TNPSC Thervupettagam

கட்டாயமாக வலிமிகாத இடங்கள்

October 10 , 2023 459 days 317 0
  • இரண்டு சொற்களுக்கிடையே வல்லின ஒற்றெழுத்து இடுவதில் இன்னொரு வகையும் இருக்கிறது. இரண்டாம் சொல் வல்லினத்தில் தொடங்கினாலும் கட்டாயம் வலிமிகுவிக்கக் கூடாது.  சில இடங்களில் வலிமிகுவிப்பது எப்படிக் கட்டாயமோ, அவ்வாறே சில இடங்களில் ஒற்று தோன்றாமல் - வலி மிகாமல்  இயல்பாக இருப்பதும் கட்டாயம். ஒற்று வர வேண்டிய இடங்களை அறித்திருப்பதுபோலவே, ஒற்று வரக் கூடாத இடங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஒற்று வரக் கூடாத இடங்கள் எவை என்று பார்ப்போம்.
  • (இதுவும் வலிமிகல் பிழையில் - ஒற்றுப் பிழையில் - சந்திப்பிழையில் இன்னொரு வகை).
  • 1. அது, இது, எது என்ற சுட்டுச் சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் கட்டாயம் வலிமிகாது. அது கடல்தான், இது பால், எது தெரிந்தது?
  • 2. ஒருமைக்கு அது. பன்மைக்கு அவை. அங்கும் வலிமிகாது. அவை பறவைகள், இவை கருவிகள், எவை கத்தின?
  • 3. அதே சுட்டு அன்று, இன்று, என்று எனக் காலப்பொருளில் வரும். அங்கும் வலிமிகாது. அன்று கிடைத்தது, இன்று பேசினான், என்று தருவாய்?
  • 4. அத்தனை, இத்தனை, எத்தனை என்று எண்ணளவுப் பொருளில் வந்தாலும் வலிமிகாது. அத்தனை பாடல்கள், இத்தனை புத்தகங்கள், எத்தனை தருவாய்?
  • 5. நேரடியாகவே அளவுச் சுட்டாக வரும் சொற்களை அடுத்தும் ஒற்று வராது. அவ்வளவு கெடுதல், இவ்வளவு சேர்ந்தது, எவ்வளவு கிடைக்கும்?
  • 6. ஆறு என்பது வழி என்ற பொருள் தருவது. அதனைச் சேர்த்தும் சுட்டுவோம். அவ்வாறு கூறினான், இவ்வாறு செய்தது, எவ்வாறு போகிறாய்? இவற்றை அடுத்தும் வல்லின ஒற்று மிகாது.
  • 7. ஆறு என்பதற்கு மாற்றாகப் 'படி' என்ற சொல்லும் வரும். அது சுட்டில் வந்தால் வலிமிகும். அப்படிச் செய்தான், இப்படிப் பேசு, எப்படிச் செய்தாய்?  வினையெச்சச் சொல்லை அடுத்து வந்தால் வலிமிகாது. சொன்னபடி கேள், உள்ளபடி கூறினான், வாய்க்கு வந்தபடி பேசாதே, கூறியபடி கொடுத்தான்.
  • 8. பல, சில என்கின்ற சொற்களை அடுத்து வலிமிகாது. பல பாடல்கள், சில கேள்விகள், பற்பல செய்திகள், சிற்சில தவறுகள்.
  • 9. எட்டு, பத்து ஆகிய இரண்டு எண்ணுப் பெயர்களைத் தவிர வேறு எந்தப் பெயர்க்கும் வலிமிகவே கூடாது. ஒன்று கேட்டான், இரண்டு கிடைத்தது, மூன்று செலவுகள், நான்கு தூண்கள், ஐந்து காப்பியங்கள், ஆறு புத்தகங்கள், ஏழு படிகள், ஒன்பது கோள்கள். (பேரெண்களில் கோடிக்கு வலிமிகும்.)
  • 10. எண்ணுப்பெயர்கள் அடுத்த சொல்லோடு சேர்வதற்காக மாறி நிற்கையிலும் வல்லொற்று தோன்றாது. ஒரு கடை, இரு கைகள், அறுசுவை, எழுபிறப்பு, ஏழ்கடல்.
  • 11. நீ என்ற சொல்லை அடுத்து வலிமிகாது. நீ படித்தவன், நீ கொடு.
  • 12. கட்டளைப்பொருள் தரும் வினைச் சொல்லை அடுத்து ஒற்று தோன்றாது. தா தமிழை, போ சாலையில், ஏறு கிளைமேல், நகர்த்து சுமையை, விடு கவலையை.
  • 13. பெயரும் வினையுமாக அமைந்த சொற்றொடர்களில் வலிமிகாது. பூனை கத்தியது, ஆடு தாண்டியது, கிளி பேசியது.
  • 14. வினையும் பெயருமாக அமையும் சொற்றொடர்களிலும் ஒற்று மிகாது. கத்தியது பூனை, நின்றது தேர், பறந்தன பறவைகள்.
  • 15. எச்சமாக நிற்கும் வினையை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தால் பெரும்பாலும் ஒற்றிடல் இல்லை. கொடுத்த பாரி, செய்கின்ற செயல், பாடிய பாட்டு. (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் விதிவிலக்கு – ஓடாக்குதிரை).
  • 16. இரண்டு பெயர்ச்சொற்கள் உம்மைத் தொகையாக வருகையில் வலிமிகுவிக்கக் கூடாது. அப்பெயர்ச்சொற்கள் ஒரே இனமாக இருக்கும். காடுகரை, பட்டிதொட்டி, சேரசோழபாண்டியர்.
  • 17. வினைத்தொகையை அடுத்து வலிமிகுதல் இல்லை. ஊறுகாய், குடிதண்ணீர், வெடிகுண்டு.
  • 18. ஒடு, ஓடு, அது, இருந்து, நின்று போன்றவை வேற்றுமை உருபுகளாகவும் பயிலும். அவற்றை அடுத்தும் வலிமிகுவிக்கக் கூடாது. அன்பொடு பேசினான், ஆற்றோடு போனது, எனது கை, வானிலிருந்து கொட்டியது, ஊரினின்று கிளம்பினான்.
  • 19. ஆ, ஓ, ஏ போன்ற நெடில்கள் வினா, வியப்பு, விளிப்பு என்று பல பொருள்களில் தோன்றும். அங்கும் வலிமிகுதல் இல்லை. அவனா சொன்னான்?  கள்ளோ காவியமோ?  அன்பே பெரிது. கண்ணே தூங்கு.
  • 20. இரண்டு வினைச்சொற்கள் அடுத்தடுத்து வந்து எச்சமாக இருக்கையில் ந்து, ண்டு, ன்று என்னும் மென் தொடர்க்குற்றியலுகரமாகவும்       முடிந்தால் வலிமிகாது. எழுந்து சென்றான், கண்டுகொண்டான், மென்று தின்றான். இவ்வகையில் ய்து என்று முடியும் வினைச்சொற்களையும் சேர்க்கலாம். செய்து கொடுத்தான், பெய்து கெடுத்தது.
  • இந்நிலைமைகளை மனத்தில் இருத்துங்கள். உங்கள் எழுத்தில் வலிமிகுதல் குற்றங்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

நன்றி: அருஞ்சொல் (10 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories