A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to decode session object. Session has been destroyed

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Articles.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 316
Function: require_once

ஒலிமாசைக் கட்டுப்படுத்துவோம்
TNPSC Thervupettagam

ஒலிமாசைக் கட்டுப்படுத்துவோம்

June 16 , 2022 810 days 526 0
  • அதிக மக்கள் வாழும் நம் நாட்டில், குறிப்பாக நகர்ப்புறங்களில், ஒலிமாசு ஒரு மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்வின் சுமுகமான சமநிலையைக் கெடுக்கும் அதிக அளவிலான, விரும்பத்தகாத சத்தங்களை ஒலிமாசு என்கிறோம்.
  • பொதுமக்களின், பிற உயிர்களின் உடல்நலத்தை, நல்வாழ்வைக் கெடுக்கும் தேவையற்ற, தொந்தரவு கொடுக்கிற ஒலிமாசு பெரும் துன்பம் தருவதாக இருக்கிறது. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, சமூக நிகழ்வுகள் என பல்வேறு காரணங்களால் ஒலிமாசு நிகழ்கிறது.
  • வழிபாட்டுத் தலங்களிலிருந்து வெளிக்கிளம்பும் ஒலிமாசு, சூழல் தலைவலியாக அமைகிறது. கிராமக் கோயில்கள், குடும்பக் கோயில்களின் கொடை விழாக்களில், தேவாலய திருவிழாக்களில் இரவும் பகலும் தொடர்ந்து பக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். சில மசூதிகளிலும் மசூதிக்கு வெளியே பாடல்கள், பிரசங்கங்களை ஒலிபரப்புகிறார்கள்.
  • திருவிழாக்கள் நடக்காத நாட்களிலும் காலை, மாலை இருவேளையும் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். வழிபாட்டுத் தலங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் அதிகாலை ஒலிபரப்புக்களை விரும்பிக் கேட்கிறார்கள் என்று சொல்லி ஒலிமாசை நியாயப் படுத்துகிறார்கள். ஒருவரின் வழிபாட்டு உரிமை இன்னொருவரின் அமைதியான வாழ்வுக்கான உரிமையை மீறக்கூடாது.
  • மதம் சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகள் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து ஒளிபரப்புகின்றன. அவற்றைப் பார்ப்பதன் மூலமும், தங்கள் கைப்பேசிகளில் தேவையான பாடல்களைக் கேட்பதன் மூலமும் தங்கள் பிரச்னைக்குத் தீர்வு தேட வேண்டுமே தவிர, நான் கேட்க விரும்புவதால், என்னோடு சேர்ந்து ஊரே கேட்கவேண்டும் எனும் தன்னலவாத அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
  • பல வழிபாட்டுத் தலங்களில் நாள் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பாடல்கள், சுலோகங்கள் சொல்லி, நாள், நேரம் அறிவிக்கிறார்கள். ஒவ்வொருவரும் கைப்பேசி வைத்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் மணிநேர அறிவிப்புக்களுக்கு எந்த அவசியமும் இல்லை.
  • வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவக் குழாய்கள், பெட்டிகள் போன்ற சக்திவாய்ந்த ஒலிப்பான்களை உயர்ந்த கோபுரங்களில், கம்பங்களில், மரங்களில் கட்டி, பெரும் சத்தத்துடன் பாடல்களை, பிரசங்கங்களை ஒலிக்கச் செய்கின்றனர். இதனால் பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
  • இந்த தொடர் ஒலிமாசு காரணமாக வயது முதிர்ந்தவர்கள், நோயுற்றவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கவோ, வீட்டுப்பாடம் செய்யவோ முடியவில்லை. வீடுகளில், கடைகளில், தெருக்களில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள இயலவில்லை. கைப்பேசியில்கூட யாரோடும் பேசுவது கடினமாகிறது.
  • தொடர்ந்து ஒலிமாசுக்கு உள்ளாகும்போது, பெரும்பாலான மக்கள், கேட்கும் தன்மையை இழக்கின்றனர், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு, மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். ஏற்கெனவே சிக்கலானதாக இருக்கும் நம்மூர் சாலைப் போக்குவரத்து இன்னும் ஆபத்தானதாக மாறி, விபத்துகள் ஏற்படுகின்றன.
  • மக்கள் பிரச்னைக்காக, அல்லது அரசின் திட்டத்திற்கு எதிராக ஒரு சிலர் ஒன்றுகூடி அற வழியில் குரல் எழுப்புவதற்குக்கூட ஆயிரம் நடைமுறைகளை வைத்துக்கொண்டு அல்லல்படுத்தும் காவல்துறை, பல்வேறு மதங்களின் பக்தகோடிகள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஒலிமாசுக்கு எதிராக முறைப்படி புகார் அளித்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை.
  • சில அரசியல் கட்சிகளும் மதவாத அமைப்புகளும் ஒலிமாசு பிரச்னையை குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மட்டுமே செய்யும் தவறு என்பதாகவே சித்திரிக்கின்றனர். ஆனால் அனைத்து மதத்தவருமே இந்தக் கொடுமையை நிகழ்த்துகின்றனர் என்பதே உண்மை.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 1982-ஆம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரம் ஒலிபெருக்கி ஒலிமாசு பிரச்னையிலிருந்துதான் தொடங்கியது. ஒலிமாசு எனும் சிறு தீப்பொறியில் இருந்துதான் அந்த ஒட்டுமொத்த கலவரமே தொடங்கியது எனும் உண்மையை அந்த கலவரத்தைப் பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி வேணுகோபால் கமிஷன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
  • மக்கள் நெருக்கமாக வாழும் பன்மைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஒலிமாசு பிரச்னை என்பது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று. முதல்வர், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் வீடுகளுக்கு அருகே ஒலிமாசு நிகழாமல் காத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம் பொதுமக்கள் துன்புறுவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
  • அதே போல, சாலைப் போக்குவரத்தும் சத்தம் மிகுந்ததாக மாறிக் கொண்டிருக்கிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்களில் அதிக டெசிபல் கொண்ட ஒலியெழுப்பான்களைப் பொருத்தி, பாதசாரிகளை மிரட்டுவதற்கும், மிருகங்களை விரட்டுவதற்கும், பிற வாகனங்களை முந்திச்செல்வதற்கும், சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது முன்னால் நிற்பவர்களை விரைவுபடுத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர். சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை அதிக சத்தம் எழுப்பும் விதத்தில் மாற்றியமைத்து பிறர் கவனத்தைக் கவர முயற்சிக்கின்றனர்.
  • ஒலிமாசு குறித்து உச்சநீதிமன்றம் கடந்த 2005-ஆம் ஆண்டே தெளிவானத் தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறது. ஒலிமாசிலிருந்து விடுதலை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 21 குறிப்பிடும் வாழ்க்கைக்கான உரிமையின் அங்கம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. குடிமக்களின் அடிப்படை உரிமையான அமைதியான வாழ்க்கையை ஒலிமாசு சீர்குலைத்து, அவர்களை விருப்பமின்றி ஏதையோ கேட்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்குகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • வழிபாட்டுத்தல வளாகங்களுக்குள் சத்தம் எழுப்பி, அண்டை அயலாருக்கும், மற்றவர்களுக்கும் தொந்தரவு தரும் வகையில் எந்த மதத்தினரும் எந்த நோக்கத்துக்காகவும் ஒலிமாசு ஏற்படுத்தும் உரிமையைக் கோர முடியாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை ஒலிமாசு ஏற்படுத்தக் கூடாது என்றும் பணித்தது.
  • தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் - வனங்கள் அமைச்சகத்தின் ஒலிமாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000 சில நிபந்தனைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஒலிபெருக்கிகளும், மக்கள் தொடர்பு சாதனங்களும் அதிகாரிகளிடமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படக்கூடாது. அவை பயன்படுத்தப்படும் பொதுவெளியின் எல்லைகளில் எழும் ஒலியின் அளவு சுற்றுப்புற ஒலி அளவைவிட கூடுதலாக பத்து டெசிபல் அளவைத் தாண்டக்கூடாது.
  • ஒரு மாதத்துக்கு முன்னால் உத்தர பிரதேச அரசு அம்மாநிலத்திலுள்ள வழிபாட்டுத் தலங்களில் இருந்த 10,900 ஒலிபெருக்கிகளை அப்புறப்படுத்தியது. சட்டபூர்வமாக அனுமதி பெறாமலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிமாசு ஏற்படுத்திக்கொண்டும் இருந்த ஒலிபெருக்கிகளை அந்த அரசு நீக்கியது. அந்த நடவடிக்கைக்கு மதத்தலைவர்களோ, அமைப்புக்களோ, பொதுமக்களோ யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் ஒலிமாசு பிரச்னையை பேசிய அரசியல் கட்சி ஒன்று, அதனை ஒரு குறிப்பிட்ட மதத்தோடு மட்டுமே தொடர்புபடுத்தியது. ஆனால் அம்மாநில அரசு ஓர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை மத்திய அரசோடு பேசி, நாடு முழுவதுமான ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறது.
  • நம் தமிழ்நாட்டில், காவல்துறை உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை அமல்படுத்துவதுமில்லை; ஒலிமாசு பிரச்சினையை நேர்த்தியாக மேலாண்மை செய்வதுமில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் வாக்குவங்கி அரசியல் பாதிக்கப்படும் என்று அஞ்சி, ஒலிமாசு பற்றி எதுவும் பேசுவதில்லை. மதக் குழுமங்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாத இவர்கள் ஒலிமாசு பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். பல வேளைகளில் இவர்களே ஒலிமாசு ஏற்படுத்துகிறவர்களாகவும் இருக்கின்றனர்.
  • மக்களின் மனநலனையும், உடல்நலனையும் வெகுவாக பாதிக்கும் ஒலிமாசு பிரச்னையில் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் தலையிட்டு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த வேண்டும்.
  • ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் அதிகாலையிலும், முன்மாலையிலும் தொடர்ந்து பாடல்கள் ஒலிபரப்பி, மக்களின் உடல்நலனையும், மனஅமைதியையும் குலைக்கும் வகையில் ஒலிமாசு ஏற்படுத்த யாரையும் அனுமதிக்கக் கூடாது.
  • திருவிழாக்கள் நடைபெறாத நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளையோ, அதைவிட சக்திவாய்ந்த பெட்டிவடிவ ஒலிபெருக்கிகளையோ பயன்படுத்த விடக்கூடாது. சாதாரண நாட்களில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வளாகங்களுக்குள் மட்டுமே கேட்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பாடல்கள், பிரசங்கங்கள் ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும்.
  • திருவிழா காலங்களில் இரவும் பகலும் நேர வரையறை ஏதுமின்றி ஒலிமாசு ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும். கூம்புவடிவக் குழாய்க்கு பதிலாக அதைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். ஒலிபெருக்கிகளை கோபுரங்களிலோ, மரங்களிலோ, அதிக உயரத்திலோக் கட்ட விடக்கூடாது.
  • வழிபாட்டுத் தலங்களில் ஓசை எழுப்புவதற்கும், விழாக்கள் கொண்டாடுவதற்கும் காவல் துறையின் அனுமதி பெறும் நடைமுறையை சிரத்தையுடன் அமல்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (16 – 06 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories