TNPSC Thervupettagam

ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கைவிட்டுவிட்டோமா?

December 9 , 2019 1861 days 1662 0
  • பிஎஸ்என்எல் நிறுவனமும் எம்டிஎன்எல் நிறுவனமும் இணைக்கப்படுவது குறித்துத் தலையங்கங்களும் கட்டுரைகளும் ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன.
  • இந்த இரண்டு நிறுவனங்களின் நிரந்தர ஊழியர்களும் நல்ல ஆதாயம் தரக்கூடிய விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தில் உள்ளனர். மூத்த பணியாளர்களுக்கென்று தாராளமான தொகுப்புத் தொகையும் காத்திருக்கிறது.
  • ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள் ஆகியோரின் நிலை என்ன? இவர்களெல்லாம் குறைவான சம்பளத்துக்கும், சமூகப் பாதுகாப்பு நலன்கள் ஏதுமின்றியும் இந்த இரண்டு நிறுவனங்களுக்காகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள்.
  • இந்த நிறுவனங்களின் மிக அடிப்படையான சேவைத் துறை குழுக்கள் இவர்கள்தான் என்று சொல்வது மிகையாகாது. ஆனால் இப்போது, பல மாதங்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்றிய பிறகு, பரிதவித்துக்கொண்டிருக்கும் இந்த ஊழியர்களில் பலர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது.
  • பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் விவகாரம் என்பது விதிவிலக்கானது அல்ல. முறைசாரா துறைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒப்பந்தக்காரர்கள் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு மிக மோசமான, ஆபத்தான பணிச்சூழலில் பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள்.
  • வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்தின் பலிகடாவாக ஆன இவர்களுக்கு யார் மறுவாழ்வு தருவார்கள்? இந்தச் சந்தைப் பொருளாதாரத்தில் பெரும்பாலான பட்டதாரிகள் வேலைத்திறனின்மை கொண்டிருப்பதால் அவர்களை வேலைக்கும் எடுக்க முடியாத சூழல் வேறு. கூடவே, வேலைவாய்ப்புகளும் குறைவாக உள்ளன.

பின்பற்றுவதே இல்லை

  • ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் (முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல்)-1970, மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தல் மற்றும் சேவையின் நிலைமைகள்)-1979 ஆகிய சட்டங்கள் வெகு காலமாக இருக்கின்றன. ஆனால், அவற்றை யாருமே பின்பற்றுவதில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம்.
  • அதேபோல், துப்புரவுத் தொழிலாளர்கள். இவர்களில் பலரும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்கு எடுக்கப்படுபவர்கள். இவர்கள் அனைவரும் மிக மோசமான, மனிதத்தன்மையற்ற சூழல்களில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும்படி தள்ளப்பட்டவர்கள்.
  • இத்தனைக்கும் கையால் மலம் அள்ளுதலைச் சட்டங்கள் தடைசெய்திருக்கும்போதும் இந்தக் கொடுமை தொடரவே செய்கிறது. நிரந்தர ஊழியர்கள் செய்யும் தொழிலையே ஒப்பந்த ஊழியர்கள் செய்யும்போது அவர்களுக்கும் நிரந்தர ஊழியர்கள் பெறும் அதே அளவு ஊதியத்தைத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு தீர்ப்பிலும் கூறியிருக்கிறது. எனினும், இந்த உத்தரவுகளெல்லாம் சட்டக் கல்லூரிகளின் வகுப்பில் போதிக்கப்படுபவையாக மட்டுமே இருக்கின்றனவே தவிர, நிறுவனங்கள் இவற்றைப் பின்பற்றுவதே இல்லை.
  • அதேபோல், முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம்-2008 பெரும்பாலும் கண்துடைப்பாகவே ஆகியிருக்கிறது. 2002-ல் தொழிலாளர்களுக்கான இரண்டாவது தேசிய ஆணையமானது, சுரண்டல் மிகுந்த ஒப்பந்தத் தொழிலாளர் முறை காலப்போக்கில் அழிக்கப்பட வேண்டும் என்று வலுவாகப் பரிந்துரைத்திருந்தது.
  • ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் அவர் ஒப்பந்தத் தொழிலாளராகக் கருதப்படாமல் நிரந்தரத் தொழிலாளராகக் கருதப்பட வேண்டும் என்றும் அந்த ஆணையம் சரியாகவே பரிந்துரைத்திருந்தது.
  • எனினும், 2001-ல் எஸ்ஏஐஎல்-எதிர்-கடலோரப் பணியாளர்கள் மற்றும் ஏனையோருக்கான தேசிய ஒன்றியம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்புகள் சிலவற்றுக்கு மாறான தீர்ப்பை வழங்கியது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிக்கப்படும்போது தாமாகவே ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக ஆகிவிடுவதற்குச் சட்டம் எந்த வழிவகையும் செய்யாது என்றும், இதை முறைப்படுத்தும் பொறுப்பு பணி தருபவருக்குக் கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வேலைக்கு எடு, வேலையை விட்டுத் துரத்து

  • நமது தொழிலாளர் சட்டங்களெல்லாம் கடுமை யாகவும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விதத்திலும் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்தக் கூற்றானது அதிர்ஷ்டசாலிகளான நிரந்தர ஊழியர்களுக்குத்தான் பொருந்தும். ஒட்டு மொத்தத் தொழிலாளர்களில் நிரந்தர ஊழியர்கள் வெறும் 10%-தான் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ‘வேலைக்கு எடு, வேலையை விட்டுத் துரத்து’ என்பதுதான் ஒப்பந்தத் தொழிலாளர்கள் விஷயத்தில் விதிமுறையாக உள்ளது. இப்படியாக, அரசாங்கத்தின் குறுக் கீடற்ற சந்தைப் பொருளாதாரம் முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
  • இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், கடுமையான தொழிலாளர் சட்டம்தான் தொழிலாளர் சக்தியைப் பெருமளவு ஒப்பந்தப்படுத்தலை நோக்கித் தள்ளியிருக்கிறது. சமூகத்தால் விளிம்புநிலையில் வைக்கப்பட்டிருப்பவர்கள்தான் பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஆகிறார்கள் என்ற நிதர்சனத்தையும் பார்க்க வேண்டும்.
  • இருபது அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம்-1970 பொருந்தும். ஆகவே, அதுபோன்ற ஊழியர்களின் எண்ணிக்கை உண்மையில் கணக்குக் காட்டுவதை விடவும் அதிகமாக இருக்கலாம்.

இந்தியப் பொருளாதாரம்

  • 21-ம் நூற்றாண்டின் தாராளமயமாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இதுபோன்ற தொழிலாளர்கள் எல்லாம் பலியாடுகள் போன்று நடத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் நிரந்தர ஊழியர்களின் ஊதிய அமைப்பை அதிகப்படுத்துவதில் ஊதியக் குழுக்கள் எப்போதும் மிகவும் பெருந்தன்மை காட்டுகின்றன. ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர்களின் உண்மையான தேவைகள் அரசால் திரும்பத் திரும்பப் புறக்கணிக்கப்பட்டுவந்திருக்கின்றன.
  • இதுபோன்ற தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் நமது கொள்கை வகுப்பாளர்கள் இருக்க வேண்டும். ஊதியம் தொடர்பான சட்டத் தொகுப்பு-2019 ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
  • உண்மையில், உலகமயமாக்கலை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றால், தொழிலாளர் சட்டங்களில் நாம் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், அதே நேரத்தில், வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமான காலாட்படை வீரர்களுக்கு ஒட்டுமொத்தமான சமூகப் பாதுகாப்புத் திட்டத் தொகுப்பு வேண்டும் என்பது காலத்தின் தேவை.

நன்றி: இந்து தமிழ் திசை (09-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories