TNPSC Thervupettagam

ஒரே கவிதை, ஏழாண்டுகள் சிறை!

October 27 , 2024 76 days 182 0

ஒரே கவிதை, ஏழாண்டுகள் சிறை!

  • உலக வல்லரசு நாடுகள் ஒன்றின் தலைநகர் அது. பன்னிரண்டு மில்லியனுக்கு மேல் (1.2 கோடி)  மக்கள் வாழும், அப்பெருநகரில் அண்மைக்காலங்களில் ஆண்களின் நடமாட்டம் - ‘அறம் கைக்கொண்ட’ அரசியல்வாதியைக் காண்பதுபோல - அரிதாகிவருகிறது. ‘’இந்நகர் இப்போது பெண்களின் நகராகி விட்டது போலும்’’ என்கிறார் தன் தொழில் காரணமாக வழக்கமாக அந்நகரை வலம் வருகின்ற 33 வயதான புகைப்படக் கலைஞர் ஸ்தனிஸ்லாவா (அவரும் பெண்தான்).
  • பெருநகரில் ஆண்கள் முடிதிருத்திக்கொள்ளும் புகழ்பெற்ற சிகைதிருத்தும் நிலையங்கள் யாவும்  வெறிச்சோடி நிற்கின்றன. நான்கைந்துக்கு அதிகமாகவும்  ‘சலூன் நாற்காலிகள்’ கொண்ட நவநாகரிக ‘சலூன்’களில்கூடத் தற்போது ஒரு நாற்காலிக்கு வாடிக்கையாளர் வருவதே அபூர்வமாகியிருக்கிறது. இனிப் பெண்களுக்கும் அலங்காரம் செய்யும் வண்ணம் தம் சலூன்களை மாற்றியமைத்தால்தான் பிழைக்க முடியும் என்று சலூன் உரிமையாளர்கள் கருதத் தொடங்கியுள்ளார்கள்.
  • உணவகங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், மால்கள், கடைத்தெருக்கள், விருந்து நிகழ்வுகள், சமூகக் கூட்டங்கள் முதலியவற்றிலும் ஆண்கள் தலைகாண்பதரிது எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, வழக்கமாக, ‘ஆர்வ ஆண்கள்’ கூட்டம் காணப்படும் ‘டேட்டிங் செயலி’யில் (Dating App) கூட, ஆண்களின் சமீபகாலப் பதிவுகள் (Male Registration in the App) ஐம்பது விழுக்காட்டுக்குமேல் சரிந்துவிட்டதாம்! 
  • இந்நகரின் ஆண்களெல்லாம் என்னவானார்கள்?
  • வாரம், மாதம், ஆண்டு எனும் காலண்டர் கணக்குகள் கடந்து அதிஅநாவசியமாக அண்டை நாட்டுடன்  நடைபெற்றுக் கொண்டிருக்கும்  போருக்காக "பகுதி அணிதிரட்டல்" (partial mobilization / temporary recruitment to the army) திட்டத்தில்  2,20,000 ஆண்கள், டிசம்பர் 2023 நிலவரப்படி-  கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் தெரிவித்திருக்கிறார். ஆண்கள் நகர்நீங்கு படலத்திற்கு அதுவே முதன்மைக் காரணம்.
  • ஆண்களுக்குள்ளே பொதுவாக எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் மற்ற பலர் சிறைவாசம் அல்லது அடக்குமுறைக்கு அஞ்சி அகன்றோடிவிட்டனர். பிற நடுநிலையாளர்களில் பலரும் ‘இந்தத் தொல்லை முடியும் வரை எங்காவது ஓடிவிடுவோம்’ என்று, தத்தமது குடும்பங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு பெருங்கூட்டமாகப்  பறந்துவிட்டனர். இவ்வாறு பறந்த ஆண்களின் எண்ணிக்கை மட்டுமே, (டிசம்பர் 2023 நிலவரம்)  இரண்டு லட்சம் வரை இருக்குமெனச் சொல்லப்படுகிறது.
  • நகர் நீங்கியதில் பெரும்பான்மையினர்  விசா தேவைப்படாத பக்கத்து நாட்டிற்கும் (கஜகஸ்தான்), ஆயிரக்கணக்கினர் வேறு சில நாடுகளுக்கும் (ஜார்ஜியா, ஆர்மேனியா, அஜர்பைஜான், இஸ்ரேல், ஆர்ஜென்டீனா, மேற்கு ஐரோப்பிய நாடுகள்) முன்கூட்டியே பறந்துவிட்டனர். நகரில் மீதி இருக்கும் – அற்ப, சொற்ப - ஆண்களில் பெரும்பான்மையினர் வெளியில் தலைகாட்டுவதைக் கூடியவரை தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே (‘பெட்டிப் பாம்பாக’?) முடங்கிக் கிடக்கின்றனர். ஏன்?
  • வெளியில் தலைகாட்டினால் (மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையம், பார்லர்கள், மால்கள், பிற சந்தடியான இடங்களில்) ‘கொக்கொக்க’க் காத்து நிற்கும் ‘ஆள்பிடிப்பாளர்கள்’ கண்வலைப்பட்டால், ‘போவஸ்ட்கா’ (povestka )  நோட்டீஸை - அதாவது  அந்நாட்டு இராணுவத்தில் வந்து இணைத்துக்கொள்ள (இறந்து கொள்ள!) ‘அழைப்பு’ – நீட்டிவிடுவார்கள், தப்ப முடியாது. இன்னும் ஒரு தொகுதி ஆண்கள் - தவிர்க்கவே முடியாமல், இந்நகரிலேதான் இருந்தாக வேண்டும், மேலும் வெளியிலும் சென்றுவரவேண்டிய அவசியத்திலும் உள்ளவர்கள்- (குற்றவாளிகளைப் போல) நேரடியான முதன்மைச் சாலைகளைத் தவிர்த்துத் தினமும் ‘புதியன புகுந்து’ (புதிய, புதிய வழிகளில்) குறுகலான தெருக்கள் கடந்து வேலைகளை முடித்து வீடு திரும்பி வருவதால், பொதுவாக வழக்கமான ஆண்கள் காணப்படும் இடங்களில் அவர்கள் தட்டுப்படுவதில்லையாம்!
  • இத்தகைய சூழல்களில், ஆண்களால் இந்நகரிலேயே இருக்கும்படி விட்டுச்செல்லப்பட்டுள்ள பெண்களுக்குப் படுஎரிச்சலூட்டக் கூடிய செய்தி ஒன்றை நியூயார்க் டைம்ஸ் இதழின் (29, டிசம்பர் 2023) ஆய்வு தெரிவித்துள்ளது. அது யாதெனின், ‘’பொருந்து நன்மனைக்குரிய பூவை’’களைப் பிரிந்து, இந்நகரை- நாட்டைவிட்டு எந்தெந்த நாடுகளுக்கு, நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையில் இந்நகரத்து ஆண்கள் சென்றுள்ளார்களோ, அங்கெல்லாம் ‘டேட்டிங் ஆப்ஸ்’களில் புதிதாகச் சேர்ந்த ஆண்களின் எண்ணிக்கை சதவீதம் அதிகரித்துள்ளதென்பதே செய்தி. (‘வரட்டும், வச்சுக்கிறேன்’ என்று இந்நகர்ப் பெண்கள் பற்களை நறநறப்பது பக்கத்து நாடுகளுக்கே கேட்கும்தானே?)
  • சரி, முதன்மைக் காரியத்துக்கு வருவோம்.
  • எல்லாக் காலங்களிலும் உலகின் எங்கோ ஓரிடத்தில் அளவிலா அழிவு விளைவிக்கும் போர்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீரின்றி உலகமையாது என்பதற்கிணையாகப் போரிலா உலகம் இல்லை என்பதும் நிதர்சனமாகியிருப்பது அவலம்தான். பிறப்பும் இறப்பும் போலப், போரும்  (பின் எப்போதாவது) அமைதியும் வாழ்க்கையின் இயற்கையாகிப் போயிருக்கிறது.  இத்தகைய உலக வழக்கை நன்கறிந்த இடைக்குன்றூர் கிழார் (புறம் 76)  ‘’ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை’’  என பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே நமக்குச் சொல்லிச் சென்றுள்ளார். எப்போதும் எங்கும், போர்கள் அழிவின் அசுரத்தனம்; அப்பாவி உயிர்கள் சுருட்டும் தீக்கரம் என்பதே உணரப்பட்டிருக்கும் உண்மை. அது அணையாத் தீயாய் நின்றெரிக்கிறது இன்றும். அதுவும், அண்மை நூற்றாண்டில் நிகழ்ந்த உக்கிரமான இரண்டு உலகப்போர்கள் விளைவித்த அழிவுகளின் தாக்கங்கள் கனல்களாய் இன்றும் தொடர்கின்றதறிவோம். இத்தகு காரணங்களால் போர்களுக்கெதிரான குரல்களை உலகினர் யாவரும் ஆதரித்து நியாயப்படுத்துவதுதானே நியாயம்?
  • ஆனால், வல்லரசு ரஷியாவின் (ஆட்சியார்) மனநிலை அப்படியில்லை. தனது அண்டை நாடான உக்ரைனுடன் - ‘என்று தணியும் இந்த அழிவின் மோகம்’ என உலகமே கையறு நிலையில் வினவி நிற்கப் - போரைத் தொடர்ந்து வரும் சூழலில், போருக்கு எதிராக யாராவது  பேசினாலோ, எழுதினாலோ அல்லது வேறு கலைவடிவங்களைப் பயன்படுத்திப் போருக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தினாலோ, கடுமையான புதிய சட்டத்தின் கொடுங்கரங்கள் படுவேகமாக நீளும் நெடிதாக. கைது, சிறைவாசம், அபராதம், இவற்றுக்கிடையே தாராளமாக வகை வகையான சித்திரவதைகள், உடைமைப்பொருட்சேதம் நிகழ்வித்தல்,  மானமிழக்கச் செய்தல் (பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்), வேலைநீக்கம், குடும்பத்தினர்க்குத் துன்புறுத்தல்,  இன்னபிற இன்னல்கள் வரிசை கட்டி நடக்கும்.
  • உக்ரைன் மீது படையெடுத்த சில நாட்களுக்குள்ளாகவே  ரஷிய அதிபர் விளாடிமிர் வி. புதின் இராணுவத்தை யாரும் எவ்வகையிலும் விமர்சிப்பதைத் தடை செய்யும் நோக்கில் ‘’இராணுவத்தை மதிப்பிழக்கச் செய்வதைச் (Discrediting the Army) சட்டவிரோதமாக்கும்’’ ஒரு தணிக்கைச் சட்டத்தில் (Censorship Law) கையெழுத்திட்டார். புதின் ஆதரவாளர்கள்கூட ஒப்புக் கொள்ளும் அளவுக்கு அச்சட்டம் மிகக் கடுமையானதாக நிற்கிறது.
  • அந்தச் சட்டத்தின்படி, ‘தடைசெய்யப்பட்ட பேச்சு’ (Prohibited speech) என்பது ஒரு பெருவலை. தனிப்பட்ட முறையில்கூட யாரும், யாரிடமும் பேசுவதோ அல்லது சமூக ஊடகங்களில் செய்தியாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ அனுப்புவதுகூட ஆபத்தாகலாம். யாராவது வேண்டாதவர்களால் அவை பதிவு (Record) செய்யப்பட்டு, இந்தப் புதிய சட்டத்தை அமலாக்கும் அலுவலர்கள் கவனத்திற்குச் சென்றால் – அச்செய்தியோ, புகைப்படமோ, ஓவியமோ ‘எல்லை மீறியுள்ளது’ (Crosses the line) என்று அவர்கள் தீர்மானித்துவிட்டால் - அவ்வளவுதான்!
  • இதோ எடுத்துக்காட்டு. ரஷிய - உக்ரைன் போரின் முதல் 18 மாதங்களில், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், பேக்கரி ஊழியர்கள், இரவுக் காவல் பணிபுரிபவர்கள், விளையாட்டு மைதானப் பராமரிப்பாளர்கள், கார் கழுவும் நிறுவன  உரிமையாளர், முடிதிருத்தும் நிலைய மேலாளர் எனப் பலவகைப்பட்ட சாதாரண ரஷியர்கள் - பெண் ஆண் எனப் பேதமின்றி (!) - சுமார் 6,500 க்கும் மேற்பட்டவர்களை இச்சட்டம் தண்டனைக்கு உட்படுத்தியிருக்கிறது. கைது, அல்லது அபராதம் எனச் சராசரியாக மாதத்திற்கு 350-க்கும் மேற்பட்டவர்கள் இச்சட்டத்தின் வலையில் சிக்கி வருகிறார்கள். இந்த விவரங்களை-  கடந்த ஆகஸ்ட் வரை ரஷிய நீதிமன்றப் பதிவுகளைப் பகுப்பாய்வு செய்து - நியூயார்க் டைம்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது.
  • இராணுவத்துக்கு அதீத ஆதரவு நீட்டும் இப்புதிய சட்டத்துடன், ரஷ்யாவில் வழமையிலிருக்கும் குற்றவியல் சட்டமும் (குறிப்பாகப் பிரிவு 282, பகுதி 2) சேர்ந்து தண்டனைகளைக் கடுமையாகவும் இரட்டிப்பாக்கியும் விடுகிறது.
  • இத்தகைய சூழல்கள் நிலவுங்காலத்தில் கவிஞர்களும் தங்கள் பேனாக்களை இறுக மூடி வைத்திருந்தால்தான் தப்பிக்கலாம். ஏனென்றால், கவிதைகளின் வீச்சும், பலமும், விளைவிக்கும் தாக்கங்களும், கவிஞர்களை விடக் ‘கட்டுப்பாடு தர்பார்’ நடத்தும் கட்டற்ற அதிகாரங் கொண்டிருப்பவர்களால்தான் அதிகம் உணரப்படுகிறது. அதனால்தான்  கவிஞர்கள், ஆபத்தான பொருள்களாகக் (Dangerous Materials) கருதப்பட்டு, அரசுகளால் அஞ்சப்படுகிறார்கள்; அதே அரசுகளால் அடக்கு முறைகளுக்கும் அடிக்கடி ஆளாகிறார்கள். மேலைநாடுகளில் ‘அதிகமாக ரசிகர்களால் தாக்கப்படுபவர்கள், கால்பந்துப்போட்டி நடுவர்கள்’ என்பது வேடிக்கையாகச் சொல்லப்படும் செய்தி. தற்போது,  ‘அதிகமாக அரசுகளால் கைது செய்யப்படுவது அந்நாடுகளின் கவிஞர்கள்’ என சொல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • மாஸ்கோ நகரில், மாயகோவ்ஸ்கி (Mayakovsky) சிலையருகே வழக்கமாக மாதந்தோறும் தெருமுனைக் “கவிதை வாசிப்பு நிகழ்வு” (Poetry Reading Event), பல ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வுதான். யாரும் வந்து நின்று தனது கவிதைகளை வாசிக்கலாம். அம்மாதிரி, 2022, செப்டம்பர் 25, இரவு, சுமார் இருபது பேர் மட்டுமே கூடியிருந்த கவிதை வாசிப்பு நிகழ்வில், கவிஞர் ஆர்டெம் கமர்டின் ( Artem Kamardin, வயது 31) கவிதை வாசித்தார், ரஷ்யா, உக்ரைனுடன் நடத்திவரும் போரை நேரடியாகக் குறிப்பிடவில்லை, ஆனால் போருக்கு எதிரான கருத்துப் பொதிவுள்ள -‘என்னைக் கொல்லுங்கள், ராணுவ வீரரே!” (‘Kill me, militiaman’) என்ற அந்தக் கவிதையைத் தானே வாசித்தார். (கவிதையின் கடைசி இரண்டுவரிகள் கொஞ்சம் தரங்கீழ் போயிருப்பது என்பது  என் கருத்து.) இத்தனைக்கும் அவரது இந்தக் கவிதை 2015லேயே வலைத்தளத்தில் பதிவான கவிதைதான்.
  • நிகழ்வு நடந்த அடுத்த நாளே (செப் 26), கமர்டின், அவரது காதலி அலெக்ஸாண்ட்ரா போபோவா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் தங்கியிருந்த குடியிருப்பைச் சிறு எந்திரத் துப்பாக்கிகளுடன் மாஸ்கோ நகரின் "க்ரோம்" கலகப் பிரிவு போலீஸார்  சூழ்ந்து முற்றுகையிட்டு நின்று கொண்டனர். அதில் ஒரு அணி, குடியிருப்பினுள் தடதடவென நுழைந்து கமர்டின் அபார்ட்மெண்ட் கதவைத் தட்டினர். கதவு திறக்கச் சற்றுத் தாமதமாகியது. அதிகாலை. உறங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். அதற்குள் படையினர்  கருவிகளைக் கொண்டு கதவைப் பெயர்க்க முனைந்தார்கள்.  நல்லவேளையாக(?) முதலில் விழித்த கமர்டின் காதலி, அலெக்ஸாண்ட்ரா போபோவா கதவைத் திறந்தார்.
  • திறந்த கதவைத் தள்ளிக்கொண்டு நுழைந்து அவரது தலைமுடியைப் பிடித்துத் தரதரவென ஒரு அறைக்குள் இரு காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டு உதைக்கப்பட்டாள் அப்பெண். வலிதாங்காமல் அலறிய அலெக்ஸான்டிரியாவின் முகத்தில் ஹாட் க்ளூவை (Hot Glue) அப்பினர்; வாயில் ஸ்டிக்கர்களை ஒட்டினர். சப்தம் போட்டால், கூட்டு பலாத்காரம் செய்வோம் என்றும் மிரட்டினார்கள். இதற்கிடையில் கவிஞர் கமர்டின் மற்ற காவலர்களால் வேறொரு அறையில் வைத்துக் கடுமையாகத் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தார். வெங்கொடுமையான சித்ரவதையாக, உடற்யிற்சிக்குக் கையாளுகிற  ‘டம்பெல்’லை  (Dumbbells) அவரது ஆசனவாயில் வைத்துத் திணிக்க ஒரு காவலர் ஆர்வமுடன்  முயற்சி செய்து கொண்டிருந்தார். (இந்நிகழ்வைக் குறித்துக்  ‘கமர்டின் பாலியல் வன்முறை செய்யப்பட்டார்’ என  அவரது வழக்குரைஞர் நீதிமன்றில், ஊடகங்களில் தெரிவித்தார்).
  • அந்த அறையில், கமர்டினுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் யாவற்றையும் ஒன்றுவிடாமல் அங்கிருந்த காவலர் ஒருவர் விடியோ எடுத்து, அலெக்ஸாண்ட்ராாவை வதைத்துக் கொண்டிருக்கும் அறையிலுள்ள ஒரு காவலருக்கு நேரலையாக அனுப்பி, அதனை அலெக்ஸாண்ட்ரா கண்ணை இமைக்காமல்  பார்க்குமாறு வற்புறுத்தப்பட்டார். அப்படிப் பார்க்காமல் கண்ணை  மூடிக்கொண்டால், பலாத்காரம் செய்யப் போகிறோம் என்ற தொடர்ந்த அச்சுறுத்தல்கள் அப்பெண் மீது வீசப்பட்டன. இவர்களுடன் அந்த அபார்ட்மெண்டில் தங்கியிருந்த மற்ற இருவருக்கும் இதுபோன்ற வதைகள் வஞ்சனையின்றி வழங்கப்பட்டன. வதைகளின் வகைகளை இவர்களிடம் கற்கலாம்!
  • நன்கு விளைந்த வயலில் புகுந்து ‘கால் பெரிது கெடுக்கும்’ யானை போல  (புறம் 184) சோதனை என்ற பெயரில் வீடுமுழுதும் துவம்சம் செய்தனர். கிடைத்த பணத்தைச் சுருட்டித் தமது பாக்கெட்டுகளில் போட்டுக்கொண்டனர்.  இவ்வாறான ‘முதற் சடங்குகள்’ முடிந்து, கமர்டின் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்து கைவிலங்குகளுடன் அபார்ட்மெண்டிலிருந்து வெளியே அழைத்துவரும் காட்சியை டெலிகிராம் சேனல் “112” வெளியிட்டது.
  • தலையிலும் உடம்பிலும் மூர்க்கத்தனமாகக் காவலர்கள் அடித்ததில் கமர்டினுக்கு ஏற்பட்ட மூளையதிர்ச்சி காரணமாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட கமர்டினை உள்நோயாளியாக மருத்துவர்கள் - காவலர்களது மிரட்டலால் - அனுமதிக்கவில்லை. வெளிப்புற இரத்தப்போக்கு எதையும் மருத்துவர்கள் கண்டறியவில்லை எனவும் காவலர்களால்  மருத்துவச் சான்று வாங்கப்பட்டது. அடுத்து, செப்டம்பர் 27 அதிகாலை 2 மணியளவில், மாஸ்கோவில் உள்ள விசாரணைக் குழுவின் ட்வெர்ஸ்கோய் மாவட்ட அலுவலகத்தில் இருந்து கமர்டின், மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் வெளியே வரும் விடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
  • கமர்டின் மீது ஒரு தீவிரவாத வழக்கு பதிந்து (குற்றவியல் சட்டத்தின் பிரிவு 282,பகுதி 2 சேர்க்கப்பட்டு)  48 மணி நேரம்  தற்காலிகக் காவலில் வைத்திருந்தனர். இதுபோதாதென்று அன்று இரவு (செப் 25) கவிதை வாசிப்பில்,  நின்றிருந்ததாகக் கூறப்படும் ஐந்து பேரையும்  காவலர்கள் கைது செய்தனர். அவர்கள் பிற்பாடு ‘ரகசிய சாட்சி’களாகப் பயன்படுத்தப்பட்டனர்.
  • இதற்கிடையில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதுகுக்குப் பின்னால் கைவிலங்குகளுடன் கமர்டின் முழங்கால் மண்டியிட்டு மன்னிப்புக் கோருவதுபோன்ற விடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்த விடியோவில், அவரது முகம் நன்றாக அடிக்கப்பட்டதற்கான அறிகுறிகளைத் தெளிவாகக் காட்டுகிறது. "நான் நேற்று மாயகோவ்ஸ்கி சதுக்கத்தில் வாசித்த கவிதைக்கு மன்னிப்பு கேட்கிறேன், மன்னிப்பு கேட்கிறேன். மேலும்  ரஷிய மக்கள் அனைவர்முன் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். இனி ஒருபோதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன்" என்று அந்த விடியோவில் காணப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் கட்டாயப்படுத்தி இது மாதிரி மன்னிப்பு விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது அங்குள்ள காவல்துறையின் பல்லாண்டுத் தொடர் வழக்கம்.
  • காவலில் உள்ளவர்களை சித்ரவதை செய்வதும், மோசமாக நடத்துவதும் ரஷியாவில் புதிதல்ல. சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. கமிட்டி (United Nation’s Committee Against Torture) தனது 2018 ஆம் ஆண்டு அறிக்கை மூலமாக, ரஷியாவின் சித்ரவதைச் செயல்பாடுகளைக் கடுமையாக  விமர்சித்தது. போரை எதிர்க்கும் மக்களின் தனிப்பட்ட கண்ணியத்தை இழிவுபடுத்தி-  குறிப்பாக,  ரஷியாவில் பெண் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மூலம் – அந்த இழிவையும் ஒரு தண்டனையாகப் பயன்படுத்துவதென்பது  ரஷிய சட்ட அமலாக்கம் கையாளும் வழக்கமான முறையாக உள்ளது  என்றும் குற்றம்சாட்டியது. ரஷிய அதிபர் இந்த அறிக்கை குறித்து  கண்டுகொள்ளவேயில்லை.
  • 2022ஆம் ஆண்டில், கவிஞர்கள் தங்கள் சொந்த நாட்டின் அடக்குமுறை ஆட்சியைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதற்காக சிறையில் அடைக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, மிகவும் மதிப்புப் பெற்றுள்ள அல்கெமி (Alchemy) இதழின் ஆசிரியர், ரஷிய சர்வாதிகாரத்தின் வலுவான கரம் உலகம் முழுவதிலும், ஏன் தனது இதழின் பக்கங்கள் முழுவதிலுங்கூடத் தாக்க அலைகளை அனுப்பியுள்ளது எனப் பிப்ரவரி 13, 2023, இதழில் கவலை தெரிவித்துத் தலையங்கம் போன்ற ஆசிரியர் கடிதம் எழுதிவெளியிட்டார். அதிபர் புதின் அதையெல்லாம் சட்டை செய்பவரல்லவே.
  • உண்மையில் ஆர்டெம் கமர்டின் குற்றமென்ன?
  • அதிபர் புதின் உக்ரைன் போருக்காக ஆள்திரட்டும் அறிவிப்பை ("பகுதி அணிதிரட்டல்’’ Partial Mobilization)  வெளியிட்ட ஓரிரு நாட்களில் செப். 25, 2022 கவிதை வாசிப்பு நிகழ்ந்தது. ஆகவே அந்நிகழ்வு "எதிர்ப்பு அணிதிரட்டல்" எனக் காவலர்களால் குறிக்கப்பட்டது. அங்கே கவிதை வாசிப்பில் இருந்ததென்னவோ சுமார் இருபது பேர்தான்! ‘முள்மரம் இளைதாகக் கொல்க’ என்ற அடிப்படையில் எதிர்ப்பை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்று அதிபரைவிட, விசுவாச அமலாக்கப் புலனாய்வினர் அதிதீவிரங் காட்டினர் (அமலாக்கத்துறை என்றாலே அப்படித்தான் போல).
  • செப்டம்பர் 28-ல் நீதிபதியின் முன் நடந்த விசாரணையின் போது, ​​கமர்டின் இரத்தக் கறை படிந்த ஆடைகளை அணிந்திருந்தார்; அவரது முகத்தில் வெளிப்படையான காயங்கள் இருந்தன;  காவலர்கள் தன்னை சித்ரவதை செய்ததாகவும்  அவர் கூறினார். நீதிபதி இவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை. காவல் புலனாய்வாளர்கள் அவசியப்படும் அளவு பலத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை கொண்டிருப்பதாகவும், அவர்கள் குறிப்பிடத்தக்க எந்தவொரு தவறும் செய்துள்ளதாகத் தெரியவில்லை என்றும் கூறினார் . ஆவணங்களை வழக்குக் கோப்பில் சேர்த்த நீதிபதி, கமர்டினின் சிகிச்சை குறித்து எதுவும் உத்தரவிடவில்லை. இவற்றை அறியும்போது, நீதி தேவதை மட்டுமல்ல, நீதிபதிகளும் அங்கு கண்களைக் கட்டிக் கொண்டுதானிருக்கிறார்களோ என்ற ஐயம் எழுவது இயற்கைதானே?
  • நீதிபதியிடம் "நாட்டின் அரசியல் சூழ்நிலையை" கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு புலனாய்வாளர், கேட்டுக்கொண்டார். ஆர்டெம் கமர்டின் ஆகியோர் அரசின் பாதுகாப்பிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தூண்டியதாகவும், வெறுப்பைத் தூண்டுவதாகவும், அத்துடன் மனித கண்ணியத்தை இழிவுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். செப்டம்பர் 25, 2022 அன்று, மாயகோவ்ஸ்கியின் நினைவுச் சின்னத்திற்கு முன், கவிஞர்கள் கூடி, உக்ரைன் படையெடுப்பில் பங்கேற்பவர்களை (இராணுவத்தினரை) இழிவுபடுத்தியதாகவும் வழக்கு. தண்டனைக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின்னர், கவிஞர் நீதிமன்றத்தில் தனது தரப்பினை விளக்கும் உரையை முன்வைத்தார்.
  • நீதிமன்றில் தன்விளக்கமாகக் கமர்டின் உருக்கமாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்ததாவது:
  • ‘’முதலில் கலை, கவிதை என்பன, அரசியல் கண்ணோட்டங்கொண்ட அதிகாரிகள் மதிப்பிட உரியவையல்ல. கலை, கவிதைகளின் வெளிப்பாடு  பல்வேறு வழிகளில் விளக்கப்படலாம். அதிகாரிகள் விளங்கிக்கொண்ட அடிப்படையில் அவற்றைக் குற்றமாகப் பார்க்கக் கூடாது; அது தவறாகிவிடும். எளிமையான, மிகவும் நேரடி வடிவத்தில் வழங்கப்படுகிற கலையைக் கவிதையைத் தவறாகப் புரிந்துகொள்பவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதற்காகக் கவிதையையோ, கவிஞனையோ குற்றவாளியாக்கக் கூடாது.
  • என் கவிதையால் யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. பொதுவில் வெளிப்படுத்தப்பட்டாலும் கூட, தனி ஒருவரின் கருத்துக்காக அவனை மதிப்பிடுவது. துரதிர்ஷ்டவசமாக, நவீன ரஷியாவில், மிகவும் பொதுவாகிவிட்டது. அனைத்து நியாயங்களும் என்பக்கம் இருக்க, நான் குற்றமற்றவன் என்ற போதிலும், தீர்ப்பு "குற்றவாளி" என்று தான் இருக்குமென நான் அஞ்சுகிறேன்.
  • மாயகோவ்ஸ்கி ரீடிங்ஸில் எதைச் சொன்னாலும் அல்லது படித்தாலும் அது தனிப்பட்ட பேச்சு அல்லது வாசிப்புதான். இம்மாதிரி கவிதை வாசிப்புகள், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து தொடரும் நகரப் பாரம்பரியம் என்பது குறிப்பிட உரியது. கவிதை வாசிப்புகளுக்கு மையக் கருப்பொருளோ, அமைப்பாளர்களோ இல்லை. மனதில் தோன்றுவதை சுதந்திரமாக யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
  • புதிய சட்டங்கள் தோன்றியதால், நான் எப்போதும் என் சொல்லாட்சியை சரிசெய்தே வழங்குகிறேன். [இராணுவத்தை] இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டம் தோன்றியபோது, ​​​​ "போர் வேண்டாம்" என்று கூறிய முதல் நபரே தண்டிக்கப்பட்டார், நான் அந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்தியிருக்கிறேன். அப்படியிருக்க என் கவிதை எப்படி இராணுவத்தை  "இழிவுபடுத்துகிறது" என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
  • அதன் பிறகு சட்டப்பிரிவு 207 வந்தது, "போலி செய்திகள்" [இராணுவம் தொடர்பான] சட்டம். அதன்படி, ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த தகவலையும் பகிர்வதை நான் நிறுத்தியிருக்கிறேன்.
  • தனிப்பட்ட முறையில் கூறப்பட்டவைகூட, பகிரங்கமாக வெளியிடப்பட்டால், என்னை சிறையில் தள்ளலாம் என்பதை அறிந்து, நான் அமைதியாக இருந்து வந்துள்ளேன்.
  • நான் ஹீரோ இல்லை; நான் ஒரு கவிஞன். மேலும்  ‘உணர்ச்சி ரீதியில் சமநிலையில் இல்லாத, ஒரு கலப்பு ஆளுமைக் கோளாறு’ எனக்கிருப்பதாக செர்ப்ஸ்கி இன்ஸ்டிடியூட் வழங்கிய மருத்துவச் சான்று என்னிடம் உள்ளது. நான் நிரபராதி என்றே வலியுறுத்துகிறேன். இவ்வளவு காரணங்களுக்குப் பிறகும், உங்களுக்குகந்த சில காரணங்களால் உங்களால் நிரபராதியாகிய என்னை வெளியேவிட  முடியாவிட்டால், இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையையாவது (Suspended Sentence)  பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  • எனது உடல் ஆரோக்கியமோ அல்லது மன ஆரோக்கியமோ நீண்டகால சிறைவாசத்தைத் தாங்காது என்று நான் அஞ்சுகிறேன். எனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்படுவதற்கான வாய்ப்பு தவிர்க்கப்படவே விரும்புகிறேன். என் நம்பிக்கைகள் மாறாது. தயவுசெய்து என்னை வீட்டிற்கு செல்ல விடுங்கள்’’ என்று உருக்கமாக வேண்டினார் கவிஞர் ஆர்டெம் கமர்டின்.
  • இத்தனையும் கேட்டு, 28 டிசம்பர் 2023 அன்று, மாஸ்கோவின் ட்வெர்ஸ்கோய் மாவட்ட நீதிமன்றம் கவிஞர் கமர்டினுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது, ஒரு கவிதைக்காக. கமர்டின் மாஸ்கோவின் பிரபல புட்டிர்கா சிறையில் அடைக்கப்பட்டார்  (கமர்டினோடு அக்கவிதை வாசிப்பில் முதல் முதலாகப் பங்கேற்றுத் தனது கவிதையை வாசித்த குற்றம் புரிந்த  யெகோர் ஷ்டோவ்பாவுக்கு ( வயது 23) இதே நீதிமன்று ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.)
  • "இந்தத் தீர்ப்புகள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசத் தரங்களுக்கு முற்றிலும் முரணானது" என்றும், ரஷியாவில் கலை வெளிப்பாடு உள்பட கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்குச் சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன என்றும்,  ரஷிய கூட்டமைப்பில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் (Special Rapporteour) மரியானா கட்சரோவா, இவ்வாண்டு (2024) ஜனவரி, 2-ல் வெளியிட்டுள்ள அதிகாரமுழுமை கொண்ட அறிக்கையில் (Official Report)   பிரகடனப்படுத்தியிருக்கிறார். உலக நாடுகள், ஐ.நா. இவையெல்லாம் அதிபர் புதினை ஏதாவது செய்து விட முடியுமா?
  • கட்டாயமாக இராணுவத்தில் சேர்ந்து, போருக்குச் சென்று சவப்பெட்டியில் திரும்புவதைவிட, போருக்கெதிராக ஏதாவது செய்து சிறைப்பட்டால்கூட தம் வீட்டு ஆண்கள் உயிரோடு திரும்புவார்களே என ரஷியப் பெண்கள் கருதுகிறார்களாம்.  போருக்குச் செல்பவர்களை வெறும் பீரங்கி தீவனங்கள் (Cannon Fodder) என்று குறிப்பிடுகிறார்கள் மற்றவர்கள் நமுட்டுச் சிரிப்போடு, உள்ளூறும் பரிதாபத்தோடு. இதனை அறிவாரா ஆட்சியதிபர்?
  • ஒரு கவிதைக்காக நிகழ்ந்தவற்றை மீண்டும் நினைத்துப் பார்த்தால், செப்டம்பர் 26, 2022 அன்று கமர்டினும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டபோது, ​​சட்ட அமலாக்க அதிகாரிகள் குழுவால் அவர்கள் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டதை, மோசமாக நடத்தப்பட்டதை கமர்டின் புகார் செய்தார். இருப்பினும், மாஸ்கோ, மாவட்ட புலனாய்வுக் குழு சித்ரவதைக் குற்றச்சாட்டுகள் மீது குற்றவியல் விசாரணையை அனுமதிக்கவில்லை. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பால் மறுப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
  • இதுபோக, அந்நாட்டில் நடைமுறையிலுள்ள "ரகசிய சாட்சி (Secret Witness) முறையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதுகுக்குப்பின், அரசுத் தரப்பின் ரகசிய சாட்சிகள் சாட்சியமளிக்கலாம். அவர்களைக் குறுக்கு விசாரணை செய்யவும் முடியாது. கமர்டின் வழக்கிலும் ரகசிய சாட்சிகள் பயன்படுத்தப்பட்டனர்.
  • உண்மையில், இக்கவிதை உக்ரைன் போருக்குப் பின் எழுதப்பட்டதல்ல; 2015லேயே வலைத்தளத்தில் பதிவானதுதான்.
  • நீதி என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா?
  • ஆர்டெம் கமர்டினையும் அவரோடு சிறைப்பட்டிருக்கும் கவிஞரையும் (யெகோர் ஷ்டோவ்பா) உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தும் குரல்கள் பல உலகளாவிய அமைப்புகளால் எழுப்பட்டு வருகின்றன, இதுவரை பயனின்றி.

நன்றி: தினமணி (27 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories