TNPSC Thervupettagam

ஓஎன்டிசி: இந்திய டிஜிட்டல் பயணத்தில் புதிய மைல்கல்

May 22 , 2023 599 days 380 0
  • கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான நேர்மறை மாற்றங்களில் ஒன்று, டிஜிட்டல்மயமாக்கம். வர்த்தகம், பணப்பரிவர்த்தனை தொடங்கி கல்வி, மருத்துவம், அரசு சேவைகள் என பல்வேறு தளங்களும் மிக வேகமாக டிஜிட்டல்மயமாகி வருகின்றன.
  • இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு மைல்கல்லாக யுபிஐ கட்டமைப்பை குறிப்பிடுவதுண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியவங்கிகள் கூட்டமைப்பு இணைந்து 2009-ம் ஆண்டில்நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா (NPCI) என்ற லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தின.
  • அதன் தொடர்ச்சியாக உருவானதுதான் யுபிஐ. 2016-ம்ஆண்டு அறிமுகமான யுபிஐ கட்டமைப்பானது இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒரே குடையின் கீழ் இணைத்து அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்கியது.
  • மொபைல்போன் செயலி வழியே ஒரு வங்கியிலிருந்து எந்த வங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை அதுசாத்தியப்படுத்தியது. இன்று பெரும் வணிக வளாகங்கள் முதல் சாதாரணப் பெட்டிக் கடைகள் வரையில் பணப்பரிவர்த்தனை பிரதானமாக யுபிஐ வழியே மேற்கொள்ளப்படுகிறது. உலக நாடுகள் இந்தியாவின் யுபிஐ முறையை முன்னுதாரணமாகக் கொண்டு, தங்கள் நாட்டிலும் அத்தகைய கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
  • தற்போது யுபிஐ போல மற்றொரு பாய்ச்சலை இந்தியா நிகழ்த்த இருக்கிறது, ஓஎன்டிசி. யுபிஐ எப்படி பணப்பரிவர்த்தனை நடைமுறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தியதோ, அதுபோல இ-காமர்ஸ் நடைமுறையில் ஓஎன்டிசி (Open Network for Digital Commerce) மிகப் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் அமேசான், பிளிப்கார்ட்; உணவு டெலிவரியில் சொமேட்டோ, ஸ்விக்கி ஆகியவை முதன்மை இடம் வகிக்கின்றன.
  • இந்த நிறுவனங்கள் இந்திய தொழில் நடைமுறையில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. அதேசமயம், இந்நிறுவனங்களால் பெரும் பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்நிறுவனங்களால், உள்ளூர் கடைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
  • இந்தியாவில் 1.2 கோடி சிறு வியாபாரிகள் உள்ளனர். இவர்களில் வெறும் 15,000 பேர் மட்டுமே அமேசான்,பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் மூலமாக வணிகத்தில் ஈடுபடுகின்றனர். சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு இன்னும்இ-காமர்ஸ் தளங்கள் முழுமையாக சென்றடையவில்லை.
  • அமேசான், பிளிப்கார்ட்டின் அதீத வளர்ச்சியால், தங்கள் வியாபாரம் முடங்கி வருவதாக வர்த்தகர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். தவிர, இந்நிறுவனங்கள் வழியாக வர்த்தகம் செய்வதற்கு அவர்கள் அதிக அளவில் கமிஷன் செலுத்த வேண்டி உள்ளது.
  • இந்நிலையில், இ-காமர்ஸ் செயல்பாட்டை ஜனநாயகப்படுத்தி, அதை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்லும் நோக்கில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள கட்டமைப்புதான் ஓஎன்டிசி.
  • ஆன்லைன் மூலமான வர்த்தகத்துக்கான ஒருபொதுத் தளமாக ஓஎன்டிசி செயல்படும். அதாவது, ஓஎன்டிசியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். சிறிய மளிகைக் கடை வைத்திருப்பவர்கூட, தன் கடையை ஓஎன்டிசியில் பதிவு செய்துகொள்ள முடியும். இவ்வாறு ஊரில் இருக்கும் மளிகைக் கடை, ஜவுளிக் கடை என சிறு வர்த்தகர்கள் முதல் பெரிய வர்த்தகர்கள் வரையில் ஓஎன்டிசி தளத்தில் பதிவு செய்வது வழியாக உள்ளூர் வர்த்தகம் மேம்படும் என்று கூறப்படுகிறது.
  • செயலி அல்ல.. ஓஎன்டிசி என்பது செயலி கிடையாது. யுபிஐ போல் அது ஒரு கட்டமைப்பு. போன்பே, கூகுள் பே போன்ற செயலிகள் யுபிஐ கட்டமைப்பை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை சேவை வழங்குகின்றன. அதேபோல், ஓஎன்டிசி கட்டமைப்பைப் பயன்படுத்தி வேறு செயலிகள் சேவைகள் வழங்கும். தற்போது பேடிஎம் செயலியானது ஓஎன்டிசி கட்டமைப்பைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது.
  • இந்தியாவில் ஓஎன்டிசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. தற்போதுபெங்களூரு போன்ற குறிப்பிட்ட சில நகரங்களில்மட்டும் ஓஎன்டிசி முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் முழுமையான அளவில்பயன்பாட்டுக்கு வரவில்லை.
  • ஆனால், இப்போதே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நகரங்களில் சோமேட்டா, ஸ்விக்கிக்கு சவாலாக ஓஎன்டிசி உருவெடுத்திருக்கிறது. சில்லறை வணிகத்தில் மட்டுமல்ல, ஓலா, ரேபிடோ உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக பயண சேவைத் துறையிலும் ஓஎன்டிசி செயல்படத் தொடங்கி இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில், ஓஎன்டிசிவழியாக இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சேவை நடைமுறைகள் மிகப் பெரும் அளவில் மாற்றமடைய உள்ளன.

நன்றி: தி இந்து (22 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories