- சமூகத்தில் நிகழும் குற்றங்களிலேயே கொடூரமானதாகக் கருதப்படுவது கொலைக் குற்றம். கொலையாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை காத்திருக்காமல், பழிக்குப் பழியாக நிகழ்த்தப்படும் கொலைகளும் தொடர்ந்து நிகழ்கின்றன. பழிதீர்த்துக்கொள்ள நிகழ்த்தப்படும் கொலைகள் எவ்விதத் தயக்கமும் இன்றி, வெளிப்படையாக நிகழ்த்தப்படுவதும் உண்டு. கொலையைத் திசைதிருப்பும் விதத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்படுவதும் உண்டு.
கூலிப்படை:
- கொலைகளும், பழிதீர்த்துக்கொள்ளும் விதத்தில் நிகழ்த்தப்படும் கொலைகளும் தென்மாவட்டங்களில், குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவில் நிகழ்கின்றன. சென்னை நகரத்திலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கூலிப்படையாகச் செயல்பட்டு, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் காண முடிகிறது.
- குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நிகழும் கொலைகள், கொடுக்கல்-வாங்கல், குடிபோதையில் தகராறு போன்ற காரணங்களால் நிகழும் கொலைகளில் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படுகிறார்கள். அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையும் விரைந்து நடத்தப்படுகிறது.
- ஆனால், திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகள், குறிப்பாகக் கூலிப்படைகள் உதவிகொண்டு நிகழ்த்தப்படும் கொலைகளில் குற்றவாளிகளை அடையாளம் கண்டறிவதும், நீதிமன்ற விசாரணையை நடத்தி முடிப்பதும் பெரும் சவாலாக இருந்துவருகிறது.
- அப்படிப்பட்ட கொலை வழக்குகளின் பின்னணியில் இருக்கும் அரசியல், பணம், சாதி போன்ற காரணிகள் புலன் விசாரணை அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லத் தடையாக இருப்பதைக் காண முடிகிறது.
- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு, கோடநாடு கொலை வழக்கு போன்ற வழக்குகள் இதற்குச் சான்றுகளாகும். இந்த வரிசையில், அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கும் இடம்பெற்றுவிடுமோ என்ற ஐயம் பொதுமக்களிடம் எழுகிறது.
பொன்னான நேரம்:
- ஒரு கொலை வழக்கு மீதான புலன் விசாரணையில் சம்பவ இட ஆய்வு, பிரேத விசாரணை, பிரேதப் பரிசோதனை போன்றவை அக்கொலை யாரால், எதற்காக, எப்படிச் செய்யப்பட்டது என்பதைப் புலன் விசாரணை அதிகாரிக்கு உணர்த்தி, மேல் விசாரணையைத் தொடர உதவியாக அமையும். இந்தத் தருணத்தைப் ‘புலன் விசாரணையின் பொன்னான நேரம்’ என்று கூறுவார்கள்.
- புலன் விசாரணையின் பொன்னான நேரத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் குற்றம் நிகழ்ந்த இடத்தில் கைப்பற்றிய தடயத்தின் உதவியால், துப்பு துலக்கிய கொலை வழக்கு ஒன்றில், குற்றவாளிக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னும்கூட ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொலையாளியை அடையாளம் காட்டிய டி.என்.ஏ:
- லண்டன் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்துவந்த திருமணமான 39 வயதுடைய மரினா கோப்பெல் என்ற பெண் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த சம்பவம் 1994இல் நிகழ்ந்தது.
- இவ்வழக்கில் துப்புத் துலக்கும் பணியில் ஈடுபட்ட லண்டன் பெருநகரக் காவல் துறையினர், கொலையுண்டு இறந்துபோன பெண், அங்காடியில் இருந்து பொருள்கள் வாங்கிக்கொண்டு வந்த பை (carrier bag) ஒன்றின் மேல் இருந்த கைவிரல் ரேகைப் பதிவுகளையும், அவரின் மோதிரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு முடியையும், ரத்த வெள்ளத்தில் பதிவாகியிருந்த கால் தடயங்களையும் சேகரித்தனர்.
- சம்பவ இடத்தில் கிடந்த பையில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகைப் பதிவுகள், அந்தப் பெண் பொருள்கள் வாங்கிய கடையில் வேலை பார்த்துவந்த 21 வயதுடைய வாலிபரின் கைரேகையோடு ஒத்துப்போனதால், அவர் மீது புலன் விசாரணை அதிகாரிக்குச் சந்தேகம் ஏற்படவில்லை. துப்பு துலங்காத இந்தக் கொலை வழக்கின் புலன் விசாரணையை லண்டன் பெருநகரக் காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டனர்.
- இறந்துபோன பெண் அணிந்த மோதிரத்திலிருந்து எடுக்கப்பட்ட முடியின் டி.என்.ஏ. விவரங்களைப் பிற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளின் டி.என்.ஏ. உடன் ஒப்பீடு செய்து வந்தனர்.
- இந்தக் கொலை வழக்கின் புலன் விசாரணையை 28 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த சூழலில், 2022 இல் ஒரு சந்தேக நபரின் டி.என்.ஏ-வை, மோதிரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த முடியின் டி.என்.ஏ. உடன் ஒப்பீடு செய்ததில், அந்த நபர்தான் அப்பெண்ணைக் கொலை செய்த குற்றவாளி என்பதை லண்டன் காவல் துறையினர் கண்டறிந்தனர். இந்தக் கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணை 2024 பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்து, கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
புள்ளி விவரங்கள்:
- இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 28,522 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓர் ஆண்டில் பதிவுசெய்யப்படும் கொலை வழக்குகளில் 43.5% வழக்குகள் கண்டறியப்படுகின்றன. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் கொலை வழக்குகளில் 43.8% கொலை வழக்குகள் தண்டனை தருவதில் முடிவடைகின்றன.
- அதாவது, நம் நாட்டில் நிகழும் கொலைகளில், 19% கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்கள். ஏனைய 81% கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள் என்பதுதான் கள நிலவரம்.
- திட்டமிட்டு நடத்தப்படும் ஒவ்வொரு குற்றச் செயலிலும், ஏதேனும் சில தடயங்கள் மறைக்கப்படாமல் விடுபட்டிருக்கும். அந்தத் தடயங்களைத் துப்பறிந்து கண்டறிவதே புலன் விசாரணைக் குழுவினரின் திறமையாகும். கைபேசி, கண்காணிப்புக் கேமரா, தடய அறிவியல் போன்றவற்றை மட்டும் நம்பிக்கொண்டு, கள விசாரணையில் புலன் விசாரணைக் குழுவினர் முழுமையான கவனத்தைச் செலுத்தாத காரணத்தால், திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகள் சிலவற்றில் குற்றவாளிகள் அடையாளம் கண்டறிய முடியாத நிலை நிலவுகிறது.
- திட்டமிட்டு நிகழ்த்தப்படும் கொலைகளில் பொய்யான தடயங்களும், உண்மைக்கு மாறான தகவல்களும் புகுத்தப்படுவது உண்டு. முக்கியக் குற்றவாளிகளைத் தப்பிவிடச் செய்யும் நோக்கத்தில், கொலையில் முக்கியப் பங்கு வகிக்காத நபர் குற்றவாளியாக ஆக்கப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
- இத்தகைய காரணங்களால், பல கொலை வழக்குகளில் நீதிமன்ற விசாரணையின்போது கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை அடைவதோடு, திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகளும் தொடர்கின்றன.
- மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மாவட்டத் தனிப்பிரிவு உளவுக் காவலர்களும், குற்றத்தடுப்புக் குழுவினரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் குறைக்கப்படுவதோடு, நீதிமன்றத்தில் தண்டனையில் முடிவடையும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 05 – 2024)