TNPSC Thervupettagam

கட்சிகளின் வெற்றி, தோல்வி: தேர்தல் ஆணையம் பலிகடாவா?

February 21 , 2025 2 days 12 0
  • இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடைசியாக அவர் அரசியல் கட்சிகளுக்கு ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டுதான் சென்றிருக்கிறார்.
  • ‘‘தேர்தல் நடைபெறும் போது ஒவ்வொரு படிநிலையிலும் ஏதாவது தவறு நேர்ந்தால் ஆட்சேபனை எழுப்பலாம். மேல்முறையீடு செய்யலாம். சந்தேகத்தை உருவாக்க முயற்சிப்பது விரும்பத்தகாத செயல். தேர்தல் முடிவு சாதகமாக இல்லை என்பதற்காக அதை ஏற்காத கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் மிக வசதியாக பலிகடா ஆக்கப்படுகிறது’’ என்று தன் ஆதங்கத்தை விட்டு சென்றிருக்கிறார்.
  • தேர்தலில் தோற்றுப் போகும் கட்சி, குறிப்பாக ஆளும் கட்சி தோற்றுப் போனால் தேர்தல் ஆணையத்தை குறி வைப்பது வழக்கமாகி விட்டது. முதலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை குறை கூறுவது. ஏஐ தொழில்நுட்பத்துக்கு வந்துவிட்ட நிலையிலும், பழைய வாக்குச் சீட்டு முறை பற்றி பேசுகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை.
  • மாநில தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ... எத்தனை தொகுதிகள், ஒவ்வொரு தொகுதியிலும் மாறுபடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, அதற்கேற்ப வாக்குச் சாவடிகள், எத்தனை வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை வாக்காளர்கள், அவர்களில் வாக்களித்தவர்கள் எத்தனை பேர்... இவ்வளவு விஷயங்களையும் துல்லியமாக கணக்கிட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்து ஒரு கட்சிக்கு சாதகமாக மாற்ற முடியுமா? இவை எல்லாம் நடைமுறை சாத்தியமா? யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
  • ஆனால், தோல்விக்கு மட்டும் மின்னணு இயந்திரங்கள் காரணம்?அடுத்து, ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது அனைத்துக் கட்சிகளுமே விதிமீறலில் ஈடுபடுகின்றன.
  • ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு, தேர்தலில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது அரசியல் கட்சிகளின் லாவணியை விசாரித்து எது சரி, எது தவறு என்று தீர்ப்பு சொல்ல வேண்டுமா? உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய தேர்தலில் பிரச்சாரத்தை கண்காணிப்பது, பணம் பட்டுவாடாவை தடுப்பது, வன்முறை, வாக்குச் சாவடி கைப்பற்றலை தடுப்பது, வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது என ஏகப்பட்ட பணிகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்த தேர்தல் ஆணையத்துக்கு வழிவிட வேண்டும்
  • தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அந்தந்த கட்சிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தது என்பதை உணரவேண்டும். அதுவரை தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள ஞானேஷ் குமார் சொல்வது போல் “தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும்'' என்ற உறுதிமொழியை நம்புவதுதான் நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories