TNPSC Thervupettagam

ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் முறை ஏன் விவாதமாகவில்லை?

November 25 , 2021 976 days 703 0
  • வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதை எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
  • அந்த அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் தெரிவித்த ‘ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் முறை’ குறித்த திட்டம், ஒரு அரசியல் விவாதமாக மாறவில்லை.
  • எதிர்க்கட்சிகள் எந்தெந்த நேரங்களில் எதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதைக்கூட ஆளுங்கட்சியான பாஜகதான் முடிவுசெய்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம், அதன் நாடாளுமன்றக் கட்டமைப்பு.
  • அதில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் ஒரு முன்மொழிவு அப்போதே விவாதிக்கப்பட்டால், சில தவறுகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும்.
  • ஆனால், வழக்கம்போல எதிர்க்கட்சிகள் அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும்போதோ அத்திருத்தம் நடைமுறைக்கு வரும்போதோ மட்டும்தான் வாயைத் திறக்கின்றன.
  • மாநிலச் சட்டமன்றங்களின் சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர், நாடு முழுவதற்கும் ஒரே சட்டமியற்றும் முறை என்று கூறினாலும் தன்னுடைய திட்டத்தை முழுமையாக விளக்கவில்லை.
  •  ‘சட்டமியற்றும் முறை’ (லெஜிஸ்லேடிவ்) என்ற வார்த்தை மாநிலச் சட்டமன்றங்களை மட்டுமின்றி நாடாளுமன்றத்தையும்கூடக் குறிக்கும் என்பதால், அவரது உரை சந்தேகங்களுக்கும் வாய்ப்பாக உள்ளது.
  • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை ஏற்கெனவே பாஜக தனது இலக்காக வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் கூடுதல் இருக்கைகளுடன் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத்தின் பிரம்மாண்டமான புதிய கட்டிடத்தையும் சேர்த்துப் பிரதமரின் வார்த்தைகளுக்குப் பொருள் விளக்கம் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.
  • சட்டமன்றங்களின் அதிகாரம் இந்திய அரசமைப்பால் வரையறுக்கப்பட்டு அதன்படியே செயல்பட்டு வரும் நிலையில், சட்டமன்றங்கள் தங்களுக்கான விதிமுறைகளை இயற்றிக் கொள்ளும் அதிகாரத்துக்குள் நாடாளுமன்றம் ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
  • சட்டமன்றங்களில் அரசியல் கலவாத நல்ல விவாதங்களுக்குத் தனியாக நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • கட்சி அரசியலின் முரண்பாடுகளை வெளிப்படையாகப் பேசாமல் தவிர்க்கலாம் என்றாலும் அரசியல் களத்தின் மையமான சட்டமன்றத்தில் எதைக் குறித்துப் பேசினாலும் அதில் அரசியல் கலவாதிருக்குமா என்ன? நாடாளுமன்றத்திலும் அரசியல் கலவாத விவாதங்களுக்கு நாட்கள் ஒதுக்குவதற்கும் பிரதமர் விரும்புகிறார்.
  • போதுமான விவாதங்கள் இன்றிச் சட்டங்கள் இயற்றப்படுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், விவாத நேரங்களின் ஒரு பகுதியை அரசியல்நீக்கம் செய்வது சரியானதல்ல.
  • தொழில்நுட்பங்களின் வாயிலாக அனைத்து சட்டமன்றங்களையும் ஒன்றாக இணைப்பதொன்றையே தற்போது பிரதமரின் உரையிலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • அந்தத் தொழில்நுட்ப இணைப்பில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும்போல சட்டமன்றங்களுக்கும் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும்.
  • நாடாளுமன்றத்தைப் போலவே விவாதத்துக்குக் காத்திருக்கும் சட்ட முன்வரைவுகளின் பட்டியலும் அவையில் நடக்கும் அனைத்து விவாதங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இத்தகைய வெளிப்படையான சட்டமியற்றல் முறைகளே ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories