TNPSC Thervupettagam

ஒரே சமயத்தில் தேர்தல் மோசமான முடிவு

October 6 , 2023 463 days 334 0
  • சமீப வாரங்களாக, ஒரே சமயத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதங்கள் அதிகரித்து வருகின்றன; அதை ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்று அழைக்கின்றனர். இந்த முடிவை எப்படி அமல்படுத்துவது, இதற்குத் தேவைப்படும் அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் என்ன என்று ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பதால் இந்த விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன. இந்த முடிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
  • ஒரே சமயத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதால் அரசின் தேர்தல் செலவு குறைந்துவிடும் என்பது. அடுத்தது, ஆண்டுதோறும் நாட்டின் ஏதாவது சில மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால் எப்போதுமே ‘தேர்தல் பிரச்சார மனோபாவ’த்திலேயே அரசியல் கட்சிகள் பேசுவது, கோரிக்கைகள் வைப்பது, போராட்டங்களை அறிவிப்பது ஆகியவை தணியும் என்பது.
  • அடிக்கடி பொதுத் தேர்தல் வராமலிருந்தால் ஆளுங்கட்சிகள் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்த முடியும் எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக மக்கள் நலனுக்காக செயல்பட முடியும் என்பது இதன் பின்னால் உள்ள வாதம்.

கருத்து எதிர்க்கருத்து

  • ஒரே சமயத்தில் தேர்தல் வைப்பதால் அப்படியொன்றும் தேர்தலுக்காகும் செலவுகள் அரசுக்கு வெகுவாகக் குறைந்துவிடாது என்பது எதிர்ப்பவர்களின் கருத்து; மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தேசியத் தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வதென்பது சமீப காலத்திய நடைமுறைகளாகும், இதனால்தான் நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைகளும் அரசின் செயல்களும்கூட பாதிப்படைகின்றன.
  • இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் தலைவர்களும் மாநிலத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யாமல், மாநிலத் தலைவர்களை மட்டும் கொண்டு பிரச்சாரம் செய்தால் போதும் என்பது எதிர்ப்பாளர்களின் கருத்து. ‘மையப்படுத்தப் பட்ட அதிபர் ஆட்சிமுறை பாணி’ தேர்தல் பிரச்சாரம்தான் இன்றைய நடைமுறையாகி விட்டபடியால், இந்தக் கருத்துகள் ஏற்கப்படுவதோ, இந்த நிலைமை மாறுவதோ இன்னும் சில காலத்துக்கு சாத்தியமே இல்லை என்பதே உண்மை.
  • ஒரே சமயத்தில் தேர்தல் கூடாது என்று கூறுகிறவர்கள் வேறு சிலவற்றையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
  • முதலாவது, 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையுள்ள நாட்டில், வாக்குரிமை உள்ள அனைவரும் ஒரே சமயத்தில் வாக்களிக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப வாக்குச் சாவடி அதிகாரிகள், வாக்குப் பதிவு இயந்திரங்கள், காவல் படையினர் ஆகியோரைத் திரட்டி வாகனங்களுடன் அனுப்பி வைப்பதற்கு அதிக உழைப்பும் ஆற்றலும் தேவைப்படும். அதனால் செலவு மேலும் அதிகரிக்கும். ஒரே சமயத்தில் தேர்தல் என்று அறிவித்தாலும் அது ஒரே நாளில் சாத்தியமில்லை, கட்டம் கட்டமாகத்தான் தேர்தலை நடத்தியாக வேண்டும்.
  • இரண்டாவது, இப்போதுள்ள ஜனநாயக நடைமுறைகளின்படி ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தும்படியாக எல்லா மாநில அரசுகளும், ஏன் மக்களவையுமேகூட அதன் முழு பதவிக்காலமும் பதவியில் இருக்கும் என்பது நிச்சயமில்லை. 1967 வரையில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் நடந்த பொதுத் தேர்தல் முறை உடைந்து, பிறகு வெவ்வேறு ஆண்டுகளில் மாநிலங்களுக்குத் தேர்தல் நடப்பதற்குக் காரணமே அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவை ஒன்றிய அரசு பயன்படுத்தத் தொடங்கியதால்தான்.
  • மாநில அரசுகளைக் கலைத்தும், செயல்படவிடமால் முடக்கி வைத்தும் ஒன்றிய அரசு வெவ்வேறு விதமாக நடவடிக்கைகளை எடுத்தது. ஜனநாயகத்தின் அடிநாதமே ‘அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரையில்தான் அரசு பதவியில் இருக்க வேண்டும்’; அப்படி நம்பிக்கை இழக்கும் நிலை வந்துவிட்டால் மீண்டும் மக்களிடமே சென்று தேர்தலில் ஆதரவு பெற்று ஆட்சிக்கு வருவதுதான் நல்லது.
  • மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதை மீண்டும் தொடங்கினாலும், மேலே கூறிய நிகழ்வுகளைப் போல ஏதேனும் நடந்தால் மாநில அரசுகள் ஐந்தாண்டு முடிவதற்குள்ளேயே மீண்டும் மக்களிடம் சென்று ஆதரவைக் கோரும் நிலை ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கும் இரண்டு ஆலோசனைகள் கூறப்படுகின்றன, அவை பிரச்சினையைவிட தீர்வு மோசமானது என்பதாகவே இருக்கின்றன.
  • ஐந்தாண்டுக் காலம் முடியும் வரை அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தொடரலாம் என்பது முதல் யோசனை. இந்த யோசனை ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் ஒரே சமயத்தில் தரம் தாழ்த்திவிடும் என்பதைக் கூறவும் தேவையில்லை.
  • இன்னொரு யோசனை அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரையிலான காலத்துக்கு மட்டும் பதவியில் இருக்குமாறு பேரவைக்குத் தேர்தல் நடத்தலாம் என்பது. ஓராட்சி கலைந்து இன்னொரு ஆட்சி முடிவதற்கு ஓராண்டோ, ஈராண்டோ, மூவாண்டோ, நாலாண்டோகூட இருக்கலாம். இப்படி மீண்டும் தேர்தல் நடத்தும்போது மட்டும் தேர்தல் செலவு ஏற்படாதா என்பது முதல் கேள்வி.
  • அடுத்து இன்னும் ஓராண்டுதான் பதவிக்காலம் என்ற நிலை வந்தால் அங்கு ஆட்சிக்கு வரும் கட்சி, அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் மட்டும்தானே செயல்படும், அது மாநில நலனுக்கு நிச்சயம் நல்லதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியுமா? இவ்விரு யோசனைகளையும் ஏற்றால் தேர்தல் செலவும் குறையாது, அடிக்கடி தேர்தல் மனோபாவத்திலேயே கட்சிகள் செயல்படுவதும் ஓயாது.

குதிரை பேரத்துக்கு அதிக வாய்ப்பு

  • பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை அரசு இழந்துவிட்டாலும் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு மக்களவை அல்லது பேரவை உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுவிடும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வு உறுப்பினர்களுக்கு ஏற்பட்டால் அது கட்சித் தாவலை மேற்கொள்ள வைக்கவும் குதிரை பேரம் தீவிரப்படவும்தான் உதவும்.
  • கட்சி மாறுவதையும் குதிரை பேரத்தையும் தடுக்க, ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதையே வெவ்வேறு வழிமுறைகள் மூலம் இன்று செல்லாததாக்கிவிட்டனர் அரசியலர்கள் (நீதிமன்றங்களாலும் அவற்றை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை).
  • நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி வழக்கறிஞருமான கபில் சிபல் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்ததைப் போல, அதிக நிதி வசதியுள்ள அரசியல் கட்சிகள், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை அமலுக்கு வந்தால், ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டால் கோடிக்கணக்கில் செலவழித்து ஏராளமானோரைத் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள், எனவே கட்சித் தாவல் என்பது பெருமளவில் நடைபெற ஊக்குவிப்பு கிட்டிவிடும்.
  • இவ்வாறு தீர்க்க முடியாத சில பிரச்சினைகளால் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதென்பது எளிதல்ல; அதேவேளையில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள, முக்கியமான இரண்டு கொள்கைகளான கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
  • கூட்டாட்சித் தத்துவத்தை முதலாவதாக எடுத்துக்கொள்வோம். இந்தியக் கூட்டாட்சி முறை என்பது வெறும் நிர்வாக வசதிக்கானது மட்டுமல்ல என்பது கடந்த பல ஆண்டு அனுபவங்களிலிருந்து உணரப்பட்டுள்ளது; மொழி, கலாச்சாரம், இனம், இன்னும் பல தனித்தன்மைகள் தொடர்பாக அந்தந்தப் பகுதி மக்களுடைய விருப்பங்களை அங்கீகரிக்கும் வகையில் (மொழிவாரி உள்பட) மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்றிய அரசும் ஜனநாயகத்தை மையமாக வைத்தே செயல்பட்டாலும் மாநிலங்களில் மக்களுடைய பல்வேறு கோரிக்கைகள், உரிமைகள், விருப்பங்கள் அடிப்படையில் மாநில அரசுகள் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது.
  • நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் தேசிய அளவிலான பிரச்சாரங்களும் பிரச்சினைகளும் மாநிலங்களின் கோரிக்கைகளை அல்லது விருப்பங்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடும் ஆபத்து இருக்கிறது. (தேசிய அரசியல் கட்சிகள் தங்களுடைய இருப்பைத் தக்க வைப்பதற்காகவும் செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்வதற்காகவும் தேசியப் பிரச்சினைகளை மையப்படுத்திப் பேசுவது தவிர்க்க முடியாததாகிவிடும், அது ஏன் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது).

அதிகாரத்துக்குக் கடிவாளம்

  • நம்முடைய அரசமைப்புச் சட்டம், ஒன்றிய அரசிடம் அதிகாரம் ஒரேயடியாகக் குவிந்துவிடுவது நல்லதல்ல என்ற எண்ணத்திலும் சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது (அதில் ஒன்றுதான் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை). பன்மைத்துவம் உள்ள ஜனநாயக வழிப் போட்டிகளாலும், அரசியல் கட்சிகளின் பன்மைத்துவ இயல்பினாலும் கூட்டாட்சி முறை அதிக சேதம் இல்லாமல் தொடர்ச்சியாகக் காப்பாற்றப்பட்டுவருகிறது; ஒரே சமயத்தில் தேர்தல் என்பது மாநிலங்களைத் தாழ்த்தி, மைய அரசில் அதிகாரம் குவியக் காரணமாகி, பன்மைத்துவத்தை நாளடைவில் முக்கியமற்றதாக்கிவிடும்.
  • ஆனால், கூட்டாட்சி முறை என்பதே மாநிலங்களின் நலனைப் புறந்தள்ளி, மைய அரசில் அதிகாரம் குவிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
  • இரண்டாவதாக, ஜனநாயகம் என்பது குறித்து: அரசமைப்புச் சட்ட முகவுரையில் ‘மக்கள்-மக்களாகிய நாங்கள்’ என்ற வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தாலும், நடைமுறையில் ‘மக்கள்’ அவ்வளவு செல்வாக்கானவர்களாக இல்லாமல், தேர்தலுக்குப் பிறகு தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாதவர்களாகிவிடுகின்றனர். பல்வேறு நாடுகளில், சட்டம் இயற்றுவதிலேயே மக்களுக்கு உரிமை தரப்பட்டு அது நடைமுறையிலும் பின்பற்றப்படுகிறது; சரியாகச் செயல்படாத மக்கள் பிரதிநிதியைத் திரும்ப அழைக்கும் உரிமையும் மக்களுக்கு சட்டம் வாயிலாகவே அளிக்கப் பட்டுள்ளது.
  • இந்திய அமைப்பில், தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே மக்களுடைய நேரடி ஜனநாயகப் பங்களிப்பாக இருக்கிறது. இது போதாது, மக்களுக்கு இன்னும் அதிக ஜனநாயக உரிமைகள் தேவை என்ற விவாதத்தைப் பிறகு வைத்துக்கொள்ளலாம்; ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அடிக்கடியோ தேர்தல் நடந்தாலாவது மக்களுடைய பிரச்சினைகள் பேசப்படுகின்றன, தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு அரசுக்கும் ஏற்படுகிறது.
  • ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்த முடிகிறது என்பதும் நிர்வாகத்துக்கு வசதி என்பதும் மிகையான காரணங்கள், நடைமுறையில் அப்படி எதுவுமே இல்லை. தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் ஆழ்ந்து நோக்கினால் அப்படியொன்றும் அதிகம் செலவாகிவிடுவதில்லை என்பது புரியும்.
  • எனவே, நாடாளுமன்றத்துக்கும் அந்தந்த மாநில சட்டப்பேரவைகளுக்கும் உரிய காலத்திலும் தேர்தல் நடத்துவதால் கூட்டாட்சி முறையும் வலுவடைகிறது, மாநிலங்களுக்கும் உற்ற அரசு கிடைக்கிறது, அரசமைப்புச் சட்டம் விரும்பியபடி கூட்டாட்சி முறையும் தொடர்கிறது, ஜனநாயகமும் வலுப்பெறுகிறது. எனவே, ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது மோசமான முடிவு, உடனடியாக கைவிடப்பட வேண்டியது.

நன்றி: அருஞ்சொல் (06 –10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories