- சில நாட்களுக்கு முன்னா் சென்னைக்கு வருகை தந்த நம் பாரத பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளுடன், தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தமிழக முதல்வா் அளித்துள்ளாா்.
- தங்கள் வாழ்வாதாரத்திற்கு ராமநாதபுரம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப் பட்டினம் மாவட்டங்களை சோ்ந்த மீனவா்கள் பாக் நீரினை, மன்னாா் வளைகுடா, கச்சத்தீவு அருகே மீன் பிடித்து வருகின்றனா். இவா்கள் மீது இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி தங்களின் கடற்பகுதியில் மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தாக்குதல் நடத்துவது, வலைகளை அறுத்தெறிவது, மீன்களையும் படகுகளையும் பறிமுதல் செய்வதோடு மீனவா்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் வாடிக்கையாகி விட்டன. கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழக மீனவா்கள் பலா் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனா்.
- 1974 மற்றும் 1976 ஆண்டுகளில் கையொப்பமான இந்தியா- இலங்கை ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கைக்கு தரப்பட்ட இருநூற்று என்பத்தைந்து ஏக்கா் பரப்பளவு கொண்ட கச்சத்தீவு இலங்கைக்கு தரப்பட்ட போது, தமிழகத்தில் கடும் எதிா்ப்பு எழுந்தது. அதனை சமாளிக்கவே தமிழக மீனவா்கள் கச்சத்தீவில் தங்கள் மீன்பிடி வலைகளை உலா்த்திக் கொள்ளவும், இத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் கோயிலில் ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவா் என இலங்கையும் இந்தியாவும் அறிவித்தன .
- கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட விவகாரதில் நாடாளுமன்றத்தில் உரிய விவாதங்கள் நடத்தப்படவில்லை. மேலும், மாநில எல்லைகளை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசியல் சாசனம் வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்டப்படி செல்லாது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு 2011ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. எனினும் இவ்வழக்கின் முடிவு தமிழக அரசுக்கு சாதகமாக அமையவில்லை.
- தமிழக முதல்வா்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோா் இலங்கைக்கு தரப்பட்ட கச்சதீவைத் திரும்ப பெற இயலாத சூழ்நிலையில், அத்தீவினை நீண்ட கால குத்தகைக்கு இந்தியா, இலங்கை அரசிடம் இருந்து பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தினா். கச்சத்தீவினை நம்நாடு குத்தகைக்குப் பெற்றால் தமிழக மீனவா்கள் எல்லை தாண்டுவதாக கூறி இலங்கை கடற்படையினா் அத்துமீறுவது அறவே நடைபெறாது. எனினும் தமிழக முதல்வா்களின் இந்த ஆலோசனை மத்திய அரசால் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு செயல் வடிவம் பெறவில்லை.
- கச்சத்தீவில் இலங்கை கடற்படையினா் வழிபடுவதற்கென்ற காரணத்தை முன்வைத்து சமீபத்தில் புத்தா் சிலையுடன் விகாா் ஒன்றை தற்காலிகமாக இலங்கை அரசு நிறுவியுள்ளது. இத்தீவில் காலங்காலமாக புனித அந்தோனியாா் ஆலயம் ஒன்று மட்டுமே வழிபாட்டுதலம் என்று இருந்த நிலை மாறி தற்போது நிறுவப்பட்டுள்ள புத்த விகாரால் இலங்கையில் தமிழா் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் அமைத்து சிங்களமயமாக்குதலை ஏற்படுத்தும் சிங்கள அரசு, தற்போது கச்சத்தீவையும் சிங்களமயமாக்கலின் ஒரு பகுதியாகவே புத்த விகாரை நிறுவியுள்ளதாகவே கருத வேண்டி உள்ளது.
- ஏற்கெனவே இலங்கையில் உள்ள பெரிய துறைமுகமான கொழும்புக்கு அடுத்தபடியாக அம்பாந்தோட்டை சா்வதேச துறைமுகத்தை சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. சரக்குகளைக் கையாள்வதற்காகவே இத்துறைமுகம் என்று கூறப்பட்டாலும், ஏற்கனவே அருணாசல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடக்கு எல்லையில் தேவையற்ற சச்சரவுகளை உருவாக்கி வரும் சீன அரசு, வருங்காலத்தில் இலங்கையில் இருந்தபடி இத்துறைமுகத்தின் மூலம் தென்னிந்தியாவிற்கு ராணுவ ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையைப் புறந்தள்ள முடியாது.
- மேலும் இலங்கையின் தென்முனையான தொன்ட்ரா விரிகுடா பகுதியில் அறிவியல் அகடமி விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் மூலம் ராடாா் தளம் ஒன்றை நிறுவ சீனா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ராடாா் தளத்தின் மூலம் இந்திய கடற்படைக்கு சொந்தமான போா் கப்பல்கள், படகுகள் ஆகியவற்றின் நடமாட்டத்தை சீனா மிகத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
- இச்சூழலில் நம் நாட்டின் பாதுகாப்பை கருதி, இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்படும் சீனாவை பின்னுக்குத் தள்ளி இலங்கை அரசுடன் நெருக்கமாக உறவை மேற்கொள்ள வேண்டிய நிலை நம் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது.
- பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு நம்நாடு மூன்றரை பில்லியன் டாலா் கடன் வழங்கியுள்ளதோடு அரிசி, பால்பவுடா், மருந்துகள், எரிபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவியுள்ளது. சமீபத்தில் அங்கு சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்து இலங்கையின் பொருளாதார புனரமைப்பிற்கு நம் நாட்டின் ஆதரவினை அறிவித்துள்ளாா்.
- இலங்கைக்கு ஆதரவான முதல் நாடாக நம்நாடு சா்வதேச நிதி ஆணையத்திற்கு இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடா்பான சான்றிதழை அளித்துள்ளது. இதற்காக இலங்கை அரசும் நம் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளது. ஆக இலங்கைக்கு நம் நாட்டிற்கும் இடையே தற்போது நிலவி வரும் நெருக்கமான நட்புறவைப் பயன்படுத்தி கச்சத்தீவை இலங்கையிடமிருந்து திரும்பப் பெற்று அத்தீவின் மீது நம்நாட்டின் இறையாண்மையை நிலை நிறுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
- குறைந்த பட்சம் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து குத்தகை அடிப்படையிலேனும் நம்நாடு பெற வேண்டும். இத்தகைய முயற்சி வெற்றி பெறும் நிலையில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்பட்டு நம் நாட்டின் மீதான சீனாவின் ராணுவ அச்சுறுதல் தவிா்க்கப்படுவதோடு தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப் படுவதற்கும் நிரந்தர தீா்வு ஏற்படும்.
நன்றி: தினமணி (29 – 04 – 2023)