- நமது உடல் தோராயமாக 40 டிரில்லியன் (1 டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி) செல்களால் ஆனது. இதில் 330 பில்லியன் (1 பில்லியன் - 100 கோடி) செல்கள் தினமும் இறந்து, புதிதாக உருவாகின்றன.
- செல்களின் இறப்பு நாம் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. உதாரணமாக மனிதக் காதுக்குள் இருக்கும் எலும்புகள் உருவாவதற்கு உதவிய செல்கள், நாம் கருவில் இருக்கும் போதே அழிந்துவிடுகின்றன. நாம் கருவாக இருக்கும்போது சில செல்கள் சரியான நேரத்தில் இறக்கவில்லை என்றால், மனிதனுக்கு உண்டான தோற்றத்தையே பெற முடியாது.
- விஞ்ஞானிகள் செல்களின் இறப்பை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். ஒன்று செல் தன்மடிவு (apoptosis). இந்த வகை செல் இறப்பு வளர்ச்சியின் ஒரு பகுதியாக உடலாலேயே திட்டமிடப் பட்டு நிகழ்த்தப்படுகிறது. உதாரணமாக நம் சருமத்தில் தினமும் கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிவதும், புதிய செல்கள் வளர்வதும் நடைபெறுகின்றன.
- அது இந்த வகையின் கீழ்தான் வரும். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் குறிப்பிட்ட வாழ்நாளைக் கொண்டிருக்கும். அந்த வாழ்நாள் முடிந்துவிட்டாலோ சரி செய்யாத அளவுக்கு செல் சேதமடைந்துவிட்டாலோ தானாகவே சுருங்கி இறந்துவிடும்.
- இன்னொரு வகை செல் இறப்பு திசு நசிவு (Necrosis). ஒரு செல் நச்சினாலோ சுற்றுப்புறப் பாதிப்புகளாலோ சரிசெய்ய முடியாத அளவிற்குச் சேதமடைந்து அழிவது இந்த வகையில் வரும். உதாரணமாக, தீயினால் உடல் திசுக்கள் கருகுவது.
- நமது உடலில் 200 வெவ்வேறு வகையான செல்கள் இருக்கின்றன. இவைதான் எலும்பு, இதயம், நுரையீரல், கண்கள் என அனைத்தையும் கட்டமைத்துள்ளன. இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் இறந்து புதுப்பிக்கப்படுகின்றன.
- அதற்காக இந்த செல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் இறப்பதில்லை. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால அளவை எடுத்துக்கொள்கிறது. இவற்றில் மூளையில் இருக்கும் நியூரான்கள், மிகக் குறைந்த எண்ணிக்கையில் இறப்பைச் சந்திக்கின்றன.
- நமது மூளையில் பின்னிப்பிணைந்து காணப்படும் இந்த நியூரான்கள்தாம் நினைவுகள், எண்ணங்கள், பிரக்ஞையைத் தோற்றுவிக்கும் பணிகளைச் செய்கின்றன. அவை அடிக்கடி இறந்தாலோ மாற்றப்பட்டாலோ பிரச்சினையாகிவிடும் அல்லவா? அதனால்தான் நியூரான்கள் பெரிதும் மாற்றப்படுவதில்லை.
- இதே காரணத்தினால்தான் நமது மூளையிலோ தண்டுவடத்திலோ காயம் ஏற்பட்டால்அவை நிரந்தரமானதாக, குணப் படுத்தக் கடினமானதாக இருக்கிறது. ஆனாலும் நம் மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகேம்பஸில் இருக்கும் நியூரான்களின் வளர்ச்சி மட்டும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிகழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
- மரக்கிளைகள் கழிக்கப்பட்டு புதிதாக வளர்வதுபோல இந்த ஹிப்போகேம்பஸில் காணப்படும் நியூரான்களில் மூன்றில் ஒருபகுதி தானாகவே அழிக்கப்பட்டு மாற்றப்படுகிறது. இந்த ஹிப்போகேம்பஸ் பகுதிதான் நமது கற்றலுக்கும் நினைவாற்றலுக்கும் முக்கியமானதாக இருக்கிறது.
- அதேபோல இதயத்தின் தசைகளில் காணப்படும் செல்களும் குறைவாகவே அழிந்து பிறக்கின்றன. இதயம்தான் நாம் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான உறுப்பாக இருக்கிறது. நமது உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான ஆக்சிஜனை ரத்தத்தின் மூலம் கொண்டுசெல்லும் வேலையைச் செய்கிறது. அதன் செல்களை அடிக்கடி மாற்றுவது அபாயம் நிறைந்த சூழலை உண்டாக்கும் என்பதால் அங்கேயும் செல்களின் இறப்பு குறைவாக இருக்கிறது.
- உடலின் மற்ற செல்கள் அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. உதாரணமாக, மிகவும் வலுவான, நிரந்தரமாகத் தோன்றும் எலும்புகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகின்றன. நமது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் வாழ்நாள் வெறும் 120 நாள்கள்தாம். வெள்ளை அணுக்களின் வாழ்நாளோ சில மணி நேரங்கள்தாம். உணவு ஜீரணத்துக்கு உதவும் பெருங்குடலில் உள்ள செல்கள் வாரத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகின்றன.
- இவ்வாறு உடலில் இறக்கும் செல்களின் கழிவுகள் மூலம் வெளியேற்றப்பட்டு, புதிய செல்கள் வளர்கின்றன. ஏன் செல்களின் இறப்பு நடைபெற வேண்டும்?
- நம் உடலை ஒரு வாகனத்தைப் போலக் கற்பனை செய்துகொள்ளுங்கள். வாகனம் சரியாக ஓடுவதற்குப் பராமரிப்பு அவசியம் அல்லவா? வேண்டாத பழைய பாகங்களை நீக்கிவிட்டு, புதிய பாகங்களைப் பொருத்தி அவ்வப்போது சரிசெய்தால்தானே வாகனம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஓடும். அதேபோல நம் உடலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயங்குவதற்காக செல்களின் இறப்பு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைப்புடன் நடைபெறுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (04 - 10 – 2023)