TNPSC Thervupettagam

கட்டண உயர்வில் தவறில்லை!

August 17 , 2019 1988 days 1609 0
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பத்தாம் வகுப்புக்கும், பரவலாக பிளஸ் 2 என்று அறியப்படுகின்ற பன்னிரெண்டாம் வகுப்புக்கும் தேர்வுக் கட்டணத்தை அதிகரித்திருப்பது விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இந்த முடிவில் தவறு காண முடியாது. 
    ஏனைய மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு இணையாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தேர்வுக் கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது என்கிற விளக்கத்தை பலரும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம், பட்டியலினத்தவர்களின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான். பொதுப் பிரிவு மாணவர்களின் தேர்வுக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், பட்டியலினப் பிரிவினரின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரானது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.
தேர்வுக் கட்டணம் 
  • இதுவரை ரூ.350 மட்டுமே பத்தாம்  வகுப்புக்கும், பன்னிரெண்டாம் வகுப்புக்கும் பட்டியலினத்தவர்களுக்கான தேர்வுக் கட்டணமாக இருந்தது, இப்போது ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து ரூ.1,200-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி படிக்கும் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று புரியவில்லை. 
    மத்திய இடைநிலைக் கல்வி வாரிய திட்டத்தின் அடிப்படையில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அதிகமான கட்டணம் செலுத்திப் படிப்பவர்கள். அவர்களில் கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் படிப்பவர்களைத் தேர்வுக் கட்டண உயர்வு பாதிக்கிறது என்று சொன்னால் அதில் அர்த்தமிருக்கிறது.
  • அவர்களுக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்தும் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டாலும் தவறில்லை. 
  • இந்தியாவில் 21,000 பள்ளிக்கூடங்களும், வெளிநாடுகளில் 220 கல்விச் சாலைகளும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைந்திருக்கின்றன. அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.
  • இவையெல்லாமே தனியார் நிறுவனங்கள் என்பது மட்டுமல்லாமல், இவற்றில் பல பள்ளிக்கூடங்கள் மாணவர் சேர்க்கைக்குக்கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்கொடை பெறும் கல்வி நிறுவனங்கள். அப்படியிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேர்வுக் கட்டண அதிகரிப்பு மிகப் பெரிய நிதிச் சுமையாக மாறிவிடும் என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
புதிய கல்விக் கொள்கை
  • புதிய கல்விக் கொள்கை ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் மிகப் பெரிய அளவில் திறமையான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடு. இந்தியாவிலுள்ள 77 லட்சம் ஆசிரியர்களில், 46 லட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் பணிபுரிபவர்கள். அப்படியிருந்தும்கூட பல அரசுப் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத நிலைமை இந்தியாவின் பல மாநிலங்களில் காணப்படுகிறது. 
  • மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, ஆரம்பப் பள்ளிகளில் 5.86 லட்சம் ஆசிரியர் பணியிடங்களும், நடுநிலைப் பள்ளிகளில் 3.5 லட்சம் ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. தனியார் நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைந்த பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதம் குறித்த சரியான புள்ளிவிவரம் இல்லை.
  • பெரும்பாலான தனியார் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது குறித்தும், அவர்களுக்கு திறமைக்கேற்ற ஊதியம் வழங்காமல் இருப்பது குறித்தும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
  • 2009-இல் கல்விக்கான உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது முதல், ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்திருக்கிறது. நாடு தழுவிய அளவில் அரசுப் பள்ளிகளில் மட்டும் 60 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தியாஸ்பெண்ட் தன்னார்வ அமைப்பின் ஆய்வுப்படி, 9 லட்சம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களும், 1 லட்சம் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், திறமையான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். 
செயல்பாடுகள்
  • ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.எஸ். வர்மா தலைமையில் 2011-இல் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. 2012-இல் மூன்று பாகங்கள் அடங்கிய அந்த அறிக்கை, பல பரிந்துரைகளை முன்வைத்தது. வர்மா குழு அறிக்கை என்ன ஆனது என்பது உச்சநீதிமன்றத்துக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கும்தான் வெளிச்சம். 
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தனியார் பள்ளிகள் அதிகரிப்பதற்கும், பெற்றோர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு அதிகரிப்பதற்கும் காரணம் திறமையான ஆசிரியர்கள் அந்தப் பள்ளிகளில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்கிற நம்பிக்கைதான். ஆனால், எந்த அளவுக்கு அது உண்மை என்பது குறித்து ஆய்வு செய்ய இதுவரை யாரும் முன்வந்ததாகத் தெரியவில்லை. 
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வுக் கட்டணத்தை அதிகரிப்பதில் தவறில்லை. ஆனால், அந்தப் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தனியார் பள்ளிகளின் தரம் குறித்தும், ஆசிரியர்களின் திறன் குறித்தும் முறையான கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதிகரித்த தேர்வுக் கட்டணம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த பயன்பட வேண்டும். அதை உறுதிப்படுத்துவதுதான் அரசியல் கட்சிகளின் கடமை.

நன்றி: தினமணி(17-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories