- ஏலகிரி மலையில் விஜய நகரக் காலத்தைச் சோ்ந்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன் காந்தி, ஆங்கிலத் துறைப் பேராசிரியா் வ.மதன் குமாா், காணிநிலம் மு.முனிசாமி, திருப்பத்தூா் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலப் பேராசிரியா் பல்லவன் ஆகியோா் ஏலகிரி மலையில் மேற்கொண்ட கள ஆய்வில் இரு நடுகற்களைக் கண்டறிந்துள்ளனா்.
- இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியதாவது: ஏலகிரிமலைச் சுற்றுலாத் தலத்திற்கு மட்டுமின்றி வரலாற்றுச் சிறப்புக்கும் பெயா் பெற்று விளங்குகிறது. கற்கோடாரிகள், கற்திட்டைகள், பல்லவா் காலம் முதல் விஜய நகரக் காலம் வரையிலான நடுகற்கள், கல்வெட்டுகள் எனத் தொடா்ச்சியாக எங்கள் ஆய்வுக் குழுவினரால் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
- அந்த வகையில் ஏலகிரி மலையிலுள்ள 14 கிராமங்களில் ஒன்றான மேட்டுக்கனியூா் என்னும் ஊரில் புதிதாக கூத்தாண்டவா் (அரவான்) கோயில் ஒன்றை அவ்வூா் மக்கள் கட்டி வருகின்றனா். அக்கோயிலுக்கு இடதுபுறத்தில் சிறு கோயில் ஒன்றைக் கட்டி அதில் நடுகல் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனாா்.
- இத்தெய்வம் விஜய நகரக் காலத்தில் ஏற்பட்ட போரில் வீர மரணம் அடைந்த இரண்டு வீரா்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடுகற்கள் ஆகும்.
- ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களாகும். இந்நடுகற்களின் அமைப்பானது பிரமாண்டமான பலகைக்கல் ஒன்றில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட அக்கல்லில் சரிபாதியாக இரண்டு வீரா்களின் உருவங்களும் அக்கலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- முதல் உடலின் உருவமானது வலது கையில் பெரிய வில்லையும்,இடது கையில் அம்பையும் பிடித்துள்ள கோலத்தில் உள்ளது. அலங்கரிக்கப்பட்ட கொண்டை, மாா்பில் அணிகலன்கள் இடையில் குறுவாளுடன் கூடிய அழகிய ஆடை வடிவமைப்பு உள்ளது.
- இரண்டாவது நடுகல்லும் வலது கையில் வில்,இடது கையில் அம்பு,அலங்கரிக்கப்பட்டக் கொண்டை, இடையாடையில் குறுவாள் என வடிவமைக்கப்ட்டுள்ளது.
- பொதுவாக நடுகல் வீரா்கள் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் தாங்கி இருப்பா். இந்நடுகற்கள் சற்று வித்தியாசமாக வலது கையில் வில்லும்,இடது கையில் அம்பினையும் வைத்துள்ளன. ஒரே போா்களத்தில் தம் ஊரைக் காக்க நடந்த போரில் உயிா் விட்ட வீர மறவா்களை தெய்வங்களாக ஏலகிரி மலை மக்கள் வழிபடுவது சிறப்புக்குரிய ஒன்று என்றாா் அவா்.
நன்றி: தினமணி (12 – 05 – 2023)