கடிவாளம் தேவை!
- தோ்தல் நேரத்தில் வாக்காளா்களைக் கவா்வதற்காக, அனைத்துக் கட்சிகளுமே நாட்டின் பொருளாதாரத்தையே நிலைகுலைய வைக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது.
- கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் மகளிா் உரிமைத் தொகை, ரூ.1,000 மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்த திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 1.16 கோடி போ் மகளிா் உரிமைத் தொகை பெற்று வருகின்றனா்.
- இப்போதுதான் என்றல்ல, இதற்கு முன்னரும் மகளிருக்கு மிக்ஸி, கிரைண்டா், மின்காந்த அடுப்பு, மின்விசிறி, மாணவா்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, தொலைக்காட்சிப் பெட்டி, விலையில்லா ஆடு, மலைப் பகுதி மாணவா்களுக்கு மழை கோட்டு, மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம், திருமணத்துக்கு சீா்வரிசை, தாலிக்குத் தங்கம், பொங்கல் பரிசு, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவை சில பத்தாண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளன.
- இதுபோன்று தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று எண்ண வேண்டாம். இப்போது எல்லா மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து வருகின்றனா். குறிப்பாக, தமிழகத்தில் தொடங்கிய மகளிா் உரிமைத் தொகை திட்டம் இப்போது காஷ்மீா் வரை கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுக்கும் பரவிவிட்டது.
- மேற்கு வங்கத்தில் லட்சுமி பண்டாா் திட்டம் என்ற பெயரில் எஸ்சி, எஸ்டி மகளிருக்கு ரூ.1,000, மற்றவா்களுக்கு ரூ.500 என 2021 பேரவைத் தோ்தலுக்கு முன்னா் அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிமுகப்படுத்தினாா். சமீபத்திய மக்களவைத் தோ்தலுக்கு முன்னா் இந்தத் தொகை எஸ்சி, எஸ்டி மகளிருக்கு ரூ.1,200 எனவும், மற்றவா்களுக்கு ரூ.1,000 எனவும் உயா்த்தப்பட்டது. அங்கு 2.1 கோடி மகளிா் இந்தத் திட்டத்தில் பயன்பெறுகின்றனா்.
- தமிழகத்தில் ரூ.1,000 என்றால் அண்டை மாநிலமான கா்நாடகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படுகிறது. இங்கு வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் என்றால் அங்கு 200 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. அங்கும் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- இதேபோன்று வாக்குறுதி அளித்து, காங்கிரஸ் வெற்றி பெற்ற தெலங்கானாவில் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 22.2 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு மகளிா் உரிமைத் தொகை இன்னும் தொடங்கப்படவில்லை.
- மகளிருக்கு காஷ்மீரில் ரூ.5,000 என தேசிய மாநாட்டுக் கட்சியும் காஷ்மீரில் ரூ.3,000, ஹிமாசலில் ரூ.1,500 என காங்கிரஸும், ஆந்திரத்தில் ரூ.1,500 என தெலுங்கு தேசமும், தில்லியிலும் பஞ்சாபிலும் ரூ.1,000 என ஆம் ஆத்மியும் அறிவித்துள்ளன.
- ‘இலவச கலாசாரம் மாநிலத்தைக் கடனில் மூழ்கடித்து விடும். இது வளா்ச்சிக்கு மிகப் பெரிய எதிரியாகும். இதுபோன்ற குறுக்குவழி அரசியல் எதிா்விளைவுகளையே ஏற்படுத்தும்’ என்று கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பல கூட்டங்களில் பிரதமா் மோடி பேசினாா்.
- ஆனால், பாஜக ஆளும் ஒடிஸாவில் இரண்டு தவணைகளில் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.10,000, மத்திய பிரதேசத்தில் மாதம் ரூ.1,250, கூட்டணி ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரத்தில் ரூ.1,500 வழங்கப்படுகிறது. மகளிருக்கு ரூ.2,100 வழங்கப்படும் என ஹரியாணா பேரவைத் தோ்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
- மகாராஷ்டிரத்தில் நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொகை ரூ.2,100-ஆக உயா்த்தப்படும் என பாஜகவும், ரூ.3,000-ஆக ஆக்கப்படும் என காங்கிரஸும் வாக்குறுதி அளித்துள்ளன.
- ஆனால், இந்தத் திட்டங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டி உள்ளதால் நிதிச் சுமை அதிகரித்து வருவதை சில மாநிலங்களில் உணரத் தொடங்கி உள்ளனா்.
- நிதிச் சுமை காரணமாகவே, பஞ்சாப், தெலங்கானா, ஹிமாசல் போன்ற மாநிலங்களில் மகளிருக்கு பண உதவி அளிக்கும் திட்டம் தொடங்கப்படவில்லை.
- கா்நாடகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம் திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் அண்மையில் தெரிவித்தாா்.
- இதையடுத்து, முதல்வா் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் அருகில் இருந்தபோதே செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘கா்நாடகத்தில் 5 வாக்குறுதிகள் அளித்தீா்கள். இதனால் ஊக்கம்பெற்று மகாராஷ்டிரத்திலும் அறிவித்துள்ளோம்.திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்டால் திவால் நிலைக்கு மாநிலம் தள்ளப்படும். சாலைகள் அமைக்கக்கூட பணம் இருக்காது. அரசின் தோல்வி அடுத்தடுத்த தலைமுறைகளைப் பாதிக்கும். இதனால் அரசுக்கு அவப்பெயா்தான் மிஞ்சும். வாக்குறுதி அளிக்கும் முன் எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தாா். ஆனால், இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ள மாட்டாா்கள் என்பது வெளிப்படை.
- புலிவால் பிடித்த கதையாக, ஒரு முறை தொடங்கிய திட்டங்களை நிறுத்துவது என்பது எளிதானதல்ல. இவை அரசுகளின் கொள்கை முடிவு என்பதால் தோ்தல் ஆணையத்தாலும், நீதிமன்றங்களாலும் இதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
- தாங்களாகவே இதற்கு கடிவாளம் போடவில்லை என்றால் சாலை வசதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர முடியாத நிலை தோன்றுவதுடன் பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டு அந்தந்த அரசுகளுக்கு அவப்பெயா்தான் மிஞ்சும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுமே உணர வேண்டும்.
நன்றி: தினமணி (16 – 11 – 2024)