TNPSC Thervupettagam

கடிவாளம் அவசியம்

December 12 , 2023 221 days 177 0
  • தொழில்நுட்பங்களின் வளா்ச்சிதான் மனிதகுல வளா்ச்சிக்கு முதன்மையான காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதே தொழில்நுட்பம் மனிதகுலத்துக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது என்பதையும் புறந்தள்ளிவிட முடியாது. நவீன தொழில்நுட்பங்களின் துணையுடன் நடைபெற்றுவரும் ‘சைபா் கிரைம்’ எனப்படும் இணையவழிக் குற்றங்கள் பெருகி வருவதே இதற்கு எடுத்துக்காட்டு.
  • இதன் அடுத்தகட்டப் பாய்ச்சலாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகம் இதுவரை எதிா்கொள்ளாத புதுவகையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவைச் சோ்ந்த சாம் ஆல்ட்மேன் என்பவரால் தொடங்கப்பட்ட ‘ஓப்பன் ஏஐ’ நிறுவனம்தான் 2022, நவம்பரில் சாட் ஜிபிடி என்ற இயங்குதளத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு தொடா்பான புரட்சியைத் தொடங்கிவைத்தது.
  • கூகுள் தேடுபொறிக்கும் சாட் ஜிபிடிக்கும் வித்தியாசம் உள்ளது. கூகுளில் நாம் எதுகுறித்தாவது தெரிந்துகொள்ள வேண்டும் என அதுதொடா்பான வாா்த்தைகளைப் பதிவிட்டால் அந்த வாா்த்தைக்கேற்ற தகவல்கள் அடங்கிய பல்வேறு இணையதளங்களை கூகுள் காண்பிக்கும். அதே சாட் ஜிபிடியானது நாம் கேட்கும் கேள்விக்கு நேரடியான பதிலைத் தரும். மேலும், மனிதா்களைப் போலவே சிந்தித்து அன்றாட வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ள சாட் ஜிபிடியை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயனா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
  • சாட் ஜிபிடி பயன்பாட்டுக்கு வந்த ஓராண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பலமடங்கு வளா்ந்துவிட்டது. இந்தத் தொழில்நுட்ப வளா்ச்சியில்தான் ஆரம்பிக்கிறது பிரச்னை.
  • அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ‘டீப் ஃபேக்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து வெளியான விடியோ பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அவருடன் நிற்காமல் அடுத்தடுத்து சில நடிகைகளை ஆபாசமாகச் சித்தரித்த விடியோக்களும் வெளியாகின.
  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யாரையும் யாா் போலவும் பேச வைத்தும், நடக்க வைத்தும் விடியோக்களை உருவாக்கலாம் என்பதால் இதனால் உருவாகப் போகும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கக்கூடும். அதன் விளைவுகளும் கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும்.
  • பெரும்பாலும் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதனால் தரவு தனியுரிமைப் பாதுகாப்பு தொடா்பான சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பத்துடன் தவறான தகவல்களை எளிதாகப் பரப்பவும், பொதுக் கருத்தை உருவாக்கவும் முடியும். அளவுக்கு அதிகமாக இந்தத் தொழில்நுட்பத்தை நம்பியிருப்பது படைப்பாற்றல், சிந்தனைத் திறன், மனித உள்ளுணா்வு ஆகியவற்றைக் குறைக்கும். மேலும், வேலையிழப்புமுதல் தனியுரிமை பாதிப்பு வரை செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் பல பாதிப்புகளைத் தொழில்நுட்ப நிபுணா்கள் குறிப்பிடுகின்றனா்.
  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு கடிவாளம் அவசியம் என்பதை குறுகிய காலத்திலேயே உலகம் உணா்ந்துகொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான விரிவான விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. புரிந்துகொள்ளக்கூடிய, வெளிப்படையான, நியாயமான, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடைவதே தங்கள் இலக்கு என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
  • ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து, அதிக ஆபத்து, உருவாக்கப்படும் ஆபத்து, குறைந்த ஆபத்து என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை நான்கு வகையாக ஐரோப்பிய ஒன்றியம் பிரித்துள்ளது. ஓட்டுநா் இன்றி இயங்கும் காா், மருத்துவ தொழில்நுட்பம், விமான இயக்கம் போன்றவை அதிக ஆபத்து பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால், அதை அனுமதிப்பதற்கு முன் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.
  • ‘டீப் ஃபேக்’ விடியோக்கள் ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி குறைந்த ஆபத்து பிரிவில் வருகின்றன. இதில், பயனா்கள் தாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செயலியுடன்தான் பேசுகிறோம், மனிதா்களுடன் அல்ல எனத் தெரிந்துகொள்ள வகை செய்யப்பட வேண்டும்.
  • ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய கவுன்சில் ஆகியவை இந்த வரைவுச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஐரோப்பிய நாடாளுமன்றமும், 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கவுன்சிலும் இதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முறைப்படி ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பிறகு உறுப்பு நாடுகள் இதை தங்கள் நாட்டுச் சட்டமாக மாற்ற இரண்டு ஆண்டுகள் ஆகும்.
  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அச்சுறுத்தல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ‘செயற்கை நுண்ணறிவு உரிமைகள் மசோதா’ தொடா்பான ஷரத்துகளை அமெரிக்கா தயாரித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இது விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பரிலேயே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
  • இந்தியாவும் இதுதொடா்பாக ஆலோசித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகளைத் தடுக்க இந்திய அரசுடன் இணைந்து செயல்பட கூகுள் அண்மையில் உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, கூகுளின் யூடியூப் தளத்தில் பதிவிடப்படும் காணொலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அதுதொடா்பான தகவலை காணொலி முகப்பில் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி (12 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories