TNPSC Thervupettagam

ஏன் வர்ணத்தைப் பேசுகிறோம்

November 25 , 2023 413 days 282 0
  • இந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட 'தர்மம்' தொடர்பான   தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 'சனாதன தர்மம்' எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.
  • இன்று வர்ண தர்மம் என்பது காலாவதியாகிப் போன ஒன்று.
  • உதாரணமாக, இந்திய ராணுவத்தில் சத்திரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றால் ராணுவமே இருக்காது. சூத்திர வர்ணம் என்று முன்பு சொல்லப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும், அவர்ணர்களான பட்டியலினத்தவரும் இல்லாமல் ராணுவம் சாத்தியமில்லை. ஏன் பிராமணர்களும்கூட ராணுவத்தில் பரவலாகப் பணியாற்றுகிறார்கள். அரசியலர்களாகவும், ஆட்சிப் பொறுப்பு ஏற்பவர்களாகவும் அனைத்து வர்ணத்தினரும் இருப்பதை அறிவோம்.
  • சார்டட் அக்கவுண்டண்ட் எனப்படும் கணக்காளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டபோது அறுபது சதவீதம் பேர் பிராமணர்களாக இருந்ததாக சில ஆய்வுக் கட்டுரைகள் சொல்கின்றன. வர்த்தகம், வரவு செலவு கணக்கெல்லாம் வைசியர்கள் பணி என்று கூற முடியாது. அதிலும் பல வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள்.

இன்றும் விமர்சிக்க வேண்டும் ஏன்

  • சுருங்கச் சொன்னால் வர்ண ஒழுங்கு என்பது, அதாவது நால் வர்ணத்தினர் இந்தந்தத் தொழில்களைச் செய்ய வேண்டும் என்ற பிரிவினை இப்போது பெரும்பாலும் தகர்ந்து நொறுங்கிவிட்டது எனலாம். ஒரு சில விதிவிலக்குகள் உள்ளன; அவற்றை பின்னர் ஆராய்வோம். மேலும் எந்தக் காலத்திலேயுமே வர்ண தர்மம் சார்ந்த தொழில் பிரிவினை, நால் வர்ண தொழில் பிரிவினை முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டதா என்பதும் தெரியாது.
  • வர்ண தர்ம சாஸ்திர நூல்களில் முக்கியமானதான மனுதர்மத்தைப் படித்தால் அதில் பெரும்பாலான விதிகள் தற்காலத்திற்கு முற்றிலும் பொருந்தாதவை என்பதுடன், அவை எந்தக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் என்பதும் வியப்பாக இருக்கிறது. வினோதமான விதிமுறைகள் பல உள்ளன. உதாரணத்திற்கு எந்தத் திசையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் இருக்கின்றன. 
  • ஆனால், இன்றைக்கும் நாம் வர்ண தர்மத்தை விமர்சித்து பேச வேண்டியுள்ளது, அதனைக் கண்டிக்க வேண்டியுள்ளது என்றால் அதற்குக் காரணம் இன்றைக்கும் நிலவும் ஜாதிய சமூக அமைப்பு. பிரச்சினை என்னவென்றால் ஜாதியத்திற்கும் வர்ண தர்மத்திற்கும் தொடர்பு என்ன என்ற கேள்விதான்.
  • குறிப்பாக இன்று எந்த ஜாதியினரும் எந்தத் தொழிலையும் மேற்கொள்ளலாம் என்று சட்டம் உருவான பிறகு எதனால் நாம் இன்றைய ஜாதிய சமூகத்திற்குக் காரணமாக வர்ண ஒழுங்கினை தர்மம் என்று அழைத்த சிந்தனையைக் குறை கூற வேண்டும்; ஏன் மனுதர்மத்தை எரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்பதெல்லாம் முக்கிய கேள்விகள் ஆகின்றன.

ஜாதிய சமூகம் என்றால் என்ன

  • ஜாதிய சமூகம் என்பது சமூகப் பிரிவுகள் அகமணமுறையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்களைத் தனிப் பிரிவாக நிலைநிறுத்திக்கொள்வதும், அந்தப் பிரிவுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வைக் கற்பிப்பதுமாகும். அவ்வாறு தனித்தனிப் பிரிவாக இருக்கும் இந்திய ஜாதிகளில் குறிப்பிட்ட சில ஜாதிகள் சமூக அந்தஸ்திலும், செல்வாக்கும் அதிகாரமும் உள்ள பதவிகள், தொழில்கள் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், வேறு பல ஜாதிகள் அவ்வாறான நிலைகளில் போதுமான அளவு இடம்பெறாமல் பின்தங்கியிருப்பதுமாகும்.
  • இவ்வாறான சூழல் பழைய வர்ண பாகுபாட்டின் காரணமாக உருவான ஏற்றத்தாழ்வுகள் இன்றைய ஜாதிய ஏற்றத்தாழ்வுகளின் மூலாதாரமாக அமைந்துவிட்டதாகக் கருதக் காரணம் ஆகிறது. இந்தச் சமனற்றத்தன்மையைச் சீர்செய்ய சுதந்திர இந்தியாவில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. நால் வர்ண சமூகத்திற்கு வெளியிலே இருத்தி வைக்கப்பட்ட, தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்ட பட்டியல் ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை முதலில் அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்தது.
  • அதற்கடுத்து, பலவிதமான சமூக விலக்கங்களுக்கு ஆளாகி மற்ற மூன்று இருபிறப்பு வர்ணங்களை சார்ந்த ஜாதிகளுக்கு ஒப்பாக நவீன சமூக அமைப்பில் முன்னேற முடியாத சூத்திரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பின்தங்கிய ஜாதிகளுக்குத் தேவையான இடஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு தரப்பட்டது.
  • அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகே மண்டல் கமிஷன் பரிந்துரைகள் மூலம் ஒன்றிய அரசின் வசமுள்ள கல்வி நிலையங்கள், தொழில்கள், அலுவலகங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
  • இந்த இடஒதுக்கீடுகள் செயல்பட்டாலும் சமூக அமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்வு முற்றிலும் மறையவில்லை. உதாரணமாக ஒன்றிய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் முக்கிய அதிகார மையங்களாக உள்ள செயலர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு முக்கியமான செல்வாக்கு மிக்க துறைகளில், தொழில்களில், பதவிகளில் இந்த நிலையே நீடிப்பதைக் காண முடியும்.     

வர்ண ஒழுங்கிற்கும், ஜாதிய அமைப்பிற்கும் தொடர்பு என்ன

  • ஜாதி சமூகங்களை ஆராய்பவர்கள் ஜாதிகளின் சமூக அந்தஸ்து, அவற்றின் வகிபாகம் ஆகியவை நெகிழ்ச்சியுடன் இருந்துவந்திருப்பதைச் சுட்டுகிறார்கள். சமூக உள்சேர்ப்பு மற்றும் விலக்கம் போன்றவை பல்வேறு காலங்களில் மாறி வந்திருப்பதாகவும் தெரிகிறது. மேலும் வெறும் வர்ண அடுக்குகளாக மட்டும் இல்லாமல், வலங்கை – இடங்கை என்பதுபோல சில செங்குத்தான பிரிவுகளாகவும் ஜாதிகள் தொகுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
  • இந்த நிலையில் வர்ண ஒழுங்கு என்ற பண்டைய தர்ம சாஸ்திர சிந்தனைக்கும், இந்தியா முழுவதும் பல்வேறு வகையாக அமையப்பெற்றுள்ள ஜாதிய சமூக பிரிவுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை முதலில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
  • நான்கு முக்கிய அம்சங்களை நான் இந்தக் கட்டுரைத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொன்றையும் எதிர்வரும் வாரங்களில் விரிவாக விவாதிப்போம்.

முதல் அம்சம்

  • வர்ண ஒழுங்கு என்பதைச் சமூக ஒழுங்காக கட்டமைக்காமல் பிரபஞ்ச ஒழுங்காகவும், வாழ்வியல் ஒழுங்காகவும் மனுதர்ம சாஸ்திரம் முதலான தர்ம சாஸ்திர நூல்கள் கட்டமைத்த விதம். அதாவது, கடவுள் உலகை உருவாக்கும்போதே நால் வர்ணமாக மனிதர்களை உருவாக்கியதாகவும், பிரம்மனின் உடல் என்ற பிரபஞ்ச உருவகத்தில் வாயிலிருந்து பிராமணர்கள், கரங்களிலிருந்து ஷத்திரியர்கள், தொடைகளிலிருந்து வைசியர்கள், கால்களிலிருந்து சூத்திரர்கள் ஆகியவர்களை உருவாக்கியதாகவும், இவர்களுடைய பணிகளையும் நிர்ணயித்ததாகவும் மனு தர்மம் கூறுகிறது. இதன் மூலம் சமூக ஒழுங்கிற்குப் பிரபஞ்ச ஒழுங்கின் பரிமாணம் தரப்படுகிறது. அதுவே, பணிகளை வரையறுப்பதில் தொடங்கி வாழ்வியில் ஒழுங்காகவும் மாறுகிறது.
  • இவ்வாறான கற்பிதம் மாறாத சாராம்சமுள்ள, தோற்றவியல் – ஆன்டாலஜி (ontological) தன்மையுள்ள சமூகப் பிரிவுகளை உருவாக்கியது. அதுவே, ஜாதியத்தின் தோற்றவியலாக – காஸ்ட் ஆன்டாலஜி (caste ontology) தொடர்வதற்குக் காரணமாகிறது. இந்தியாவில் இன்றும் 90% பேர் ஜாதிய அகமணமுறையை – காஸ்ட் எண்டகமியைப் (caste endogamy) பின்பற்றுவதாக சில கணிப்புகள் கூறுகின்றன. இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதே நம் காலத்தின் பிரம்மாண்டமான மானுடவியல் கேள்வி. 

இரண்டாவது அம்சம்

  • பிராமணன் என்ற அடையாளத்திற்குள்ள அபாரமான தொடர்ச்சி. வேத காலத்திலிருந்து, இன்று வரை பிராமணன் என்ற சமூக அடையாளம், சமூகப் பிரிவு தொடர்கிறது. மற்ற வர்ணங்களெல்லாம் மறைந்தாலும் பிராமணன் என்ற வர்ணம் மறையவில்லை. எது பிராமணன் என்ற கருத்தாக்கத்தை இந்திய சமூகவியலின் முக்கிய பிரச்சினையாக மாற்றுகிறது என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆராய்வது அவசியம்.
  • சமீபத்தில் சீனிவாசன் ராமாநுஜம் ‘அருஞ்சொல்’ இதழில், அசோகர் கல்வெட்டுகளில் வர்ண ஒழுங்கு குறிப்பிடப்படவில்லை என்பதை விவாதித்திருந்தார். மனுதர்ம சாஸ்திரம் அசோகர் காலத்திற்குப் பிறகே எழுதப்பட்டது என்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், பிராமணர்கள் என்ற சமூகப் பிரிவு அசோகர் கல்வெட்டுகளில் இடம்பெறுகிறது. சுருங்கச் சொன்னால் வர்ண தர்மமே இல்லாவிட்டாலும் பிராமணன் என்ற கருத்தாக்கம் இருக்கும்; ஆனால் பிராமணன் என்ற கருத்தாக்கம் இல்லாமல் வர்ண தர்மம் இருக்க முடியாது.

மூன்றாவது அம்சம்

  • காலனிய காலத்தில் பழைய வர்ண தர்ம நூல்களைத் தேடிப்பிடித்து, ஆங்கில மொழியாக்கம் செய்து அனைத்து இந்துக்களின் பாரம்பரிய சட்டங்களாக (customary laws) வழக்காடு மன்றங்களில் பயன்படுத்தினார்கள். இது விரிவாக ஆராயப்பட வேண்டிய நிகழ்வாகும். இதுவே ஜாதிய சமூகத்தை வர்ண தர்மத்துடன் பிணைப்பதற்கான வரலாற்றுச் சூழலை பெருமளவு உருவாக்கியது எனலாம்.

நாலாவது அம்சம்

  • பிராமணர்கள் தங்களைத் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள் என்று கூறத் துவங்கியது. அதாவது, சத்திரியர்களும், வைசியர்களும் சமூகக் கலப்பால் தங்கள் வர்ண தனித்துவதை இழந்து சூத்திரர்கள் ஆகிவிடார்கள் என்று ஒரு கோட்பாடு - அநேகமாக பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் பரவலாகியது. இது சத்திரிய, வைசிய அந்தஸ்திற்காக பல ஜாதிகளும் கோரிக்கை வைக்கும் சூழ்நிலையைப் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் உருவாக்கியது. இது வர்ண பகுப்பை ஜாதிய சமூகத்தின் மீது திட்டவட்டமாகப் போர்த்தியது.

நன்றி: அருஞ்சொல் (25 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories