TNPSC Thervupettagam

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!

May 23 , 2019 2013 days 1932 0
  • இறைவனது படைப்பிலேயே பேசும், சிரிக்கும் தன்மை கொண்ட ஒரே இனம் மனித இனம் மட்டும்தான்.  பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ பேசும் தன்மையோ, சிரிக்கும் தன்மையோ கிடையாது. பேச்சு என்பது மிகச் சிறந்த கலை.  அது நமது எண்ணங்களின் வெளிப்பாடு; எத்தனையோ சான்றோர்கள்அவர்களது பேச்சுத் திறனாலேயே உலகில் அறியப்பட்டுள்ளனர்.
பேச்சு
  • சிறப்பான பேச்சு அத்தனை நபர்களையும் கட்டிப் போடும் வல்லமை படைத்த ஒன்றாகும்.  இன்று பல வணிக நிறுவனங்கள் வெற்றிக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பதற்கு,  அந்த நிறுவனத்தின் பேசும் திறன் கொண்ட பிரதிநிதிகள்தான் காரணம்.
  • ஆனால், இன்றைய சூழலில் ஒவ்வொரு மனிதரும் பல்வேறுபட்ட சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.  பல்வேறுபட்ட நபர்களிடம் கலந்துரையாட வேண்டியுள்ளது. குடும்பத்திலும், அலுவலகத்திலும், சமூகத்திலும் பகிரப்பட வேண்டிய விஷயங்கள் கணக்கிலடங்காமல் உள்ளன.
  • ஒவ்வொரு மனிதரும் அன்றாட வாழ்க்கையில் இந்தச் செயல்பாட்டில் சரிவரச்  செயல்படுகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் பேசுவது மனிதர்களோடு என்றுதான் நினைக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல; நாம் பேசுவதெல்லாம் அவர்கள் மனங்களோடுதான்.
இனிமையான பேச்சு
  • நல்லதொரு இனிமையான பேச்சு மற்றவர்கள் மனங்களை மகிழ வைக்கும்; அவர்கள் முகங்களை மலர வைக்கும்.
  • மனிதர்களை பல வகையாகப் பிரிக்கலாம்.  ஒரு சிலர் இயந்திரங்களோடு மட்டுமே பேசிக் கொண்டிருப்பர்.
  • அருகருகே அமர்ந்திருந்தாலும் அடுத்தவரை கண்டுகொள்ளாமல் கையிலுள்ள செல்லிடப்பேசியிலும், கணினியிலும் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பவர்கள் ஒரு வகை. நாம் அதிகார நிலையில் இருக்கிறோம்; அடுத்தவரோடு பேசுவதால் நம் ஆளுமை குறைந்துவிடும் என்பதற்காக குடும்பத்தில்கூட குதூகலத்தை தொலைத்து நிற்பவர்கள் மற்றொரு வகை.
  • தன்னை மற்றவர்கள் முன்னால் மிகப் பெரிய நபராகக் காட்ட வேண்டும் என்று எல்லா நேரத்திலும் கடுமையான சொற்களைப் பேசுவதும், உரத்த குரலில் பேசும் குணம் கொண்ட மனிதர்கள் வேறொரு வகை.  உளவியல் ரீதியாகப் பார்த்தால் இயலாமையின் வெளிப்பாடுதான், உரத்த குரலில் கடுமையான சொற்களைப் பேசும் தன்மையாகும்.
குழப்பம்
  • எங்கே தான் புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்திலும், பயத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள காட்டப் பயன்படுத்தும் உத்திதான் இந்தப் பேச்சு. தான் சொல்ல நினைப்பதை ஒருசிலர் வெளிப்படுத்தத் தெரியாமல் விழிபிதுங்கி தடுமாறி குழப்பத்தின் மொத்த வெளிப்பாடாகக் காட்சியளிக்கின்றனர். தொடர்பு இல்லாத விஷயங்களை வேறு சிலர் மணிக்கணக்காகப் பேசி அடுத்தவர் நேரத்தை வீணடித்து அதில் ஆனந்தம் அடைகிறார்கள்.
  • ஆனால், ஒரு சில நபர்கள் மட்டுமே சரியான நபர்களிடம் அவர்களுக்குத் தேவையான விஷயத்தைச் சரியான முறையில் இனிமையாகப் பேசி இதயம் கவர்கின்றனர்.  அவர்களால் மட்டுமே எல்லாத் துறையிலும் சாதனையாளர்களாக இருக்க முடிகிறது. இதைத் தான் திருவள்ளுவர் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந் தற்று. என்று  கூறியுள்ளார்.
திருக்குறள்
  • இதன் பொருள், இனிமையான சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பேசுவது, ஒரு மரத்தில் உண்பதற்கு நல்ல பழங்கள் இருக்கும்போது அதை உண்ணாமல் அந்த மரத்தில் உள்ள காய்களை உண்ணுவதற்குச் சமமாகும் என்பதாகும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.  தவறினால் அது ஆறாத ரணத்தை ஏற்படுத்தி விடும். இதெல்லாம் தெரிந்துதான் வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று நேர்மறையாகக் கூறியுள்ளனர்.
  • இதன் பொருள் கனிவான வார்த்தைகளைப் பேசுவோர், அனைத்துச் செயல்பாடுகளிலும் வெற்றி காண முடியும். பேசும்போது எதிரே உள்ளவரின் முகம் பார்த்துப் பேசுவது பயனளிக்கும். மிகவும் உரத்த குரலிலும், மிகவும் தாழ்ந்த குரலிலும் பேசுவது எரிச்சலை ஏற்படுத்தும்.  அவர்களது கண்களைப் பார்த்துப் பேசும்போது ஏற்படும் அதிர்வலைகள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். பேசுகின்ற நபர்களுக்கு உடல் மொழி மிகவும் அவசியமான ஒன்றாகும்.  அலட்சியமான பேச்சு, ஆணவமான பேச்சு, எதிர்மறையான பேச்சு, அடுத்தவர் மனதைப் புண்படுத்தும் பேச்சு ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
  • பேசுகின்ற பேச்சு மரியாதையையும், அன்பையும், கண்ணியத்தையும் வெளிப்படுத்தும் பேச்சாக இருக்க வேண்டும்.  சுய விளம்பரம் செய்யும் பேச்சு, மற்றவர்களை வெறுப்படையச் செய்யும்.
  • எதிரே உள்ளவரின் பேச்சுகளைக் கூர்ந்து கவனித்துப் பதிலளிக்க வேண்டும். பேசுவதற்கு முன்பு திட்டமிடல் வேண்டும்.  என்ன பேச வேண்டும், அதை எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்த முறையான தயாரிப்புதான் அந்தத் திட்டமிடல் ஆகும். சில மனிதர்கள் ஆத்திரத்திலும், அவசரத்திலும் தவறாகப் பேசிவிட்டு தனிமையில் வருந்துவர். முள்ளின் வலிகூட சில நிமிஷங்கள்தான்;
யோசித்து பேசுதல்
  • ஆனால், சொல்லின் வலி பல ஆண்டுகள் என்பதை மறக்கக் கூடாது. அது நடந்த பின்பு  வருந்துவதைவிட, பேசும் முன் யோசிப்பதும், யோசித்த பின்பு பேசுவதும் உறவுமுறைகளை மேம்படுத்த உதவும். நல்ல பேச்சினால் நட்புகளைப் பெற்று, நன்மைகளைப் பெற முடியும். ஆனால், மனதைக் காயப்படுத்தும் பேச்சுகள் வடுக்களைத்தான் ஏற்படுத்தும்.  அதைச் சரி செய்ய முடியாது.
  • இந்த உலகிலேயே சிறந்தது அன்பு ஒன்று தான்.  அன்பாகப் பேசுங்கள், பேச்சால் அன்பினை வெளிப்படுத்துங்கள்.  அன்பு காரணமாக உறவுகள் மேம்படும். அன்பு காட்ட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்,  அன்பினால் மட்டும் குழந்தைகளை வழி நடத்துங்கள்.

நன்றி: தினமணி (23-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories