TNPSC Thervupettagam

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மத்திய - மாநில அரசுகள் மனது வைக்கட்டும்

January 26 , 2024 214 days 175 0
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘நீதிபதிகள் அரசமைப்புக்கும் சட்டத்துக்கும் உட்பட்டே நீதி வழங்குகிறார்கள்என்று கூறியிருக்கிறார். சட்டத்தின்படி தீர்ப்பு என்பது மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சி என்பதும் இதன் பொருள். இந்தப் பின்னணியில் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 263 குறித்து ஒரு பார்வை.

சட்டம் இயற்றுதல், நிர்வாகம் நடத்துதல், நீதி வழங்குதல்

  • இவைதான் மக்களுக்கான நல்லாட்சியைத் தாங்கும் மூன்று தூண்கள். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்தியிலும் மாநிலங்களிலும் அமைந்துள்ள ஆட்சிகளுக்கெனத் தனித்தனி அதிகாரங்கள்; சேர்ந்து செயல்படுத்தும் அதிகாரங்களும் உண்டு.
  • மாநில ஆட்சிகள் இதயம் போன்றவை என்றால், மத்திய ஆட்சி மூளையாக இருந்து உறுப்பு மாநிலங்களை இயங்கவைக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போதுதான் சீரான வளர்ச்சியை நாடு எட்ட முடியும். நமது ஆட்சிமுறையானதுகட்டமைப்பு ரீதியில் கூட்டாட்சி; உணர்வு ரீதியில் ஒற்றுமை’ (Federal in Structure, Unity in Spirit) என்பதைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு உணர்த்துகிறது.
  • உருவங்கள் பலவானாலும் உணர்வால் ஒன்றுபடுகிறோம். பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது, ‘டெல்லி மட்டுமே இந்தியா அல்லஎன்று சொன்னதை இப்போது நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

உயிரோட்டமுள்ள அரசமைப்புச் சட்டம்

  • வலுவான கட்டமைப்பை உருவாக்கத்தான் நம் முன்னோர்கள் பல கூறுகளை உள்ளடக்கிய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார்கள். அரசமைப்பு நிர்ணய அவையில் இடம்பெற்றிருந்த அறிஞர்களும் நிபுணர்களும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது, அடிப்படை உரிமைகளை அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்திலிருந்தும், நாடாளுமன்ற முறையை இங்கிலாந்திடமிருந்தும், சட்டம் இயற்றும் அதிகாரப் பகிர்வைக் கனடா அரசமைப்புச் சட்டத்திலிருந்தும், சட்டங்களின் தொடர்ச்சியாக ஆணைகள் பிறப்பிப்பதை அயர்லாந்து அரசமைப்புச் சட்டத்திலிருந்தும் பின்பற்றினர்.
  • முழு வடிவம் பெற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. அப்படி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் சில பிரிவுகள், நீக்கலுக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டு தற்போது 395 கூறுகளுடன் (பிரிவுகளுடன்) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மிகச் சிறந்த ஓர் உயிரோட்டமுள்ள அரசமைப்புச் சட்டமாகத் திகழ்கிறது.
  • ஆட்சியாளர்கள் உணர வேண்டியவை: ‘நிரந்தரமற்ற தன்மையே நிரந்தரமாக இருக்கிறது. மாறிக்கொண்டிருக்கும் இயல்பே மாறாமல் இருக்கிறதுஎன்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டமும் விதிவிலக்கல்ல. உலகக் குடியரசு நாடுகளிலேயே இன்று இந்தியா சிறந்து விளங்குவதற்குக் காரணம், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ (Unity in diversity) என்கிற அந்த நிலைப்பாடுதான்.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 395 கூறுகள் மற்றும் 12 அட்டவணைகள் அடங்கியிருக்கிறதென்றால், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும். அதன் ஒவ்வொரு பிரிவும் செயலாக்கம் பெற வேண்டும். செயல்பாட்டுக்கு வராத பிரிவுகள் துருப்பிடித்த இரும்பாக ஆகிவிடும்.
  • அரசமைப்புச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இதை உணர வேண்டும். உதாரணமாக, அரசமைப்புச் சட்டப் பிரிவு 263 மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பற்றியதாகும் (Coordination between states).
  • மாநிலங்களுக்கான உரிமைகள், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள், தேவைகள், கொள்கை மாற்றங்கள் ஆகியவை குறித்து விவாதித்து முடிவெடுக்கும் அதிகாரம்பெற்ற மாநிலங்கள் ஒருங்கிணைப்புக் குழுவை (Inter state council) அமைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இது கட்டாயமும்கூட (Mandatory). எப்படி சர்வதேசப் பிரச்சினைகள், இருவேறு நாடுகளுக்கான தகராறுகள், ஒட்டுமொத்த உலக மக்களுக்கான வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தல், தீர்வு காணுதல் போன்றவற்றுக்கு உலக நாடுகள் அங்கம் வகிக்கும் .நா. அவை செயல்படுகிறதோ அதுபோல, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 263 மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும். அரசமைப்புச் சட்டத்தில் அதற்கான வழிவகை இருந்தும், அது செயலாக்கம் பெறவில்லை என்பதுதான் இன்றைய நிலை.
  • இந்தக் குழு அமைக்கப்பட்டு, பிரதமர் தலைமையில் கூடி விவாதித்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். இதை நடைமுறைப்படுத்தாத காரணத்தால், பல பிரச்சினைகள் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றன. சில பிரச்சினைகள் மாநிலங்களுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படாமல் பேசுபொருளாகவே தொடர்கின்றன.
  • 16.07.2016 அன்று நடந்த கூட்டம்தான் அரசமைப்புச் சட்டப் பிரிவு 263 இன்படி கூட்டப்பட்ட மாநிலங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கடைசிக் கூட்டம் ஆகும். அதற்குப் பிறகு இந்தக் கூட்டம் கூட்டப்படவே இல்லை.

மாநிலங்களுக்கு உரிய பங்கு

  • இரண்டாவது முறையாகப் பிரதமராகத் தேர்வான பிறகு மின்சாரத் திருத்தச் சட்டம் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘மாநிலங்களுக்கு ஏற்பத் தீர்வு இருக்க வேண்டும்என்று மாநில உரிமைகளுக்கு, பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக, மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின் நிதிப் பகிர்வு, நதிநீர்ப் பிரச்சினைகள், மொழிப் பிரச்சினை போன்றவை மாநிலங்களுக்குத் தீராத பிரச்சினையாகவே இருந்துவருகின்றன.
  • மத்திய அரசின் கொள்கைப்படி, வழிகாட்டு நெறிமுறைகள்படி மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்கிற போர்க்குரல் சமீபகாலமாகப் பல மாநிலங்களிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. உதாரணமாக, பெட்ரோல், டீசல் இன்னும் சில இனங்கள் மீது மத்திய அரசு நேரடி வரிவிதிப்பைத் தவிர்த்துவிட்டுசெஸ்’ (மேல்வரி) விதிக்கும் முறையைக் கையாள்கிறது.
  • அதற்குக் காரணம், நேரடி வரியிலிருந்து மட்டுமே மாநிலங்களுக்குப் பங்கு உண்டு. ‘செஸ்வரி முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு மட்டுமே சென்றடைகிறது. மாநிலங்களுக்கு அதில் பங்கு கிடையாது. எனவே, விதிக்கப்படும் செஸ் வரியிலும் மாநிலங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

மத்திய அரசின் மெளனம்

  • மத்திய அரசு அமைத்திருக்கும், ‘நிதி ஆயோக்’, ‘நிதி ஆணையம்போன்ற அமைப்புகள் ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் வழிமுறைகளைத் தான் பின்பற்றுகின்றன. அதில் மாற்றம் தேவை என்பது மாநிலங்களின் கோரிக்கை. மத்திய அரசு மௌனம் சாதிப்பதற்குக் காரணம் அதிகாரக் குவிப்பு, நிதி அதிகாரம் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதும்; தங்களது கையைவிட்டு எதுவும் போய்விடக் கூடாது என்பதும்தான்.
  • இவற்றுக்கெல்லாம் தீர்வு காண மாநிலங்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டப்படுவது அவசியம். இக்கூட்டம் கூட்டப்படாமல் இருப்பதும், தவிர்க்கப்படுவதும், தள்ளிப்போடப்படுவதும் சிக்கலை மேலும் தீவிரமடையச் செய்வதாகவே அமையும். அப்படியே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டாலும், சம்பிரதாயத்துக்காக, சடங்குக்காகக் கூட்டப்படுவதாக இருந்துவிடக் கூடாது.
  • கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். அதுபோலவே, தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டமும் (National Development Council) முறைப்படி கூட்டப்படுவதில்லை. கடைசியாக 27.12.2012 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கான தேவைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, பாதியிலேயே பேச்சை முடிக்கும்படி மணி அடிக்கப்பட்டதால் தனக்கு முழுமையாகப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்பு செய்ததும் கவனிக்கத்தக்கது.
  • எனவே, சட்டப்படியான இக்கூட்டங்கள் முறைப்படி கூட்டப்பட்டால்தான் அறிவார்ந்த நம் முன்னோர்கள் அரசமைப்புச் சட்டத்தில் 263 போன்ற பிரிவுகளை இடம் பெறச் செய்ததன் நோக்கம் நிறைவேறும். மத்தியில் ஆளுகிற கட்சியின் ஆட்சியே மாநிலத்திலும் ஆளுகிறபோது வேண்டுமானால், ‘இரட்டை இன்ஜின் ஆட்சிஎன்ற கோணத்தில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்க அம்மாநில ஆட்சியாளர்கள் தயங்கலாம்.
  • ஆனால், மாநிலக் கட்சிகள் - குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களிலிருந்துகூட இக்கூட்டங்களைக் கூட்டக் குரல் கொடுக்கப்படுவதில்லையே ஏன்? இனியாவது மாநிலங்கள் விழித்துக்கொள்ளுமா? நல்லது நடந்தால் நாட்டு மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதுதானே!

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories