TNPSC Thervupettagam

கடும் வறட்சி! பலியாகும் தென் ஆப்பிரிக்கக் குழந்தைகள்

July 20 , 2024 10 hrs 0 min 9 0
  • தென் ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் வறட்சி லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியை கடுமையாக பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக அவர்களது வீடுகளில் இருந்து வருகிறார்கள். வறட்சியால் எப்போதும் ஆப்பிரிக்கா கண்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
  • எல்நினோ காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகளவில் வானிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வானிலை மட்டுமின்றி பருவநிலை மாற்றம் மிகப் பெரிய அபாயமாக உருவெடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பலவும் பாதிப்புகளை சந்தித்து வந்தாலும், மிகவும் மோசமான பாதிப்பினை ஆப்பிரிக்க நாடுகளே சந்திக்கின்றன. வறட்சி, விளைச்சல் பாதிப்பு போன்றவை ஆப்பிரிக்க நாட்டு மக்களை குறிப்பாக குழந்தைகளை பல நேரங்களில் பசியின் பிடியிலேயே வைத்துள்ளது.
  • ஆப்பிரிக்க மக்கள் பலரும் தங்களது கண்முன்னே ஒரு தலைமுறை அழிவுக்குள்ளாவதை பார்த்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவின் வடகிழக்கு பகுதியில் முட்ஸி மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு விளைபயிர்கள் அவர்கள் உயிர்வாழத் தேவையான மிக முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறிதான். விளைச்சல் பாதிக்கப்பட்டால் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அவர்களுக்கு வருமானம் என்பது இல்லாமல் போகும்.
  • குடும்பத்துக்கு வருமானம் இல்லாதபோது, குழந்தைகளை 25 டாலர்கள் செலுத்தி பள்ளியில் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கான சீருடையை வாங்கிக் கொடுப்பது எல்லாமும் அந்த மக்களின் சக்திக்கு மீறிய விஷயமாக மாறிவிடுகிறது. இதனால், அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிடுகின்றனர். குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி என்பது ஒருபோதும் கிடைக்காத சூழலே நிலவுகிறது. அப்படியே குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும், அவர்களுக்கு மதிய உணவு என்பது கிடையாது. உணவின்றி குழந்தைகள் பள்ளியில் இறக்க நேரிடும் அவலநிலையும் உள்ளது. குடும்பங்கள் பலவும் ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
  • எல்நினோ விளைவால் குழந்தைகளே அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். எல்நினோவால் தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பகலில் அதிக அளவில் வெப்பம் நிலவுகிறது. எல்நினோ விளைவால் ஏற்படும் திடீர் வெள்ளப் பெருக்கும் ஆப்பிரிக்க மக்களை வஞ்சிக்கிறது. விளைநிலங்கள் வறட்சியால் கடும் பாதிப்புக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப்படுகிறது. 60 சதவிகித ஜிம்பாப்வே மக்கள் விவாசயத்தினை நம்பியே இருப்பதால், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.
  • ஜிம்பாப்வேவில் 5,80,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அமைப்பகம் எச்சரித்துள்ளது. எல்நினோ விளைவு பொருளாதார கடினங்களோடு, காலரா போன்ற நோய்கள் பரவவும் காரணமாக அமைகிறது.
  • குழந்தைகளின் கல்வி மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பள்ளிக்குச் சென்று கல்வி கற்பது எட்டாக் கனியாக மாறியுள்ளது. பள்ளியிலிருந்து இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைகள் வேலைக்கு செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் பதின்பருவ பெண் குழந்தைகள் மாதவிடாய் காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
  • அதன் காரணத்தினால் அவர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்த்து விடுகின்றனர். மேலும், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது, வீட்டில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காகவும் அவர்கள் பள்ளிப் படிப்பை இடையிலேயே கைவிடும் நிலை ஏற்படுகிறது. பொருளாதார சுமைகள் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர்.
  • ஜிம்பாப்வேவில் உள்ள 20 லட்சம் குழந்தைகளின் கல்வியை அங்கு நிலவும் கடும் வறட்சி கேள்விக்குறியாகவே வைத்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2015-2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்நினோ விளைவினால், 45,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிப் படிப்பை கைவிட்டனர். ஜிம்பாப்வே மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நாடுகளும் இதுபோன்ற வானிலை மற்றும் பருவநிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
  • குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ச்சியாக வருவதை உறுதி செய்ய ஜிம்பாப்வே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஒருவேளை உணவு வழங்குவது, குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி செய்வது போன்ற விஷயங்களை அரசு முன்னெடுத்துள்ளது. குழந்தைகளின் கல்வி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இயற்கையினால் பாதிப்புக்குள்ளாகும் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க குழந்தைகளின் கல்விக்கு என்று விடிவுகாலம் பிறக்குமோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நன்றி: தினமணி (20 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories