- உலக அளவில் கடந்த 2021 ஆம் ஆண்டு 23 உயிரினங்கள் அற்றுப் போய்விட்டன. கடந்த 500 வருடங்களில் அழிந்துபோன விலங்குகளின் பட்டியலைப் பார்த்தால் அதில் 52% எலிகள்தாம். நாம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய முள்ளம்பன்றியும் எலி குடும்பத்தைச் சேர்ந்ததே. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பாலூட்டிகளில் 110 விலங்குகள் எலிகள்தாம்.
- பொதுவாக எலிகள் தொல்லை தருபவையாக கருதப்பட்டாலும், காட்டில் உள்ள சில அரிய வகைப் பாறை எலிகள் பருந்து, பறவைகளுக்கு இரையாகவும், பல வகைப் பாம்புகள், பூனை, கீரிகளுக்கு முதன்மை உணவாகவும் உள்ளன. பொதுவாக உயிரினங்கள் அற்றுப்போக மூன்று காரணங்கள் உள்ளன: வாழிடம் சுருங்குதல், வாழிடம் மாசுபடுதல், எண்ணிக்கையில் குறைதல்.
பாறை எலிகள்
- சேர்வராயன் மலை இந்தியாவின் கிழக்குத் மலைத் தொடரின் முக்கியமான ஓர் அங்கம். இது சேலம் மாவட்டத்தில் உள்ளது. கிழக்கு மலைத் தொடர்கள் கடல் மட்டத்திலிருந்து 1,515 மீட்டர் வரை உயரம் கொண்டவை. இந்த மலைகள் முக்கியக் காடு வகைகளையும் நதிகளையும் உள்ளடக்கியவை. இந்தச் சுற்றுச்சூழலின் வாழிடம் தனித்துவமானது. பாறை வாழிடங்கள் உலகம் முழுவதும் உள்ளன. சேர்வராயன் மலை அவற்றில் ஒன்று.
- பாறைகளில் வாழும் பாலூட்டிகளில் முக்கியமானவை பாறை எலிகள். க்ரெம்னோமிஸ் எல்விரா (எல்விரா பாறை எலி) உள்பட உலகளவில் அற்றுப்போகும் நிலையிலுள்ள உயிரினங்கள் பல உள்ளன. பாறை எலியின் உடலைவிட (14 செ.மீ.) வால் (17 செ.மீ.) மிக நீண்டது. கண்களும் காதுகளும் பெரியவை; வட்டமானவை. முதுகுப்புறம் மென்மையான முடிகளுடன் பழுப்பு நிறம், அடிவயிறு வெள்ளை. பாறை எலிகள் வளை தோண்டுவதில்லை. மாறாக பாறை இடுக்குகள், கற்பிளவுகளில் அவை வாழ்கின்றன.
- சேர்வராயன் மலைப் பகுதியில் உள்ள குகைகள், பாறைகள், புதர்க்காடுகளில் இந்தப் பாறை எலிகள் வசிக்கின்றன. மலைகளின் மேற்குப் பகுதி பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு சிறிய குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. 2008 ஆம்ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சேர்வராயன் மலையில் நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பை ஆய்வு செய்தோம். எங்கள் முடிவுகளின்படி திறந்தவெளிக் காடுகளின் பரப்பளவு 40.56% ஆகவும், 32.71% ஆகவும் குறைந்துள்ளது.
சூழலியல்
- எல்விரா எலியின் வாழிடமானது பாறைகள், முள் நிறைந்த குறுங்காடுகள், புதர் நிறைந்த பாறைகள், தண்ணீர், மறையத் தேவையான இடங்கள். எல்விரா எலிகள் பல திறப்புகளைக் கொண்ட பெரிய பாறை கற்களுக்குள், மலைகளில் உள்ள பிளவுகளில் வாழ்கின்றன. பாறைகளின் குளிர்ச்சியின் காரணமாக இவை இங்குத் வாழப் பழகியுள்ளன.
இந்த வகைப் பாறைகள்
- இமயமலை உருவாவதற்கும் மேற்கு மலைத் தொடர் உருவாவதற்கும், முன்பே தோன்றியவை. ஆகவே, இந்தப் பாறையில் வாழும் இந்த எலிகளும், மிகப் பழைய காலத்தில் உருவான, பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் உயிரினம். உயரமான பாறைகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் எல்விரா எலிகள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு இந்தப் பாறைகளையே சார்ந்திருக்கின்றன.
- எல்விரா எலி, தனது உடல் சத்திற்காக அல்லது உப்பிற்காகப் பாறையை நக்குகிறது. இவை நன்றாக குதிக்கும் திறனைக் கொண்டவை. ஆகவே பாறைகளில் அவற்றால் வேகமாகச் செல்ல முடியும். பாறைகளில் தாவிப்போகும்போது நீண்ட வால் சமநிலைப்படுத்தப் பயனுள்ளதாக இருக்கின்றது. காதுகள் மிக அழகாக அசைகின்றன. அவற்றின் மூலம் சுற்றுப்புறத்தை, இடர்பாடுகளைக் கணிக்கின்றன. ஒலிகளை உணர காதுகளை அடிக்கடி சுழற்றுகின்றன.
வாழ்க்கை முறை
- எல்விரா எலிகளின் மென்மையான ரோமங்கள் அடர்த்தியானவை. உயரமான பகுதிகளில் உள்ள தட்பவெப்ப நிலையைச் சமாளிக்க இது ஒரு முக்கியமான தகவமைப்பு. இவை தங்கள் உடலை நக்கி சுத்தப்படுத்திக்கொள்கின்றன. ஒரு நாளில் சுமார் 30 முதல் 50 முறை இவை இப்படிச் செய்துகொள்கின்றன.
- இந்த எலிகள், மிக உயர்ந்த பாறை சரிவு, தட்டையான மேற்பரப்பைக் கண்டறிந்து, அங்கு ஓய்வு எடுக்கும். அவை பொதுவாக ஒரே இடத்தை ஓய்வெடுக்கப் பயன்படுத்துகின்றன. இவை பாறையின் உச்சியில் உறங்குகின்றன, உறங்கும்போது முன்கால்கள், பின் கால்கள் இரண்டும் உடலுக்குள் இருக்கும்.
- ஏதேனும் சிறிய ஒலி கேட்டால், அவை ஓடுவதற்கு அவசரப்படுவதில்லை, மாறாக ஒலிகளைக் கவனிக்கவும் பதிலளிக்கவும் காதைச் சுழற்றுகின்றன. இவற்றின் நடத்தை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. சில வேளைகளில் இவை கூட்டம் கூட்டமாகத் தங்கள் குழுக்களுடன் சந்தித்து தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.
பாதிப்புகள்
- பூச்சிகள், உண்ணிகள், பேன்கள் போன்ற ஒட்டுண்ணிகள் இந்த எலிகளை அழிவிற்குத் தள்ளலாம். எல்விரா எலியின் வாழிடத்தைச் சுற்றியுள்ள சில பாறைத் தளங்களில் மூங்கில்கள் நிறைய உள்ளன. அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள், எலிகளைப் பாதிக்கின்றன. இது எல்விரா எலிகளின் எண்ணிக்கையைக் குறைகின்றது. மனித ஆற்றல் குறைவாக இருப்பதாலும், மேம்பட்ட தீயணைப்பு சாதனங்கள் இல்லாததாலும் காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுகிறது.
- இந்த எலி வாழுமிடங்களில் மேய்ச்சல், மனித நடமாட்டம் மூலமாகச் சில தாக்கங்கள் ஏற்படுகின்றன. நாங்கள் பார்வையிட்ட 59 பாறை வாழிடங்களில், பெரும்பாலான வாழிடங்கள் சுரங்கம், மேய்ச்சல் (38 தளங்கள்), மனித நடமாட்டம் (40 தளங்கள்), மாசுபாடு (17 தளங்கள்) போன்ற நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதில் ஒன்பது வாழிடங்களில் உள்ளூர் மாடு மேய்ப்பவர்களால் வாழிட சீரழிவு ஏற்படுகின்றது, அது பாறை வாழிட இயல்பைப் பாதிக்கிறது.
கால்நடை மேய்ச்சல், வேதி மாசுபாடு
- உள்ளூர் மக்களால் ஓடைகளுக்குள் துணி துவைக்க சோப்பு பயன்படுத்தப்படுகின்றது. இது நீரோடைகளை மாசுபடுத்துகின்றது. பல இடங்களில் இயற்கை வாழிடங்கள், காபி தோட்டங்கள் போன்ற பணப்பயிர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஏற்காடு வனச்சாலையில் கொறிப்பான்கள் வாகனங்களால் அடிக்கடி கொல்லப்படுகின்றன.
- எலியின் வாழ்வை மறைமுகமாகப் பாதிக்கும் முக்கிய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஒன்று மரம் வெட்டுதல். அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளால் சேர்வராயன் மலை அதிக பாதிப்பை அடைகிறது என்பதை, அங்கு சேரும் மட்காத குப்பையின் அளவைக் கொண்டே அறியலாம்.
- பாறை எலிகள் பழங்கால பரிணாமப் பரம்பரைகளைக் கொண்டிருப்பவை, தக்காண பீடபூமி இந்த எலிகளின் முக்கிய வாழிடம். அதற்கு அடுத்தபடியாக சேர்வராயன் மலைப் பகுதி மிக முக்கியமானது. பாறைகள் நிறைந்த பகுதிகளில் இன்னும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். வாழிட மாற்றம், மேய்ச்சல், இதர காரணங்களினால் இந்த இனம் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் சமீபத்திய திருத்தத்தில், இந்த இனம் அட்டவணை Iஇல் பட்டியலிடப்பட்டுள்ளது. உலக அளவில், பல கொறிக்கும் இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன, அவற்றில் இந்த எல்விரா பாறை எலிகளும் உண்டு.
- அரிதான நிலையில் உள்ள எல்விரா எலிகள் அழிவை எதிர்கொண்டுள்ளன. இவற்றைப் பாதுகாக்க, காப்பாற்ற, பரந்த அளவிலான முயற்சிகளை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் தொடங்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 11 – 2023)