TNPSC Thervupettagam

கரோனாவுக்குப் பிறகாவது...

June 30 , 2020 1665 days 968 0
  • நாமும், நமது நாடும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த விவாதத்தில் இருந்து விலகி நிற்க முடியாது. 
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புக் காட்டி வரும் அதே நேரத்தில், கரோனாவுக்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு விடைதேடுவதற்கான விவாதங்கள் உலக அளவில் நடந்து வருகின்றன.  

  • தேசிய பொது முடக்கத்தை கடந்த மார்ச் 24- ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தபோது கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 544 பேர்.  

  • இறந்தவர்கள் 10 பேர். தற்போது தொற்று 5 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இறப்பு 20,000- த்தை நெருங்குகிறது. தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. 

  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றைத் தடுக்க தடுப்பூசி அல்லது சரியான மருந்து கண்டுபிடிக்கும் வரையில் கரோனாவின் கோர தாண்டவம் தொடரவே செய்யும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

  • இதனால் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பல மாற்றங்கள் ஏற்படும். 

  • இத்தகைய பின்னணியில் கரோனாவுக்குப் பிறகு, நாம் புதிய சூழலைச் சந்திக்க வேண்டியிருக்கும். கடந்த நான்கு மாதங்களில் கரோனாவுக்கு எதிராகப் பல நாடுகள் எடுத்த நடவடிக்கைகள், அவற்றில் இருந்து கிடைத்த அனுபவம், இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் எதிர்கால அணுகுமுறையை நாம் தீர்மானிக்க வேண்டும். 

பொது சுகாதாரத் திட்டம் 

  • நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடந்த மே 12- ஆம் தேதி ஆற்றிய உரையில், ஒரு கருத்தைச் சொன்னார். "நமது தேசத்தில் இதுவரையில் நடைமுறையில் இருந்த நிறுவனங்களும், கொள்கை முறைகளும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்குதலால் நொறுங்கிப் போனதை அறிந்துகொள்வதற்கு, இந்த நெருக்கடி நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது' என்றார். 

  • இதன் உண்மையான பொருள், நாட்டின் பொது சுகாதார ஏற்பாடுகளும், சுகாதார வசதியும், கரோனா தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நொறுங்கிப் போய்விட்டன என்பதுதான். நமது நாட்டில் மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்த பல நாடுகளிலும் இதே நிலைமைதான். 

  • அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாகி வருகிறது? சுமார் 9 கோடி மக்கள்தொகை கொண்ட வியத்நாமில் தொற்று 335 பேருக்கு ஏற்பட்டது. ஆனால் ஒருவர்கூட இறக்கவில்லை. 

  • வியத்நாமைவிட மக்கள்தொகை குறைவாகவும், பொருளாதார வளர்ச்சியில் முன்னணி நாடுகளாகவும் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில், கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.  

  • அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் கரோனா போன்ற கொள்ளை நோயைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான, பொது சுகாதாரத் திட்டத்தைக் கைவிட்டு, மருத்துவ வசதி பெரும்பான்மையாக தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விட்டதுதான் முக்கியமான காரணம் என அமெரிக்க வல்லுநர் சாம்ஸ்கி கூறியிருக்கிறார். 

இலவச சுகாதார வசதி 

  • இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும், இதே நிலைமைதான். 1991- 92- இல் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகு, பொது சுகாதாரம், பொது மருத்துவம், பொதுக் கல்வி என்பதெல்லாம் புறக்கணிக்கப்பட்ட விஷயங்களாகிவிட்டன. 

  • 1978- ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் முன்முயற்சியில், இன்றைய கஜகஸ்தான் நாட்டின் (முன்னாள் சோவியத் யூனியன்) அல்மா- அட்டா நகரத்தில், சர்வதேச அளவிலான மாநாடு நடந்தது. அதில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பங்கேற்றன. 

  • உலக அளவில் அனைத்து நாடுகளும் 2000- ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பகுதி மக்களுக்கும் இலவச சுகாதார வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என இந்த மாநாடு பிரகடனம் செய்தது.  

  • 1981- ஆம் ஆண்டில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, அடுத்த 20 ஆண்டுகளில், அதாவது 2000 ஆண்டுக்குள் அனைவருக்கும் இலவச சுகாதார வசதி ஏற்படுத்தித் தருவோம் என்று கூறினார். 

  • இருபது ஆண்டுகளில் இது நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, இந்த நாற்பது ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த பாஜகவும் இதைக் கண்டுகொள்ளவில்லை.  

  • அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நலவாழ்வு என்பது வெறும் நோயில்லா நிலை என்றில்லாமல், முழுமையான உடல், மன, சமூக நலம் எனும் அடிப்படை மனித உரிமையாகும்.ஆரம்ப சுகாதார வசதிகள் என்பது, 1. தனிநபர் அளவிலும், சமூக அளவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 2. நோய்த்தொற்று ஏற்படாமல், நோயுறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், 3. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல், 4. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு உள்ளிட்ட அனைத்தையும் அரசு இலவசமாக அளித்தல் ஆகியவற்றின் வாயிலாக, சமூகத்தின் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என்பதே அந்த மாநாட்டின் பிரகடனம்.  

  • இந்தப் பிரகடனத்தை அமலாக்கிய நாடுகளில் கரோனா தொற்று பாதிப்புகளைக் குறைக்க முடிந்திருக்கிறது. 

நிதி ஒதுக்கீடு உயர்வு 

  • இப்போது இந்தியாவில் மருத்துவம், சுகாதார வசதிக்காக ஒதுக்கிடும் நிதி என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1%தான். அகில இந்திய அளவில் பொது சுகாதாரத்துக்காகத் தனி நபருக்கு மத்திய அரசு ஒதுக்கக்கூடிய தொகை என்பது ரூ.1420.  

  • அதே நேரத்தில் அண்டை நாடான சீனாவில் ஒரு தனி நபருக்கு ஒதுக்கக்கூடிய தொகை என்பது ரூ.18,820. 

  • பெரும்பாலான மாநில அரசுகளும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மருத்துவத்துக்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 3%- ஆக உயர்த்த வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.  

  • ஆனால், இதை இதுவரையில் மத்தியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏற்கவில்லை. 

  • இங்குதான் இந்திய மாநிலங்களில் கேரள மாநிலத்தில் எப்படி கரோனா தொற்றின் பாதிப்பு குறைக்கப்பட்டு வருகிறது என நாம் பார்க்க வேண்டும். கேரளத்தில் பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தனி நபர் அளவுகளில் ரூ.2,092- ஆக (2017- 18) இருக்கிறது. பிகார் போன்ற மாநிலங்களில் இது 690- ஆக மட்டுமே இருக்கிறது. 

  • பெரும்பாலான இந்திய மாநிலங்களில் பொது சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு பிகார்போல் குறைவாக இருப்பதால்தான் அவற்றால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில், சிகிச்சை அளிப்பதில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.  

  • பொது சுகாதாரம் என்பது, இரண்டு அம்சங்களைக் கொண்டது, ஒன்று நோய்த் தடுப்பு. அடுத்தது, நோய் சிகிச்சை. 

  • இந்தியாவில் நோய்த் தடுப்பு தொடர்புடைய பொது சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், அந்தத் துறையே புறக்கணிக்கப்பட்ட துறையாக ஆகிவிட்டது.  

  • நோய் சிகிச்சை என்பது பெரும்பான்மையாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு விடப்பட்டு விட்டன. 

  • இந்தியாவில் ஒட்டுமொத்த நோய் சிகிச்சைக்கான செலவில், 78% மக்கள் செலவு செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

  • இத்தகைய நிலையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் பொது சுகாதாரத்துக்காக (நோய்த்தடுப்பு, நோய்சிகிச்சை) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 5%- ஐ ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவ வல்லுநர்களான டிசிஎஸ் ரெட்டி, சசிகாந்த் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். 

பொருளாதாரக் கொள்கை 

  • பொது சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதற்கும், மத்திய அரசு கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைக்கும் தொடர்பு உள்ளது.  

  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று விளைவுகளை எதிர்கொள்ள சுயசார்புக்காக ரூ.20 லட்சம் கோடியை அண்மையில் பிரதமர் மோடி அறிவித்தார்.  

  • அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாள்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது பல திட்டங்களை அறிவித்தார். ஆனால், அதில் ஒரு காசுகூட பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 

  • "பொது சுகாதார ஒதுக்கீடு தொடர்பாக பிறகு பரிசீலிப்போம்' என்று மட்டும் நிதியமைச்சர் பதில் அளித்தார்.  

  • கரோனா போன்ற கொள்ளை நோய்க் காலத்தில், மக்களைக் காப்பாற்ற, நோய்த் தடுப்பு, சிகிச்சை நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அடிப்படை.  

  • ஆனால், இந்தத் துயரமான காலத்தில்கூட நோய்த் தடுப்புக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 

  • இனிவரும் காலங்களில் பொது சுகாதாரம், பொதுக் கல்வி தொடர்பான பிரச்னையில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையில் இருந்து விலகி, பொது சுகாதாரத்தையும், பொதுக் கல்வியையும் முழுக்க முழுக்க மத்திய அரசே கையிலெடுத்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  

  • இதுதான் கரோனாவுக்குப் பிறகு அடுத்தடுத்து வரக்கூடிய தொற்றுகளில் இருந்தும், நெருக்கடிகளில் இருந்தும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான வழி. 

 

நன்றி: தினமணி (30-06-2020) 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories