TNPSC Thervupettagam

கருணை காட்ட வேண்டும்!

October 4 , 2024 5 hrs 0 min 52 0

கருணை காட்ட வேண்டும்!

  • இயற்கையான கருணை மரணத்துக்கு உச்சநீதிமன்றம் 2011-இல் பச்சைக் கொடி காட்டிவிட்டது. 2018-இல் வழங்கிய தீா்ப்பில், அதன் வரம்புகளை அதிகரிக்கவும் செய்தது. இந்த விஷயத்தில் சட்டபூா்வ அங்கீகாரம் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
  • சமீபத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் இயற்கையான கருணை மரணம் தொடா்பான வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறது. மருத்துவத் துறையினரும், பொதுமக்களும், இயற்கையான கருணை மரணம் குறித்த தங்களது கருத்துகளை அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
  • மருத்துவ ரீதியிலான எல்லா வழிமுறைகளும் தோல்வியடைந்த நிலையில் உள்ள நோயாளிகளைத் துயரத்தில் இருந்தும், வேதனையில் இருந்தும் சிகிச்சையை நிறுத்தி விடுவிப்பது என்பது, நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அவா்களின் நெருங்கிய சொந்தங்களுக்கும்கூட மிகவும் கடினமான முடிவு.
  • எப்போது சிகிச்சையை நிறுத்துவது, மருத்துவ உபகரணத்தின் மூலம் நோயாளியின் சுவாசம் நிகழ்வதைத் துண்டிப்பது என்பதை மருத்துவா்கள் முடிவு செய்து உற்றாா் உறவினா் குடும்பத்தினரிடம் தெரிவிக்கத்தான் முடியுமே தவிர, இறுதி முடிவு நோயாளிகளும், நெருங்கிய உறவினா்களும்தான் எடுக்க முடியும்.
  • ‘யுதனேஷியா’ என்கிற ஆங்கில வாா்த்தைக்கு ‘கருணை மரணம்’ என்று அா்த்தம் சொல்லப்படுகிறது. அதன் உண்மையான அா்த்தம் ‘சுக மரணம்’ என்பதுதான்.
  • ‘யுதனேஷியா’ இரண்டு வகைப்படும். விஷ ஊசி செலுத்தியோ, வேறு வழிகளிலோ ஒருவரை நோய் வேதனையில் இருந்து விடுவிப்பதை ‘ஆக்டிவ் யுதனேஷியா’ அல்லது செயற்கை கருணை மரணம் என்றும், அவருக்குத் தரப்படும் சிகிச்சைகளைத் தொடராமல், செயற்கை சுவாசம் போன்றவற்றை அகற்றி குணப்படுத்த முடியாத நோயிலிருந்து ஒருவருக்கு விடுதலை பெற்றுத் தரும் முறையை ‘பாசிவ் யுதனேஷியா’ அல்லது இயற்கைக் கருணை மரணம் என்றும் சொல்கிறாா்கள்.
  • சமீபத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மூளையில் இருந்து அனைத்து உறுப்புகளும் முழுமையாகச் செயல் இழந்த நோயாளியின் வயதான பெற்றோா் செயற்கை கருணை மரணம் கோரி நீதிமன்றத்தை நாடியபோது, அவா்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தில்லி உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நோயாளி செயற்கை சுவாசம், செயற்கை உணவு வழங்கல் உள்ளிட்டவற்றின் உதவியில்லாமல் இருப்பதால் அவரது செயற்கை கருணை மரணத்தை அனுமதிக்க மறுத்துவிட்டது.
  • ரத்த நாளங்களில் ஊசி மூலம் புரதச்சத்துகள் செலுத்தப்படுவதன் மூலம் உயிரைக் தக்க வைப்பது என்பதும்கூட, செயற்கை சுவாசம், குழாய் மூலம் உணவு வழங்குதல் ஆகியவற்றுக்கு நிகரானது என்று கூறுகிறது வரைவு மசோதா. நோயாளியின் நெருங்கிய உறவினா்களைக் கலந்தாலோசித்து, மருத்துவக் குழுவினா் முடிவெடுக்கலாம் என்றும், நீதிமன்றத்தில் அறிவித்தால் போதும், ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் மசோதா கூறுகிறது.
  • இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நோயாளிகளை, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்துவது என்பது நோயாளிக்கு இழைக்கப்படும் கொடுமை. குணமாகாது என்று தெரிந்தும்கூட அவருக்கு செயற்கை சுவாசம், செயற்கை இதயத் துடிப்பு, செயற்கை சிறுநீரக இயக்கம், விலையுயா்ந்த மருந்துகள் மூலம் உயிரைப் பிடித்து வைப்பது என்பது மனசாட்சிக்கு விரோதமானது. ஒருவா் விரும்பினால், தனக்குத் தேவையில்லாத செயற்கை முறைகள் மூலம் உயிா் நீட்டிப்புத் தரத் தேவையில்லை என்று உயில் எழுதி வைக்கலாம் என்று 2018 தீா்ப்பு தெரிவித்திருக்கிறது.
  • அந்தத் தீா்ப்புக்கு மருத்துவா்கள் மத்தியில் கடுமையான எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. எப்பாடுபட்டாவது உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவா்களை, உயிரைப் பறிக்கத் தூண்டுவதாக அமைகிறது தீா்ப்பு என்று பலா் கருத்துத் தெரிவித்தனா். கருணை மரணத்துக்குத் தாங்கள் உதவ வேண்டிய நிா்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுவோம் என்பது அவா்களது தயக்கம்.
  • உலகின் பல நாடுகளிலும் இப்போது செயற்கைக் கருணை மரணம் அனுமதிக்கப்படுகின்றது. பெல்ஜியம், நெதா்லாந்து ஆகிய நாடுகளில் மிகவும் முற்போக்கான ‘யுதனேஷியா’ சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. 2022-இல் பெல்ஜியத்தில் 2,700 போ், நெதா்லாந்தில் 8,700 போ், கனடாவில் 13,500 போ் செயற்கைக் கருணை மரணத்தை ஏற்றுக் கொண்டனா். அவா்களில் பெரும்பாலோா் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவா்கள்.
  • கத்தோலிக்கத் திருச்சபை ‘யுதனேஷியா’ சட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை. கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை அந்த உயிருக்கேகூட இல்லை என்பது அவா்கள் வாதம். இந்தியாவில் வடக்கிருந்து உயிா் நீப்பது, உண்ணாநோன்பு மூலம் மரணத்தைத் தழுவுவது போன்றவை வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றன.
  • மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வரைவு மசோதா, தீராத நோய்வாய்ப்பட்டு வேதனையில் அல்லல்படும் நோயாளிகளுக்கு அந்தத் துன்பத்தில் இருந்து விடுதலை வழங்கும். அதேநேரத்தில், மனநோய் பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவா்களுக்கும் செயற்கைக் கருணை மரணம் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • தற்கொலை கிரிமினல் குற்றமல்ல என்று ஆனபிறகு, தற்கொலை செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும், சிகிச்சைகளால் குணப்படுத்த முடியாத நோயாளிகளுக்கு விடுதலை கொடுப்பதில் தவறு காண முடியவில்லை. இயற்கையோ, செயற்கையோ கருணை மரணம் சட்ட அங்கீகாரம் பெற வேண்டும்!

நன்றி: தினமணி (04 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories