TNPSC Thervupettagam

ஏன் வேண்டும் வரலாறு?

February 5 , 2025 2 hrs 0 min 15 0

ஏன் வேண்டும் வரலாறு?

  • நான் இந்தியாவில் பிறந்தவனா? இல்லை. வளர்ந்தவனா? இல்லை. என் பெற்றோரின் நாடா அது? இல்லை. இந்திய மொழிகள் கற்றவனா என்றால் கிடையாது. இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்று சிறு வயது முதல் கனவு கண்டு வந்தவனா என்றால், அப்படியும் சொல்ல முடியாது.
  • நான் பிறந்தது, வளர்ந்தது, கற்றது பிரிட்டனில். என் துறை தொல்லியல். ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் கிரேக்கப் பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் கனவு. என் கனவை மட்டுமல்ல, என் வாழ்வையும் அடியோடு மாற்றி அமைத்தது இந்தியா.
  • ஒரு நாள் திடீரென்று அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘ஜான் மார்ஷல், இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராக உங்களை நியமித்திருக்கிறோம். நீங்கள் உடனே இந்தியா கிளம்பி வரவேண்டும்.’ திகைப்பும் திகிலும் ஒரே நேரத்தில் என்னைப் பற்றிக்கொண்டன. மிகப் பெரும் பொறுப்பு. மிகப் பெரும் அங்கீகாரம். ஆனால், என்னால் ஏற்க இயலுமா? அதற்கு நான் தகுதியானவனா? முன்பின் தெரியாத நிலம். புரியாத மொழி. அறிமுகமற்ற மக்கள்.
  • என்ன செய்யப்போகிறேன் நான்? எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஓர் ஆங்கிலேயனாகவும் இருக்கிறேன். என் நாடுதான் இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. என் நாடுதான் இந்தியாவின் வளங்களை எல்லாம் உறிஞ்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற அதிகாரிகள்தான் இந்தியர்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
  • நான் அவர்களைப் போன்றவன் இல்லை என்பதை இந்தியாவுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? நான் ஆதிக்கம் செலுத்த வந்தவன் அல்ல, ஆய்வு செய்ய வந்தவன் என்பதை எப்படி இந்தியர்களுக்கு விளக்குவேன்? தயக்கத்தோடுதான் காலடி எடுத்து வைத்தேன். ஆனால், இந்தியா என்னை இதமாக அரவணைத்துக்கொண்டது. ‘கவலைப்படாதே மார்ஷல், உன்னை நான் அறிவேன். உன் ஆற்றல் எனக்குத் தெரியும். உன் நாடு இழைக்கும் குற்றங்களுக்கு நீ பொறுப்பேற்க முடியாது. புத்தரை, அசோகரை, காந்தியைக் கண்டவன் நான்.
  • அடிமைப்படுத்த வந்தவர்களின் தோல் நிறத்தை நீ கொண்டிருப்பதால் உன்னை நான் வெறுக்கவோ ஒதுக்கவோ மாட்டேன். உன் நாடு என்மீது தெளித்திருக்கும் இருளை உன்னால் அகற்ற முடியும். நீ என் நம்பிக்கையைக் காப்பாற்றுவாய். காப்பாற்ற வேண்டும்’ என்றது இந்தியா. புத்துணர்வோடு இந்தியாவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்.
  • என் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு அமைதியாகச் சிந்தித்தேன். வந்தோம், என்னவோ செய்தோம், ஊர் கிளம்பிச் சென்றோம் என்று எல்லா அதிகாரிகளையும்போல் நான் இருந்துவிடக் கூடாது. என்னை அரவணைக்கும் இந்தியாவுக்கு நான் ஏதேனும் செய்தாக வேண்டும்.
  • என்ன செய்ய முடியும் என்னால்? இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால், தனிப்பட்ட ஒருவனால் செய்ய முடிகிற செயலா அது? நிறைய பள்ளிக்கூடங்களை, நிறைய கல்லூரிகளை, நிறைய ஆய்வுக்கூடங்களைத் திறந்து வைக்கமுடிந்தால் நன்றாக இருக்கும்.
  • ஆனால், என் துறைக்கான நிதியைத் திரட்டுவதற்கே பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்தியாவின் உடனடித் தேவை விடுதலை. ஆனால், அதைப் பெற்றுக்கொடுக்கும் இடத்திலோ அதற்காகப் போராடும் இடத்திலோ நான் இல்லை. நான் ஒரு தொல்லியல் அதிகாரி. எனக்குத் தெரிந்ததும் என்னால் செய்ய முடிந்ததும் ஒன்றுதான். தோண்டுவது. நான் அதைச் செய்துகொண்டிருப்பேன்.
  • எல்லாரும் இந்தியாவின் நிகழ்காலத் துயருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டம் முக்கியமானது, மறுக்கவில்லை. நான் இந்தியாவின் கடந்த காலத்தை மீட்டெடுக்கப் போகிறேன். இந்தியாவின் வேர்களைக் கண்டறியப் போகிறேன்.
  • அந்த வேர்கள் எவ்வளவு பழமையானவை என்பதை என் ஆய்வுகளின் வழியே நான் நிறுவுவேன். கிரேக்கத்தைப் பார், ரோமாபுரியைப் பார் என்று உலகம் கூக்குரல் இட்டுக்கொண்டிருக்கிறது. இதோ, அற்புதமான இந்தியாவைப் பார் என்று மலையின் உச்சியில் நின்று நான் உலகின் கவனத்தை ஈர்க்கப்போகிறேன்.
  • இந்தியாவுக்கு வரலாறு என்று ஒன்று கிடையாது என்கிறது என் நாடான பிரிட்டன். உலகமும் அதை நம்புகிறது. இந்தியர்களுமேகூட அதை நம்பத்தான் செய்கின்றனர்.
  • இந்தியாவின் வரலாற்றை நான் கண்டறிந்து எழுதுவேன். சிந்து சமவெளி நாகரிகத்தைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டு இந்திய வரலாறு இனி எழுதப்படும். இந்தியாவுக்கு 5,000 ஆண்டுகால வலுவான, வளமான, வண்ணமயமான வரலாறு இருக்கிறது என்று ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் முழக்கமிடும்.
  • நாங்கள்தான் இந்தியாவுக்கு நாகரிகத்தை வழங்கினோம், நாங்கள்தான் இந்தியாவுக்கு வரலாற்றை அளித்தோம், நாங்கள்தான் இந்தியாவையே உருவாக்கினோம் என்று எல்லாம் அர்த்தமற்று கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆவென்று வாய்பிளந்து நிற்கும் காலம்வரும்.
  • குனிந்து பார்த்து இந்தியாவை இகழும் அனைவரும் தலையை உயர்த்தி இந்தியாவின் உயரத்தைக் கண்டு திகைத்து நிற்கப் போகிறார்கள். எங்களுக்கு நீண்ட, நெடிய வரலாறு இருக்கிறது எனும் உணர்வு இந்தியர்களைத் தட்டி எழுப்பும். அவர்களுடைய விடுதலை வேட்கையை அதிகரிக்கும்.
  • அவர்கள் பெருமிதத்தோடு தங்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். நீ யார் எங்களை அடிமைப்படுத்துவது? உனக்கு அந்த உரிமையை யார் அளித்தது? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் எங்களைப் பார்த்து என்று பிரிட்டனுக்கு எதிராகத் திரண்டு நிற்பார்கள் இந்தியர்கள்.
  • வரலாறு இந்தியர்களை விடுவிக்கும். வரலாறு இந்தியர்களை ஒன்றிணைக்கும். வரலாறு இந்தியர்களின் நிகழ்காலத் துயரைத் துடைக்கும். அவர்களுடைய எதிர்காலக் கனவுகளை வடிவமைக்கும். அந்தக் கனவுகள் உயிர்பெற்று எழும்போது, இந்தியா என் இந்தியாவாகவும் விரிந்து நிற்பதை நான் காண்பேன்!

ஜான் மார்ஷல்:

  • 1902 முதல் 1928ஆம் ஆண்டுவரை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநராக இருந்தவர். ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு, சிந்துவெளி நாகரிகத்தை உலகம் அறியச் செய்தவர். சிந்துவெளி நாகரிகம், மெளரியப் பேரரசர் அசோகர் காலம் குறித்த ஆவணங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டவர்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories