ஒரே நாடு ஒரே சந்தா திட்டம்
- ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ (one nation one subscription) என்கிற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் ஆராய்ச்சி இதழ்கள், ஆய்வு வெளியீடுகளை மாணவர்கள் எளிமையாக அணுகும் சூழல் உருவாகியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்களின் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் எனக் கூறப்படுகிறது.
- 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் அதிக ஆராய்ச்சி இதழ்களை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டம் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்தத் திட்டம்?
- உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சிகளுக்காக ஆய்வு இதழ்களைப் பெரிதும் நம்பியுள்ளனர். குறிப்பாக, ஆய்வுகளுக்காகச் சர்வதேச வெளியீடுகளையே மாணவர்கள் சார்ந்திருக்கும் நிலை நிலவுகிறது.
- தற்போதைய நடைமுறையில், மத்திய-மாநில அமைச்சகங்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள வெவ்வேறு நூலகக் கூட்டமைப்புகள் மூலமே உயர் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி இதழ்களைப் பெற்றுவருகின்றன. இவ்வாறாக, ஆங்காங்கே தனித்திருக்கும் ஆய்வு இதழ்களை ஒருங்கிணைக்கும் தளமாக மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டம் உள்ளது.
ரூ.6,000 கோடி ஒதுக்கீடு:
- ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தின் மூலமாக, ஆய்வு இதழ்களைப் படிக்கத் தேசிய அளவில் ஒரே சந்தா முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. 2025 ஜனவரி மாதம் முதல் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு (2025, 2026, 2027) நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்காக மொத்தமாகச் சுமார் ரூ.6,000 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் வலைதளம் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தகவல், நூலக வலைப்பின்னல் (INFLIBNET) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசின் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் இத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஆராய்ச்சி இதழ்களை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இலவசமாகப் படிக்கலாம்.
சர்வதேசப் பத்திரிகைகள்:
- ‘ஒரே நாடு ஒரே சந்தா’ தளத்தில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த 30 பத்திரிகை வெளியீட்டாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், 13,000 மின்னணுப் பத்திரிகைகளை, 6,300க்கும் மேற்பட்ட அரசு உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் அணுக முடியும். ‘எல்சீவர் சயின்ஸ் டைரக்ட்’ (Elsevier Science Direct), ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’, ‘விலே பிளாக்வெல் பப்ளிஷிங்’, ‘டெய்லர் & பிரான்சிஸ்’, ‘சேஜ் பப்ளிஷிங்’, ‘ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்’, ‘கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்’, ‘பிஎம்ஜே ஜர்னல்ஸ்’ போன்ற சர்வதேச வெளியீட்டாளர்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தில் அங்கம் வகிக்காத பிற வெளியீட்டாளர்களின் கட்டுரைகளைக் கல்வி நிறுவனங்கள் தனியாகச் சந்தா செலுத்திப் படித்துக்கொள்ளலாம்.
யாரெல்லாம் பயனடைவார்கள்?
- இந்தத் திட்டம் மூலம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்காகச் சமீபத்திய ஆய்வுகள் குறித்த மேம்பட்ட தகவலைப் பெற முடியும். இத்திட்டம் மூலம் 6,300க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
இடைவெளியைக் குறைக்கும்:
- இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழல் அமைப்பைச் சமத்துவமாக மாற்றி, கல்வியைப் பெறுவதில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது; இடைநிலை ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. கல்வி வாய்ப்புகளில் கிராமப்புற - நகர்ப்புற மாணவர்களிடையே நிலவும் வேறுபாட்டை இந்தத் திட்டம் குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய ஆராய்ச்சித் துறையின் ஆய்வுகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் இத்திட்டம் ஊக்கப்படுத்தும் என்பதால், கல்வித் துறை செயல்படும் முறை மாறும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆராய்ச்சிக்காகச் செலவிடும் தொகை 18 சதவீதம் குறையும்; இதன் மூலம் இந்தியாவில் ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கையும், ஆராய்ச்சிகளின் தரமும் மேம்படக்கூடும்.
பின்னடைவுகள்:
- ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜனநாயக வழியில் மாணவர்களைச் சென்றடையும் வாய்ப்பை ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம் உருவாக்குகிறது. இருப்பினும் உலகளாவிய ஆராய்ச்சி அமைப்புகள் திறந்த அணுகலை (open access) நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான இந்தப் புதிய திட்டத்துக்காக இந்தியா அதிகத் தொகையைச் செலவிடுகிறது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
- அடுத்து, ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெரும்பாலும் இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன. அவ்வாறான சூழலில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் பாதுகாப்பு சார்ந்த கேள்விகள் எழுந்துள்ளன. அச்சு வழியில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்படும்போது, அதைப் பத்திரப்படுத்த முடியும்.
- ஆனால், இணைய தளங்களில் அத்தகைய உறுதியை நம்மால் தர முடிவதில்லை. உதாரணத்துக்கு, ‘The discontinuation of Heterocycles’ என்கிற ஜப்பானின் ஆய்வுக் கட்டுரை, 2023இல் இணையதளத்திலிருந்து காணாமல்போனது. மேலும், சுமார் 17,000 ஆய்வுக் கட்டுரைகளையும் பயனாளர்கள் அணுக முடியாத சிக்கல் ஏற்பட்டது.
- இவ்வாறாக, முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் இணையதளத்திலிருந்து காணாமல்போனாலோ, அணுக முடியாமல் போனாலோ அதை எப்படிப் பாதுகாப்பாகத் தக்கவைப்பது என்பது போன்ற விழிப்புணர்வு அவசியம். இந்திய ஆராய்ச்சித் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ‘ஒரே நாடு ஒரே சந்தா’ உதவும் என சர்வதேச வெளியீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். இந்திய ஆராய்ச்சி மாணவர்களின் அறிவுசார் கண்ணோட்டத்தை மேம்படுத்தி, சர்வதேச அளவில் ஆய்வுக் கட்டுரைகள் சார்ந்து ஆரோக்கியமான போட்டிச் சூழலை ஏற்படுத்தும் என நம்பலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 12 – 2024)