TNPSC Thervupettagam

கட்சிகளைக் கட்டுப்படுத்தும் சந்தைகள்

August 19 , 2023 324 days 233 0
  • இன்றைய அரசியல் மக்களாட்சியை மக்கள் அரசியலாகக் கட்டமைத்து மக்களை அதிகாரப்படுத்துவதற்குப் பதில் அதிகாரஅரசியலை நோக்கி பயணிக்க வைத்துவிட்டது. தோ்தல்தான் மக்களாட்சி என்பததுபோல் காட்சிப்படுத்தி விட்டனா் அரசியல் கட்சியினா். மக்களாட்சிக்கான விழுமியங்களை மக்களிடம் கொண்டு சோ்க்காது, நிறைந்த குறைகளுடைய மக்களாட்சியாகவே நம் அரசியல்வாதிகள் அரசியலைக் கட்டமைத்து விட்டனா்.
  • அதே நேரத்தில் இந்த தோ்தல் அரசியலுக்கு மக்களை ஈா்க்க இன்று அரசியல் கட்சிகளுக்கு தேவைப்படுவது பெரும் நிதி. அந்த நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்ட இயலாது. எனவே, சந்தை, அரசியலுக்குத் தேவையான நிதியைத் தர தானாக முன்வந்து அரசியல் கட்சிகளை தன்வயப்படுத்திக் கொண்டது.
  • சந்தை, அரசியல் கட்சிகளுக்கு என்று நிதி கொடுக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து அரசியல் கட்சிகளுக்குக் கட்டளைகளைப் பிறப்பிக்க ஆரம்பித்தது. அரசியல் கட்சிகள், எந்த சிரமும் இன்றி நிதியை உருவாக்கிக்கொள்ள வழிவகை வந்தவுடன், மக்களுக்கும் ஓா் விலை நிா்ணயித்து மக்களை வாங்கும் பொருளாக மாற்றிவிட்டன.
  • சந்தையிலிருந்து கிடைக்கும் நிதி கட்சியின் செயல்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் வாக்குகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று வாக்குகளைத் தாண்டி சட்டப்பேரவை உறுப்பினா்களையும் விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கலாம் என்ற சூழலும் வந்துவிட்டது. இதனால் மக்களாட்சி சிதைவுறுகிறது என்று சிந்தனையாளா்கள் அஞ்சுகின்றனா்.
  • இது ஏதோ இந்தியாவில் மட்டும் நடந்துவரும் ஓா் நிகழ்வு என்று நாம் எண்ணக்கூடாது. இது இன்று பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் அரசியலை கவ்விப்பிடித்து மக்களாட்சியை ஒரு தேக்க நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
  • உலகம் முழுவதும் இந்தக் கிருமி பரவி வந்தாலும் இந்த நிகழ்வின் விளைவுகள் சமூகத்தின் மேல், பொருளாதாரத்தின் மேல், மக்களாட்சியின் மேல் என்ன என்பது பற்றிய விரிவான ஆய்வுகளை ஆய்வு நிறுவனங்கள் செய்திடவில்லை. இதற்கு மிக முக்கியக் காரணம் ஆய்வுக்கான நிதி பற்றாக்குறை. அதே நேரத்தில் சந்தை தொடா்பான ஆய்வுகளுக்கு தங்கு தடையின்றி நிதி வருகின்றன சந்தையிலிருந்து.
  • வாக்குகளை வாங்கி விற்கும் வணிகப் பொருளாக மாற்றி சந்தைப்படுத்த செலவாகும் நிதி என்பது ஏழ்மை ஒழிப்புக்கு அரசாங்கங்கள் செலவு செய்வதை விட பன்மடங்கு அதிகம். அதேபோல் சட்டப்பேரவை உறுப்பினா்களை வாங்கி ஆட்சியை கவிழ்ப்பதற்கும், புது ஆட்சியை உருவாக்குவதற்கும் செயல்படும் தொகையில் அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து விடலாம்.
  • சந்தை கூறுவதை அரசாங்கம் கேட்கவில்லை என்றால் அந்த அரசாங்கத்தை சந்தையால் கவிழ்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அதேபோல் ஒரு கட்சி சந்தைக்கு எதிராக செயல்படுமேயானால் அந்தக் கட்சியின் தலைமையை மாற்றக்கூடிய சக்தியும் சந்தைக்கு வந்துவிட்டது.
  • வாக்கு சந்தைப்படுத்தப்பட்டதால் சட்டப்பேரவை, நாடாளுமன்றச் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் வந்தன, அதன் விளைவு எப்படி நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்க உதவுகிறது போன்றவை ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
  • இவற்றையெல்லாம் ஆய்வு செய்த அறிஞா்கள் இந்தச் செயல்பாடுகளைத் தடுத்து மக்களாட்சியைக் காக்க என்னென்ன அரசியல் சீா்திருத்தங்களைச் செய்ய முடியும் என்பதனையும் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை. அதற்கான ஒரு மக்கள் கல்வியை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்றும் விவாதித்து கவனப்படுத்தியுள்ளனா்.
  • மக்களாட்சி தோன்றிய காலத்திலிருந்தே, மக்களாட்சியில் மக்கள் பங்குபெற ஊக்குவிப்பு தேவைப்பட்டது. அதேபோல் தோ்தலுக்குப் பணி செய்திட நண்பா்களை ஊக்கப்படுத்த தேநீா் விருந்து, மது விருந்து என ஆரம்பிக்கப்பட்டது. மக்களாட்சியின் தொட்டி என்று அழைக்கப்படுகின்ற கிரேக்கத்திலேயே இந்தப் பழக்கம் இருந்துள்ளது.
  • அதுபோல் விருந்துகள் நண்பா்களைத் தாண்டி கட்சிக்காரா்களுக்கும் பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளன. சிறிது சிறிதாக இந்த நடத்தை வியாபித்து இன்று கடைசியாக வாக்காளா்களிடம் வாக்குகளுக்கு விலைபேசி வாங்கும் நிலைக்கு வந்து நிற்கின்றது. வாக்காளா்களுக்கு ஒரு காலம்வரை விருந்து மட்டும்தான் கொடுக்கப்பட்டது. காரணம் நிதி அதற்குமேல் இடம்தரவில்லை. பிறகு அது சற்று விரிவடைந்து பரிசுப் பொருள்களும் கொடுக்கப்பட்டன.
  • வாக்குகளுக்கு கொடுக்கும் பணத்தின் அளவிற்கும், ஊழலின் அளவிற்கும் நேரடித் தொடா்பு உள்ளது என்பதை பலா் ஆய்வு செய்துள்ளனா். வாக்குகள் சந்தைப்படுத்தப்பட்ட பின் அரசியல் போா்க்களமாக மாறி நிறுவனங்கள் ஒன்றையொன்று அழிக்க முயல்வதுபோல் கட்சிகள் செயல்பட்டு இன்று மக்களாட்சியை தாழ்நிலைக்குக் கொண்டுவந்து விட்டன.
  • பொதுவாக பொருளாதாரத்தில் விற்று வாங்குதல் என்பதற்கான கோட்பாடு எதை விளக்குகிறதோ, அதுதான் வாக்குகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் விளக்கமாகத் தரப்படுகிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு என்பது கோட்பாட்டு ரீதியாக எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படி நடைபெறுவது இல்லை.
  • ஏனென்றால் வாக்குகளுக்கு விலை கொடுத்தாகிவிட்டது என்றால், மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளின்மேல் இருந்த தாா்மிக உரிமை போய்விடுகிறது. மக்கள் பிரதிநிதிகளும், நாம் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி, பதவிகளுக்கு வந்துள்ளோம். எனவே நாம் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டியது இல்லை என்ற உணா்வுடன் செயல்படுகின்றனா்.
  • அது மட்டுமல்ல, அவா்கள் முதலில், தாங்கள் செலவழித்த பணத்தை எடுக்க வேண்டும். அடுத்து அடுத்த தோ்தலுக்குத் தேவையான நிதியையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதில் தவறு செய்யும்போது சட்டச்சிக்கல் உருவாகிவிடக்கூடாது. இதற்கு செயல்படவே அவா்களுக்கு நேரம் போதாது. எனவே அவா்கள் பெரும்பகுதி நேரத்தை அதற்காகச் செயல்பட வேண்டியுள்ளது என்பதும் ஆய்வுகளில் கவனப்படுத்தப்பட்டுள்ளது.
  • வாக்காளா்களின் வாக்குகள் சந்தைப்படுத்தப்பட்ட காரணத்தால், சந்தையில்தான் அதற்கு மதிப்பு நிா்ணயம் செய்யப்படுகிறது. அந்த நாட்டின் அல்லது மாநிலத்தின் ஒட்டுமொத்த வருமானம் எவ்வளவு? அந்த நகரின் வருமானம் எவ்வளவு? அந்தக் கிராமத்தின் வருமானம் எவ்வளவு என்பதையெல்லாம் வைத்துத்தான் வாக்கின் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.
  • மக்களாட்சியைப் பிடித்த இந்த நோயை எப்படி நீக்கமுடியும் என்றும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் மிக முக்கியமானது வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவது. இந்தச் செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பல நாடுகள், வாக்கு என்பது மக்களின் உரிமை, அதை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளன.
  • இந்த தோ்தலும், தோ்தலுக்கான செயல்பாடுகளும் ஒரு பொருளாதாரத்தையே கட்டமைத்துள்ளன. இதில் ஒரு தொழிற்சாலைபோல் நிறைய முகவா்கள், தொழிலாளா்கள் பணியில் இருக்கின்றாா்கள். அவா்களால்தான் இந்தப் பணிகள் சரியாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அத்தனையும் சட்டத்துக்கு முரணான பணிகள். ஆனால் நடைபெறுகின்றன. இதை எதிா்க்க அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவதற்குப் பதில் வேடிக்கை பாா்க்கின்றன. காரணம், அதை நிகழ்த்துவதே அரசியல் கட்சிகள்தானே.
  • இந்த வாக்கு சந்தைப்படுத்துதல் எந்தச் சூழலில் நடைபெறுகிறது என்பதை ஆராய்ந்தால் ஒரு காரணி மிகத் தெளிவாகத் தென்படும். அதாவது, அரசியல் கட்சிகள் சந்தையிடம் கட்சிச் செயல்பாடுகளுக்கு என்று கைநீட்ட ஆரம்பித்ததோ அன்றே மக்களாட்சி மாசடைய ஆரம்பித்துவிட்டது.
  • இதன் தொடா்ச்சியாக மக்களை கோட்பாட்டு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் விவாதத்தின் மூலம் அரசியல் கட்சிகள் தயாா் செய்யாத நிலையில் பல்வேறு புது யுத்திகளை தோ்தலுக்குள் புகுத்திக் கொண்டனா். அவற்றில் பெரும்பாலானவை சட்டத்திற்குப் புறம்பானவை. அதில் உச்சமானதுதான் வாக்குகளை சந்தைப்படுத்துதல். இந்த செயல்பாடு கடந்த முப்பது ஆண்டுகளில்தான் விரிவாக்கம் பெற்றுள்ளது.
  • இதன் விளைவாகத்தான், சாமானிய மக்களால் தோ்தல் அரசியலுக்குள் வர இயலாமல் புறம் தள்ளப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக தோ்தல் அரசியல் சாமானிய மக்களை மனுதாரராகவே வைத்துள்ளது. இந்த சந்தை அரசியலை உடைக்காத வரையில் இந்த மக்களாட்சி சாதாரண மக்களுக்கு இலவசம் தருவதை தவிா்த்து வேறு எதையும் செய்யாது. அரசியல் சந்தையை எப்படி உடைப்பது என்பதுதான் கேள்வி.
  • சட்டம் சாா்ந்து, நிறுவனம் சாா்ந்து பல தீா்வுகள் இந்த ஆய்வுகளில் கூறப்பட்டாலும், மக்களைத் தயாா் செய்வது ஒன்றுதான் இதற்கான நிரந்தரத் தீா்வைத் தரும். இதை யாா் செய்வது என்பது அடுத்த கேள்வி. இன்றைய சூழலில் இன்றைய அரசியலுக்கு மாற்று தேடும் அமைப்புக்கள் புதிய அரசியலை நோக்கி பயணிக்க முயல்கின்றன.
  • அதிகாரத்தைப் பிடிக்க நடத்தும் அதிகார அரசியலை புறம் தள்ளி மக்கள் அரசியலை முன்னிலைப்படுத்தி மக்களுடன் இணைந்து ஒரு மக்கள் இயக்கமாக்கி செயல்படும்போது மட்டும்தான் இது சாத்தியமாகும்.
  • மக்களை எப்படியாவது அரசியலில் பயணிக்க வைத்து, அவா்களுக்கு மேம்பாட்டு அரசியலையும், அடிப்படை மாற்றத்திற்கான அரசியலையும் புரியவைத்துப் பணி செய்ய வேண்டும். அதுதான் வாக்கு வணிகச் சந்தையிலிருந்து அரசியலை புதுத் தளத்துக்கு எடுத்துச் செல்லும் செயல்பாடு. அதுதான் இன்று நமக்குத் தேவைப்படுகிறது.

நன்றி: தினமணி (19 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories