TNPSC Thervupettagam

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கும்.. வேளாண் சுற்றுலாவும்...

June 24 , 2024 7 days 36 0
  • ஐ.நா. சபையால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பொருந்தும். பதினேழு வழிகாட்டி இலக்குகளை உள்ளடக்கி இருக்கும் அதனோடு வேளாண் சுற்றுலாவை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
  • அதற்கு முன்பு நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG), குறித்து நிதி ஆயோக் 2021-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையையும் இங்கு நாம் அலசிப் பார்க்க வேண்டும். அதன்படி எட்டாவது இலக்கான தகுந்த வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கீழ் 2030-ம் ஆண்டுக்குள் நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் கொள்கை இருக்கவேண்டும் என்றும் அதன் மூலமே வேலை வாய்ப்பு மற்றும் கிராமிய வளர்ச்சி பெருகும் என்றும் கூறுகிறது.
  • பன்னிரண்டாவது இலக்கான பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தியின்படி நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான காரணிகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. பதினான்காவது இலக்கான நீருக்கடியில் வாழ்க்கை என்பதில் கடல் சார்ந்த வளங்களை உள்ளடக்கிய சுற்றுலாவை 2030-ம் ஆண்டுக்குள் மேம்படுத்த வேண்டும் என்கிறது.
  • இந்நிலையில், வேளாண் சுற்றுலாவை நிலையான வளர்ச்சி இலக்குகளோடு ஒப்பிட்டு எடுத்துக்கொண்டால் மூன்று படிநிலைகளில் பிரிக்கலாம். அதாவது பொருளாதார நன்மைகள், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாடு போன்றவை ஆகும். பொருளாதார நன்மையின் கீழ் வரும் முதலாவது இலக்கான வறுமை ஒழிப்பில் வேளாண் சுற்றுலா மூலம் விவசாயிகளின் வருமானம் பெருகுவதால் ஓரளவு வறுமை குறையும். அதுவே எட்டாவது இலக்கான தகுந்த வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பது வேளாண் சுற்றுலா மூலம் ஊரக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாவதைக் குறிக்கிறது. பத்தாவது இலக்கான சமத்துவமின்மை குறைப்பில் வேளாண் சுற்றுலா வழியே ஏற்படும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் சமத்துவமின்மையை குறைக்கலாம்.
  • இரண்டாவது படிநிலையான, நிலையான சுற்றுச்சூழலின் கீழ் இருக்கும் பன்னிரண்டாவது இலக்கான பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தியை வேளாண் சுற்றுலா கொண்டு நீர் பராமரிப்பு, பாரம்பரிய வேளாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற செயல்பாடுகளின் மூலம் மேம்படுத்தலாம். பதிமூன்றாவது இலக்கான காலநிலை செயல்பாட்டை, வேளாண் சுற்றுலா மூலம் நிலையான வேளாண்மை வழியே கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தலாம். அதுவே பதினைந்தாவது இலக்கான மண்ணோடு ஒன்றிய வாழ்க்கையில் பல்லுயிர் பெருக்கம், மண்ணின் நிலையான வளர்ச்சியை உள்ளடக்கிய ஒன்றாக வேளாண் சுற்றுலா இருக்கும்.
  • மூன்றாவது படிநிலையான சமூக மேம்பாட்டின் கீழ் இருக்கும் பதினோராவது இலக்கான நிலையான சமூகம் மற்றும் நகர மேம்பாட்டை வேளாண் சுற்றுலா மூலம் கிராமம் மற்றும் நகரத்து மக்களிடையே ஏற்படும் கலாச்சார பரிமாற்றம் வழியே வளப்படுத்த முடியும். அதுவே பதினேழாவது இலக்கான கூட்டான நோக்கத்தை வேளாண் சுற்றுலாவில் பங்கெடுக்கும் அனைத்து வகையான பங்குதாரர்கள் மூலம் மேம்படுத்தலாம். குறிப்பாக விவசாயிகள், அரசாங்கம், சுற்றுலாவாசிகள் மற்றும் இதர பங்குதாரர்கள் இடையே வேளாண் சுற்றுலா மூலம் ஏற்படும் பந்தத்தை இந்த இலக்கு குறிக்கிறது.
  • அல்ஜீரியா நாட்டில் வேளாண் சுற்றுலாவை நிலையான வளர்ச்சி இலக்குகளோடு ஒப்பிட்டு மேற்கொண்ட ஆய்வில் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு போன்ற படிநிலைகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை ஆய்வர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை குறைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு போன்ற காரணிகளை உள்ளடக்கிய இலக்குகள் மேம்பட்டு இருப்பதாகவும், விவசாயிகள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கும் நல்ல பயன் கிடைத்து இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
  • எனவே நிலையான வளர்ச்சி இலக்குகள் சிலவற்றை இப்பூவுலகில் வேரூன்ற வேளாண் சுற்றுலா ஆகச் சிறந்த காரணியாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories