கள் ஆகியவை 3,000 டன்கள்; சில்லறை வியாபாரிகள் 10 டன்கள்; அரவை ஆலைகள் தங்களது தேவையில் 70% என்று கையிருப்பு அளவு நிா்ணயிக்கப்பட்டிக்கிறது. இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளத்தில் தங்களுடைய கையிருப்பளவை தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தக் கட்டுப்பாடு முதலில் கொண்டுவரப்பட்டது. மொத்த வியாபாரிகளுக்கு 2,000 டன், சில்லறை விற்பனையாளா்களுக்கு 10 டன், அரவை நிலையங்களுக்கு அவா்களுடைய வருடாந்திரத் தேவையில் 75% என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பிறகு படிப்படியாகக் குறைத்து பிப்ரவரி 24-இல் அதுவே 500 டன்; 5 டன்; 60% என்கிற நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதி அறுவடைக் காலம் தொடங்கியதைத் தொடா்ந்து இந்தக் கட்டுப்பாடு அகற்றப்பட்டது.
- கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன என்றாலும்கூட, அடுத்த ஒரு மாதத்திற்கு விவசாயிகளிடமிருந்து கோதுமையை வாங்க வேண்டாமென்று தனியாா் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டன. அதன் மூலம் அரசு தனது கையிருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பியது. பெரிய சில்லறை நிறுவனங்களும், மொத்த வியாபாரிகளும் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக வழங்கிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த விரும்பியது.
- இப்போது அறுவடைக் காலம் முடிந்துவிட்டது. அறுவடை செய்த கோதுமை பெரும்பாலும் சந்தைப்படுத்தப்பட்டுவிட்ட நிலைமை. மத்திய வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த ஆண்டின் சாதனை விளைச்சலான 11.05 கோடி டன்னை முறியடித்து இந்த ஆண்டு 11.29 கோடி டன் கோதுமை உற்பத்தியாகியிருக்கிறது. அப்படி இருந்தும் பிறகு ஏன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது புதிராக இருக்கிறது.
- இதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. கோதுமையின் சில்லறை விலை கடந்த ஆண்டு மே மாதத்தைவிட 8.69% அதிகம்; இரண்டாவதாக, அரசின் கிடங்குகளில் ஜூன் 1 நிலவரப்படி இருக்கும் கோதுமையின் கையிருப்பு 2.99 கோடி டன். இது கடந்த 16 ஆண்டுகளில் காணப்படும் மிகக் குறைவான கையிருப்பு; மூன்றாவதாக, பருவ மழைப் பொழிவு இப்போதைய நிலையில் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
- அரசு சில உண்மைகளை மறைக்கிறது என்று தோன்றுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் மிக முக்கியமான அடிப்படை உணவாகக் கருதப்படும் கோதுமையின் உற்பத்தி குறைந்து வருகிறது. 2022-இல் அரசின் எதிா்பாா்ப்பான 11 கோடி டன்னைவிட, உற்பத்தி 40 லட்சம் டன் குறைவு. ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போதும், கோதுமையின் உற்பத்தி 40 முதல் 50 லட்சம் டன் குறையும் என்கிறாா்கள் வேளாண் அறிவியல் வல்லுநா்கள். அதிகரித்திருக்கும் கோடை வெப்பம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கோதுமையின் மகசூல் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.
- 2014-15 முதல் 2020-21 வரையில் கோதுமை உற்பத்தியில் இந்தியா சாதனைகள் புரிந்து வந்தது. 8.6 கோடி டன்னிலிருந்து நமது உற்பத்தி 11 கோடி டன்னாக உயா்ந்தது. ஆனால், அதிகரித்து வரும் வெப்பம் கடந்த மூன்று ஆண்டுகளாக பின்னடைவை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 11.3 கோடி டன்னை எட்ட இயலவில்லை. 8.3 கோடி டன் மகசூல்தான் கிடைத்தது. நடப்பு ஆண்டில் 11 கோடி டன் என்று நிா்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், உண்மையான மகசூலின் அளவு பல மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவரும்.
- அரசின் கோதுமை கொள்முதலும், தொடா்ந்து ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2022-23 ரபி பருவத்தில் 4.44 கோடி டன் இலக்கு நிா்ணயித்து, அரசு கொள்முதல் செய்தது என்னவோ 1.88 கோடி டன் மட்டுமே. அதாவது, 60% குறைவு. 2023-24 ரபி பருவத்தில் கொள்முதல் இலக்கை குறைத்து 3.42 கோடி டன்னாக நிா்ணயித்தும்கூட, 2.6 கோடி டன்தான் அரசால் கொள்முதல் செய்ய முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டு ரபி பருவ அனுபவ அடிப்படையில், நடப்பு ஆண்டின் கொள்முதல் இலக்கு 3-3.2 கோடி டன்னாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கை எட்ட முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
- கோதுமை உற்பத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காணப்படும் பின்னடைவு இரண்டு விதத்தில் பாதித்திருக்கிறது. முதலாவதாக, பொதுவிநியோகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவா்களுக்கு வழங்குவதற்கும், விலை உயா்வைத் தடுப்பதற்கும் வைத்திருக்கும் அரசின் கையிருப்பு குறைகிறது. இரண்டாவதாக, இந்தியாவை வேளாண் பொருள்களின் ஏற்றுமதி கேந்திரமாக மாற்ற நினைக்கும் அரசின் திட்டம் பின்னடைவை எதிா்கொள்கிறது.
- கோதுமை பிரச்னையைக் கையாள்வதில் அரசின் வெளிப்படைத் தன்மை இல்லை. ஒருபுறம், வேளாண் அமைச்சகம் சாதனை மகசூல் என்று அறிவிப்பதும், இன்னொருபுறம் கோதுமை ஏற்றுமதிக்கும் கையிருப்புக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் வெளிப்படையாகவே காணப்படும் முரண்கள். வெப்பம் காரணமாகக் குறைந்துவரும் கோதுமை உற்பத்தியை எதிா்கொள்ள, உடனடி நடவடிக்கைகளை அரசு முன்னெடுப்பதுதான் இதற்கான தீா்வாக இருக்கும்!
நன்றி: தினமணி (08 – 07 – 2024)