TNPSC Thervupettagam

ஏன் கூடாது ஒரே தேர்தல்

September 28 , 2023 471 days 353 0
  • பதவியும் அதிகாரமும் ஒரு காலகட்டத்துக்கு மேல் நீடிக்கும்போது எல்லாவற்றையும் நம் வசதிக்கு வளைக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் பெயரையே மாற்றிடும் அளவுக்குத் துணிவு கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் வளைப்பு வேட்கையை வர்ணிக்க தேவையே இல்லை. பாஜக அரசு அடுத்து உருவாக்க விரும்பும் மாற்றம், ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சூழல்.

தேர்தல் வகைமைகள்

  • நாட்டை ஆளும் நாடாளுமன்றம், மாநிலங்களை ஆளும் சட்டமன்றங்கள், உள்ளூர் நிர்வாகத்துக்கான உள்ளாட்சி மன்றங்கள் என்று பல அடுக்கு மக்கள் மன்றங்களால் இந்தியா இன்று நிர்வகிக்கப்படுகிறது. மக்களை நிர்வகிப்பதில் இந்த மன்றங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான பாத்திரங்களையும் பொறுப்புகளையும் வகிக்கின்றன. மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், சட்டமன்ற உறுப்பினர்கள் 4,100 பேர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் 89,194 பேர், கிராமப்புற உள்ளாட்சிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் 31.89 லட்சம் பேர் என்று இந்த எண்ணிக்கை மிகவும் விரிவானது. மக்களால் இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 1,06,450 என்றால், உத்தர பிரதேசத்தில் 9,13,417.
  • இந்தியா போன்று பரந்து விரிந்த ஒரு நாட்டில், இந்தப் பிரதிநிதிகள் ஒவ்வொருவருமே அதிகாரப் பரவலாக்கலைப் பிரதிபலிக்கின்றனர். ஒரு கிராமத்தில் நடக்கும் ஊராட்சி உறுப்பினர் பதவியைக் கைப்பற்றுவதற்காகக் கொலைகள் நடக்கும் சூழல் இங்கே நிலவுகிறது என்றால், எந்த அளவுக்குத் தீவிரமாக இங்கே தேர்தலை மக்கள் அணுகுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் மக்களவைத் தேர்தல் மட்டும் அல்ல; ஒரு நகரத்தின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் வரை எல்லாத் தேர்தல்களுமே முக்கியமானவை; அதிலும் மொழிவழி – புவியியல் வழி – பண்பாட்டு வழி – உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய மாநிலங்களின் முதல்வர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் மக்களோடு மிக நெருக்கமானவை. ஏனென்றால், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல துறைகளை மாநில அரசுகளே இங்கே கையாளுகின்றன.
  • ஆரம்பத்தில் இந்தியா ஒரே காலகட்டத்தில்தான் தேர்தல்களை நடத்தலானது என்றாலும், இன்று வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலகட்டங்களில்தான் தேர்தல்கள் நடக்கின்றன. சென்ற முக்கால் நூற்றாண்டில் மத்தியிலும், மாநிலங்களிலும் வெவ்வேறு சமயங்களில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகள், பருவநிலை நிமித்தமும் அரசியல் சூழல் நிமித்தமும் சில இடங்களில் முன்கூட்டி அல்லது தாமதமாக நடத்தப்பட்ட தேர்தல்கள் என்று பல காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டது என்றாலும், இது இயல்பாக அமைந்த நல்ல மாற்றம் என்று சொல்லலாம்.
  • காரணம், உலகிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவின் தேர்தல்கள்தான் உலகின் பெரும் தேர்தல்கள். பனி பிரதேசமான காஷ்மீர்; வன பிரதேசமான சத்தீஸ்கர்; பாலை பிரதேசமான ராஜஸ்தான்; மலை பிரதேசமான இமாச்சல் என்று பல்வேறு மாறுபட்ட புவியியல் அமைப்பையும் வேறுபட்ட சமூகங்களையும் கொண்ட இந்தியாவில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதானது பெரும் சவாலான காரியம். நாம் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தத் தேர்தல்களை நடத்தும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய அனுகூலம், தரமான – வன்முறை குறைந்த தேர்தல்கள்.
  • மக்கள் ஒவ்வொரு தேர்தலையும் எந்த அளவுக்கு அவற்றின் முக்கியத்துவத்தோடு அணுகுகிறார்கள் என்பதும், எந்த அளவுக்கு நேர்மையாக நடத்தப்படுகின்றன என்பதுமே தேர்தல்களின் தரத்தைத் தீர்மானிக்கின்றன. தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தப்படும்போது மக்கள் அந்தந்தத் தேர்தல்கள் சார்ந்து விரிவாக விவாதிக்கவும், முடிவெடுக்கவும் வசதியாக இருக்கிறது. மக்களவைத் தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பிரச்சினைகளிலும், சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மாநிலம் தழுவிய பிரச்சினைகளிலும், உள்ளாட்சித் தேர்தல்கள் சமயத்தில் உள்ளூர் சார்ந்த பிரச்சினைகளிலும் மக்கள் கவனம் செலுத்துகிறார்கள்; அரசியல் கட்சிகளும் அவை நோக்கி தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றன. ஒப்பீட்டளவில் தேர்தலைக் கையாள்வது அரசு அலுவலர்களுக்கு எளிதாக இருக்கிறது. ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த முற்பட்டால், அரசியல் கட்சிகளின் பலமான படைகளின் மோதலை அரசு ஊழியர்களின் படையால் சமாளிக்கவே முடியாது.

காரணங்கள் உள்ளும் புறமும்

  • பாஜக ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ முறையைக் கொண்டுவருவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறது.

முதலாவது கல், பாஜகவின் நீண்ட கால லட்சியம்  

  • அதிகாரத்தை மேலும் மையப்படுத்துதல். இந்த முறையைக் கொண்டுவருவதன் மூலம் மக்களுடைய  ஒட்டுமொத்த அரசியல் கவனத்தையும் டெல்லி நோக்கி பாஜக திருப்ப முற்படுகிறது என்று சொல்லலாம். ஒரே சமயத்தில் மக்களவைத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் உள்ளாட்சித் தேர்தலும் ஒரு மாநிலத்தில் நடத்தப்படும் சூழல் உருவாவதை நாம் கற்பனை செய்வோம். இதில் எந்தத் தேர்தலுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்கும். தொலைக்காட்சிகளில், ‘அடுத்த பிரதமர் யார்?’ என்ற கேள்வி முன்னுரிமை பெறுமா; ‘நம்முடைய மாநிலம் கொண்டுவர வேண்டிய திட்டம் எது?’ என்ற கேள்வி முன்னுரிமை பெறுமா; ‘உங்கள் வார்டு உறுப்பினர் என்ன செய்வார்?’ என்ற கேள்வி முன்னுரிமை பெறுமா?
  • இந்தியாவைப் பொறுத்த அளவில், மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களை ஏற்கெனவே முழுமையாக அரசியல் கட்சிகள் ஆக்கிரமித்துவிட்டன. புதிய சிந்தனையோடு சுயேச்சையாகத் தேர்தல் களத்தில் அடியெடுத்துவைக்க விழையும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இங்கு மிச்சமுள்ள ஒரே இடம், உள்ளாட்சித் தேர்தல். ஒரே தேர்தல் நடைமுறை வந்தால் உள்ளூர்ப் பத்திரிகைகளில் ஒரு பத்தி அளவுக்கு வரும் சின்ன செய்திக்கான இடமும்கூட அழிபடும். அதேசமயம், மக்களுடைய எல்லா விவாதங்களும் தேசிய அளவிலானதாகவும், தேசிய கட்சிகளையும், குறிப்பிட்ட காலகட்டத்தில் தேசிய அளவில் செல்வாக்கோடு திகழும் தலைவரையும் மையமிட்டதாக அமையும்.

இரண்டாவது கல்

  • இன்றைய அரசியல் சூழலை பாஜகவுக்கு ஏற்ப திருப்புதல். இந்தியாவின் ஆட்சி நிர்வாகம் பல அடுக்குகளில் பிரிந்திருப்பது பாஜகவின் பல அரசியல் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. முக்கியமாக, மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்க மக்களவைப் பெரும்பான்மையைத் தாண்டி, மாநிலங்களவை பெரும்பான்மையும் தேவையாக இருக்கிறது. மாநிலங்களவையில் பெரும்பான்மை வேண்டும் என்றால், மாநிலத் தேர்தல்களிலும் வெல்வது அவசியம் ஆகிறது. இன்றைய சூழலில், தேசிய அளவில் பாஜகவுக்கு உள்ள வலு மாநிலங்களில் அதற்கு இல்லை. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், அஸாமில் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சௌகான், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தவிர, வேறு எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடத்தக்க செல்வாக்கான தலைவர்கள் பாஜகவில் இல்லை. ஆனால், எதிர்த்தரப்பிலோ நேர் எதிரான நிலை. சில மாநிலங்களில் காங்கிரஸிலும் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றனர். மாநிலங்களில் தொடர்ந்து பாஜக வீழ்ச்சியைச் சந்திக்கிறது. இன்றைக்கு 14 மாநிலங்களில் பாஜக அல்லாதோரே ஆள்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழலில் 2024 மக்களவைத் தேர்தலை வென்றாலும், பாஜக உருவாக்க நினைக்கும் அரசமைப்பு அடிப்படையிலான மாற்றங்களுக்கு சாத்தியம் இல்லை. ஆகவே, தன்னுடைய ஒரே பெரும் பலமான மோடி முகத்தைக் கொண்டு டெல்லி முதல் கடைக்கோடி கிராமம் வரை தேர்தல்களைக் குறிவைக்கிறது பாஜக.
  • நாடு முழுக்க ஒரே நேரத்தில் எல்லாத் தேர்தல்களையும் நடத்த பாஜக சொல்லும் ஒரே காரணமான ‘செலவுக் குறைப்பு’ காரணத்தை நிபுணர்கள் எவரும் ஏற்கவில்லை. இந்தக் காரணத்தின் பின்னுள்ள அபத்தத்தை விவரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

கூட்டாட்சி மீதான தாக்குதல்

  • டெல்லியை மையப்படுத்தியதாகவும் ஏனைய ஆட்சி அமைப்புகளைப் புறந்தள்ளுவதாகவும் இந்தியத் தேர்தல்களை மாற்றிவிடும் வல்லமை மிக்க இந்த முறைமை கூட்டாட்சியின் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் மிகச் சரியாகவே குற்றஞ்சாட்டுகின்றன. கூடவே இந்திய எதிர்க்கட்சிகள் இன்னொரு விஷயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தப்படும் இன்றைய தேர்தல் முறையானது, பல ஜனநாயக நாடுகள் தம்முடைய மக்களுக்கு அளிக்கும் இரு வசதிகளை மறைமுகமாக சின்ன அளவில் இந்திய மக்களுக்கு வழங்குகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படும் இந்தியா இன்றளவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தவறிழைக்கும்போது அதைத் திரும்பப் பெறும் உரிமையை மக்களுக்கு வழங்கவில்லை; அதேபோல, ஆளக்கூடிய அரசு முன்னெடுக்கும் வெவ்வேறு செயல்திட்டங்கள் மீதான மக்கள் கருத்தெடுப்பு முறையும் இங்கே இல்லை. இந்த இரு விஷயங்களுக்கும் இன்றைய தேர்தல் முறை மறைமுக வாய்ப்பு அளிக்கிறது.
  • ஆக, பாஜகவின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையானது ஒரு தேர்தலுக்கான அடிப்படை நோக்கம் எதுவோ அதற்கே எதிரானதாகிவிடுகிறது. மக்கள் அதை நிராகரிக்க இந்த ஒரு காரணம் போதும்; அதாவது ஜனநாயகம்!

நன்றி: அருஞ்சொல் (28 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories