TNPSC Thervupettagam

கருத்தரங்கம், பயிலரங்கம், குழு விவாதம்

January 18 , 2025 9 hrs 0 min 23 0

கருத்தரங்கம், பயிலரங்கம், குழு விவாதம்

  • புத்தகத் திருவிழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்களின் புத்தகக் காட்சியுடன் கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப்பட்டறை, குழு விவாதம் எனப் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். தொடக்க விழாவையொட்டி திருக்குறள் தொடர்பாக நடந்த குழு விவாதத்தில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மீனா கந்தசாமி, முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அமெரிக்கத் தமிழறிஞர் தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர்கள் சுகிர்தராணி, குட்டிரேவதி, மனுஷ்யபுத்திரன், பேராசிரியர் ராஜன்குறை, பத்திரிகையாளர் விஜயசங்கர் உள்ளிட்ட பலரும் சிறப்பு அமர்வுகளில் பங்கெடுத்தனர்.

64 நாடுகள் பங்கேற்பு:

  • இந்தப் புத்தகத் திருவிழாவில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போலந்து, இத்தாலி, ரஷ்யா, ஈரான், நார்வே, இஸ்ரேல், துருக்கி உள்பட 64 நாடுகளின் பதிப்பகத்தினர் 70 மொழிகளில் அரங்குகள் அமைத்துள்ளனர். அவர்கள் தங்கள் அரங்குகளில் தங்களின் பதிப்பகம் பல்வேறு மொழிகளில் வெளியிட்ட நூல்களை அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளனர்.

நூலாசிரியர்கள் ஓய்வறை:

  • நூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் அமர்ந்து கலந்துரையாடுவதற்காக நூலாசிரியர்கள் ஓய்வறை (Authors Lounge) அரங்கமும் புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சம் ஆகும். இதில் கலந்துரையாடுவதற்காக 60க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தொடக்க விழாவில் எழுத்தாளர் சாருநிவேதிதா, அம்பை, குட்டிரேவதி உள்ளிட்டோரை அங்குக் காண முடிந்தது.

1,000 ஒப்பந்தங்கள்:

  • முதலாவது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் 24 நாடுகள் கலந்துகொண்டு 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 2ஆவது புத்தகத் திருவிழாவில் 40 நாடுகள் பங்கேற்று 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தற்போது நடைபெறும் 3ஆவது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் 64 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இதன்மூலம் 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்தியப் பதிப்பகத்தினருக்குத் தனி மேடை:

  • இந்தப் புத்தகத் திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பதிப்பகத்தினரும், அதேபோல் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பதிப்பகத்தாரும் கலந்துகொள்கின்றனர். வெளிநாட்டுப் பதிப்பகத்தினருக்குத் தனித்தனி அரங்குகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியப் பதிப்பகத்தினருக்குத் தனியாக மேடை அமைத்து, ஆங்காங்கே அமர்ந்து கலந்துரையாடும் வகையில் தனித்தனி மேஜைகளும் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கம்:

  • தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அரங்கமும் இந்தப் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளது. பாடநூல் கழகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்கள், காண்போரை ஈர்க்கும் வகையில் கலைநயத்தோடு வைக்கப்பட்டுள்ளன.

கெளரவ விருந்தினர்:

  • பொலோனியா குழந்தைகள் புத்தகக் கண்காட்சி என்பது உலக அளவில் குழந்தைகளுக்காக நடத்தப்படும் புகழ்பெற்ற புத்தகக் கண்காட்சி ஆகும். இத்தாலியைச் சேர்ந்த பொலோனியா பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனம், இந்தக் கண்காட்சியை நடத்துகிறது. சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் இந்நிறுவனம் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புத்தகத் திருவிழாவில் பொலோனியா பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனத்தின் அரங்கமும் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட நூல்களை இந்த அரங்கில் காணலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories