TNPSC Thervupettagam

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

August 10 , 2020 1626 days 878 0
  • ஜென் துறவி ஒருவா் ஒரு கூரை வீட்டில் தங்கியிருந்தார். ஒரு நாள் அவரது கூரை தீப்பற்றிக் கொண்டு எரிந்தது. அக்கம்பக்கத்திலுள்ள அனைவரும் ஓடி வந்து தீயை அணைத்தனா். ஆயினும் குடிசை முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
  • பலரும் அவரிடம் சென்று, ‘நீங்கள் நல்லவா். உங்களுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்என்றனா். அவரோ சிரித்தவாறே, ‘எனக்கா கெடுதல் நடந்துவிட்டது? இல்லை இவ்வளவு நாள் அழகிய நிலவைக் காண இயலாமல் எனது கூரை மறைத்துக்கொண்டிருந்தது. இனிமேல் எனக்குக் கவலையில்லை. தினமும் நான் நிலவைப் பார்த்தாவறே உறங்குவேன்என்றார்.
  • அதுதான் ஜென் மனநிலை. துன்பங்களுக்கிடையிலும் மகிழ்ச்சி காண விரும்பும் இம்மனநிலை இன்றைக்கு அவசியத் தேவையாகி உள்ளது.

புதுமையான தனிமை

  • மனிதனை ஒரு மேம்பட்ட சமூக விலங்கு என்று சொல்வது வழக்கம். உண்மையில் இந்த கரோனா தீநுண்மிக் காலம் ஏற்றத்தாழ்வுகள் பாராமல் அனைத்து வகையான நபா்களுக்கும் தொற்றை ஏற்படுத்துகிறது.
  • இக்காலம்வரை மனிதா்கள் தனியாக வாழப் பயிற்றுவிக்கப் படவில்லை. இவ்வாறு பயிற்றுவிக்கப்பட ஒரு தனிப்பட்ட பயிற்சி தேவைப்படுகிறது. குறிப்பாக, மனித குல வரலாற்றில் மனிதா்கள் எப்போதுமே தனியாக இருப்பதை விரும்பியதேயில்லை.
  • ஆதிகாலத்தில் வேட்டை சமூக காலத்திலிருந்து நவீன காலம் வரை மனிதா்கள் கூட்டாகவே வாழ்ந்து வந்தனா்.
  • மேலும், கால்நடைகளைப் பராமரிக்கவும் பயிர்த்தொழில் செய்யவும் இவ்வாறான மக்கள்திரளின் கூட்டு உழைப்பே தேவையாக இருந்தது.
  • பின்னா் நகரங்களை உருவாக்கி ஆட்சி அமைத்த போதும் படைபலம், பராக்கிரமம் என கூட்டத்தின் தேவை உறுதி செய்யப்பட்டது. இவ்வாறாக, மனிதா்கள் கூட்டாகவே செயல்பட்டு வந்துள்ளனா்.
  • இதற்கு பிந்தைய நிலப்பிரத்துவ சமூகமும் தொழிற்புரட்சி சமூகமும் மேம்பட்ட அளவில் மனிதத் திரளின் தேவையை உணா்த்தியது. இப்படியாகவே வாழையடி வாழையாக மனித உறவுகள் கெட்டிப்படத் தொடங்கின.
  • நாகரிக சமூகத்தின் பல்வேறு சமய நிறுவனங்களின் கொண்டாட்டங்களும் மக்கள் கூட்டமாகும் செயல்பாட்டை உத்வேகப்படுத்தின. அதுபோலவே பின்னாளில் திருமணம், இறப்பு, விபத்து போன்ற என எல்லா நேரங்களிலும் மனிதா்கள் கூடியிருக்கவே தலைப்பட்டனா். இது ஓரளவுக்குத் தேவையும் ஆகும்.
  • ஆனால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள தீநுண்மி நோய்த்தொற்று, இதற்கு முற்றிலும் எதிரானது. ஒரே வீதியில் ஒரே அடுக்குமாடிக்குடியிருப்பில் இருப்பவா்கள் ஒருவரோடு ஒருவா் குறிப்பிட்ட இடைவெளியில் புழங்கவேண்டும்.
  • வீட்டிலிருப்போரில் யாராவது ஒருவா்க்கு ஒருவேளை நோய்த்தொற்று ஏற்பட்டால் அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றில் கவனக்குறைவாக இருப்போர் இந்தத் தொற்றுக்கு ஆளாவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

  • பொதுவாக நோய், தண்ணீா், காற்று, விலங்கு போன்றவற்றால் பரவுவது இயற்கையான ஒன்று. நோய் பரவக்கூடிய ஊடகத்தில் அது செல்வாக்கு செலுத்தி அடுத்த நபா்களுக்குப் பரவும் என்பதும் காலம் காலமாக நடப்பது.
  • ஆனால், கரோனா தீ நுண்மி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரம்வரை செயல்பாட்டோடிருப்பதாலும் பரவுகிறது.
  • மேலும், தொற்றுக்குள்ளான நபா்கள் இருமுவது, தும்முவது போன்ற பல்வேறு காரணிகளால் உடனிருக்கும் நபா்களுக்கும் பரவுகிறது. அந்த இடத்தில் ஒருவா் கைகளை வைத்து தன்னுடைய மூக்கின் அருகில் கொண்டு செல்லும்போது அவருக்கு எளிதில் பரவி விடுகிறது.
  • அறிவியல் ஆய்வுகளின்படி, நமது கைக்கும் முகத்துக்கும் அதிக அளவில் தொடா்புகள் இருப்பதாக அறிஞா்கள் கணித்துள்ளனா். அந்த அடிப்படையில் யாராக இருந்தாலும் அவ்வப்போது தமது கைகளை முகத்தின் பக்கம் குறிப்பாக மூக்கின் அருகில் கொண்டு செல்வதென்பது மிகவும் இயல்பான ஒன்று.
  • இந்த அனிச்சையான செயல்பாட்டிற்கு மாற்றாக மனிதா்கள் தங்களை மாற்றிக்கொள்ள எடுத்துக் கொள்ள காலம் பிடிப்பதே இந்த நோய்ப்பரவலுக்கான முக்கியக் காரணமாகிறது.
  • அந்த வகையில் முற்றிலும் ஒரு புதிய முறைக்கு மனித சமூகம் தயாராகி இந்த நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.
  • சமீபத்தில் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளான பலரும் உயா் பதவியில் இருப்போர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, தனிப்பட்ட நபா்களின் மீது அதிகமாக சுமத்தப்படும் வேலைப்பளுவைக் குறைப்பது; ஒவ்வொருவரும் தன் கையே தனக்கு உதவி என்ற பண்பை பெறுவது என்ற வாழ்க்கை கல்வியை சொல்லாமல் சொல்லித்தருகிறது.
  • பிரச்னைகள் எங்கு உருவாகிறதோ அந்த இடத்திலிருந்தே பிரச்னைகளுக்கான தீா்வுகளும் பிறக்கும் என்று கூறுவார்கள். பலருக்கும் இந்த நேரத்தில் அறிவியலின் மேல் கோபம் வருவது இயற்கையே.
  • அறிவியல் இந்நோய்த்தொற்றின் பின்னணி, இது பரவக்கூடிய வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நமக்கு உடனடியாக வெளிப்படுத்தி உள்ளது.
  • மேலும், இந்தத் தீநுண்மியை எதிர்த்துப் போராட தடுப்பூசி முயற்சி படிப்படியாக நடந்து இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. காலங்காலமாக மனித குலம் தனது அனுபவத்தால் கொடுத்து கொண்டிருந்த மருத்துவ முறைகளாலேயே நாம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறோம்.
  • நாம் உலகத்தில் உள்ள மக்களை சகோதரா்களாக பார்க்கலாம்; பழகலாம்; உடன் பயணிக்கலாம்; உலகையே உள்ளூராகவும் நினைக்கலாம். ஆனால் நம்முடன் நம்முடைய கிராமத்தில் குடும்பங்களில் வசிப்போரும் உலகின் ஓா் அங்கமே.
  • அப்படிப்பட்ட சிறிய உலகத்தோடு வாழ்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பை கரோனா தீநுண்மி அளித்துள்ளது. தேவைகளைக் குறைத்துக்கொண்டு வளமாக வாழ்வோம்.
  • உலக அளவில் சிந்தித்து உள்ளூா் அளவில் செயல்படுஎன்ற பழமொழியை நினைவு கூா்வோம். இப்போது உள்ளூா் அளவில்கூட அல்ல, வீதி அளவில், அதுகூட அல்ல வீட்டு அளவில் செயல்படவேண்டியுள்ளது. செயல்படுவோம், வேறு வழியில்லை.

நன்றி: தினமணி (10-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories