TNPSC Thervupettagam

ஒளிரும் பல்லவ ஓவியம்

August 6 , 2023 395 days 467 0
  • பல்லவப் பேரரசன் ராஜசிம்மன் எனும் இரண்டாம் நரசிம்மவர்மன் (பொ.ஆ. (கி.பி.) 690-728) கலை வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற மூன்று கற்றளிகளை வெவ்வேறு நிலப்பரப்புகளில் எழுப்பினார்; மாமல்லபுரக் கடற்கரையில் ஒன்று, பனைமலை குன்றின் மேல் தாளகிரீஸ்வரர் கோயில், கடைசியாக காஞ்சி வயல்வெளியில் கைலாசநாதர் கோயில்.
  • இந்த ஆலயங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில், அவற்றிலுள்ள சிற்பங்கள் மீது சுதைச் சிற்பங்கள் உள்பட, வண்ணம் பூசப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த வண்ணங்கள் அழிந்துபட, சிற்பங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதனால் பழங்காலத்தில் சிற்பங்கள் மட்டுமே இருந்தன என்ற மாயை நம் மனதில் உருவாகியிருக்கிறது. ஆலயங்களில் சுவரோவியங்களும் இடம் பெற்றன. சொல்லப்போனால் அக்காலத்தில் சிற்பங்களை விட ஓவியங்களே மிகுந்திருந்தன. இலக்கியத்தில் சிற்பங்களைவிட ஓவியம் பற்றிய குறிப்புகளே நிறைய உள்ளன. ஆனால், இன்று வெகு சில ஓவியங்கள் மட்டும் காணக் கிடைக்கின்றன.
  • சித்தன்னவாசல் போன்ற குடவரைக் கோயில்களில் மட்டுமல்ல, இயற்கையான குகைகளிலும் பாறையின் மேல் சாந்து பூசப்பட்டுச் சித்திரங்கள் தீட்டப்பட்டன. குடவரை, கற்றளிகள் உருவாக்கப்பட்ட காலத்தில் பல ஆலயங்களில் மூலவர் ஓவிய வடிவில் அல்லது வண்ணச்சாந்து பூசப்பெற்ற புடைப்புச் சிற்பமாக உருவாக்கப்பட்டிருந்தார். பனைமலையில் மூலவர் புடைப்புச் சிற்பமாகச் சோமாஸ்கந்த வடிவில் உள்ளார். இன்று இங்குள்ள லிங்கம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் ஓவியக்கலை செழித்திருந்தது. மன்னன் சிம்மவிஷ்ணு சித்திரகாரப்புலி என்று அறியப்பட்டார். ‘தட்சிண சித்ரா ’ என்ற ஓவியக்கலை சார்ந்த நூல் ஒன்று எழுதப்பட்டிருந்தது. ‘ஓவியச்செந்நூல்’ பற்றி ‘சிலப்பதிகாரம்’ குறிப்பிடுகின்றது.
  • நடராஜர் ஓவியம்: மாமல்லபுரச் சிற்பங்கள் பல ஒரு காலத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தன என்பற்குத் தடயங்கள் உள்ளன. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள சிற்றாலயங்களில் ஓவியங்களின் சிதிலங்கள் உள்ளன. பல்லவர்களின் ஓவியக் கலைக்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. அதைக் காண ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் நானும் என் நண்பர் ஜோப் தாமஸும் சென்றிருந்தோம். கோயிலின் சாவி அந்த ஊர் அஞ்சல் நிலைய அதிகாரியிடம் இருந்தது. அவர்தான் அன்று அதற்குப் பாதுகாவலர். அந்த அற்புதமான ஆலயத்தைப் பற்றி அன்று அறிந்திருந்தவர்கள் மிகக் குறைவு.
  • பனைமலை ஆலயத்தில், வடக்குத் துணைக் கருவறையில் இரண்டு ஓவியங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இடதுபுறம் உள்ள சுவரில் நடராஜர். ஏறக்குறைய முழுவதும் அழிந்துவிட்டிருந்தாலும் ஆடவல்லானை எளிதாக அடையாளம் காண முடிகிறது. இது ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் பாணி அல்ல. வலது காலைத் தரையில் வைத்து, இடது காலை மண்டியிட்டு, இடது கையைத் தலைக்கு மேல் வைத்து, வலது கையை மார்புக்குக் குறுக்கே வீசி, ஆடும் சிவன். இதைச் சந்தியா பாணி என்பர் வல்லுநர். இந்த நடராஜரைச் சிற்ப வடிவில் மாமல்லபுரத்திலும் கைலாசநாதர் கோயிலிலும் காணலாம். இந்தச் சுவரோவியங்களில் அடிப்படையானவை கோடுகள். முதலில் வரிகளைத் தீட்டி பின்னர் வண்ணங்களால் நிரப்பினர். இந்த ஆதாரக் கோடுகள் பனைமலை நடராஜர் ஓவியத்தில் நன்கு தெரிகின்றன.
  • எதிர்ச் சுவரில், சிவனின் நடனத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் பார்வதி தீட்டப்பட்டிருக்கிறார். இந்தப் படைப்பு, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்தியக் கலை வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பனைமலை பார்வதி, அரிய விவரங்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு படைப்பு. பல்லவர் கால ஓவியக் கலையின் அற்புதமான எடுத்துக்காட்டாக ஒளிர்கிறது. இடது காலை மடித்துச் சுவரில் சாய்ந்து, ஒற்றைக் காலில் நிற்பதுபோல் பார்வதி சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
  • பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்கள் மேலோங்கியிருக்கின்றன. தலைக்கு மேலே ஒரு சிவப்பு நிறக்குடை. அதன் கீழ்ப்புறத்தில் பச்சை வண்ணப் பின்புலத்தில் வெள்ளை வட்டங்கள் அலங்கரிக்கின்றன. பார்வதியின் தலையை மஞ்சள் நிற கிரீட மகுடம் அணிசெய்கிறது. நெற்றியில் சிவப்பு நிறத் திலகம். சுவடி, கண்டிகை எனும் அணிகலன்கள் கழுத்துக்கு அழகூட்டுகின்றன; காதணி தெரிகிறது. கணுக்கால் வரை நீண்டுள்ள, சிறு பூக்கள் உடைய சிவப்புப் புடவையை ஒரு அலங்காரப்பட்டிகை இடுப்பைச் சுற்றி இறுக்கியுள்ளது. காலணி இல்லாத இடது பாதத்தைக் கொலுசு அலங்கரிக்கிறது.
  • காலம் கடக்கும் நுட்பம்: 1940-களில் இந்தியத் தொல்லியல் துறையில் (ASI) வேதியியல் பிரிவில் பணிபுரிந்த எஸ்.பரமசிவம் தென்னிந்திய ஓவியங்களை ஆராய்ந்து, அவை எவ்வாறு உருவாக்கப்பட்டன என்று கட்டுரைகள் எழுதியுள்ளார். புடைப்புச் சிற்பங்கள், பாறை அல்லது சுவரின் மேல், முதலில் ஒரு சென்டிமீட்டர் அளவுக்குச் சுண்ணாம்பு சாந்து பூசி, சாந்து உலரும் முன் ஓவியர் தனது வேலையை முடித்துவிட வேண்டும்.
  • ஈர சாந்தின் மேல் ஓவியம் தீட்டப்படும்போது வண்ணங்கள் சாந்துப்பூச்சின் உள்ளே இறங்கிவிடும். இதனால்தான் சில ஓவியங்களேனும் எஞ்சியிருக்கின்றன. Fresco Secco என்கிற இந்த முறையில்தான் அஜந்தா, பனைமலை, சித்தன்னவாசல், சிக்ரியா (இலங்கை) ஓவியங்கள் உருவாக்கப்பட்டன என்று பரமசிவம் உறுதிபடக் கூறுகின்றார். தாவர, கனிம மூலங்கள் வண்ணங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன.
  • இந்த ஓவியப் பாணிகளிலும் அதை உருவாக்கும் முறையிலும் காணும் ஒற்றுமை அவற்றின் காலத்தை மட்டுமல்ல, அப்போது ஏற்பட்ட கலாச்சாரப் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது. இடது காலை மடித்துவைத்து பார்வதி நிற்கும் பாணி, அஜந்தாவிலும் எல்லோராவிலும் காணப்படுகிறது. பல விஜயநகர ஆட்சிக் கால ஆலயங்களின் நுழைவாயில்களில் கங்கை, யமுனை சிற்பங்களும் இதே தோரணையில் இருப்பதைக் காணலாம். மாமல்லபுரம் தர்மராஜ ரதம், எல்லோரா கைலாசா குடவரை, காஞ்சி கைலாசநாதர் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் ஆகிய எல்லாவற்றிலும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள். விமானங்கள் ஒரே மாதிரி உள்ளன. மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக்கொண்டிருந்தாலும், கைவினைஞர்கள் தங்களுக்குள் பரிவர்த்தனையைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள் என்பது தெளிவு.

நன்றி: தி இந்து (06 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories