TNPSC Thervupettagam

ஏரோட்டம் இல்லையேல்...

April 8 , 2019 2056 days 1472 0
  • விவசாயத்தை மீண்டும் பண்டமாற்று முறைக்கு மாற்ற வேண்டும் என்று கட்செவி அஞ்சலில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தான் "கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்; காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்' என்று அன்றே மகாகவி பாரதி வழிமொழிந்தார்.
பண்டமாற்று முறை
  • நாணயங்கள் வருவதற்கு முன்பு பண்டமாற்று முறைதான் வணிகர் மற்றும் விவசாயிகளிடத்தில் இருந்து வந்தது. அதிலும், மிளகை ஐரோப்பியர்கள் வாங்க, தங்கத்தைக் கொடுத்து பண்டமாற்று முறையின் கீழ் மாற்றிக் கொண்டனர். இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் மிளகைக் கொண்டுதான் இறைச்சியின் வாழ்நாளை அதிகப்படுத்தியுள்ளனர். மேலும், கப்பல்களில் ஏற்றிச் செல்லும் இறைச்சி கெட்டுப் போகாமல் இருக்க மிளகைப் பயன்படுத்தினர்.
  • பின்பு, காலங்கள் கடந்து 1960-65 வாக்கில் "கப்பலில் இருந்து வாய்க்கு' என்னும் நிலைமையை உடைத்தெறிந்தது பசுமைப் புரட்சி. அதாவது, கோதுமை போன்ற தானியங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதைக் கைவிட்டு, அதிக விளைச்சல் தரும் ரகங்களை வைத்து உள்நாட்டு தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்னும் நோக்கில் பசுமைப்புரட்சி செயல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கோதுமை, பருத்தி போன்றவற்றின் உற்பத்தி பெருகியது.
  • ஆனால், இன்றும் பசுமைப் புரட்சியின் மீது கறைபடிந்தவைகளாய் "மண்ணின் வளம் கெட்டுப்போனது; பாரம்பரிய விதை ரகங்களை இழந்தது; அங்கக வேளாண்மையின் தாக்கம் குறைந்தது; பன்னாட்டு விதை நிறுவனங்களின் செழிப்பு' எனப் பலவும் பார்க்கப்படுகிறது. "1970-ஆம் ஆண்டு வாக்கில் பசுமைப் புரட்சியின் தாக்கம், விவசாயம் சார்ந்த கழகங்கள் எதிரணியாய் உருவெடுத்து காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி மற்றும் சட்டப்பேரவை இடங்களைக் குறைத்துவிட்டது' என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆதித்யா தாஸ்குப்தா தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
  • மேலும், பசுமைப் புரட்சியின் மூன்று தாக்கங்களை அவர் பின்வருமாறு கூறுகிறார்:- முதலாவது, பசுமைப் புரட்சியானது கீழ்நிலை மற்றும் இடைநிலையில் உள்ள விவசாயிகளுக்கு வலு சேர்த்து அவர்களை அரசியலில் பங்கு பெறச் செய்தது; இரண்டாவது, விவசாயிகள் அனைவரும் அதிக விளைச்சல் தரும் ரகங்களைப் பயிரிட அதனின் உட்பொருள்கள் மற்றும் மானியங்களுக்கு அரசைச் சார்ந்து இருந்ததால் அவர்களின் அரசியல் போக்கு ஊக்கம் பெற்றது; மூன்றாவது, பசுமைப் புரட்சியால் தானியங்களின் உற்பத்தி பெருகி விலை குறைந்து போனதால், அதுவே விவசாயிகளை ஒன்றிணைத்து அரசியலில் அவர்களை உருப்பெறச் செய்தது. இறுதியாக, "அதிக விளைச்சல் தரும் ரகங்களின் தொழில்நுட்பமானது பொறுப்பு வகிப்பவர்களை பலவீனப்படுத்தி, வெளிநபர்களை பலப்படுத்தி மற்றும் சமுதாயத்தில் ஜனநாயகத்தை எழுச்சிபெறச் சாத்தியப்படுத்தியது' என்கிறார் ஆதித்யா தாஸ்குப்தா.
பசுமைப்புரட்சி
  • இப்படி விளைச்சல், உற்பத்தி மட்டுமின்றி அரசியலிலும் தனது ஆதிக்கத்தை பசுமைப் புரட்சி செலுத்தியுள்ளது என்பது உண்மை. இப்படி விவசாயிகளின் வளர்ச்சி அரசியலில் ஏற்பட்டாலும், "இன்னமும் விவசாயிகளின் வாழ்வு போராட்டம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது' என்பதை தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடந்த விவசாயப் பேரணி சொல்லாமல் சொல்லியது. சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்னும் அவர்களின் குரல் ஓய்ந்தபாடில்லை.
ஆய்வுகள்
  • தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) 2012-13-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி விவசாயி ஒருவரின் சராசரி மாத வருமானம் ரூ.6,426. அதிலும் செலவு ரூ.6,223 போக மீதி வெறும் ரூ.203 மட்டுமே. மீண்டும் அதையே 2016-17-ஆம் ஆண்டு "நபார்டு அனைத்திந்திய ஊரக நிதி சேர்ப்பு' (என்ஏஎஃப்ஐஎஸ்) அமைப்பின் கணக்கெடுப்பின்படி விவசாயி ஒருவரின் சராசரி மாத வருமானம் ரூ.8,931 ஆகும். நான்கு ஆண்டுகளில் ஒரு விவசாயக் குடும்பத்தின் வளர்ச்சி என்பது ரூ.2,505தான். அதிலும் ஊரக குடும்பங்கள் சாகுபடியின் மூலம் 35 சதவீதமும் கூலி வேலை மூலம் 34 சதவீதமும் கால்நடையின் மூலம் 8 சதவீதமும் வருவாய் பெறுகின்றனர்.
  • மேலும் 43 சதவீத விவசாயக் குடும்பத்தினர் கடனாளிகளாக உள்ளனர்; ஒரு சராசரி கிராமத்துக் குடும்பத்தின் கடன் தொகை ரூ.91,852 ஆகும். அதில் வங்கி அல்லாத நிறுவனங்களிடமிருந்து சராசரி கடனாக ரூ.63,645, வங்கி சார்ந்த நிறுவனங்களிடமிருந்து ரூ.28,207 பெற்றுள்ளனர். அதனால்தான் விவசாயக் கடன் தள்ளுபடி கூடாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இப்படி ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் எதிர்வரும் காலத்தில் பருவநிலை மாற்றத்தையும் விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் கிழக்கு இந்திய பல்கலைக்கழக வளர்ச்சி கூட்டமைப்பின் ஆய்வாளர் விஸ் தரஸ். அவரின் ஆய்வுப்படி 50 சதவீத மகசூலானது, வெப்ப காலநிலை தென்படும் மாவட்டங்களைவிட குளிர் மாவட்டங்களில் குறைவாக இருக்கும் என்கிறார். மேலும் வெப்பகாலநிலை கொண்ட மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தைத் திறம்பட எதிர்கொள்ளும் என்கிறார்.
  • இப்படிப்பட்ட நிலையை எதிர்கொள்ள, ஊடுபயிர் முறை வழியே வெப்பத்தைத் தாங்கும் சோளம், மனிதர்களுக்கான மக்காச்சோளம் பயிரிடுவது அல்லது உள்பயிர் வழியே பாசன வசதியை விவசாயிகள் மேற்கொண்டால் அது வெப்பம் மற்றும் வறட்சி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் என்கிறார் அவர். இறுதியாக, அரசும் தனியார் அமைப்புகளும் அதிக வெப்பகால நிலையிலும் விவசாயப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் கொள்கை மற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து செயல்படுத்தவேண்டும் என்கிறார்.
  • இன்றுவரை விவசாயிகளிடம் பெரியதொரு குறையாகக் கூறப்படுவது போதிய கருத்துப்பரிமாற்றம் இல்லை என்பதுதான். அதை நிவர்த்தி செய்து விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும். அதற்கு தற்போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அடித்தளமிட்டு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. விரைவில் "கூட்டுறவே நாட்டுயர்வு' என்பதை அவை பிரதிபலிக்கும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories