TNPSC Thervupettagam

கத்தர்: புரட்சியின் குரலும் முகமும்

August 8 , 2023 480 days 344 0
  • உழைக்கும் மக்களின் வாழ்க்கையை, பாடுகளை, போராட்டத்தைப் பாடிய மாபெரும் கலைஞன் கத்தர் ஆகஸ்ட் 6 அன்று மறைந்துவிட்டார். எல்லம்மா கதைகளைப் பாடும் நாட்டுப்புறக் கலைஞனாகத் தொடங்கி, பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த முகம் அவருடையது. ஆனால், ‘புரட்சிப் பாடகர்என்பதே இந்த அடையாளங்களின் ஊடுசரடாகச் செல்லும் அவரது முத்திரை.
  • கொச்சி எனப்படும் வேட்டி போன்ற அரையாடையும், கோங்கிலி எனப்படும் கறுப்புப் போர்வையும், கையில் கழியும் அவரது கம்பீர அடையாளத்தின் பிரிக்க முடியாத பகுதிகள். அவரது அடித் தொண்டையிலிருந்து கிளம்பும், ‘அம்மா தெலங்கானமா, ஆக்கிலி கேக்கலி கானமா,‘பொடுஸ்துன்ன பொத்து மீத நடுஸ்துன்ன கானமாஆகிய பாடல்கள் தெலங்கானா இயக்கத்தின் தேசிய கீதங்கள் போலப் போற்றப்படுபவை.

புரட்சிகர புனைபெயர்

  • கத்தரின் இயற்பெயர் கும்மடி விட்டல்ராவ். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள தூப்ரன் என்ற ஊரில், ஓர் ஏழை தலித் குடும்பத்தில் சேஷய்யாலட்சுமம்மா இணையருக்கு 1949ஆம் ஆண்டு பிறந்த கத்தர், தனது தாயால் வளர்க்கப் பட்டவர்; படிப்பில் கெட்டிக்காரர். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்து, இடைநின்றார்.
  • இந்திய விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய கதர் பார்ட்டி’ (Ghadar Party) என்ற கட்சியின் பெயரின் நினைவாக அதைத் தனது புனைபெயராகச் சூடிக்கொண்டார். எழுத்துப் பிழையாக, அதுகத்தர்என்று நிலைபெற்றுவிட்டது. கதர் என்ற சொல்லின் பொருள்புரட்சிஎன்பதாகும்.
  • நாட்டார் தெய்வங்களான எல்லம்மா கதைகளைப் பாடிக்கொண்டிருந்த கத்தரின் திறமையைப் பார்த்துத் தன்னுடைய ஆர்ட் லவ்வர்ஸ் அசோசியேஷன்என்ற அமைப்பின் வழி பகத்சிங் நினைவு நிகழ்வில் பாட அழைத்தார் பி.நரசிங்கராவ். பின்னாளில் திரைப்பட இயக்குநரான நரசிங்கராவ் கத்தரின் ஊர்க்காரர்தான். அதன் பிறகு தொடர்ந்து அந்த அமைப்போடு சேர்ந்து இயங்கத் தொடங்கினார் கத்தர். ஏராளமான பாடல்களை எழுதினார்.

அரசியல் மாற்றங்கள்

  • 1967இல் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் ஏற்பட்ட விவசாயிகள் கிளர்ச்சி, சிபிஐ (எம்) கட்சியில் பிளவுக்கு வழிவகுத்தது. இதே காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேசம் காகுளத்திலும் விவசாயிகள் கிளர்ச்சி ஏற்பட்டது. கட்சியின் தீவிரப் பிரிவினர் அதிலிருந்து விலகி, 1969ஆம் ஆண்டு சாருமஜும்தார் தலைமையில் சிபிஐ (எம்.எல்.) என்ற கட்சியைத் தோற்றுவித்தனர்.
  • இந்தக் கட்சியே நக்சலைட்என்று அழைக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் ஒன்றே வழி என்றும், கட்சிக்கு வெகுஜன அமைப்பு இருப்பது கட்சியை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் கருதியவர் சாரு மஜும்தார். ஆனால், அவரது அணுகுமுறை தோற்றது.
  • இதையடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் இருந்த சிபிஐ (எம்.எல்.) கட்சியினர் தங்கள் பழைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தனர். ஆயுதப் போராட்டம் ஒருபக்கத்தில் நடந்தாலும், விவசாயிகள் அமைப்பு, பெண்கள் அமைப்பு, இளைஞர் அமைப்பு, கலாச்சார அமைப்பு போன்ற வெகுஜன அமைப்புகள் தேவை என்ற முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் இந்தக் கட்சியில் இணைந்தார் கத்தர். ஆர்ட் லவ்வர்ஸ் அசோசியேஷன், ‘ஜன நாட்டிய மண்டலிஆனது.
  • இதற்கிடையே 1970களின் நடுவில் வங்கிப் பணியாளர் ஆன கத்தர், ஒருபுறம் கலைப் பணியும் மறுபுறம் வங்கிப் பணியுமாகச் சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்தார். கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகக் கொண்டபள்ளி சீதாராமய்யா தலைமையிலான குழு, 1980இல் சிபிஐ (எம்.எல். - மக்கள் யுத்தம்) என உருவெடுத்தது.
  • விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை, புரட்சிக்கு ஆதரவான கருத்துகளைத் தாமே பாடல்களாக எழுதி, அதை நடனமாகவும் நடத்திக்காட்டும் கத்தர், மக்கள் யுத்தக் குழுவில் மிகப்பெரிய சக்தியாக உருவானார்.

தலைமறைவு வாழ்க்கை

  • 1980களில் அரசியலில் நுழைந்த என்.டி.ராமராவ், மக்கள் யுத்தக் குழுவுக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து, நக்சலைட்டுகளே உண்மையான தேசபக்தர்கள் என்று கூறினார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, மக்கள் யுத்தக் குழுவும், அதன் வெகுஜன அமைப்புகளும் தடைசெய்யப்பட்டன.
  • மக்கள் யுத்தக் குழுவினர் போலீஸாரைக் கொல்வதும், போலீஸ் ஆதரவு பெற்ற மர்மக் குழுவினர் நக்சலைட்டுகளைக் கொல்வதும் தொடர்ந்தது. இதனால், போலீஸ் தரப்பின் முக்கிய இலக்காக இருந்த கத்தர் தலைமறைவாகி, மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்தார்.
  • ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் தெலங்கானா பகுதி பின்தங்கியிருந்ததுடன், பெரும் நிலக்கிழார்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. இதன் காரணமாகவே, மக்கள் யுத்தக் குழு அங்கே வளர்ந்தது. 1989இல் ஆந்திரத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்று சென்னா ரெட்டி முதல்வரானார். மக்கள் யுத்தக் குழுவின் வெகுஜன அமைப்புகள் மீது இருந்த தடைகளை அவர் நீக்கினார். இதையடுத்து, தலைமறைவு வாழ்க்கையை முடித்துக்கொண்டு வெளியே வந்தார் கத்தர். அப்போது அவரது புகழ் உச்சத்தில் இருந்தது.
  • உடலில் தங்கிய துப்பாக்கிக் குண்டு: கட்சிக்கும் அவருக்கும் இடையே ஒருகட்டத்தில் கசப்பு தோன்றியது. தலித்துகளுடைய பிரச்சினையை வெறும் வர்க்கப் பார்வையாகக் கட்சி பார்ப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து கட்சியிலேயே இருந்தார்.
  • இதற்கிடையே மீண்டும் அரசாங்கத்துக்கும் மக்கள் யுத்தக் குழுவுக்கும் முட்டிக்கொண்டது. மீண்டும் அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. 1997இல் அவர் மீது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்தன. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டாலும், ஒன்று அவர் உடலிலேயே இருந்தது.
  • மீண்டும், 2004இல் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வந்தபோது, மக்கள் யுத்தக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தினார்; ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த நேரத்தில் தலைமறைவாக இருந்த மக்கள் யுத்தக் குழுவின் தலைமைக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக் குழுவில் கத்தர், வரவர ராவ் போன்றவர்கள் இடம்பெற்றனர்.
  • ஆனால், இறுதியில் பேச்சுவார்த்தை தோற்றது. பிஹாரில் செயல்பட்டுவந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் எனும் அமைப்பும், மக்கள் யுத்தக் குழுவும் ஒன்றிணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) என்ற அமைப்பு தோன்றியது. வேறுபாடு களோடு, கட்சியில் கத்தர் தொடர்ந்தார்.
  • 1997இல் தெலங்கானா தனி மாநில இயக்கம் மீண்டும் தொடங்கியது. இதை முழுவதும் இயக்கியவர்கள் நக்சலைட்டுகள்தான். குறிப்பாக, தனது உணர்ச்சி பொங்கும் பாடல்களாலும், கூர்மையான வாதங்களாலும், இந்த இயக்கத்தின் அடையாளமாகவே மாறினார் கத்தர். திரைப்படத்தில் நடித்தார். ஊடகங்களில் தோன்றினார்.
  • இறுதிக்கால சறுக்கல்: நக்சலைட்டுகள் தெலங்கானா தனி மாநிலம் கோரித் தீவிரமாகப் போராடினர். 2014இல் தெலங்கானா மாநிலம் அமைக்கப்பட்டது. ஆனால், 2001இல் உருவாக்கப்பட்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி இந்த இயக்கத்தின் பலன்களை அறுவடை செய்து ஆட்சியைப் பிடித்தது. தெலங்கானா ஒன்றே நோக்கம் போலச் செயல்பட்ட நக்சலைட்டுகளுக்கு, திடீரென செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் போனது.
  • அத்துடன், தனித் தெலங்கானா உருவானால் என்னவெல்லாம் நடக்கும் என்று அவர்கள் கனவு கண்டார்களோ அதெல்லாம் நடக்கவில்லை. இந்த நிலையில், நக்சலைட்டு போராளிகள் மத்தியில் தோன்றிய ஒரு சலிப்பு, கத்தரையும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
  • திடீரென ஒரு நாள், ஒரு பூசகருக்கு முன்னால் கீழே உட்கார்ந்து புரட்சிப் பாடகர் கத்தர் இருக்கும் ஒளிப்படம் வெளியாகி, அவரது அதுவரையிலான பிம்பத்தை உடைத்துப் போட்டது. கடைசிக் காலத்தில் அவர், செகந்தராபாத்தில் தாம் வசித்த பகுதியில் மகா போதிஎன்றொரு பள்ளியை நடத்திவந்தார். இந்தப் பள்ளிக்காக அவர் நிதி வசூல் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லாவற்றையும் தாண்டி புரட்சியின் குரலும் முகமுமாகவே கத்தர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்!

நன்றி: இந்து தமிழ் திசை (08– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories