TNPSC Thervupettagam

கண்டேன் சில்லையை!

May 25 , 2024 231 days 192 0
  • "விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச்
  • சிட்டுக் குருவியைப் போலே" - பாரதியார்
  • நான் கல்லூரியில் படித்தபோது இந்த வரிகள் என் மனதினில் நின்றவை. எனக்கு என்றைக்குமே பறவைகளைக் கவனிப்பது பிடிக்கும். அவற்றின் சுதந்திரம் பல கவிதைகள் எழுதிட எனக்குக் காரணமாக அமைந்தது.
  • கல்லூரியில் படித்த காலத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று எல்லோரும் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது, நான் மட்டும் மாமர நிழலில் அமர்ந்து இயற்கையினை ரசித்தபடி இருப்பேன். திண்டுக்கல்லில் எங்கள் வீட்டின் முன்புறம் இருந்த மாதுளை மரத்தினில் சின்னஞ்சிறு தேன்சிட்டு ஒன்று தத்தித்தாவிப்பறப்பதைப் பார்ப்பது எனக்குப் பிடித்த மதிய நேரப் பொழுதுபோக்குகளில் ஒன்று. அது இன்றும் தொடர்கிறது.

விழுப்புரப் பறவைகள்:

  • விழுப்புரத்தில் உள்ள என் தங்கையின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம், மாலை நேரத்தில் வீட்டின் பின்புறப் படிக்கட்டுகளில் நானும் என் மகளும் அமர்ந்து அங்கு வரும் பறவைகளைப் பார்க்கத் தொடங்குவோம்.
  • என் தங்கையின் வீட்டிற்குப் பின்னால் அடர்ந்த கிளைகள், செழிப்பான இலைகளுடன் ஒரு பெரிய மாமரம் இருந்தது. நண்பகலில் பச்சைக் கிளிகளின் கொஞ்சும் பேச்சையோ, மைனாக்களின் வித்தியாசமான அழைப்பு ஒலிகளையோ கேட்கலாம்.
  • தினந்தோறும் ஒரு ஜோடி மைனாக்கள் உணவினைத் தேடி, படர்ந்த புற்களுக்கு இடையில் தத்தித்தத்திச் செல்லும். சில நேரம் சமையலறை ஜன்னலிலிருந்து வீசப்பட்ட உணவுத் துணுக்குகளைத் தேடும். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பக்கத்து வீட்டுச் சுவரில் ஒரு ஜோடி மீன்கொத்திகள் அமைதியாக அமர்ந்திருப்பதையும் காண முடியும்.
  • ஒரு பிரகாசமான காலை வேளையில், தட்டான்பூச்சிகள் கொல்லைப்புறம் முழுவதும் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தன. ஆண் மீன்கொத்திப் பறவை ஒரு நேர்த்தியான நடனக் கலைஞரைப் போல லகுவாகக் கீழே குனிந்து ஒரு தட்டான்பூச்சியினைப் பிடிக்கும். குறைந்தது ஆறு முதல் எட்டுத் தட்டான்பூச்சிகளைப் பிடித்த பின்பே அவை அங்கிருந்து பறந்து செல்லும்.

புதிய பறவை வகை:

  • ஒரு நாள் மாலையில் நாங்கள் அதுவரை பார்த்திராத சில பறவை வகைகளைப் பார்த்தோம். அவை சின்னஞ்சிறியதாகவும், தோற்றத்தில் சிட்டுக்குருவிகள் போலவும், புல்வெளியில் தத்தித்தத்தி உணவினைத் தேடிக்கொண்டிருந்தன. அவை வித்தியாசமாக ஒலி எழுப்பின. விசில் போல ஒலி எழுப்பி, தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டன.
  • பொதுவாக பறவைகள் மனிதர்களின் தலையீட்டினை விரும்புவதில்லை. காலடிச் சத்தம் கேட்டாலே உடனே பறந்துவிடும். ஆனால் இந்தப் பறவைகள் அவ்வாறு செய்யாது, நாங்கள் அவற்றைப் பார்ப்பதை அறிந்தாலும், பயமின்றித் தங்கள் வயிறு நிறையும் வரை உணவு உண்ட பின்புதான் அங்கிருந்து பறந்து சென்றன. என் மகளின் தொடர்ச்சியான கேள்விகள்கூட அவற்றைத் தொல்லை செய்யவில்லை.
  • சென்னையில் இந்தப் பறவைகளை நகரப் பூங்காக்களில்பார்த்திருக்கிறேன். மரங்களின் குளிர்ந்த நிழலில் எந்தவித பரபரப்புமின்றி அவை உணவினைத் தேடி உண்கின்றன. நகரத்தின் பரபரப்பான செயல்பாடுகள் அவற்றினைப் பெரிதாகத் தொந்தரவு செய்வதில்லை. இயற்கையுடன் ஒன்றிய அவற்றின் வாழ்க்கை என் மனதினைக் கவர்ந்தது.
  • வீட்டின் அருகிலிருந்த பூங்காவில் உள்ள அடர்ந்த மரங்களின் கிளைகளில் ஒரு ஜோடிப் பறவைகள் அங்கும் இங்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாகப் பறந்துசென்றன. அப்பறவைகளின் சிறிய கறுப்புத் தலையினையும் மார்பின் கூடுதலான பழுப்பு நிறத்தினையும் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. காங்கிரீட் காடுகளாக மாறிவரும் இன்றைய சென்னையில் மூன்று வண்ணங்களில் அழகிய அந்தச் சிறிய பறவையினைப் பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது.

மூவண்ணக் குருவி:

  • என்னை யாரென்று கண்டுபிடி என்று அவை எனக்குச் சவால் விடுப்பதைப் போலிருந்தது. அடுத்த நாளும் அவை அதே நேரத்தில் வந்தன. அவற்றின் குரலைக் கொண்டு கண்டுபிடிக்கலாம் என்று வலைதளத்தில் முயற்சி செய்தேன். கண்டும்பிடித்துவிட்டேன்.
  • ஆங்கிலத்தில் Munia என்று அழைக்கப்படும் சில்லைக் குருவிகள் பல வகைகள் இருந்தாலும் நான் பார்த்தது மூன்று வண்ணங்கள் கொண்ட சில்லைக் குருவிகள். அவை கருந்தலைச் சில்லை என்று அழைக்கப்படும் Tricolored munia என்று அறிந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிட்டுக் குருவியைவிட அவை சிறியதாக இருந்தன. கீச்சுக் குரலில் பாடியபடி கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அவை பறந்து சென்றன. பொதுவாக சதுப்பு நிலங்களிலும் உயரமான புற்களினிடையிலும் காணப்படும் இந்தப் பறவையை, சென்னையில் பார்த்தபோது வியப்படைந்தேன்.

கொண்டலாத்தியின் குரல்:

  • ஒரு நாள் காலை நேரத்தின் ரம்மியமான பொழுதிற்கு மெருகேற்றுவதைப் போல் ஒரு குரல் கேட்டது. அலுவலகத்திற்கு செல்ல அவசர அவசரமாக நான் சமைத்துக் கொண்டிருந்தபோது கேட்ட அந்தப் பறவையின் சத்தம் என்னைக் கவர்ந்தது.
  • ஒரு நேர்த்தியான உளியால் மரத்தினைச் செதுக்குவதைப் போல் அந்தச் சத்தம் கேட்டது. தொடர்ச்சியாகக் கேட்ட அந்த ’ஊப் ஊப் ஊப்’ எனும் சத்தம் என் மனதினை அமைதிப்படுத்தியது. வலைதளத்தில் தேடியபோது அது ஆங்கிலத்தில் Hoopoe என்றும் தமிழில் கொண்டலாத்தி என்றும் அழைக்கப்படுவது தெரிந்தது.
  • அது எந்தப் பறவையென்று தெரிந்துகொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் இரண்டு நாள்களுக்கு முன் வீட்டின் பின்புறமிருந்த மரத்தின் அடியில் அப்பறவை உணவினைத் தேடிக்கொண்டிருந்ததை நான் பார்த்திருந்தேன்.
  • என்னுடைய மகளுக்கு அவற்றைக் காட்ட வேண்டும் என்று அவளை அழைத்து வருவதற்குள், அவை அங்கிருந்து பறந்து சென்றுவிட்டன. ‘கிரீடம்’ போன்ற அவற்றின் தலை இறகு, தலையை அசைக்கும்போது கம்பீரமாகத் தோன்றவைத்தது.

பறவைகளும் நம் மனமும்:

  • தினமும் பல்வேறு பறவைகளைப் பார்க்கும்போது இயற்கையுடன் நம்மை அவை இணைக்கின்றன. பறவைகளின் செயல்பாடுகளை உற்றுக் கவனிக்கும் நேரத்தில் நம்முடைய நோக்கும் திறன் கூர்மையடைகிறது. மேலும் நம்முடைய மனதினை அமைதிப்படுத்திப் பதற்றத்தினை தணிக்கிறது. நம்முடைய நினைவாற்றலை அதிகப்படுத்தும் சிறந்த பயிற்சியாகவும் உள்ளது.
  • நம் குழந்தைகளுக்குப் பறவைகளை கவனிக்கக் கற்றுக்கொடுக்கும்போது பறவைகளின் வாழ்க்கை முறையையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் அவர்கள் அறிந்துகொள்ள முடியும். தினமும் பறவை வகைளைக் கவனிக்கும் பழக்கம் நம்முடைய அன்றாட நடைமுறைகளில் ஒரு சீர்மையைக் கொண்டுவருகிறது. காலையிலும் மாலையிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பறவை நோக்கலில் ஈடுபடும்போது நம்முடைய நேரத்தினை நல்ல முறையில் செலவிடும் பழக்கத்தினையும் நமக்குத் தருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories