TNPSC Thervupettagam

கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம்

January 8 , 2024 371 days 279 0
  • மக்கள்தொகைப் பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்று .நா. சபை கணித்திருந்தது. அந்த கணிப்பை உறுதி செய்யும் வகையில் உலக மக்கள்தொகையில் இந்தியா தற்போது முதலிடத்தை எட்டியுள்ளது.
  • இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் 20% அளவுக்கு சரிவடைந்துள்ளதாக மாதிரி பதிவு முறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு குழந்தைப் பேற்றை தள்ளிப்போடுதல், அளவோடு குழந்தை பெற்றுக் கொள்ளுதல் போன்ற காரணங்கள் இருந்தாலும் கருவுறுதல் பிரச்னையும் ஒரு காரணமாகும்
  • கடந்த காலங்களில் கருத்தரித்தல் என்பது இயல்பான நிகழ்வாக இருந்தது. அப்போது குழந்தையின்மை என்பது அரிதானதாகும். இதற்கு அன்றைய வாழ்க்கை முறை அதாவது, உடலுழைப்பு, உணவு முறைகள் காரணங்களாகும். இதனால் அன்றைய மக்கள் திடகாத்திரமாக இருந்தார்கள். ஆண் குழந்தை மோகத்தால் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர்
  • கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து வரும் கருவுறுதல் பிரச்னையும் குழந்தை பிறப்பு சரிவுக்கு முக்கிய காரணமாகும். தேசிய குடும்பநல ஆய்வறிக்கையின்படி கருத்தரித்தல் விகிதம் என்பது 2.2%-லிருந்து 2.0%- ஆக குறைந்துள்ளது. ஓரிரு குழந்தைகள் போதும் என்ற மனநிலை, அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் என பல்வேறு கோணங்களில் இதனை அணுக வேண்டும்.
  • தற்போதைய வாழ்க்கை முறை கருவுறுதலுக்கான தன்மையை பெரிதும் பாதிக்கிறது. இதற்கு உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறலாம். நாட்டில் குழந்தையின்மை பிரச்னையால் 2.75 கோடி தம்பதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உலக சுகாதார அமைப்பு, மலட்டுத்தன்மை குறித்து  சர்வதேச அளவில் மேற்கொண்ட ஆய்வில் 18 வயதைக் கடந்தவர்களில் 17.5% பேர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவதாகவும், சர்வதேச அளவில் ஆறில் ஒருவர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த இனப்பெருக்க இயல் நிபுணர் டாக்டர் ஹன்னா ஸ்வான் எழுதிய "கவுன்ட் டவுன்' எனும் நூலில் ஆண்களின் இனப்பெருக்கத் திறன் கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பே குறையத் தொடங்கியுள்ளதாகவும், 2060-ஆம் ஆண்டில் ஆண்களின் இனப்பெருக்கத் திறன் மிகக் குறைவாகும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
  • மேலும், உயிரணுக்களின் எண்ணிக்கை 1990-ஆம் ஆண்டிலிருந்தே குறையத் தொடங்கிவிட்டதாகவும், ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் இரண்டு சதவீதம் ஆண்மைக் குறைபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது எனவும், 2045-ஆம் ஆண்டுவாக்கில் முதல் குழந்தையை உருவாக்கவே இனப்பெருக்க முறைகளின் உதவியை நாட வேண்டிய நிலை உருவாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
  • ஆண்களின் இனப்பெருக்கத் திறன் குறைபாடு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் வாழ்வியல் மாறுபாடே முக்கியக் காரணமாகும். மாறிவரும் உணவு முறையால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உடற்பயிற்சி இல்லாமை, உடற்பருமன், உறக்கமின்மைமதுப்பழக்கம் போன்றவை இதர காரணங்களாகும்.
  • முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே இருந்து வந்த சில பழக்கவழக்கங்கள் இன்று கிராமப்புறங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இன்று கிராமங்களிலும் உடலுழைப்பு வெகுவாகக் குறைந்தும், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.
  • சிறு நகரங்களில் கூட அதிகரித்து வரும் கருத்தரித்தல் மையங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. முன்பு, நகரங்களில் மட்டுமே காணப்பட்ட கருத்தரிப்பு மைய விளம்பர பலகைகள் இன்று கிராமங்களில் உள்ள சிறிய கடைகளில் கூட இடம்பெற்றுள்ளது. சிறப்புச் சலுகை அளிக்கப்படும் என்று பிரபலங்களின் வாயிலாக விளம்பரம் செய்வதன் மூலம் குழந்தையின்மையின் தீவிரத்தை நாம் அறிய முடிகிறது.
  • இந்தியாவின் சராசரி கருவுறுதல் விகிதம் 2018-2019-இல் 86.1% -ஆக இருந்தது. அது தற்போது 68.7% -ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் குழந்தையின்மை பிரச்னையை தத்தெடுப்பின் மூலம் சரிசெய்து கொள்கின்றனர். ஆனால் கிராமங்களில் வாழ்வோர் தத்தெடுத்தலை அவ்வளவாக விரும்புவதில்லை.
  • கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நீண்ட காலத்திற்கு குழந்தைப் பேற்றுக்காக சிகிச்சை மேற்கொள்கின்றனர். அதற்காக குறிப்பிட்ட காலத்திற்கு சிகிச்சை பெறும் நகரின் மருத்துவமனைக்கு அருகிலேயே வசிப்பதும் உண்டு. கிராமப்புற மக்களின் மனநிலைக்கேற்ப குழந்தைப்பேறு சிகிச்சைக்கான விளம்பரங்கள் கிராமங்களிலும் இடம்பெறுகிறது.
  • தமிழகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் இதற்கான சிகிச்சை மையம் இல்லை. மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் 2007-ஆம் ஆண்டு முதல் செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. கேரளம், ஆந்திரம் மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் இத்தகைய மையம் உள்ளது.
  • அண்மைக்காலமாக, குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆனால் அதற்கான சிகிச்சையைப் பெற லட்சக்கணக்கில் செலவிடுவது அனைத்து தரப்பினருக்கும் சாத்தியமானது அல்ல. வட்டிக்குக் கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பணம் திரட்டி செலவு செய்கின்றனர்.
  • அதனால் தமிழகத்தின் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கருத்தரித்தலுக்கான சிகிச்சைப் பிரிவைத் தொடங்க வேண்டும். சென்னையிலும், மதுரையிலும் தொடங்கப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
  • படிப்படியாக அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் இதனை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களும் கருத்தரித்தலுக்கான சிகிச்சையைப் பெற முடியும். கடந்த காலங்கள் போன்று உணவுப் பழக்கம், உடலுழைப்பு, பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் வரவேண்டும்.

நன்றி: தினமணி (08 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories