கட்டிட சிமிட்டிப் பூச்சு உயிரிழப்புகள் தவிர்க்க என்ன செய்வது?
- மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டித்தான் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு என்பது இரண்டு வகைப்படும். பாரம், காற்று, நிலநடுக்கம் போன்ற தாக்கங்களிலிருந்து காப்பது முதல் நிலை. சிறுசிறு சிதைவுகளிலிருந்து காப்பது இரண்டாம் நிலை.
- சிறு சிதைவுகள் என்பதால் இழப்புகளும் சிறிய அளவில் இருக்கும். அதற்காக நாம் பாராமுகமாக இருந்துவிட முடியாது. குறிப்பாக, இரண்டு நிகழ்வுகள் பலரின் கவனத்தை ஈர்க்காமல் தொடர் நிகழ்வாக அரங்கேறுகின்றன.
- திருவண்ணாமலை - போளூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (16), தினகரன் (15) சகோதரர்கள். இறுதி ஆண்டுத் தேர்வுக்காகப் படித்துவிட்டு நள்ளிரவு தாண்டித் தூங்கச் சென்றுள்ளனர். தினகரனுக்கு மட்டும் அது மீளாத இரவாக மாறிவிட்டது.
- மேற்கூரை இடிந்து விழுந்ததில் தினகரன் இறந்ததாக ஓர் ஊடகம் (28.04.2022) தெரிவிக்கிறது. புதுக்கோட்டை - எஸ்.களபம் கிராமப் பள்ளியில் ‘மேல்தளம் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததால், பரத் எனும் மாணவர் காயமடைந்தார்’ என்று மற்றொரு செய்தி (21.06.2022) தெரிவிக்கிறது.
பிழையான தகவல்:
- மேற்சொன்ன விபத்துகளில் விழுந்தது கான்கிரீட் கூரையல்ல, சிமிட்டிக்காரை மட்டும்தான். ஒருவேளை, கூரை விழுந்திருந்தால் திருவண்ணாமலைத் துயரங்கள் மீண்டும் அரங்கேறியிருக்கும். இப்படிப்பட்ட செய்திகளால் வருத்தம் மேலோங்குகிறது.
- ஏனென்றால், வல்லுநர் யாரும் ஆய்வு செய்யாமல் பிழையான தகவல்கள் தொடர்ச்சியாகக் கடத்தப்படுகின்றன. இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான் வல்லுநர் வரவழைக்கப்பட வேண்டும் என்பதல்ல. சிறு காயம்கூடப் போதும். அதைவிட முக்கியமாக, தவறான தகவல் நம் கவனத்தைச் சிதைக்கிறது.
சிமிட்டிப் பூச்சு எதற்கு?
- சிமிட்டிப் பூச்சு கான்கிரீட்டின் தன்மையைவிடத் தாழ்ந்தது. பிறகு ஏன் அது பூசப்படுகிறது? சாரம் முறையாக அமைத்து, கம்பிகளுக்குச் சரியான மேலுறை அமைய உரிய இடைவெளி கொடுத்து, தரமான கான்கிரீட் வார்த்து, இறுதியில் சாரத்தைப் பிரிக்கும்போது கம்பி தெரியாமல், குறைபாடு இல்லாமல் மேற்பரப்பு தென்பட்டால் உரிமையாளரைவிட, கட்டிடப் பொறியாளர்தான் அதிகம் மகிழ்வார்.
- அப்படிப்பட்ட கட்டிடங்களுக்கு சிமிட்டிப் பூச்சு தேவையில்லை. நம்மூர் மேம்பாலங்களின் அடிப்புறத்தைச் சற்று நோக்கினால் இந்த உண்மை விளங்கும். வெளிப்புறத் தோற்றத்தை மேலும் மேம்படுத்த விரும்பினால் பூசலாம். பெரும்பாலான சூழலில், கட்டுமானத் தவறுகளை மறைக்கும் கவசமாக மட்டுமே இது பயன்படுகிறது.
மணல் ஒரு பொறியியல் பொருள்:
- இந்தியத் தரநிலைப் பணியகம் பூச்சு வேலைக்கு உகந்த மணலின் தரத்தை (IS:1542) நிர்ணயித்துள்ளது. 1980கள் வரை ஆற்றுமணல் இலவசமாகக் கிடைத்தது. ஆற்றுப்படுகையிலிருந்து எடுத்துவர ஆகும் செலவுதான் அதன் விலை. அதனாலேயே அதன் மதிப்பும் பொறியியல் குணங்களும் யாரையும் ஈர்க்கவில்லை. ஆற்றுமணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இந்தச் சூழல் வியாபாரிகளுக்குச் சாதகமாக மாறியது. ‘எம்.சாண்ட்’, ‘பி.சாண்ட்’ எனப் புது அவதாரங்களை உருவாக்கினார்கள். அவை சிறப்பாகக் கோலோச்சுகின்றன.
- இந்தியத் தரநிலைப் பணியகம் ‘பி.சாண்ட்’ என்று எதையும் வகைப்படுத்தவில்லை. ‘எம்.சாண்ட்’ என்கிற வகை உண்டு. ஆனால், அது இதுவல்ல. விதிநூல் ஐஎஸ்: 383-2016ஐப் படித்தால் உண்மை விளங்கும். மணலின் பொறியியல் தன்மை, சிமிட்டிக்காரையின் பொறியியல் நெறிமுறை ஆகியவற்றைப் பாராட்டாத வரையில் இப்படிப்பட்ட இழப்புகள் தொடரும்.
வீழும் விதானங்கள்:
- பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் சையது குலாம் குடியிருந்தார். சில நாள்களுக்கு முன்பு வேலை முடிந்து வீடு திரும்பினார். வீட்டை நெருங்கும்போது மூன்றாவது மாடியிலிருந்து விதானம் (Sunshade) உடைந்து, கீழே இருந்த விதானங்களையும் உடைத்துக்கொண்டு அவர் தலையில் வீழ்ந்து உயிரிழந்தார். கடந்த மே மாதம் கூடுவாஞ்சேரியில் கபிலன் என்னும் சிறுவன் இறந்துள்ளான். புதுவையிலும் இப்படிப்பட்ட ஒரு விபத்தை நான் களஆய்வு செய்துள்ளேன். பட்டியல் நீளும். விதானங்கள் ஏன் வீழ்கின்றன?
இரும்புக் கரிப்பு:
- இரும்புக் கம்பிகளால் கான்கிரீட் வலுவூட்டப்பட்டுக் கட்டிடங்கள் வானுயர்ந்து நிற்கின்றன. அவ்வளவு சிறப்புமிக்க இரும்புக்கு ‘கரிப்பு’ (Corrosion) ஒரு சாபக்கேடு. சுமார் பத்தாண்டுகளைக் கடந்த கட்டிடங்களை ஆய்வுசெய்தால் பெரும்பாலான விதானங்களில் வெடிப்பு இருப்பதைக் காணலாம். விதானங்களின் தடிமன் பெரும்பாலும் 10 செ.மீ. இருக்கும்.
- கம்பிக்குத் தேவையான உறை கிடைப்பதில்லை. மற்ற பாகங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற கவனம் விதானங்களுக்குக் கிடைப்பதில்லை. முக்கியமாக, விதானங்கள் எப்போதும் வெயிலையும் மழையையும் எதிர்கொள்ள வேண்டும். பல கட்டிடங்களில் விதானங்களைத் தொட்டிபோல் அமைத்து மழைநீரைத் தேங்கவிட்டு விடுவார்கள். விதானங்களைக் கட்டும்போது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், யதார்த்தத்தில் நிகழ்வது முற்றிலும் மாறானது.
இரும்புக் கரிப்பின் கோரமுகம்:
- இரும்புக் கம்பிகள் கரிப்பு, தகைவு (stress) ஆகிய இரண்டு காரணங்களால் செயலிழக்கின்றன. அதிகத் தகைவினால் செயலிழக்கும் முன் தகைவு போதிய எச்சரிக்கை கொடுக்கும். ஆனால், கரிப்பு அப்படியல்ல. ஒரே எச்சரிக்கைதான். கான்கிரீட்டுக்கும் கம்பிகளுக்கும் இடையே ஓர் இயல்பான பிணைப்பு உண்டு. கம்பிகளின் மேலுள்ள முறுக்கு அந்தப் பிணைப்பை மேம்படுத்துகிறது.
- கம்பிகளில் கரிப்பு ஏற்பட்டால், அந்தப் பிணைப்பு விலக ஆரம்பிக்கும். அது ஆபத்தின் ஆரம்பநிலை. பிணைப்பு முழுமையாக விலகும்போது இரண்டு நிகழ்வுகள் உடன்நிகழ்கின்றன. கான்கிரீட் திடீரென்று முறிந்து கம்பிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுவித்துக்கொள்ளும். எல்லாக் கம்பிகளும் கட்டிடத்திலேயே இருக்க கான்கிரீட் முழுவதும் உருவப்பட்டுவிடும். கம்பிகளின் அமைப்பில் ஒரு சிறு மாற்றத்தைப் புகுத்தினால் இப்படிப்பட்ட விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கலாம்.
மாற்றம்: அவசியம்-அவசரம்:
- கட்டிடங்களில் சிமிட்டிப் பூச்சைத் தவிர்ப்பதால் இரு பயன்கள் விளையும். தவறுகள் வெளிப்பட்டுவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். அரசாங்கக் கட்டிடங்களுக்குப் பூச்சுவேலையை முற்றிலும் தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற பூச்சுக்கு ஆகும் செலவும் மிச்சமாகும்.
- தேவைப்பட்டால் பொறியியல் நுணுக்கத்துடன் செயல்பட வேண்டும். அடுத்ததாக, விதானங்களில் கம்பிகளின் முனையை வளைத்துவைத்தால் கரிப்பினால் கான்கிரீட் முறிந்தாலும் விழுவதற்கு முன் போதிய அவகாசம் கிடைக்கும். முறுக்குக் கம்பிகளுக்குப் பொதுவாகத் தேவையில்லை என்றாலும், சமீபகால விபத்துக்களைக் கருத்தில் கொண்டு கம்பிகளின் நுனியில் ‘L’ கொக்கி அமைப்பதை உறுதி செய்தால் விபத்துகளை நிச்சயம் தவிர்க்கலாம்!
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)