TNPSC Thervupettagam

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

October 22 , 2024 87 days 74 0

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

  • ஒரு விமான நிறுவனத்தின் விமானத்துக்கு விளையாட்டாகவோ, வேறு உள்நோக்கத்துடனோ வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம்.
  • இதுவே கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் போல என்றால் நஷ்டம் ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரையாகிறது என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.
  • அண்மையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பது தலைப்புச்செய்தியாகி, தங்கம் விலை போல நாள்தோறும் எத்தனை மிரட்டல்கள் என்பது முக்கிய செய்தியாக மாறியிருக்கும் நிலையில், ஒரே ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் விமான நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி நஷ்டம் ஏற்படும் என்பது அதிர்ச்சித் தகவலாக வந்துள்ளது.
  • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், விமானம் தரையிறக்கப்பட்டு, அதில் சோதனை செய்யப்பட்டு மீண்டும் விமானம் புறப்படுவதால் எப்படி ரூ.3 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்ற கேள்வி எழலாம்.
  • ஆனால், அதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்தால்தான்.. உண்மையிலேயே ஒரு வெடிகுண்டு மிரட்டலுக்குப் பின்னாலிருக்கும் மிகப்பெரிய பிரச்னையை நம்மால் உணர முடியலாம்.
  • உதாரணமாக இடைநில்லாமல், வெகுதொலைவு பயணிக்கும் சர்வதேச விமானம் ஒன்று புறப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட 130 டன் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. அந்த விமானம் உடனடியாக அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க அறிவுறுத்தப்படுகிறது. இதனால், விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் அது தரையிறங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
  • ஆனால், அவ்வாறு தரையிறங்க முடியாது.. அதில் சிக்கல் உள்ளது. ஒரு பெரிய போயிங் விமானத்தின் தரையிறங்கும் எடை என நிர்ணயிக்கப்பட்டிருப்பது 250 டன்கள். ஆனால், புறப்பட்ட விமானத்தில் இருக்கும் பயணிகள், உடைமைகள், சரக்குகள், எரிபொருள் என கிட்டத்தட்ட 340 முதல் 350 டன் எடையுடன் இருக்கும். இதில் எந்த எடையைக் குறைக்க முடியும்.. ஒன்றே ஒன்றைத்தான்.. எரிபொருள்.. உடனடியாக விமானத்திலிருந்து 100 டன் எரிபொருளை வெளியேற்ற வேண்டும். ஒரு டன் எரிபொருள் விலை ரூ.1 லட்சம். எனவே, விமானத்திலிருந்து வெளியேற்றப்படும் எரிபொருளால் ஏற்படும் நஷ்டம் மட்டும் ரூ.1 கோடி என்கிறார்கள் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள்.
  • இதனுடன் பல எதிர்பாராத செலவுகளும் சேர்ந்துகொள்ளும், உதாரணமாக ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க ஆகும் செலவு, விமானம் தரையிறங்கிய நகரில் உள்ள விடுதியில் பயணிகள், விமான ஊழியர்களை தங்க வைக்கும் செலவு, இதனால், அடுத்த விமானத்தை பயணிகள் தவறவிட நேர்ந்தால் அதற்கான இழப்பீடு, இறக்கப்பட்ட விமானத்தை சோதனை செய்து, மீண்டும் அதனை தயார்நிலைக்குக் கொண்டு வந்து, அதனை இயக்குவதற்கான விமானிகளை தயார் படுத்துவது போன்ற செலவுகளும் அடங்கும்.
  • ஒரு விமானம் உரிய நேரத்தில், உரிய விமான நிலையத்துக்குச் செல்லாமல் போனால், அந்த விமானம், அந்த விமான நிலையத்திலிருந்து அடுத்த வழித்தடத்தில் மீண்டும் இயக்குவதற்கான வாய்ப்பை இழக்கிறது. இதனால், அந்த விமானத்தில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கும் இழப்பீடு அல்லது மாற்று விமானத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இவை ஒட்டுமொத்தமாக சேர்ந்து, ஒரு வெடிகுண்டு மிரட்டலின் விலையை ரூ.3 கோடியாக ஆக்கிவிடுகிறது.
  • இப்படியென்றால், சனிக்கிழமை ஒட்டுமொத்தமாக 30 விமானங்களுக்கும், ஞாயிறன்று 25 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது என்றால், விமான நிறுவனங்கள் சந்தித்திருக்கும் நஷ்டம் எத்தனை கோடிகள் என்று கணக்கிட்டால்.. நிச்சயம் துல்லியமாகக் கணக்கிட முடியாது, தோராயமாகக் கணக்கிட்டால் ஒரு விமான நிறுவனத்துக்கு ரூ.50 முதல் 80 கோடி என சொல்கிறது கால்குலேட்டர்.

ரூ.3 கோடி என்பது சாதாரண நிகழ்வு.. அதுவே..

  • இதெல்லாம் மிகப்பெரிய நகரங்களில் விமானங்களை அவசரமாக தரையிறக்கும்போதுதான். இதுவே, பெரிய அளவில் வளர்ச்சியடையாத நகரங்களில் இருக்கும் விமான நிலையங்கள் என்றால் நிலைமை சற்று கவலைக்கிடம்தான். உதாரணமாக தில்லியிலிருந்து சிகாகோ செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானம் 200 பயணிகளுடன் கனடாவின் இகுவாலூயிட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்த பல மணி நேரத்துக்குப் பிறகு, கனடாவின் விமானப் படை விமானம் மூலம் பயணிகள் சிகாகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • இதற்கான கட்டணத்தை ஏர் இந்தியா கனடா விமானப் படைக்குச் செலுத்த வேண்டும். வெடிகுண்டு மிரட்டலால் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம், மூன்றரை நாள்களுக்குப் பிறகு சிகாகோவிலிருந்து பயணிகள் இல்லாமல் காலி விமானமாக சிகாகோ சென்று, அங்கிருந்து மீண்டும் பயணிகளுடன் தில்லி திரும்புகிறது. இதனால், சுமார் 4 நாள்கள் விமானம் ஒன்று இயக்கப்படாமல் இருப்பதற்கான செலவு மற்றும் அது ஒரு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதற்கான வாடகை என அனைத்தையும் ஏர் இந்தியா செலுத்த வேண்டும்.
  • ஒரு போயிங் வகை விமானத்தின் மாத வாடகை என்பது 4 லட்சம் டாலர் (ரூ.3.36 கோடி) முதல் 6 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 5.04 கோடி ரூபாய்). அப்படியென்றால், ஒரு நாள் வாடகை 17 ஆயிரம் டாலர்கள் (ரூ.14.29 லட்சம்). ஒரு நாள் ஒரு விமானம் இயக்கப்படாமல் தரையில் நின்றிருந்தால், சுமார் ரூ. 15 லட்சம் நஷ்டம்.
  • ஒருவேளை, இந்த விமானம் திட்டமிட்டபடி சிகாகோ சென்றிருந்தால், சில மணி நேரங்களில் பயணிகளுடன் தில்லி வந்திருக்கும். ஆனால், பயணிகள் இகுவாலூயிட்டில் இறக்கப்பட்டனர். அங்கு எந்த வசதியும் இல்லை. அடிப்படை வசதிகள் எல்லாமே தொலை தூரத்திலிருந்து வரவழைத்துக் கொடுக்கப்படவேண்டும். இதில், கனடா விமானப் படை விமானங்கள் வேறு பயன்படுத்தப்பட்டதால், இந்த ஒரே ஒரு வெடிகுண்டு மிரட்டலுக்கான விலை ரூ.15 முதல் 20 கோடி என்கிறது தரவுகள்.

விமான நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதல்

  • ஏற்கனவே கரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதாரத்தில் அடிவாங்கிய விமான நிறுவனங்கள் இப்போதுதான் மீண்டும் எழுந்து நிற்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த வெடிகுண்டுமிரட்டல் சம்பவங்கள், நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
  • முன்பெல்லாம் எப்போதோ ஒரு முறை மிரட்டல் விடுக்கப்படும். அப்போதும் கூட அவசர தரையிறக்கம் நடக்காது, எங்கு இறங்க வேண்டுமோ, அந்த விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை செய்யப்படும். ஆனால், அற்போது அவசர தரையிறக்கம் மற்றும் எரிபொருள் வீணாவது போன்றவை நிலைமையை மோசமாக்கியுள்ளன.
  • ஒரு விமானத்தை எரிபொருளை காலி செய்வதற்காக வானத்தில் வட்டமிட வைப்பதால், அதே விமானியைக் கொண்டு மீண்டும் விமானத்தை இயக்க முடியாமல் போகிறது. அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானங்களைப் பிடிக்க முடியாமல் போன பயணிகள் நீதிமன்றம் வரை சென்று இழப்பீடு கோருவார்கள். அவர்களது நஷ்டத்தையும் நாங்கள்தான் ஈடுகட்ட வேண்டும் என்கிறார்கள் விமான நிறுவன ஊழியர்கள்.

துயரத்திலும் துயரம் இதுதான்!

  • ஒரு விமானத்தை குறிப்பாக குறிப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டால், அதுவும் புறப்பட்ட சில நிமிடங்களில் என்றால், அது அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிக்கப்படும். ஆனால், புறப்பட்ட விமானத்தின் எடை, தரையிறங்க ஏதுவாக இல்லாதபோது.. (எப்போதும் இருக்காது) அதன் எரிபொருளை வெளியேற்ற வேண்டியது வரும். அதற்காக விமானத்தை வானில் வட்டமடிக்க வைத்தாலும், அவ்வளவு விரைவாக குறைக்க முடியாதபோது, விமானத்தை தரையிலிருந்து 5,000 அடியில் பறக்கவிட்டு, எரிபொருளை டேங்கை தொழில்நுட்பத்தின் மூலம் திறந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த உயரத்திலிருந்து எரிபொருளை வெளியேற்றினால், விமான எரிபொருள் ஆவியாகிவிடும். ஆனால் இதனைக் குறிப்பிட்ட இடத்தில்தான் செய்ய முடியும். தில்லி என்றால் தலைநகருக்கு அருகே உள்ள சக்ராஸ் என்ற இடத்திலும், மும்பை என்றால் கடல்பரப்பிலும் இதனை செய்யலாம் என்கிறது விமான நிலையத்திலிருந்து வரும் தகவலறிந்த வட்டாரங்கள்.
  • வெடிகுண்டு மிரட்டல்களிலேயே இரண்டு வகை இருக்கிறதாம். குறிப்பிட்டு இந்த விமான நிறுவனத்தின், இந்த விமானத்துக்கு என்று வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் ஒருவகை. மற்றொன்று, விமான நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு மட்டும் வரும் மிரட்டல்கள் என்கிறார்கள் ஊழியர்கள்.
  • முதலில், மிரட்டல் குறித்து விசாரிக்ப்படும். அதன் அடிப்படையில் அது மிக மோசமான மிரட்டல், கவலைக்கிடமானது என வகைப் பிரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த வகையிலும் ஒரு மிரட்டல் நிராகரிக்கப்படுவதில்லை, அதனால் பண இழப்பு,. பயணிகளின் உச்சபட்ச அதிருப்தியை எதிர்கொண்டு அவர்களிடம் மன்னிப்புக் கேட்பது போன்றவற்றைத்தான் செய்கிறோம், ஏன் என்றால்.. எல்லாவற்றையும் விட பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம் என்கின்றன விமான நிறுவனங்கள் ஒருமித்தக் குரலில்.

நன்றி: தினமணி (21 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories