TNPSC Thervupettagam

ஒடுக்குமுறைத் தேர்வுகள்

January 31 , 2020 1823 days 1521 0
  • உஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. நெருக்கடியான, நெரிசல் மிக்க கட்டிடங்கள். அனேகமாக ஒவ்வொரு கட்டிடத்தின் முகப்பையும் வெவ்வேறு வண்ணங்களிலான பத்துப் பதினைந்து பெயர்ப் பலகைகள் மூடியிருந்தன.
  • சாலையின் இரண்டு ஓரங்களிலும் விளம்பரத் தட்டிகள். சாலைக்குக் குறுக்கே வாகனங்களைத் தொந்தரவுக்குள்ளாக்காத உயரத்துக்கு மேலே, அணி அணியாக விளம்பரப் பதாகைகள், தோரணங்கள். எல்லாம் போட்டித் தேர்வுகளுக்கும், நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி எடுக்கக் கூப்பிடுபவை. முகர்ஜி நகரை மொத்தமாகவே பயிற்சி மையங்களின் சந்தை என்று சொல்லிவிடலாம்.
  • அரசுப் பணிகளுக்கு உள்ள பசியும் போட்டியும்தான் இங்குள்ள பயிற்சி மையங்களின் மூலதனம். மருத்துவம் - பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள், அரசுப் பணிகள், வங்கிப் பணிகள், மேலாண்மைப் பணிகள், இதரப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான மையங்கள் என்று பல வகைமைகள் இருந்தாலும், முகர்ஜி நகரின் பெரிய அடையாளம் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முன்தயாரிப்பு. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் அந்தச் சின்ன பகுதியில் படிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
  • முகர்ஜி நகரில் மட்டும் இயங்கும் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகம். கட்டிடங்களுக்குள் நுழைந்து பார்த்தபோது, மேல் தளங்களிலேயே விடுதிகளோடு ஒவ்வொன்றும் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டுகளைப் போல இருந்தன.
  • இந்த ஐந்தாண்டுகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள் உண்டாக்கியிருக்கும் அழுத்தத்தில் சண்டிகர், அலகாபாத், லக்னோ, மதுரா, பாட்னா, கயை, மும்பை, புனே, ஆமதாபாத், சூரத், கொல்கத்தா, அசன்சோல், புவனேஸ்வர், போபால், ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, திருவனந்தபுரம் என்று நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் முளைத்திருக்கின்றன.
  • இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் பல வீதிகள் நெருக்கடியான பயிற்சி மையங்களால் நிறைந்திருக்கின்றன.

கல்வி

  • இந்தியக் கல்வித் துறை எப்படி ஆட்சியாளர்களால் கல்விச் சந்தையாக உருமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு குறியீடுபோல இருக்கிறது ராஞ்சியிலுள்ள ஒரு ஐந்தடுக்குப் பெரும் கட்டிட வளாகத்தின் பெயர் - ‘எஜுகேஷன் மால்’. ராஞ்சியில் 2012-ல் வெறும் இருநூறு பயிற்சி மையங்களே இருந்தன; இன்றைக்குப் பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.
  • இவையெல்லாம் பள்ளிகளுக்கு வெளியே விரிக்கப்பட்டிருக்கும் கடைகள். தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலுமே நகரங்களில் உள்ள மேட்டுக்குடி பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பிலிருந்தே மருத்துவ / பொறியியல் கனவோடு உள்ள குழந்தைகளைத் தனி வகுப்பாகப் பிரித்து, தனியார் பயிற்சி மையங்களோடு இணைத்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.

நீதிபதிகள் கேள்வியின் முக்கியத்துவம்

  • இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘தேசிய தகுதிகாண் - நுழைவுத் தேர்வு முறை’யானது (நீட்) இந்த நாட்டின் சாமானிய மக்களின் குழந்தைகளை வெளித்தள்ளும் தேர்வுமுறை என்பதை மிகத் துல்லியமாகவே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் இருவரும் சமீபத்தில் அம்பலத்துக்குக் கொண்டுவந்தனர்.
  • தமிழ்நாட்டு அரசிடம் தரவுகளைக் கேட்டுப் பெற்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்ட கேள்வி ஒரு அரிய நிகழ்வு. “தமிழ்நாட்டின் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2019-ல் 3,081 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் 98.4% பேர் தனியார் பயிற்சி மையங்களில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி முடித்தவர்கள்; அவர்களில் பெரும்பாலானோர் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக இத்தேர்வை எழுதி வென்றவர்கள் எனும் தரவு அதிர்ச்சி அளிக்கிறது; இப்படி சமமற்ற நிலையில் உள்ள மாணவர்கள் சமமாகக் கருதப்பட்டு ஒரு தேர்வை எழுத நேரும்போது, அதன் முடிவும் சமமற்ற நிலைமைக்கு ஏற்பதான் வெளிவரும்.
  • மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் ஏழை மாணவர்களுக்குத் திறந்திருக்கவில்லை; ஏழைகளின் சார்பாக இந்தக் கருத்தை நாங்கள் தெரிவிக்கவில்லை; ஒரு பொதுத் தேர்வு என்றால் அது அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். இந்தத் தேர்வு அப்படி இல்லை. தனியார் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவே இது வழிவகுக்கும். இந்தத் தேர்வுமுறையை ஏன் நீங்கள் திரும்பப் பெறக் கூடாது?”
  • மத்திய அரசு கொண்டுவந்து, பிற்பாடு உச்ச நீதிமன்றத்தாலும் உறுதிசெய்யப்பட்ட ஒரு தேர்வுமுறையைக் கீழ் நீதிமன்றங்கள் விமர்சனத்துக்குள்ளாக்குவது இந்தியாவில் முன்மாதிரியற்ற ஒன்று. இன்றைய சட்ட நடைமுறைப்படி இதற்கு அர்த்தமோ, பயனோ ஏதும் இல்லையென்றாலும், தார்மீகரீதியாக உண்மை எங்கிருந்து வந்தாலும் செவிசாய்க்கும்
  • சாத்தியத்தை ஒரு அமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். நம்முடைய இன்றைய அமைப்பில் அதற்கான இடம் இல்லாததாலேயே அநீதியான ஒரு கட்டமைப்பை நாம் நியாயப்படுத்த முடியாது.

ரிலையன்ஸ் முதலீடு உணர்த்தும் செய்தி

  • தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டின்படி நாடு முழுமையுமுள்ள மாணவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை நோக்கிச் செல்லும் பாஜக அரசு, முக்கியமான எல்லாப் படிப்புகளையுமே பொது நுழைவுத் தேர்வு எனும் முறைமையின் கீழ் கொண்டுவரும் திசையில் பயணிக்கிறது. சந்தை இதைத் தனக்கான பொன்னான வாய்ப்பாகப் பார்க்கிறது.
  • நாட்டின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமான ‘ரிலையன்ஸ்’ தன் பார்வையைக் கல்வித் துறை நோக்கித் தொடர்ந்து முன்னகர்த்திவருவது ஒரு சூட்சமப் புள்ளி. மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘எம்பைப்’ நிறுவனத்தின் பெரும்பான்மை சமப் பங்குகளை வாங்க ‘ரிலையன்ஸ்’ செய்துகொண்ட ஒப்பந்தத்தை இங்கே நினைவுகூரலாம். “நாடு முழுவதும் உள்ள 19 லட்சம் பள்ளிகள், 58,000 கல்லூரிகளைத் தொழில்நுட்பம் வழி இணைக்க இலக்கு வைத்திருக்கிறோம்” என்று அப்போது சொன்னார் ஆகாஷ் அம்பானி.
  • இந்தியக் கல்வித் துறையில் ஆழமான கற்றலுக்காக இதுநாள்வரை நடந்துள்ள முதலீடுகளிலேயே மிகப் பெரியதான இது, பள்ளிக்கூடங்களின் மரபார்ந்த மாட்சிமை முடிவுக்கு வருவதைக் கட்டியம் கூறுகிறது. இந்திய தனிப் பயிற்சித் தொழிலில் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடிகள் புரள்கின்றன.
  • கட்டுப்பாடற்ற அந்தச் சந்தையை ஒருமுகப்படுத்தி தம் கைக்குக் கொண்டுவர இந்திய இணையக் கல்வித் துறை முக்கியமான கருவியாக உதவும் என்று பெருநிறுவனங்கள் நம்புகின்றன. மத்திய தர வகுப்பினரில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வருவாயின் கணிசமான பகுதியைக் குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடுகிறார்கள்; ‘அசோசேம்’ ஆய்வின்படி, ஆரம்பக் கல்வி மாணவர்களில் 87% பேரும், உயர்நிலைக் கல்வியில் 95% பேரும் ஏதாவதொரு வகையில் தனிப் பயிற்சி பெறுகிறார்கள். எதிர்கால முக்கியப் படிப்புகளுக்கான கற்றல் இனி செயற்கை நுண்ணறிவு, இணையம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு திகழும் என்று கூறப்படும்போது இன்றைய பள்ளிகளின் நிலைமையும் அவற்றை மட்டுமே நம்பிப் படிக்கும் சாமானியக் குழந்தைகளின் எதிர்காலமும் என்னவாகும் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

பள்ளிக்கூடங்களின் மரணம்

  • பள்ளிக்குச் செல்வது தனிப் பயிற்சியாளர்களுக்கு இனி ஒரு சம்பிரதாயம், அவ்வளவே. 2018 ‘நீட்’ தேர்வில் நாட்டிலேயே முதலாவது இடத்தில் தேறிய மாணவி கல்பனா குமாரி, ஒரே சமயத்தில் பிஹார் பள்ளியில் படித்தபடியே டெல்லியில் முன்னணிப் பயிற்சி மையம் ஒன்றில் முழு நேர மாணவியாக தனிப் பயிற்சி பெற்றதும், பிஹார் பள்ளிக்கூடத்தில் முழு வருகைப்பதிவு பெற்றது சர்ச்சையானதும் பள்ளிக்கூடங்களின் மரணத்தையே சுட்டுகின்றன.
  • என்னுடைய பிரதான குற்றச்சாட்டு இதுதான்: 12 வருடப் பள்ளிக் கல்வியை இந்த நுழைவுத் தேர்வுகள் கொச்சைப்படுத்துகின்றன; அர்த்தமற்றதாக்குகின்றன. உயர் படிப்புகள் ஒவ்வொன்றுக்கும் நுழைவுத் தேர்வும் தனிப் பயிற்சியும்தான் வழி என்றால், 12 வருட பள்ளிக் கல்விக்கு என்ன பொருள்? அப்படியென்றால், பள்ளிக் கல்வி மதிப்பு என்பது கீழ்நிலை வேலைகளுக்கானதா? சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டை நெருங்கும் நிலையிலும், சமமான ஒரு பள்ளிக் கல்வியை இந்திய அரசால் கொடுக்க முடியவில்லை.
  • ஓட்டை உடைசலான, பாரபட்சங்கள் நிரம்பிய இந்தப் பள்ளிக்கல்வியில் ஏதோ ஒரு பிடிமானத்தைப் பிடித்து, ஒரு கிராமத்து ஏழை மாணவன் மேல் நோக்கி வருகிறான். அவனையும் இத்தகு நுழைவுத் தேர்வுகளின் வழி அடித்துத் துரத்துகிறது என்றால் இந்த அரசு யாருடையது? பள்ளிக் கல்வியானது பாரபட்சமானது என்றாலும், ஏதோ ஒரு வகையில் எல்லோருக்கும் கற்பிக்கப்படுகிறது.
  • அதன் அடிப்படையில் ஒரு தேர்வை நடத்தும்போது குறைந்தபட்ச நியாயப்பாட்டை அது பெறுகிறது. நுழைவுத்தேர்வு பயிற்சி வசதியானர்களுக்கு மட்டுமானதுதான் என்று ஆகிவிடும் சூழலில், அதற்கு எப்படி ‘பொது அடையாளம்’ தர முடியும்?
  • தனிப் பயிற்சி காலக் கட்டாயம் என்றால், அது யாருக்கு மட்டும் சாத்தியம் என்பது வெட்டவெளிச்சமானது. பல லட்சங்கள் செலுத்தி முன்னணி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கே அது சாத்தியம். ஒரு மாநிலம் எங்கும் உள்ள அரசுப் பள்ளித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு போன்ற ஒரு மாநில அரசு நடத்தும் நானூற்றுச்சொச்சம் பயிற்சி மையங்களிலிருந்து சென்ற வருடத்தில் ஒரு மாணவரைக்கூட மருத்துவப் படிப்புக்கு அனுப்ப முடியவில்லை என்றால் இதன் மூலம் விளக்கப்படுவது என்ன?
  • என்னிடம் ஒரு நண்பர் கேட்டார், “ஏன் இணைய வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளுக்குக் கொண்டுசெல்லக் கூடாது?” “ஐயா, இந்த நாட்டில் இன்னும் மூன்றில் ஒரு பங்கு பள்ளிகளில் மின்சாரமே கிடையாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரே சொல்கிறார்; கணினி என்று ஒரு வஸ்து மூன்றில் ஒரு பங்கு பள்ளிகளில்தான் இருக்கிறது. இவ்வளவு மோசமான கட்டமைப்பையும்; இன்னமும் இரவு உணவுக்கு வழியில்லாமல் பட்டினியோடு படுக்கச் செல்லும் பல லட்சம் குழந்தைகளின் வறிய சூழலையும் வசதியாக மறக்க முடியும் என்றால், அதை உடனடியாகச் செய்துவிடலாம்” என்றேன்.

யுத்தமா உயர்கல்வி வாய்ப்பு?

  • உயர்கல்வி வாய்ப்புக்கான போட்டியை யுத்தம் என்று சொல்பவர்கள் அயோக்கியர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. சுதந்திரம் அடைந்தபோது நம் நாட்டிலுள்ள அரசுசார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் இருந்த இடங்களின் எண்ணிக்கை, அன்றைக்கு நாடு முழுவதும் படித்த மாணவர்களின் எண்ணிக்கை, எல்லா வகைப் படிப்புகளுக்கும் கிடைத்த வேலைவாய்ப்பு சாத்தியம் இவற்றின் சூழல் என்ன? இன்றுள்ள சூழல் என்ன? ஆண்டுக்கு 11.86 லட்சம் மாணவர்கள் ‘ஜேஇஇ தேர்வு’ எழுதுகிறார்கள் என்றால், நாடு முழுவதிலும் உள்ள 22 ஐஐடி நிறுவனங்களிலும் மொத்தமாக 10,899 இடங்களே இருக்கின்றன.
  • ஒரு மாநிலத்துக்கு ஒரு எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் என்ற நிலைகூட சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டை நெருங்கும் சூழலிலும் எட்டப்படவில்லை. ஏனைய படிப்புகளுக்கு நல்ல பணி வாய்ப்புகளும், கண்ணியமான சம்பளமும் கிடைக்கும் என்றால், இந்தப் படிப்புகளுக்கு இவ்வளவு போட்டி இருக்காது. ஆக, வெறும் கல்வித் துறையின் தோல்வி மட்டும் அல்ல இது; தொழில் கொள்கையின் தோல்வியும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்கூட எல்லா வேலைகளுக்கும் கண்ணியமான ஒரு குறைந்தபட்சக் கூலியை உறுதிப்படுத்த முடியாத சமூகப் பாதுகாப்புத் தோல்வியும் இதில் ஒன்றிணைந்திருக்கிறது.
  • ஆக, அரசின் தோல்வியைக் கேள்வி கேட்கும் திராணியற்றவர்களே நுழைவுத் தேர்வுகளை யுத்தத்தோடு ஒப்பிட விரும்புகிறார்கள். இந்த நியாயப்பாட்டிலிருந்தே ஐந்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுமுறையைக் கொண்டுவரும் கொடுங்கோன்மை பிறக்கிறது.
  • தமிழ்நாட்டில் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகள் நியாயமே இல்லாமல் ராஜஸ்தான், சிக்கிம் என்று தேர்வு மையங்களுக்குத் தூக்கி அடிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, கோடைகாலப் போக்குவரத்து நெருக்கடியில் கடும் அலைக்கழிப்புக்குள்ளாக்கப்பட்டபோது, அதை நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் “உயர்கல்விக்கான போட்டி ஒரு யுத்தம்; எல்லாவற்றுக்கும் தயாராக வேண்டும்” என்று பலர் எழுதிக்கொண்டிருந்தது கவனிக்கக் கூடியதாக இருந்தது. உயர்கல்விக்கான போட்டி ஒரு யுத்தம் என்றால், அதில் கொல்லப்படும் குழந்தைகள் யாருடையவை?
  • இந்த மனோபாவம் சாதாரணமானது அல்ல. இத்தேர்வுமுறையின் பண்பில் ஒரு ஒடுக்குமுறை இருப்பதை நாம் உணர்வோம் என்றால், நவீன தீண்டாமையின் வர்க்கப் பாதை வெளிப்பாடுகளில் ஒன்றே அது என்பதை ஏற்பதில் நமக்கு எந்தத் தயக்கமும் இருக்க முடியாது. இதை நியாயப்படுத்தும் மனோபாவத்தை ‘வர்க்க பிராமணியம்’ என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.
  • நகர்ப்புறப் பணக்கார்கள் மேல் தட்டில் செல்லச் செல்ல கிராமப்புற ஏழைகள் இங்கே கீழே அழுத்தப்படுகிறார்கள். பிராமணர்கள், இடைநிலைச் சாதிகள், தலித்துகள் என சகல தரப்புகளும் இந்த வர்க்க பிராமணியத்தில் அடக்கம். சாதிய பிராமணியம் வர்ண அடிப்படையில் அடுக்குகளை நிர்ணயிக்கிறது என்றால், வர்க்க பிராமணியம் வர்க்க அடிப்படையில் அடுக்குகளைத் தீர்மானிக்கிறது.
  • சாதிய பிராமணியத்தில் கிராமிய நிலவுடைமை மனோபாவம் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால், வர்க்க பிராமணியத்தில் நகர்மய மேட்டிமை மனோபாவம் ஆதிக்கம் செலுத்துகிறது. கொடுமை என்னவென்றால், இத்தேர்வுமுறையை மெச்சும் கூட்டத்திடம் வரலாற்று அடிப்படையில் அதுதான் உயர்ந்தது என்று நிறுவ ஒரு ஆதாரமும் கிடையாது.

வெளித்தள்ளும் தேர்வுகள்

  • நாம் ‘பொது நுழைவுத் தேர்வுகள்’ என்று குறிப்பிடும் இன்றைய இந்தியாவின் நுழைவுத் தேர்வுமுறையானது உண்மையாகவே ‘பொது’ பண்பைப் பெற்றிருக்கிறதா அல்லது ‘தனித்த’ பண்பைப் பெற்றிருக்கிறதா என்பதே நாம் கேட்க வேண்டிய கேள்விகளில் பிரதானமானது. ஏனென்றால், அறிவு ஒருதரப்பட்டது அல்ல; பலதரப்பட்டது எனும்போது அறிவை மதிப்பிடும் தேர்வு மட்டும் எப்படி ஒருதரப்பட்டதாக இருக்க முடியும்? அதாவது, எல்லா வகையான நிபுணத்துவத்தையும் சோதிக்க ஒரே மாதிரியான தேர்வுகள் எப்படி மதிப்பீட்டு முறையாக இருக்க முடியும்? ஒரு மாணவர் பெயர்களையும் எண்களையும் ஒப்பிப்பதில் தேர்ந்தவராகவும், படித்த கோட்பாட்டைப் படைப்பூக்கத்தோடு செயலாக்கும் திறனில் சறுக்குபவராகவும் இருக்கலாம்; இன்னொரு மாணவர் பெயர், எண்களில் சறுக்குபவராகவும், கோட்பாட்டைப் படைப்பூக்கத்தோடு செயலாக்குவதில் தேர்ந்தவராகவும் இருக்கலாம். நம்முடைய தேர்வுமுறை பெயர்களையும் எண்களையும் உடனடியாக ஒப்பிக்கும் திறனுடையவர்களையே சிறந்தவர்கள் என்கிறது; மறைமுகமாக கணிதம்தான் ஒரே அறிவு என்று சொல்கிறது. ஐன்ஸ்டினின் சிந்தனையில் இதைச் சொல்வது என்றால், ‘மரம் ஏறுவதுதான் தேர்வுமுறை என்றாக்கிவிட்டால், மீன்கள் அதில் தோற்றுப்போகும்; தம் வாழ்நாள் முழுவதும் தாம் முட்டாள் என்ற எண்ணத்துடனேயே அவை வாழ்ந்து மடியும்.’
  • இன்றைய இந்தியத் தேர்வுமுறையானது அதன் உள்ளடுக்கில் கணித அறிவையும், மனப்பாட ஆற்றலையும் பிரதானம் என்று கொண்டிருக்கிறது. முன்னடுக்கில் அது ஆங்கிலம், இந்தி பேசுவோருக்கு முன்னுரிமை அளிக்கிறது. கல்வியோடு நெடிய உறவும் மரபும் கொண்ட சமூகங்களும், செல்வ வளம் கொண்ட குடும்பங்களுமே மேற்கண்ட முறைமையில் முன்னே நிற்பார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. இடஒதுக்கீடு என்ற முறைமை இல்லாவிட்டால் முழுமையாகவே மேல் அடுக்கு சாதிகளின் கோட்டையாகவே இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் என்பதே உண்மை. இடஒதுக்கீடு சிறிய உடைப்பை உண்டாக்கி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களின் நுழைவுக்கு இத்தனை ஆண்டுகளில் வழிவகுத்திருக்கிறது என்றாலும், பொது நுழைவுத் தேர்வானது இந்தச் சமூகங்களிலும் வர்க்கரீதியான மேல் அடுக்கே இனி உள்ளே நுழைய முடியும் என்ற சூழலை உருவாக்கியிருக்கிறது. முந்தைய சூழலை இது மேலும் மோசம் ஆக்குகிறது.

ஏன் நிறைய நோபல் பரிசாளர் இல்லை?

  • உலகின் மிகப் பெரும் ஜனத்திரள் ஒன்றைச் சுமக்கும் இந்தியாவால் ஏன் சுதந்திரத்துக்குப் பிறகும் அறிவுத் துறை நோபல் பரிசுகளில் இரட்டை இலக்கத்தைக்கூடத் தொட முடியவில்லை என்பதும், அறிவுத் துறையில் இதுவரை நோபல் பரிசு வென்றவர்களில் ஒருவர் தவிர அத்தனை பேருமே பிராமணர்கள் என்பதும் நமது தேர்வுமுறை கொண்டிருக்கும் சாதியப் பண்புக்கு அப்பாற்பட்டதல்ல. ஏனென்றால், இந்தியாவில் மரபார்ந்த அறிவியல் தொழில்நுட்பத்தின் பெரும் பகுதி பிராமணர் அல்லாத சமூகங்களிடம் இருந்தது; நவீன தேர்வு முறையோ பாரம்பரிய அறிவியல் தொழில்நுட்பத்தைப் பொருட்படுத்தாததாக வளர்ந்தது. வேளாண் கல்வி நிறுவனங்கள்தான் விவசாயிகளின் பிள்ளைகளுக்குச் சிறப்புரிமை அளிக்கின்றனவா அல்லது பெருங்கடலியல் நிறுவனங்கள்தான் கடலோடிகளின் பிள்ளைகளுக்குச் சிறப்புரிமை அளிக்கின்றனவா? கடற்கரை மேலாண்மைக் கொள்கையைத் தீர்மானிப்பவராக எம்.எஸ்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டது தற்செயலா, இங்குள்ள சூழலின் தொடர்ச்சியா? ஆக, பிரதி சார்ந்த அறிவே இங்கே மேலே நிற்கிறது; செயல் சார்ந்த அறிவு புறக்கணிக்கப்படுகிறது.
  • சென்ற ஆண்டில் டெல்லி வந்திருந்த ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ் இதைத்தான் தனக்குத் தெரிந்த வார்த்தைகளில் சொன்னார். “பெரும்பான்மை இந்தியர்களுக்குச் சுதந்திரமாகச் சிந்திக்கும் ஆற்றலோ, கற்பனைத் திறனோ இல்லை. கற்பதை அப்படியே மூளையில் ஏற்றிக்கொள்கிறார்கள்; தேர்வில் எழுதி பட்டங்களை வெல்கிறார்கள். அவர்களிடம் நிறைய எதிர்பார்க்க முடிவதில்லை. இந்தியாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் என்று ‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத்தைச் சொல்லலாமா? அதுகூட ‘கூகுள்’, ‘ஆப்பிள்’, ‘ஃபேஸ்புக்’போல ஒன்றாக உருவாகிவிடவில்லை. ‘இன்ஃபோசிஸ்’ புதிதாக எதையும் கண்டுபிடிப்பதில்லை, கண்டுபிடிப்பதைப் பயன்படுத்துகிறது. ‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத்துக்கான ‘கீ நோட்’ஸை நானே மூன்று முறை எழுதித் தந்திருக்கிறேன். இந்தியாவில் படைப்பாற்றல் இல்லை என்பதைவிட, அவ்வாறு புதிதாக எதையும் செய்வதற்கு ஊக்குவிப்பு இல்லை என்பதே உண்மை.” மரம் ஏறும் திறன் ஒன்று மட்டுமே அறிவுக்கான அளவீடு என்று கருதும் ஒரு நாடு, மீன்கள் போன்ற ஏனைய எல்லா சமூகங்களின் அளப்பரிய திறனையும் இப்படித்தான் இழக்கிறது.

உள்ளூர்மயமாக்கலுக்கு எதிரி

  • எல்லாவற்றுக்கும் மேல் அதிகாரப்பரவலாக்கத்துக்குப் பதிலாக அதிகாரமையமாக்கலை இந்தப் பொது நுழைவுத் தேர்வு உந்துகிறது. வெறும் பதினோராயிரத்துச் சொச்ச மக்கள்தொகையைக் கொண்ட நவ்ரூ போன்ற ஒரு நாடு தனித்துவமான கல்விமுறை தன் சமூகத்துக்கு முக்கியம் என்று கருதுகிறது.
  • ஐம்பத்தைந்து லட்சம் மக்களை மட்டுமே கொண்ட பின்லாந்து தொடக்கக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை பின்னிஷ் மொழியில் அளித்து, உலகின் வளமிக்க நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால், பத்தாண்டுகள் இடைவெளிக்குள் பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டுக்கு இணையான ஜனக்கூட்டத்தை - 18 கோடி பேர் - தன் மக்கள்தொகையில் அதிகரித்துக்கொள்ளும் இந்தியா, கல்வியை மேலும் மேலும் மையப்படுத்தி பெரும்பான்மை மக்களை அதிகாரமற்றவர்கள் ஆக்குகிறது.
  • உலகின் பல முன்னணி நாடுகளைப் போல நாமும் கல்வியை உள்ளூர்மயமாக்க வேண்டும், மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும்; ஆனால், தேசியமயமாக்கிக்கொண்டிருக்கிறோம். நாடு முழுமைக்கும் ஒரே தேர்வு என்றாகும்போது, நாடு முழுமைக்கும் ஒரே கல்விமுறை என்ற பாதை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டியதாகிறது.
  • எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி சிந்திக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகையில், புதிய கற்பனைகள், படைப்பூக்கத்துக்கான எல்லை சுருங்குகிறது. கற்பனையும் படைப்பூக்கமும் வறண்ட சமூகம் அடிமைகளின் நிலம் ஆகிறது!

நன்றி: இந்து தமிழ் திசை (31-01-2020)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top