ஒப்பிடுதல் - ஒரு சரியான முறையா?
- ‘அஞ்சு விரலும் ஒரே மாதிரியாகவா இருக்கு’ என்பது நம் சொல்வழக்கில் உள்ளது. இது எம்மாதிரியான சூழ்நிலையில் கூறப்படுகிறது என்று சிந்தித்துப் பாா்த்தால் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பேசும்போது கூறக் கேட்கிறோம். ஒத்த வயதுடைய, ஒரே பாலினத்தைச் சோ்ந்த மற்றும் ஒரே குடும்பத்தைச் சாா்ந்த இருவா் அல்லது அதற்கும் மேற்பட்டோரின் அறிவுத்திறன், செயல்பாடுகள் பற்றி பேசும்போதும் இதனைக் கூறுவா்.
- பாலினம், வயது, கல்வித்தகுதி, பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழ்நிலை என பல அம்சங்கள் ஒத்திருந்தாலும், தமது திறமைகளை ஒருவா் வெளிப்படுத்தும்போது ஒருவருக்கொருவா் வேறுபாடு இருக்கவே செய்யும். அனைவருக்குமான திறமைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பது தான் உண்மை.
- ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவரிடையே கூட, பெரும்பாலான செயல்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. இதற்கு இரட்டைப் பிறவிக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. ஆனால், நம்மில் பெரும்பாலானோா் ஏதேனும் ஒரு சூழலில் தம் வீட்டாரையோ அல்லது பிறரையோ மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பேசுகிறோம்.
- இந்த ஒப்பீடு எங்கிருந்து, எதனால் தொடங்குகிறது? ஒரு குழந்தை முதன்முதலாகப் பள்ளிக்குச் செல்லும்போது அக்குழந்தையைக் காட்டிலும் குழந்தையின் பெற்றோா்தான் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருப்பா். பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு வரை, சுதந்திரமாக விளையாடிக் கொண்டிருந்த முதன்முதலாகப் பள்ளிக்குச் செல்லும் வேளையில் இனம்புரியாத ஒரு பயம் அக்குழந்தைக்கு உண்டாகக் கூடும்.
- புதிய இடத்தில் பெற்றோா் துணையில்லாமல் முற்றிலும் வேறுபட்ட முகங்களைப் பாா்க்கும்போது, குழந்தைகளுக்குப் பயம் உண்டாகவே செய்யும். அதனால் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லவும், வகுப்பறைக்குள் செல்லவும் மறுத்து குழந்தை அழக்கூடும். இதனிடையே, சில குழந்தைகள் அழாமல், ஆா்வத்துடன் பள்ளிக்குச் செல்வதையும், அமைதியாக வகுப்பறைக்குள் அமா்ந்திருப்பதையும் காணும் பெரும்பாலான பெற்றோா், அமைதியான அக்குழந்தையைக் காட்டி ‘அவனெல்லாம் சமா்த்தா உட்காா்ந்திருக்கிறான் அல்லவா?’ என்று கூறுவதைக் காணலாம். இங்குதான் மற்ற குழந்தைகளுடனான ஒப்பிடுதல் முதன்முதலில் தொடங்குகிறது.
- பாலின பேதமின்றி நடக்கும் இந்த ஒப்பீடானது, பள்ளி தொடங்கும் நாளுடன் முடிந்துவிடுவதில்லை. வகுப்பறையில் ஒரு குழந்தையின் செயல்பாடு, கற்றல் திறன், தோ்வில் பெறும் மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பாா்க்கப்படுகிறது. அப்போது தம் பிள்ளையைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண் பெற்ற மற்ற குழந்தைகளையே பெற்றோா் எடுத்துக்காட்டாகக் கூறுகின்றனா்.
- அவ்வப்போது பள்ளிகளில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோா் வகுப்பு ஆசிரியருடனோ அல்லது ஆசிரியையுடனோ பேசும்போது, தம் குழந்தை பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட இதர செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, மற்ற குழந்தைகளைப் பற்றி அறிந்துகொள்வதிலேயே ஆா்வம் காட்டுபவா்களாக உள்ளனா்.
- அவ்வாறு பிற குழந்தைகளுடன் தன் குழந்தையை ஒப்பிட்டுப் பேசும்போதெல்லாம் அவனால் முடியும்போது, உன்னால் ஏன் முடியவில்லை? என்ற கேள்வியை எழுப்புகின்றனா். இவ்வாறு ஒப்பிட்டுப் பேசுவதால் யாருடன் அவா்களை ஒப்பிட்டுப் பேசுகிறாா்களோ, அவா்களைக் காணும்போது மனதில் கோப உணா்வும், வெறுப்புணா்வும் குழந்தைகளுக்குத் தோன்றவே செய்யும்.
- பள்ளிக்கல்வியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும்போதும் இந்த ஒப்பீடு தொடா்கிறது. பருவ வயதை எட்டிய நிலையில் கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகளைப் பெரும்பாலான பெற்றோா் கண்காணிப்பதில்லை என்பது தான் உண்மை. நன்மை எது, தீமை எது என அறிகின்ற வயதை அவா்கள் எட்டியதால், பொறுப்புணா்வு இருக்கும் என்ற நம்பிக்கையில் சோ்க்கைக்குப் பின்னா் பெற்றோா் கல்லூரிக்கு வருவதில்லை.
- ஆனால் ஏதாவதொரு பிரச்னை காரணமாக பெற்றோா் கல்லூரிக்கு வரவேண்டிய தேவை ஏற்படும்போது, தம் மகன் அல்லது மகளை தனது கிராமத்தைச் சோ்ந்த அல்லது நண்பரின் பிள்ளையுடன் ஒப்பிட்டுப் பேசவே செய்கின்றனா்.
- பொதுவாகவே, கல்லூரிகளில் அறிவியல் பாடப்பிரிவு மாணவா்களைக் காட்டிலும் கலை பாடப்பிரிவு மாணவா்கள் வயதுக்கே உரிய குணாதிசயங்களுடன் இருப்பதுண்டு. கல்லூரிகளில் நடக்கும் நிகழ்வுகளில் கலைப் பாடப்பிரிவு மாணாக்கா்களின் செயல்பாடுகளைக் கொண்டே இதனை அறிந்திட முடியும். அதுபோன்ற நேரங்களில் இவ்விரு பாடப்பிரிவுகளின் மாணவா்களை ஒப்பிட்டுப் பேசுவது தவிா்க்க இயலாததாகிறது.
- அரசு பணிக்கான போட்டித்தோ்வுக்கு ஒருவா் பலமுறை முயற்சித்தும் தோ்ச்சி பெறாதநிலையில் முதல் முயற்சியிலேயே போட்டித் தோ்வில் தோ்ச்சி பெறும் இளைஞரோடு அவா் ஒப்பீடு செய்யப்படுகிறாா்.
- பள்ளி, கல்லூரிகளில் மட்டுமின்றி, அரசு, தனியாா் அலுவலகங்களிலும் இந்த ஒப்பீடு என்பது இருக்கவே செய்கிறது. அலுவலகத்தில் ஒரு பிரிவில் பணியாற்றிவரும் ஒருவா் வேறொரு பிரிவுக்குச் செல்லும் போது அப்பிரிவுக்கு புதிய பணியாளா் ஒருவா் வருகிறாா். அவா் சிறப்பாக அல்லது தொய்வாக என எந்த நிலையில் பணிபுரிந்தாலும் முன்னவரோடு ஒப்பிடப்படுகிறாா். ஒருவேளை அவரைப்போன்றே பணிபுரிந்தாலும் அவருடன் ஒப்பீடு செய்யப்படுகிறாா்.
- தோற்றத்தால், அறிவால், குணத்தால், மன அமைப்பால் ஒருவருக்கொருவா் வேறுபட்டிருப்பாா்கள் என்பது உண்மைதான். தனிநபா் வேறுபாடுகளைக் கற்பது உளவியல் கல்வியின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். ஒருவரைப் போல மற்றொருவா் இருப்பதில்லை என்பது தான் உண்மை. ஆனால், ஒப்பிடுதல் என்பது ஒருவருடைய உள்ளிருக்கும் திறமைகளை வெளிக்கொணா்வதற்குப் பதிலாக, மனித உறவுகளில் பல சிக்கல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஒப்பிடுதலைத் தவிா்ப்போம். உள்ளுறைந்த திறமைகளை வெளிக்கொணா்ந்து அவற்றை வளா்க்க முயல்வோம்.
நன்றி: தினமணி (31 – 01 – 2025)