TNPSC Thervupettagam

ஒரு முடிவு - பல தாக்கங்கள்

September 30 , 2024 102 days 134 0

ஒரு முடிவு - பல தாக்கங்கள்

  • ‘‘பரவாயில்லை.இப்போதுதான் தங்கத்தின் விலை முதல் முறையாக சவரனுக்கு 3,000 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. இதே போக்கில் போனால், விலை மேலும் குறையலாம்” என்கிற எதிர்பார்ப்பில் இருந்த மக்களின் மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஜூலையில் குறைந்த தங்கத்தின் விலை, செப்டம்பர் மாதம் மீண்டும் உயர்ந்துவிட்டது.
  • இந்தியாவில் தங்கம் உற்பத்தி கிடையாது. பிப்ரவரி 2001-ல் கோலார் தங்க வயல் மூடப்பட்டதிலிருந்து மொத்த தேவைக்கும் இறக்குமதி மட்டும்தான். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 டன்கள் (8 லட்சம் கிலோ) இறக்குமதி ஆகிறது. 2023-24ல் மட்டும் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு (48.8 பில்லியன் டாலர்) இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது.
  • இறக்குமதிக்கு அமெரிக்க டாலரில் விலை வைப்பார்கள். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வரும் பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை செலுத்த வேண்டும். பிறகு, அவற்றை வியாபாரம் செய்யும்போது 3% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். அவையெல்லாம் விற்பனையாகும் தங்கத்தின் விலையில் சேரும்.
  • ஆக இப்படியாக (அ) சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை, (ஆ) அமெரிக்க டாலர் மதிப்பு, (இ) இறக்குமதி தீர்வை மற்றும் (ஈ) ஜிஎஸ்டி வரி விகிதங்கள் ஆகிய 4 காரணிகளால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இந்த நான்கில் எதில் மாற்றம் வந்தாலும் அது, இந்திய சந்தைகளில் வியாபாரமாகும் தங்க காசுகள், கட்டிகள், நகைகள், கோல்ட் ஈடிஎப், சாவரீன் கோல்ட் பாண்டுகள், கமாடிட்டி சந்தை தங்கம் என எல்லாவற்றிலும் தாக்கம் கொடுக்கும்.
  • கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.3,200 வரை இறங்கியதற்கு காரணம், மத்திய அரசு 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி தீர்வையை 15 % ல் இருந்து 6 % ஆக குறைத்தது. ஆக, அப்போதைய விலை இறக்கத்துக்கு (இ) காரணம். 2013-ம் ஆண்டுக்கு பின் செய்யப்பட்ட மிக அதிக குறைப்பு அது.
  • அதனால் உடனடியாக 22 காரட் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.353 வரை குறைந்தது. அதன் பின்னர் மேலும் சில நாட்களுக்கு தொடர்ந்து குறைந்தது. இறக்குமதி தீர்வை இன்னமும் அதே 6% தானே உள்ளது. இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பிலும் பெரிய மாற்றம் இல்லையே! தங்கத்தின் மீதான ஜிஎஸ்டிவரி அளவும் 3% ஆகத்தானே தொடர்கிறது!! ஆனாலும் ஏன் விலை உயர்கிறது?.
  • செப்டம்பர் 18-க்குப் பிறகான தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம், (அ) என்ற சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு. இந்திய அரசு விதிக்கிற இறக்குமதி தீர்வை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை அடிக்கடி மாறாது. ஆனால், மற்ற பொருட்களை போல தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தினசரி மாறிக்கொண்டுதான் இருக்கும்.
  • காரணம், தங்கம் என்பது ஆபரணத்துக்கான ஒரு பொருள் மட்டும் அல்ல. அதற்கு பல பயன்கள் இருக்கின்றன. தங்கத்தில் போடுகிற பணம் மதிப்பு குறையாது. காலப்போக்கில் உயரவே செய்யும் என்பதால் அதை ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், தற்காலிகமாக செல்வத்தை பாதுகாப்பாக வைக்கும் புகலிடமாகவும் (சேப் ஹெவன்) மற்றும் தங்களுடைய மற்ற முதலீடுகளின் மதிப்பு குறைவதை சரிகட்ட தங்கத்தில் செய்திருக்கும் முதலீடு உதவும் என்ற விதத்தில் அதை ஒரு ‘ஹெட்ஜிங் ப்ராடக்ட்’ ஆகவும் பெருமுதலீட்டாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
  • தங்கத்தின் ‘சேப் ஹெவன்’ தேவைகள் மற்றும் ’ஹெட்ஜிங்’ தேவைகள், உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் தடுமாற்றங்கள் ஏற்படுகிறபோது அதிகரிக்கும். அதனால் அதுபோன்ற நேரங்களில் தங்கத்தின் விலை வேகமாக உயரும். போர் தொடங்கினால், போரின் தீவிரம் அதிகரித்தால் தங்கம் விலை அதிகரிக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் ஏதாவது ஒரு இடத்தில் போர் நடந்து கொண்டே இருக்கிறது. ரஷ்யா - உக்ரைன்போர் முடியாத நிலையில், அடுத்து ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடர்வதுடன் அந்த சண்டை அடுத்து லெபனானுக்கும் பரவியிருக்கிறது.
  • வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள், அதற்கு பதிலடியாக ஜெர்மனி போர் கப்பல்கள் கடல் பகுதிக்கு வருதல் என உலகின் கிழக்குப் பகுதியிலும் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட செய்திகள் வரும் போதெல்லாம் தங்கத்தின் விலை உயரும். இவை தவிர தங்கத்துக்கும் வேறு சில முதலீட்டுப் பொருட்களின் விலை மதிப்புக்கும் இடையே நேர்மறை அல்லது எதிர்மறை தொடர்பு உண்டு. உதாரணத்துக்கு, அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை கூடும். வட்டி தரும் பாண்டுகளின் மதிப்பு குறைந்தாலும் தங்கம் விலை அதிகரிக்கும்.

பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு:

  • இப்போது தங்கம் விலை உயர்ந்திருப்பதற்கு காரணம் அப்படிப்பட்ட ஒன்றுதான். அது, செப்டம்பர் 18-ம் தேதி அமெரிக்க பெடரல் ரிசர்வ் (மத்திய வங்கி) வட்டி விகிதத்தை அரை (0.5%) சதவீதம் குறைத்தது. கரோனா பெருந்தொற்று சிரமங்கள் காரணமாக அமெரிக்க அரசு, பெரிய அளவில் உதவித்தொகை கொடுத்தது. ஊரடங்குகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உதவித்தொகை காரணமாக பொருட்கள் வாங்குதல் குறையாமல் இருந்தது. அந்த நிலை தொடர்ந்ததால், 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜூலை 2022-ல் அமெரிக்காவின் பணவீக்கம் 9.1% ஆக அதிகரித்தது.
  • பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பெடரல் ரிசர்வ் பல முறை வட்டி விகிதங்களை உயர்த்தி, 2023 ஆகஸ்டில் 5.25% முதல் 5.50 % என்கிற உச்சத்துக்கு கொண்டு போனது. 14 மாதங்களுக்கு அந்த அளவிலேயே வைத்திருந்தது. அதனால் பணவீக்கம் குறைந்து, 2024 ஆகஸ்ட் மாதம் 2.5 % என்ற அளவுக்கு இறங்கிவிட்டது.
  • அதேநேரம், உயர் வட்டி விகிதம் மக்களின் வேலை வாய்ப்புகளை பாதிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்துகொண்ட பெடரல் ரிசர்வ், செப்டம்பர் மாதம் நடந்த அதன் பெடரல் ஓப்பன் மார்கெட் குழு (The Fed - Federal Open Market Committee- FOMC) கூட்டத்தில் 12 உறுப்பினர்களுக்கு 11 பேர் ஆதரவு என்ற அடிப்படையில் ஒரு தவணையிலேயே அரை சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது.
  • ¼ சதவீதமா அரை சதவீதமா என்று உறுதியாக தெரியாமல் இருந்த சந்தைகள், ½ சதவீதம் என்று தெரிந்தவுடன் உடனடியாக மறுவினையாற்றின. அதன் ஒரு பகுதிதான் தங்கத்தின் விலை உயர்வு. மற்றொரு விளைவு, பங்கு விலைகள் அதிகரிப்பு. இன்னுமொரு மறுவினை கச்சா எண்ணை விலை இறக்கம்.
  • ஆம். பெடரல் எடுத்த ஒரு முடிவால் உலகில் பல நாடுகளிலும், பல சந்தைகளிலும் விலை மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதற்கு காரணம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெட்ரல் ரிசர்வ் முதல் முறையாக வட்டியை குறைத்திருக்கிறது. இதுமட்டுமல்ல. இந்த வட்டி குறைப்பு இதோடு நின்று விடாது; இது குறைப்பு நடவடிக்கைகளின் ஆரம்பம் என்றும் சொல்லப்படுகிறது.
  • வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் அடுத்த FOMC கூட்டத்தில் மற்றொரு ½ % . அடுத்து, 2025 மற்றும் 26-ம் ஆண்டுகளில் மேலும் சில குறைப்பு நடவடிக்கைகள் செய்து, 2026-ம் ஆண்டு இறுதியில், வட்டி விகிதத்தை, பணவீக்க சதவீதமான 2.75% அருகில் கொண்டுவந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்யும்பட்சத்தில் டாலர் மதிப்பு குறையும். இதனால் மீண்டும் தங்கம் விலை உயரும்.

இந்திய ரூபாய் வலுப்பெறும்:

  • அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படிருப்பதால் வளரும் பொருளாதார நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடு தேடி வரும். அதனால் இந்தியபங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் பெறலாம். அல்லது ஏற்கெனவே பங்கு விலைகள் இந்தியாவில் அதிகம் உயர்ந்துவிட்டதால், வரும் பணம் இந்திய பாண்டுகளில்தான் (டெப்ட் மார்கெட்) முதலீடு செய்யப்படும் என்றும் யூகிக்கப்படுகிறது. பங்குச் சந்தையோ பாண்ட் மார்க்கெட்டோ எதற்கு அந்நிய செலாவணி வந்தாலும் இந்திய ரூபாய் வலுப்பெறும். டாலர் விலை குறையும்.

இந்தியாவில் வட்டி குறையுமா?

  • அடுத்து, அமெரிக்க பெடரல் ரிசர்வைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) குறைக்கலாம் என்கிற ஊகங்களும் சந்தையில் உலவுகின்றன. அப்படி குறைக்கும் பட்சத்தில் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு குறையும் வட்டிக்கு ஏற்ப இ.எம்.ஐ. சுமை குறையும். அதேநேரம் பணத்தை வைப்புத் தொகையாக (டிப்பாசிட்) முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும் வட்டியும் குறைக்கப்படும்.
  • அப்படி டெபாசிட்களுக்கான வட்டி குறைந்தால், ஏற்கெனவே போதிய அளவு டெபாசிட்கள் வரவில்லை என்று சிரமப்படுகிற வங்கிகளுக்கு கிடைக்கும் டெபாசிட்கள் இன்னும் குறையும். மொத்தத்தில், அமெரிக்க வட்டி விகிதம் எதிர்பார்க்கப்படுவது போல மேலும் குறைக்கப்பட்டால், அது, நம் நாட்டில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கவும்; இப்போதோ, சற்றுத் தள்ளியோ, ரெப்போ வட்டி விகிதம் குறைவதற்கும் வழி ஏற்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories