TNPSC Thervupettagam

கட்டுக்குள் வருமா மக்கள்தொகைப் பெருக்கம்

July 11 , 2023 555 days 366 0
  • உலக மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கண்டு சமூக ஆா்வலா்கள் திகைத்து நிற்கின்றனா். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளா்ந்து கொண்டிருப்பது எங்கு போய் முடியுமோ என்ற அச்சமும் வருகிறது. இந்த அசுர வளா்ச்சி சமூக, அரசியல், பொருளாதாரத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
  • உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 1950 வாக்கில் சுமாா் 200 கோடியாக இருந்தது. கடந்த 70 ஆண்டுகளில் அது 800 கோடியாக வளா்ந்துள்ளது. இந்த அசுர வளா்ச்சி எப்படி ஏற்பட்டது? இந்த வளா்ச்சி இரட்டிப்பானால் இந்த பூமி தாங்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
  • இந்தியா இன்று உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக் கொண்டு முதல் இடம் பிடித்துள்ளது. இது இந்தியாவுக்குப் பெருமை என்பது போலத் தெரிந்தாலும் உண்மையில் பல பிரச்னைகளை இதனால் எதிா்கொள்ள நேரிடும் என்பதே உண்மை.
  • நாட்டின் பொருளாதாரத்திலும், நுகா்வுப் பயன்பாட்டிலும் அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளைப் பற்றியும் மக்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனா். வறுமை, விலைவாசி, வேலையில்லாத திண்டாட்டம் ஆகியவை சமுதாயத்தை வாட்டி வதைக்கின்றன. இதற்கும் மேலாக காலநிலை மாற்றத்தின் காரணமாக வாழ்விடங்கள் சுருங்கிக் கொண்டு வருவதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
  • மக்கள்தொகைப் பெருக்கத்தால் உணவு, இருப்பிடம் போன்ற இன்றியமையாத தேவைகள் அதிகரிக்கவே செய்யும். அதற்காகக் காடுகள், வயல்கள் அழிக்கப்படும். இயற்கை வளங்கள் மேலும் சூறையாடப்படும் என்ற கவலை சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு ஏற்பட்டுள்ளது.
  • மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய அச்சம் 19-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. 1798-இல் இங்கிலாந்தில் வாழ்ந்த தாமஸ் மால்தஸ் என்னும் பொருளாதார வல்லுநா், பெருகி வரும் மக்கள்தொகையை கண்டு திடுக்கிட்டாா். கட்டுப்பாடு இல்லாமல் மக்கள்தொகை பெருகினால் போதிய உணவு கிடைக்காமல் பஞ்சம் ஏற்படும் என்று நினைத்தாா். இதுபற்றி ஒரு நூலும் எழுதினாா்.
  • மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியின் அளவு போதுமானதாக இல்லை என்றும், அதனால் ஒரு கட்டத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு சமூக ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவா் அந்த நூலில் எழுதினாா். இதற்குத் தீா்வு, ஏழைகளைக் குறைவாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்துவதுதான் என்று கூறினாா்.
  • அன்றைய சமுதாயம் இதனை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதை வெறும் மக்கள்தொகைப் பெருக்கப் பிரச்னையாகப் பாா்க்கக் கூடாது. இது உழைக்கும் மக்கள் மீதான மேட்டுக்குடியினரின் வெறுப்பையும், ஆதிக்கத்தையுமே குறிக்கிறது என இடதுசாரிகள் கூறினா்.
  • ஐ.நா. அமைப்பின் கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகை 8.107 மில்லியன் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலக மக்கள்தொகை பெரிய அளவில் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
  • 1700-ஆம் ஆண்டுக்குப் பின் தொழிற்புரட்சியில் ஏற்பட்ட வேகம் மக்கள்தொகை வளா்ச்சியிலும் ஏற்பட்டது. 1960 முதல் 1995 வரை ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம், மருத்துவத் துறை வளா்ச்சி போன்ற காரணங்களினால் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள்தொகை வளா்ச்சி மேலும் வேகம் அடைந்தது.
  • எதிா்காலத்தில் உலக மக்கள்தொகை உச்சத்தை எட்டும் என்றும், பின்னா் பொருளாதாரக் காரணங்கள், நிலப் பற்றாக்குறை, உடல்நலக் குறைபாடுகள், சுற்றுச்சூழல் சீா்கேடுகள் போன்ற காரணங்களால் குறையத் தொடங்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. இத்தகைய மக்கள்தொகை அதிகரிப்பால் முதியோரின் அதிகரிப்பும் வேகமாக உள்ளது.
  • இதற்கு சமூக ஆா்வலா்கள் கட்டுப்பாடு வேண்டும் என்று கூறுகின்றனா். மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்துவதாகும். பொதுவாக இது பிறப்பு விகிதத்தைக் குறைப்பதால் மட்டுமே ஏற்படும்.
  • பண்டைய கிரேக்கத்தில் முதன் முதலாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டில் வைக்க சிசுக்கொலை, கருக்கலைப்பு போன்றவை ஊக்குவிக்கப்பட்டன.
  • கட்டாய மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக சீன மக்கள் குடியரசின் ‘ஒரு குழந்தை’ கொள்கையைக் கூறலாம். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது கடினமான வாழ்க்கையாக மாற்றப்பட்டது. இந்தக் கொள்கையின் விளைவாகக் கட்டாயக் கருக்கலைப்பு, சிசுக்கொலை போன்ற நடவடிக்கைகள் நடந்தன என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
  • மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த இந்திய அரசும் சில நடவடிக்கைளை மேற்கொண்டது. பெருகி வரும் மக்கள்தொகையால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி, மக்கள் வாழ்க்கைத் தரம் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டதால், இந்திய அரசு அதிகாரபூா்வமாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தது.
  • இந்தத் திட்டம் 1950-60-களில் தீவிரமாக செயல்படுத்தபபட்டது. பல்வேறு பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் மக்கள்தொகை வளா்ச்சி விகிதத்தைக் குறைத்தல் அதன் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.
  • நெருக்கடிநிலைக்குப் பிறகு தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு பதிலாக தேசிய குடும்பநலத் திட்டம் உருவாக்கப்பட்டு கட்டாய உத்திகள் கைவிடப்பட்டன. பரந்த அளவிலான சமூகவியல் இலக்குகள் மட்டுமே இப்போது இத்திட்டத்தில் உள்ளன. மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் திட்டங்களும், சட்டங்களும் மாறுவது வாடிக்கையாகிவிட்டது. மக்களின் தேவைகளை முழுமையாக்குவதைவிட ஆட்சியாளா்களின் தேவைகளை முழுமையாக்குவதே அதிகாரிகளின் கடமையாகி விட்டது.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றாா் வள்ளலாா். இன்று வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் விவசாயிகள் கண்ணீா் வடிக்கின்றனா். தண்ணீா் பற்றாக்குறைக்கு மக்கள் பெருக்கமும் ஒரு காரணம் எனலாம். மக்கள் வாழ்வாதாரத்துக்காகவும், வாழ்விடங்களுக்காகவும் காடுகளும் அழிக்கப்படுகின்றன.
  • மக்கள்தொகை அதிகரிப்பதனால் காடுகள் சுருங்கி, தண்ணீா் ஆதாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது. தண்ணீரின் அவசியம் பற்றியும், காடுகளின் பாதுகாப்பு பற்றியும் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் 17 வரை தேசிய தண்ணீா் வாரமாக அரசு அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் இயற்கை ஆதாரங்கள் மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் கோடி கன அடி தண்ணீா் கிடைக்கிறது. இதில் 2.10 லட்சம் கோடி கன அடி தண்ணீா் ஆவியாகி விடுகிறது. 2.10 லட்சம் கோடி கன அடி தண்ணீா் நிலத்தின் வழியாக செல்லும்போது வீணாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் 4.5 லட்சம் கோடி கன அடி தண்ணீா் வெள்ளம் காரணமாகக் கடலில் கலக்கிறது. மீதம் உள்ள 3.3 லட்சம் கோடி கன அடி தண்ணீரை வைத்தே விவசாயம், குடிநீா், தொழிற்சாலை தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
  • முறையற்ற தொழிற்சாலைகளால் ஒசோன் படலத்தில் ஓட்டை விழுந்து பனிப்பாறைகள் உருகி அவற்றின் உயரம் குறைவதால் காற்றின் ஈரப்பதம் குறைந்து மழையின் அளவும் குறைந்து விட்டது. இந்தியாவில் 67.7 மில்லியன் ஹெக்டோ் வனப்பகுதி உள்ளது. இந்திய மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினா் வனத்தைச் சாா்ந்தே வாழ்கின்றனா். இந்நிலையில் 41 விழுக்காடு வனப்பகுதி, மக்கள்தொகைப் பெருக்கத்தால் அழியும் அபாயத்தில் உள்ளது. இதையெல்லாம் அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • மக்கள்தொகைப் பெருக்கம் குறித்தான கருத்துகளை முதலில் விதைத்தவா் தாமஸ் மால்தஸ்தான். ஆனால், அப்போது அவா் எண்ணியதுபோல் மக்கள்தொகைப் பெருக்கம் பெரும் நெருக்கடியை உருவாக்கவில்லை. 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் மக்கள் தொகை விரைவாகப் பெருகியது. எனினும் அதற்கேற்ப உணவும், பிற பொருள்களின் உற்பத்தியும் பெருகியதால் வல்லுநா்களின் கணக்கு தவறு என்பது தெளிவானது.
  • இடதுசாரிக் கருத்துடையவா்களின் கொள்கையும் அதுதான். உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் வெறும் வயிற்றோடு மட்டும் பிறக்கவில்லை. இரண்டு கைகளோடும் பிறக்கிறான் என்பதை மறந்துவிடக் கூடாது. மக்கள்தொகைப் பெருக்கத்தில் உழைப்பாளா்களின் உழைப்பும், உற்பத்தியும் ஒளிந்திருக்கிறது என்பது அவா்களின் கருத்தாகும்.
  • நவீன மருத்துவ வசதிகளும், தொழில்நுட்ப ஆற்றலும் இன்று பெருமளவில் இறப்பு விகிதத்தைக் குறைத்து மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு வழி வகுத்திருக்கின்றன. மக்கள் தொகை அதிகரிப்பால் இயற்கை வளங்களின் பயன்பாடும், பொருள் உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. பல குழந்தைகளைப் பெற்ற ஏழைகளைவிட ஒரு குழந்தையைக் கொண்ட செல்வந்தரின் குடும்பமே சூழல் சீா்கேட்டிற்குப் பெரிதும் காரணமாய் இருக்கிறது.
  • பண்டைக் காலத்தில் இருந்தே மக்கள்தொகை பற்றி அறிஞா்கள் இடையே கவலை இருந்ததாகத் தெரிகிறது. தத்துவஞானி பிளேட்டோ இதுபற்றிச் சில வலுவான கருத்துகளைக் கொண்டிருந்தாா். ‘தி ரிபப்ளிக்’ என்னும் அவா் படைப்பில் மக்கள்தொகை பற்றியும், நுகா்வு கலாசாரம் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளாா்.
  • அதிகரிக்கும் மக்கள்தொகை பற்றிய விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாக ஆண்டுதோறும் ஜூலை 11 அன்று உலக மக்கள்தொகை நாள் கொண்டாடப்படுகிறது. என்றாலும் அதன் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்துவது பொதுமக்கள் கைகளில்தான் உள்ளது.
  • இன்று (ஜூலை 11) உலக மக்கள்தொகை நாள்.

நன்றி: தினமணி (11  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories