கட்டுப்பாடின்றிப் பரவும் ‘வீடியோ கேம்’ நஞ்சு
- பள்ளியின் பொதுத் தேர்வுகளும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளும் நெருங்கிவருகின்றன. கைபேசிகளைத் திறன்பேசிகள் (Smartphones) ஆக மாற்றிய பிறகு தெரிந்தோ தெரியாமலோ, இணையக் கல்வி என்கிற பெயரில் தொடக்கப்பள்ளிக் குழந்தைக்குக்கூடத் திறன்பேசிப் பயன்பாட்டைப் பழக்கப்படுத்திவிட்டோம். ‘திறன்பேசி கலாச்சாரம்’ என்றே தனியாகக் குறிப்பிடப்படும் அளவுக்கு இன்று எத்தகைய கயிறும் இல்லாமல் சங்கிலியும் இல்லாமல் குழந்தைகளைச் சிறைப்படுத்திவிட்டோம்.
- திறன்பேசிகளின் காரணமாக, நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத விஷயங்கள் நஞ்சாகக் கலந்து ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துக்கொண்டிருக்கின்றன. மிக குறிப்பாக, ‘வீடியோ கேம்ஸ்’ என்றழைக்கப்படுகின்ற கொடூரமான வலைப்பின்னலுக்குள் சிக்கிக்கொள்கின்ற குழந்தைகளை மீட்பது மிக அவசியம். இவ்விஷயத்தில் உடனடியாக நாம் ஏதாவது செய்யவில்லை என்றால், ஒரு சந்ததியை மனநோயாளிகளாக அதிவேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது கல்வியாளர்களின் இன்றைய மிகப்பெரிய கவலை.
வெளியில் தெரியாத கவர்ச்சி உலகம்:
- எவ்வளவு தடைகள் விதிக்கப்பட்டாலும், அவற்றையெல்லாம் தாண்டி வகுப்பறைக்குத் திறன்பேசிகளை எடுத்துவந்து சாகசம் என்கிற பெயரில் தேவை இல்லாத காணொளிகளைப் பதிவுசெய்து இன்ஸ்டாவிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுத் தமது திறமையைக் காட்டிக்கொள்ளும் குழந்தைகள் இன்று அதிகம். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பெற்றோர்கள் திறன்பேசிகளை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வாழ்க்கையை முடித்துக்கொள்வோம் என்று மிரட்டுகின்ற குழந்தைகளையும் இன்றைக்குப் பார்க்க முடிகிறது.
- வெளியில் தெரியாத ஒரு கொடிய நஞ்சு போல, வீடியோ கேம்ஸ் கலாச்சாரம் குழந்தை கள் நடுவே இன்று பரவிக்கொண்டிருக்கிறது. சைபர் உலகைப் பொறுத்தவரையில் வீடியோ கேம்ஸ் என்பது இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர்கள் கொட்டுகின்ற பிரம்மாண்ட வர்த்தகம்.
- 2028ஆம் ஆண்டு இரண்டு பில்லியன் டாலர்களாக இது உயர்த்தப்பட வேண்டும் என்று அவர்கள் இலக்கு நிர்ணயித்துத் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். ‘லூடோ கிங்’, ‘ரோப்லாக்ஸ்’, ‘ஹாட் வீல்ஸ்’ என்று அடுத்தடுத்து வீடியோ கேம்கள் சந்தையில் இறக்கப்படுகின்றன. ஒருமுறை ஆடிப் பழகிவிட்டால் ஒருபோதும் அந்தக் குழந்தையால் நிறுத்த முடியாத அளவுக்குப் போதை தருகின்ற அம்சங்களை இவை உள்ளடக்கியுள்ளன.
விளையாட்டா, விபரீதமா?
- 18 மணி நேரம் வீடியோ கேம் விளையாடுவது என்பது இன்றைக்குப் பல குடும்பங்களில் பழகிப்போய்விட்ட ஒரு விஷ(ய)மாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது அச்சம் தரும் சூழல். குறிப்பாக, பெற்றோர் இருவருமே பணிக்குச் சென்றுவிடுகின்ற குடும்பங்களில் குழந்தைகள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் பள்ளிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் தங்கி மணிக்கணக்கில் இந்த வீடியோ கேம் கலாச்சாரத்துக்குள் நுழைந்துவிடுகிறார்கள். இவை ஒருவர் ஆடும் விளையாட்டுக்கள் அல்ல.
- இந்த சைபர் உலகில் உங்களோடு வீடியோ கேம் விளையாடுபவர் வேறு ஊரில் இருக்கலாம், வேறு நாட்டில் இருக்கலாம், வேறு கண்டத்தில்கூட இருக்கலாம். அவரை நீங்கள் நேரில் பார்க்க வேண்டியதில்லை அவர் சத்தம் போடாமல் உங்களோடு மணிக்கணக்கில் விளையாடிக்கொண்டே இருப்பார். அவர் ஒரு ரோபாட் ஆகவும் இருக்கலாம்; செயற்கை நுண்ணறிவு உருவாக்கிக் கொடுத்த போலி ஐடியாகவும் இருக்கலாம்!
பரவும் வெறுப்புணர்வு:
- இந்த வீடியோ கேம்கள் ஒவ்வொன்றும் பல வகையான வன்முறைகளை உள்ளடக்கிய கதைப் போக்குகளைக் கொண்டுள்ளன. மலைவாழ் மக்கள் விபரீத வில்லன்களாகவும், அறிவார்த்தமான பெண் குழந்தைகள் சமூகத்திடம் இருந்து விரட்டப்பட வேண்டியவர்களாகவும், விதவிதமான துப்பாக்கிகளைக் கையிலேந்திக் கொலை செய்வது அன்றாட வாழ்வின் சகஜமான வேலையாகவும் சித்திரிக்கப்படும் வீடியோ கேம்கள் குழந்தைகளால் அதிகம் போற்றப்படுகின்றன என்பதுதான் மிகவும் அச்சமூட்டும் தகவல்.
- சமீபத்தில் மதுரையில் தொடர்ந்து 48 மணி நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடியதன் மூலம் சிறுநீர் கழிக்காமல். சிறுநீர்ப்பை ஏறக்குறைய வெடிக்கும் நிலையில் ஒரு ஏழாம் வகுப்புச் சிறுவன் அவசர அறுவை சிகிச்சைக்குக் கொண்டுவரப்பட்டதை மருத்துவர்கள் பார்த்துத் துடித்துப் போன சம்பவம், இத்தகைய கொடுமைக்கு ஓர் உதாரணம்.
எப்படி மீட்கப் போகிறோம்?
- சில ஆண்டுகளுக்கு முன், கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதை வெற்றி என்று அறிவித்த ‘புளூ வேல்’ வீடியோ கேம்ஸை இந்தியாவில் தடைசெய்யப் பெரிய அளவில் போராடினோம். ஆன்லைனில் ரம்மி விளையாட்டைத் தடை செய்வதா, வேண்டாமா என்று மிகப்பெரிய விவாதத்துக்குப் பிறகு சட்டமன்றம் கூடி அதற்குத் தடைச் சட்டம் இயற்றியது.
- அதுபோல் இப்போது செயல்பட வேண்டி இருக்கிறது. வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பின்விளைவுகள் மிகக் கொடூரமானவை. கற்றல் செயல்பாடுகளில் இருந்து இவர்கள் முற்றிலுமாக விலகிக்கொள்கிறார்கள்; வீட்டுப் பாடங்கள் எழுதுவதையோ தேர்வுகளையோ இவர்கள் பொருட்படுத்துவதில்லை; பாடப் புத்தகங்களைப் புரட்டுவதே இல்லை.
- பள்ளிச் சூழலில் இருந்து விலகிக்கொள்ளும் இவர்கள் மெல்ல மெல்லத் தங்கள் குடும்பம், சமூகம் யாவற்றிலிருந்தும் விலகிக்கொள்கிறார்கள்; உறக்கமின்மை என்கிற கொடிய நோயில் இவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். வீடியோ கேம் போதை அதிகரிக்கும்போது அன்றாட வாழ்வின் உணவருந்துதல், தண்ணீர் குடித்தல் போன்றவற்றைக்கூடத் தவிர்க்கும் மனநிலை ஏற்படுகிறது.
- ‘சைபர் புல்லியிங்’ என்று அழைக்கப்படும் இன்னொரு கொடுமை உண்டு. எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் உங்கள் வீட்டுக் குழந்தையை வீடியோ கேம்ஸ் மூலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். இது போன்ற கொடுமை இன்று பல குடும்பங்களில் நிலவுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
- இந்த விவகாரத்தில் பெற்றோர் தலையீடு மிகமிக முக்கியம். இது போன்ற மாயவலைகளில் தங்கள் குழந்தைகள் சிக்கிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை முதலில் கண்டறிவது அவசியம். பிறகு அவர்களுக்குக் கண்டிப்பாக மனநல சிகிச்சை தேவைப்படுகிறது; வெளியில் சொன்னால் சிக்கல் ஆகிவிடும் என்று கருதும் பல பெற்றோர் உளவியல் சிகிச்சைகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. ஆனால் நடத்தை மனநல சிகிச்சை என்பதே உடனடித் தேவை.
- இது போன்ற குழந்தைகளிடம் இருந்து வீடியோ கேம்ஸ்களை சட்டென்று முழுமையாகப் பிடுங்கிவிடுவது அவர்களின் சிக்கல்களை மேலும் அதிகமாக்கலாம்; சில நேரம் விபரீத முடிவுகளை நோக்கி அவர்களைத் தூண்டுகின்ற சூழல்களை ஏற்படுத்தலாம். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், குடிபோதைக்கு அடிமையானவர்கள் போன்றோர் மீட்கப்படும்போது தரப்படுகிற மனநலத் திறன் அணுகுமுறையான சி.பி.டி. வகை சிகிச்சைகள் (Cognitive Behavioural Therapy - CBT) அவசியம். பள்ளி, கல்லூரிகளில் வீடியோ கேம் கலாச்சாரத்தின் கொடுமைகள் குறித்து அரசு உடனடியாக விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்த வேண்டியதும் அவசியம். எதிர்காலத்தைக் கட்டமைக்கப்போகும் இளைய சமுதாயத்தினரைப் பாதுகாக்க இன்றே செயல்படத் தொடங்குவோம்!
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 02 – 2025)