ஒரு மொழியை வெறுக்கலாமா?
- பலரும் நினைப்பதுபோல் எனக்கு ஆங்கிலத் தோடு எந்தப் பகையும் இல்லை. அப்படியானால் ஆங்கிலத்தில் இனி எழுத மாட்டேன். என் தாய்மொழியில்தான் எழுதுவேன் என்று ஏன் அறிவித்தாய் ‘கூகி வா தியாங்கோ’ என்று கேட்பவர்களுக்காகவே இந்த விளக்கம். அமைதியாகப் படியுங்கள். நான் ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்பது உங்களுக்கே புரியும்.
- கென்யாவில் உள்ள எல்லாக் குழந்தைகளையும்போல் நானும் பள்ளியில் முதன்மையாக ஆங்கிலமே கற்றேன். ஆங்கிலக் கதைகள் படித்து வளர்ந்தேன். ஆங்கிலத்தில் பேசினேன். ஆங்கிலத்தில் சிந்தித்தேன். ஆங்கிலத்தில் தேர்வு எழுதினேன். வானொலியில் ஆங்கில இசை.
- செய்தித்தாளில் ஆங்கிலச் செய்திகள். நூலகம் முழுக்க ஆங்கில நூல்கள். எனக்கு என்ன உணவு பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆங்கில உணவு. உடை? ஆங்கில உடை. ஆங்கிலத்தைக் கரைத்துக் குடித்தவன் என்பதில் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை இருந்தது.
- ஆங்கில இலக்கியத்தில்தான் பட்டம் பெற்றேன். கதை எழுத வேண்டும் என்று அல்ல. ஆங்கிலத்தில் கதை எழுத வேண்டும் என்றுதான் கனவு கண்டேன். மேஜை முன்பு அமர்ந்து காகிதத்தை எடுத்து வைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தபோது, ஆங்கிலத்தில்தான் எழுதிச் சென்றது என் பேனா.
- ‘ஆகா, என்ன ஒரு கதை! என்ன ஒரு நடை!’ என்று பலரும் போற்றியபோது வானில் மிதக்க ஆரம்பித்தேன். இனி நான் உலகம் அறிந்த, உலகம் கொண்டாடும் ஓர் எழுத்தாளன். இந்தப் பெருமைக்குக் காரணமான ஆங்கிலமே, உனக்கு என் நன்றி என்று சிலிர்த்துக்கொண்டேன். ஆங்கிலம் என்னை உறக்கத்தில் ஆழ்த்தியதோடு இனிமையான பல கனவுகளை அடுக்கடுக்காக வழங்கிக்கொண்டே இருந்தது. நல்ல குளிரில் கனமான கம்பளிக்குள் சுருண்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஆங்கிலத்தின் மடியில் மயங்கிக் கிடந்தேன்.
- ஒருநாள் என் மயக்கம் கலைந்தது. சுட்டெரிக்கும் வெயில் கீற்று ஒன்று என் போர்வைக்குள் ஊருடுவி வந்து சுள்ளென்று என் உடலில் பாய்ந்தது. மெல்ல, மெல்ல சூடு பரவத் தொடங்கியது. போதும் ஒரு கணம்கூட உன்னைத் தாங்க மாட்டேன் என்று என் உடல் கம்பளியை உதறித் தள்ளியது. எழுந்து அமர்ந்தேன். அதன்பின் நான் உறங்கவில்லை. அதன்பின் எந்தக் கனவும் எனக்குத் தோன்றவில்லை.
- ஒரு குழந்தை முதல் முதலாகத் தன் கண்களைப் பிரித்து உலகைக் காண்பது போல் அனைத்தையும் புதிதாகக் காணத் தொடங்கினேன். அது என்ன, இது என்ன என்று ஒரு குழந்தைபோல் கேள்விகள் எழுப்பத் தொடங்கினேன். ஆங்கிலம் எப்படி என் நாட்டுக்கு வந்தது? எப்படி என் வகுப்பறையை ஆக்கிரமித்துக் கொண்டது? அரசியல் முதல் அறிவியல் வரை எல்லாமே ஏன் ஆங்கிலத்தில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன? ஆங்கிலம் எப்படி என் வானொலிக்குள் புகுந்தது? எப்படி என் செய்தித்தாளுக்குள் நுழைந்தது? இலக்கியம் என்றால் ஆங்கில இலக்கியம்.
- கதை என்றால் ஆங்கிலக் கதை. கவிதை என்றால் ஆங்கிலக் கவிதை எனும் நிலை ஏன் ஏற்பட்டது? என் உடையும் ஆடையும் நடையும் பாவமும் ஏன் மாறின? என் பேனா ஏன் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு செல்கிறது? என் நாக்கு ஏன் ஆங்கிலத்தை நாடுகிறது? என் இதயத்துக்குள்ளும் அந்த மொழி புகுந்துகொண்டுவிட்டதா? என் உயிருக்குள்ளும் அது ஒளிந்து கொண்டுவிட்டதா? ஆங்கிலம் மூலம்தானே உலகைத் தெரிந்து கொண்டாய்? அதுதானே உன்னைப் படிக்க வைத்தது? அதுதானே உன்னை எழுத்தாளன் ஆக்கியது? அது உனக்கு நல்லதுதானே செய்திருக்கிறது என்று நீங்கள் கேட்லாம். இல்லை.
- கென்யாவில் வாழ்ந்துகொண்டு ஆங்கிலம் மூலம் நான் கற்றுக் கொண்டது ஆங்கில உலகையே. ஆங்கில வரலாற்றை. ஆங்கில மக்களின் சமூகத்தை. ஆங்கிலப் போர்களை. ஆங்கிலப் பண்பாட்டை. நானும் ஒரு மொழி. என்னையும் நீ படி என்று ஒரு புதிய உலகுக்கு என்னை ஆசையோடு வரவேற்கவில்லை ஆங்கிலம். நான்தான் இனி உன் மொழி. நான்தான் இனி உன் உலகம். என்னை மட்டுமே படி என்று என்மீது வந்து படர்ந்துவிட்டது ஆங்கிலம். நானும் எல்லாரையும்போல் அதன் ஆக்டோபஸ் பிடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்டேன்.
- விடுபட்ட அடுத்த கணமே ஓடோடிச் சென்று என் தாய்மொழியான கிகுயூவைக் கட்டி அணைத்துக்கொண்டேன். என்னை மன்னித்து விடு கிகுயூ. ஆங்கிலம்தான் உயர்ந்தது. அதுதான் உலக மொழி. அதில்தான் இலக்கியம் வாழ்கிறது. அதுதான் என்னை உயர்த்துகிறது என்று தவறாக நினைத்துவிட்டேன். என்னை மட்டும் படி என்று வலியுறுத்தும் எந்த மொழியும் எனக்குத் தேவையில்லை. நான் கற்ற அனைத்தையும் இந்தக் கணமே துறக்கிறேன்.
- இனி உன்னைவிட்டு ஒரு கணமும் அகலமாட்டேன். என் குழந்தைகள் கற்க வரும்போது அவர்கள் வகுப்பறையில் கிகுயூதான் இருக்க வேண்டும். அவர்கள் புத்தகங்களில், அவர்கள் வானொலியில், அவர்கள் தொலைக்காட்சியில், அவர்கள் நூலகங்களில், அவர்கள் செய்தித் தாள்களில் கிகுயூதான் நிறைந்திருக்க வேண்டும். கிகுயூவில்தான் அவர்கள் பேச வேண்டும், எழுத வேண்டும், சிந்திக்க வேண்டும்.
- நான் ஒரு கென்யன். நான் கோடி கதைகள் எழுதினாலும் இறுதிவரை ஓர் ஆங்கிலேயனாக மாற முடியாது. மாறவும் வேண்டியதில்லை. என்னையும் என் தேசத்தையும் ஆளும் ஓர் அந்நிய மொழியில் எழுதுவதன்மூலம் கிடைக்கும் பெயர், புகழ் எதுவும் வேண்டாம் எனக்கு.
- ஒரே ஒரு கதை. கிகுயூவில் என்னால் எழுத முடிந்தால், அதுவே என் வாழ்நாளுக்குப் போதும். ஒரே ஒரு கதை. அதில் கென்யா வாழும் என்றால் அந்த மகிழ்ச்சி போதும் எனக்கு. ஒரே ஒரு கதை. அது என்னை ஒரு கிகுயூ எழுத்தாளனாக மாற்றும் என்றால், அதற்கு மேல் எதுவும் வேண்டாம் எனக்கு!
- உணவைப் போலவே கதைகளும் அவசரமாக எழுதினால் சுவையை இழந்துவிடும். கூகி வா தியாங்கோ, கென்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2025)