- சமீபகாலமாக நீதித் துறை, அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துகளும், வழங்கும் தீர்ப்புகளும் சற்று விசித்திரமாகவும், குழப்பம் ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன. உயர்நீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு முரண்படுவதுண்டு. உச்சநீதிமன்ற நீதிபதிகளேகூட ஒருவருக்கு ஒருவர் முரணாகத் தீர்ப்புகள் வழங்கியதுண்டு. ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிலேயே முரண் இருப்பது சமீபகாலமாகத்தான்.
- அமலாக்கத் துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. தற்போதைய இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து தீர்ப்பளித்த அதே நேரத்தில், நீட்டிப்பு வழங்கும் உரிமை அரசுக்கு உண்டு என்றும் தெரிவிக்கிறது அந்தத் தீர்ப்பு. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது அரசுக்குப் பின்னடைவாகத் தோற்றமளித்தாலும், அந்தத் தீர்ப்பை முழுமையாகப் படித்தால் அரசின் நிலைப்பாட்டுக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது என்பதுதான் நிஜம்.
- அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக வழங்கப்பட்ட பதவிக்கால நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும், அவரது பதவிக்காலத்தை ஜூலை 31-ஆம் தேதியாக குறைத்தும் கடந்த ஜூலை 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அந்த மூன்று நீதிபதிகள் அமர்வு வழங்கி இருக்கும் தீர்ப்பு, எஸ்.கே. மிஸ்ராவுக்கு வேண்டுமானால் பாதிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், வருங்காலத்தில் அரசுக்கு மிகப் பெரிய வலு சேர்ப்பதாக அமையக்கூடும்.
- 2019-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி அமலாக்கத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் எஸ்.கே. மிஸ்ரா. 2020-இல் அவரது பதவிக்காலம் நிறைவடைந்தபோது, அரசு மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்கியது. 2021-இல் இரண்டாவது முறையாக நீட்டிப்பு வழங்கியபோது பலத்த எதிர்ப்பு எழுந்தது. பலர் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கும் தொடுத்தனர்.
- அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குநர்களின் பதவிக்காலமான இரண்டாண்டுகளை மூன்றாண்டுகளாக நீட்டிப்பதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன் மூலம் பணி ஓய்வு அடிப்படையில் பதவிக்காலம் முடிந்த பிறகும், மேலும் மூன்று ஆண்டுகள் அவர்கள் பதவி நீட்டிப்புப் பெற முடியும். வேடிக்கை என்னவென்றால், அது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் பணி நீட்டிப்பாக இருக்கும் என்பதுதான்.
- இரண்டு முறைக்கு மேல் மூன்றாவது முறையாக, மேலும் ஓராண்டுக்கு எஸ்.கே. மிஸ்ராவின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, இந்த மாதத்துடன் அவர் பணி ஓய்வு பெற வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்ற அமர்வு. அதேவேளையில், அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை அங்கீகரித்துத் தீர்ப்பளித்திருக்கிறது.
- 2021 நவம்பர் மாதத்துக்கு மேல் இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதைச் செல்லாததாக்குவதற்குத்தான் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. ஐந்தாண்டுகள் பதவிக்காலம் கொண்டுவரப்பட்டது. அதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரமும் பெறப்பட்டது.
- "நீதிமன்றத் தீர்ப்பை சட்டத்தின் மூலம் அரசு ரத்தாக்க முடியும். ஆனால், நீதிமன்ற உத்தரவை ரத்தாக்க முடியாது' என்று கூறி, எஸ்.கே. மிஸ்ராவைப் பணி ஓய்வு பெறச் சொல்லும் தீர்ப்பின் அர்த்தம் புரியவில்லை. தீர்ப்பைவிட, உத்தரவு பெரிதா? இரண்டுக்கும் என்னதான் வேறுபாடு? குழப்பமாக இருக்கிறது.
- அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களுக்கு, குறிப்பிட்ட பதவிக்கால உத்தரவாதம் அளிக்கப் பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல். அதன் மூலம், அவர்கள் ஆட்சியாளர்களின் அழுத்தத்துக்கு உள்ளாகாமல் இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் பதவி நீட்டிப்புக்காக, ஆட்சியாளர்களின் தயவைச் சார்ந்து இருப்பார்களேயானால், எப்படி அழுத்தத்துக்கு உள்ளாகாமல் இருக்க முடியும் என்கிற நியாயமான ஐயப்பாடு கனம் நீதிபதிகளுக்கு ஏன் எழவில்லை?
- மத்திய அரசின் ஐந்தாண்டு பதவிக்கால சட்டத்தை அங்கீகரித்திருப்பதற்கு, அமர்வு நீதிபதிகள் அளித்திருக்கும் விளக்கம், குழப்பமாக இருக்கிறது. "நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கும் சட்டத்தின் மீது கருத்துக் கூற முடியாது' என்கிற வரிகள், நீதித் துறையின் அவசியத்தையே கேள்விக்குறியாக்குகிறது. நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்கள், அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டவையா, இல்லையா என்பது குறித்துக் கருத்துக் கூறுவதுதானே நீதித் துறையின் கடமை. அதை எப்படி மிகச் சாதாரணமாக மூன்று நீதிபதிகள் அமர்வு கடந்து போனது என்பது மிகப் பெரிய புதிர்.
- அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை இரண்டாண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் என்றெல்லாம் நிர்ணயிக்கும் உரிமை நிச்சயமாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அரசுக்கு உண்டு. அதை அங்கீகரித்திருப்பதில் குற்றம் காணவில்லை. ஆனால், குறிப்பிட்ட கால வரையறை வழங்கப்படாமல், ஒவ்வோர் ஆண்டும் பதவிக்கால நீட்டிப்பு என்பது, இயக்குநர்களை ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக்கி விடும்.
- யார் இயக்குநர் என்பதல்ல பிரச்னை; பொறுப்பான பதவியில் உள்ளோர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் அவசியம். உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதை உறுதி செய்யவில்லை.
நன்றி: தினமணி (26 – 07 – 2023)