TNPSC Thervupettagam

ஓங்கும் தெற்குலகின் குரல்: பிரிக்ஸ் மாநாடு

August 28 , 2023 503 days 451 0
  • தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் நடைபெற்று முடிந்த 15-ஆவது மாநாட்டில், ‘பிரிக்ஸ்கூட்டமைப்பில் புதிதாக ஆறு நாடுகளை இணைக்க ஒருமித்த முடிவு எட்டப் பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற 14-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் நீட்சிதான் இது.
  • பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஆறு நாடுகள் 2024, ஜனவரி 1-ஆம் தேதிமுதல் அதிகாரபூா்வமாக இணையவுள்ளன. இவற்றில் எகிப்து, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை மத்திய கிழக்கின் முக்கியமான நாடுகள். எத்தியோப்பியா ஆப்பிரிக்காவையும்,ஆா்ஜென்டீனா தென் அமெரிக்காவையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
  • ஏற்கெனவே உலக மக்கள்தொகையில் 40%, உலக ஜிடிபியில் 23% என வலிமையுடன் கூடிய கூட்டமைப்பாக பிரிக்ஸ் உள்ள நிலையில், புதிய நாடுகளின் வருகையின் மூலம் மக்கள் தொகை பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும். அத்துடன் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இணைக்கப் படுவதன் மூலம் கூட்டமைப்பு மேலும் வலுவடையும் என்பதில் சந்தேகமில்லை.
  • பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்காக 40 நாடுகள் விருப்பம் தெரிவித்து, அவற்றில் 22 நாடுகள் முறைப்படி விண்ணப்பித்திருந்த நிலையில் ஆறு நாடுகளை இணைக்க ஒருமித்த முடிவு எட்டப்பட்டது முக்கியமான விஷயமாகும். ஏனெனில் பிரிக்ஸ் கூட்டமைப்பை பெரிய அளவில் விரிவுபடுத்துவதற்கு இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது. விரிவுபடுத்தினால் அதில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதுதான் அந்தத் தயக்கத்துக்குக் காரணம்.
  • ஐ.நா. பாதுகாப்பு கெளன்சில் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் கோரி வரும் நாடுகளுள் இந்தியா முதன்மையானதாக உள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு கெளன்சிலில் நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகால கோரிக்கை. அதனால், பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா ஆட்சேபணை தெரிவித்தால் அது நியாயமாக இருக்காது.
  • மாறி வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப கூட்டமைப்பில் மாற்றங்களும் சீா்திருத்தங்களும் புகுத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு விடுக்கும் முக்கியமான செய்தியாகும்என பிரிக்ஸ் மாநாடு நிறைவடைந்ததும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது இந்தியாவின் நிலையை தெளிவுபடுத்துகிறது. மேலும், பிரிக்ஸின் உலகளாவிய செல்வாக்கை அதிகரிக்கவும், பலதரப்பு மற்றும் தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவாலை எதிர்கொள்ளவும் பிரிக்ஸ் விரிவாக்கத்தை ஒரு வாய்ப்பாக இந்தியா பார்க்கிறது.
  • பிரிக்ஸ் மாநாட்டை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று பொதுச் செலாவணி. பொதுச் செலாவணியை நடைமுறைப் படுத்துவதில் இந்தியா ஆா்வம் காட்டாமல், அந்தந்த நாட்டின் செலாவணியில்தான் வா்த்தகம் என்பதை முன்னெடுத்தது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பொதுவான செலாவணியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தொடா்பாக ஆராய்வதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட நாடுகளின் நிதியமைச்சா்கள்-மத்திய வங்கி ஆளுநா்களிடம் ஒப்படைக்கப் படும் என மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
  • அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாட்டுக்குள் அதற்கான அறிக்கையை அவா்கள் தாக்கல் செய்வா். அதன் அடிப்படையில் பொதுச் செலாவணி குறித்து முடிவெடுக்கப்படும்.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கத்தில் பெரிதும் ஆா்வம் காட்டிய நாடு சீனாதான். இந்தக் கூட்டமைப்பில் 70 சதவீத பொருளாதாரத்துடன் சீனா முதலிடத்திலும், 13 சதவீத பொருளாதாரத்துடன் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. தனது பொருளாதார செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தும் ஒரு வாய்ப்பாக பிரிக்ஸ் விரிவாக்கத்தை சீனா பார்க்கிறது.
  • ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து, மேலை நாடுகளால் ரஷியா தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறது. ரஷியாவை ஆதரிக்கும் சீனாவுக்கு இப்போதைய சூழலில் மேலை நாடுகள் இடம்பெறாத பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவுபடுத்தப்படுவதில் தனிப்பட்ட விருப்பமும் உள்ளது.
  • எல்லை பிரச்னையால் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்தியாவும், சீனாவும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பது ஆச்சரியமென்றால், பரம எதிரிகளாக கருதப்படும் ஈரானும், சவூதி அரேபியாவும் இந்தக் கூட்டமைப்பில் இணைக்கப்படுவது மற்றோர் ஆச்சரியம். அண்மையில் சீனாவின் ஏற்பாட்டில் ஈரானும், சவூதி அரேபியாவும் பகையை மறந்து உறவைத் தொடங்கியுள்ளபோதிலும் இதுபோன்ற இணக்கம் இல்லாத நாடுகளின் வருகை பிரிக்ஸ் கூட்டமைப்பின் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு சவாலானதாக மாறக்கூடும்.
  • மேற்கு வல்லரசுகளுக்கு மாற்றுக் கூட்டமைப்பான பிரிக்ஸ், தெற்குலகின் குரலாக அறியப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு விரிவாக்கப்படுவதன் மூலம் தெற்குலகின் குரல் ஓங்கி ஒலிக்க வழி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அது கூட்டமைப்பின் ஒருமித்த குரலாக இருக்க வேண்டுமே, தவிர மேலை நாடுகளுக்கு எதிரான ரஷியாவின் அல்லது சீனாவின் தனித்த குரலாக இருக்க இந்தியா அனுமதிக்கக் கூடாது.
  • எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
  • செய்தற்கு அரிய செயல்.
  • கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும்.
  • திருக்குறள் (489) அதிகாரம்: காலம் அறிதல்

நன்றி: தினமணி (28– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories